Wednesday 30 August 2017

குரோனி கலிநீசன் பாகம் 1 Kaliyugam part 1

கலியுகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் ஓரளவு விஞ்ஞான விளக்கம் சொல்லலாம். நம்முடைய பூமி ஒரு காந்த உருண்டை. எப்பொழுதும் காந்த மண்டலத்தை உருவாக்கிய வண்ணம் இருக்கும். பூமியின் மேல் ஓடு எட்டு மைல்கள். அதன்மீதுதான் நாம் வசிக்கிறோம். அதற்குக் கீழே போனால் பூமியின் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தன்னைத் தானே சுற்றி, சந்திரனையும் தன்னோடு இழுத்துக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனோ நவக் கிரஹங்களை தன்னோடு இழுத்துக் கொண்டு பால்வெளி மண்டலத்தைச் சுற்றிவருகிறது. இப்படி பூமி சுற்றுவதால், திருப்பாற்கடலைக் கடைந்தது போல பூமியின் வயிற்றைக் கடையும் போது பூமியே காந்த சக்தி உருவாக்கும்டைனமோஆகிவிடும்.
சந்திரனில், விண்கலம் இறங்கிவிட்டது, செவ்வாய்க்கு விண்கலம் போய்ச் சேர்ந்துவிட்டது, வாயேஜர் என்னும் விண்கலம் சூரிய மண்டலத்தையே தாண்டிப் போய்விட்டது என்றெல்லாம் பத்திரிக்கையில் வரும் செய்திகளைக் கேள்வியே கேட்காமல் நாம் நம்புகிறோம், ஆனால் நமது முன்னோர்கள் நமது நன்மைக்காக எழுதிவைத்ததை நாம் நம்ப வேண்டாமா? அதுதான் அறிவுடைமை அன்றோ!

பிரபஞச்சத்தின் தொடக்க காலத்தில் தீவினைகளின் முதல்வனாகத் தோன்றிய குறோணி என்னும் கொடியவனிடம் குடிகொண்டிருந்த காமம், குரோதம், லோபம், மோகதம், மதம், மாச்சரியம் எனப்படும் உட்பகைகள் ஆறையும் தனித்தனி கூறுகளாக்கும் விதத்தில் பகிர்ந்து அவனை ஆறு கூறுகளாக வகுத்துக் கொல்லப்பட்டது.
அவற்றில் ஒரு பகுதியை குண்டோமசாலியாகவும், இரண்டாவது பகுதியை தில்லைமல்லாலன், மல்லோசி வாகனனாகவும், மூன்றாவது பகுதியை சூரபத்மன், சிங்கமுக சூரனாகவும் மீண்டும் இரணியனாகவும், நான்காவது பகுதியை இராவணனாகவும், ஐந்தாவது பகுதியைத் துரியோதனாதிகளாகவும் பிறப்பிக்கப்பட்டனர்.
இப்படி முதற் பிறவியாகிய குறோணியோடு ஆறு முறை அவன் பிறந்தும், அவனுடைய எந்தப் பிறவியிலும், இறைவனை முதன்மையாக நினைத்து வாழாமல் உலகை ஆளாமல் நீதிநெறி தவறிய நீசனாகவே வாழ்ந்து விட்டான். அத்தகு குணமுடைய குறோணியின் உடலிலுள்ள ஆறு கூறுகளில் இன்னும் ஒன்று இதுவரை பிறவி செய்யப்படாமல் இருந்து கொண்டிருக்கிறது அந்த ஆறாவது கூறைப் பிறவி செய்வதற்கான காலம் கனியவே, புத்திக் கூர்மையில் மெத்தப் பெருமையுள்ள குருமுனிவர், மேலோனை நாடி மேருமலை சென்று அந்த ஆதியைப் போற்றி அரனே என வணங்கி, தன் சிந்தையில் உதித்த கருத்தை சிவபெருமானிடம் சொல்கிறார். மகாதேவா ! தீவினையாக முதலில் பிறந்த குறோணியை அழித்ததினால் உண்டான ஆறு கூறுகளில், இதுநாள் வரை ஐந்து கூறுகளைப் பூலோகத்தில் பிறப்பித்தும், அவன் இறைவனாகிய உங்களைப் பற்றி உணராத காரணத்தால் அவனை அழிப்பதற்காக அவ்வப்போது பூவுலகில் அவதரித்த மகாவிஷ்ணு அம்பின் குறையகற்றி, அதாவது வேடனிட்ட அம்பின் மூலம் தன் கிருஷ்ண அவதார சரீரமாகிய உபாயமாய உடலை பருவதாமலையில் உகுத்து வைத்துவிட்டு பூலோக வைகுண்டமெனப் போற்றப்படும் ஸ்ரீரங்கமாபதியில் அமர்ந்துள்ளார். ஆனால், அன்று இறந்த குறோணிக்கு இன்னும் ஒரு பிறவி உண்டல்லவா ? தவமே ! தவத்திற்கெல்லாம் கருவாகிய காரணப்பொருளே! உலக நாடகமேடையில் ஒப்பரிய உன் நடிப்பெனும் நடனத்தால், நாசகாரர்களை நசுக்குகின்ற நாயகா! அன்பை இருப்பிடமாகக் கொண்ட அரனே! எவரொருவரோடும் ஒப்பிட்டுரைக்க முடியாத ஈசனே! அடியேன் தங்களிடம் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பணம் செய்யப்போகிறேன். அதற்குத் தாங்கள் செவிமடுக்க வேண்டுமய்யா.
குறோணியாகிய கொடிய அரக்கனின் உடலை, உலகத்திற்கே உதிரமாக விளங்கும் மகாவிஷ்ணு, தன் புத்தி கூர்மையால் ஆறு கூறுகளாகப் பிளந்து அன்றைய பூமியில் விட்டெறிந்தார். அதன்பிறகு அந்தக் குறோணியின் உயிரை ஐந்துமுறை இந்தப் பூமியில் பிறவிசெய்யப்பட்டது.
ஆயிலும் அந்த அரக்கன், இளம் பிறையைத் திருமுடியில் சூடுகின்ற ஈசனாகிய தங்களையோ, மாயைகளுக்கெல்லாம் மாயையாகிய மகாவிஷ்ணுவையோ, சிறிதும் மதிக்காமல் அகங்காரமாக இருந்ததினால், மகாவிஷ்ணு அவதாரமெடுத்து வந்து அந்த அசுரர்களை அழித்தார்.
முதன் முதலாகத் தோன்றிய குறோணியைக் கொன்றதோடு இதுகாலம் வரை ஆறு யுகத்தில் அந்த அரக்கனையும் அவனுடைய குடும்பத்தையும் அழித்த மாயனாகிய மகாவிஷ்ணு, தம்முடைய அவதார கைங்கரியங்களுக்காக அவர் பயன்படுத்திய அந்தப் பொய்யுடலைப் பூமியிலே கழற்றி வைத்துவிட்டு அவர் அருளாட்சி புரிந்து கொண்டிருந்த ஸ்ரீரங்கமாபதியில் உறைந்துவிட்டார்.
ஆனால், அந்தக் குறோணியின் உடலிலுள்ள ஆறில் ஒரு கூறு இன்னும் எஞ்சியிருக்கிறது. அந்தக் குறோணிக்கு மொத்தம் ஏழு பிறப்பு உள்ளன. இதுவரை ஆறு பிறப்பு பிறந்துவிட்டதால் இன்னும் ஒரு பிறப்பு அவன் பிறக்கவேண்டியுள்ளது. ஆகவே, அந்த அரக்கனை அவன் தோன்றிய முதல்யுகம் நீங்கலாகவுள்ள ஆறாவது யுகத்தில் பிறவிசெய்யுங்கள் சிவபெருமானே என்று குருமுனிவர் பிடிவாதமாக முறையிட்டார்.
குருமுனிவரின் இந்த வேண்டுகோளை விருப்பமுடன் ஏற்றுக்கொண்ட சிவபெருமான், குருமுனிவரைப் பார்த்து, மாமுனிவரே, உம்முடைய விண்ணப்பம் நியாயமானதுதான். ஆனால் அதைச் செயல்படுத்த வேண்டுமானால் மகாவிஷ்ணுவும் வேண்டும். ஆகவே, அவர் இங்கே வரும் நாள் வரை காத்திருப்போமா? என்று குருமுனிவரிடம் சிவபெருமான் கேட்டார்.

சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்டை இழந்துவீட்டது. அப்போது ராம பிரான் தோன்றினார். த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்களைஅதவது 50 விழுக்காட்டை இழந்து விட்டது. அப்போதுதான் கிருஷ்ணன் தோன்றினார். யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் க்ண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் போய் உலகமே அழியும். பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. குருமுனிவரிடம் ஈசன் இவ்வாறு கேட்டதும், குருமுனிவர் சிவபெருமானைப் பார்த்துச் சொல்கிறார். நல்லதுதான் மகாதேவா! ஆனால், மாயனாகிய மகாவிஷ்ணு, பூலோகத்தில் தவம்புரியப்போய், ஒடுக்க நித்திரையில் உறைந்து, மெய்ஞ்ஞான ஒளியாக, அதாவது, மகாவிஷ்ணுவுக்கே இயல்பான சத்திய அறிவொளியாக இருக்கிறாரே என்று குருமுனி கூறியதும், சிவபெருமான் அகமகிழ்ந்தார்.
அந்த மகிழ்ச்சியோடு, கோவுகத்திலுள்ள வசிஷ்டரையும், தெய்வலோகத்திலுள்ள தேவர்களையும், வைகுண்டலோகத்திலுள்ள தர்மிகளையும், கிணநாதர், கிம்புருடர், கிங்கலியர்களையும் சக்தி, வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவையோடு அத்திமுகவனையும் ஆனவகும்பனையும் கைலையங்கிரிக்கு சிவபெருமான் வரவழைத்தார்.
எல்லாரையம் கூட்டிவைத்து ஏகசங்கமாக அமைத்த சிவபெருமான், அந்த சங்கத்தாரைப் பார்த்து, மகாவிஷ்ணு எங்கே இருக்கிறார் என்பதை இங்கே கூடியிருப்போர் எல்லாரும் சேர்ந்து அலசி ஆராய்ந்து, ஒரு நல்ல செய்தியாக எனக்குத் தெரிவியுங்கள் என்றார சிவபெருமானின் அந்தக் கேள்விக்கு செவிமடுத்த எல்லாத் தேவர்களும் சேர்ந்து சிவபெருமானிடம் சொல்கிறார்கள். ஈசனே ! மேகவண்ணராகிய மகாவிஷ்ணு இங்கே இல்லை. அவர் பூலோகத்தில் இறந்து கிடக்கிறார்.
அதாவது, அவர் எடுத்த ஒன்பதாம் அவதாரமாகிய கிருஷ்ண அவதாரத்தை முடிப்பதற்காக பிறவி எடுத்த அவருடைய அந்தப் பொய்யுடலை சந்தோசமாகப் பூலோகத்திலே உகுத்து வைத்து விட்டார். என்று சங்கத்தார் அனைவரும் ஒருமித்த கருத்தாக சிவபெருமானிடம் ஒப்புவித்தனர்.
சங்கத்தார் அனைவரும் அவ்வண்ணமாகச் சொல்லவே, அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் அந்த தேவசங்கத்தாரிடம் மீண்டும் சொல்லுகிறார். தேவர்களே, முதலில் பிறந்த குறோணியாகிய அரக்கனின் உயிரை இதுவரை ஆறு பிறவியிலும் அசுரனாகவே படைத்து விட்டோம்.
அந்த ஆறு பிறவியிலும் அசுரனாகவே பிறந்த அந்த அரக்கன் எந்த பிறவியிலும் நம்மை நேசிப்பவனாகவே இல்லை. அத்துணை வீறாப்புடைய அந்தப் பாவிக்கு இப்போது நாம் கொடுக்கப்போவது ஏழாவது பிறப்பு. இந்தப்பிறவியிலும் நம்மை இவ்வரக்கன் மதிக்க மறுத்தாலோ, மறந்தாலோ இன்னுமோர் பிறவி இவனுக்கு இல்லை. ஏனென்றால் இவனுடைய முடிவு காலம் இப்பிறப்போடு நிறைவடைந்து விட்டது.
ஆகவே, இப்பிறவியை இந்த அரக்கனுக்கு நல்லதாகவே அமைக்க வேண்டும். நம்மை மதிக்க மனமும், துதிக்கப் புத்தியும் மகிழ அழகும், அதற்கேற்ற அலங்காரமும், உள்ளறிவும், மிகுந்த ஞானமும், புத்திக் கூர்மையும், உள்ளவனாகப் பிறவி செய்ய வேண்டும்.
நிகழ்ந்து நிறைவேறிய ஆறு யுகங்களிலும், மகாவிஷ்ணு ஒரு தலையும், நான்கு முழம் உயரமுங்கொண்ட அவதார உருவில் தோன்றி, ஞாயநெறியுடைய நீதிமானாக நின்று தான் அந்த ஆறுயுகத்து அரக்கர்களையும் அழித்துள்ளார். ஆகவே, அந்த அரக்கர்கள் மகாவிஷ்ணுவைப் பழித்துப் பேசவே வழியில்லை.
எனவே, இனிப் பிறவி செய்யப்போகும் குறோணியின் ஆறாவது துண்டத்தை, முடிந்த யுகங்களிலெல்லாம் மகாவிஷ்ணு அவதரித்த உருவ அமைப்பிலேயே பிறவிசெய்தால், நம்மை அந்த அரக்கன் எந்த வகையிலும் பழி சொல்வதற்கு வழியில்லாமலாகிவிடும் என்று நான் கருதுகிறேன். இதுபற்றி நீங்களெல்லாம் உங்களுடைய அபிப்பிராயங்களையும் சொல்லுங்கள் என்று தேவசங்கத்தாரிடம் சிவபெருமான் தெரிவித்தார். நிறைவேறிய யுகங்களில் மகாவிஷ்ணு அவதரித்தது போலவே, ஒரு தலை நான்கு முழம் உயரமுடையவனாகக் கலியனை பிறவிசெய்தால், அவன் யாரையும் பழிசொல்ல வழியில்லாமலாகுமென நினைக்கிறேன். நீங்களும் உங்களுடைய யோசனையைச் சொல்லுங்கள் என்று சிவபெருமான் தேவசங்கத்தாரிடம் கேட்டதுமே, அங்கிருந்த தேவர்களும் வேதமோதும் வித்தகர்களும், முத்தி பெற்ற முனிவர்களும் சிவபெருமானைப் பார்த்து, ஈசனே ! தாங்கள் கூறிய யோசனையே ஏற்புடையதாகும். அப்படியே செய்யுங்கள் என்று அகமகிழ்ச்சியோடு ஆமோதித்தார்.
எல்லாரும் இசைந்துரைத்த காரணத்தை கருத்தில்கொண்ட சிவபெருமான், வன்மையான கலியனை பிறவி செய்யலாம் என்று நிச்சயித்து அதற்கான உபாயத்தைச் சிந்தித்தார்.
சிவபெருமான் அவ்வாறு சிந்தித்ததுமே. குறோணியின் ஆறாவது துண்டத்தின் அம்சமான கலியன் பூமியைப் பிளந்து கொண்டு தலைகீழும் கால் மேலுமாக வெளிப்பட்டான்.
இப்படி, பிறப்பு விதிகளுக்கெல்லாம் மாறுபட்ட நிலையில் ஒருவன் பூமிக்குள்ளிருந்து தலைகீழாக வெளிப்பட்டதைக் கண்ட தேவர்களெல்லாம் ஆச்சரியத்தில் மிதந்தார்கள். அதிர்ச்சியில் உறைந்தார்கள். இது மிகப்பெரிய மாயச் செயல் என வியந்தார்கள். தாம் கண்ட அதிசயத்தைச் சிவபெருமானிடம் உடனெ தெரிவிக்க வேண்டுமென விரைந்தார்கள்.
சிவபெருமானைச் சந்தித்த தேவர்களெல்லாம் ஈசனே ! என வணங்கி, தாம் கண்ட அதிசயத்தைச் சிவபெருமானிடம் பவ்வியமாக விவரித்தார்கள். அதைக் கேட்டு மனமகிழ்ந்த சிவபெருமான், அந்த அதிசயத்தைக் காண ஆசை கொண்டு தம்முடைய இருப்பிடத்தை விட்டு எழுந்தருளி, கலிநீசன் பிறந்திருக்கும் இடத்திற்குப் போகப் புறப்பட்டார். சிவபெருமான் புறப்பட்டு வரும்போது, அங்கே நந்திதேவன் சிவபெருமானின் எதிரில் வந்து நின்றுகொண்டு, சிவபெருமானைப் பார்த்து ஈசனே, மும்மூர்த்திகளும் தேவர்களுங்கூட முழுமையாகக் காணமுடியாத மூலமுதற் பொருளே ! தாங்கள் ஏதோ ஒர் திக்கு நோக்கி எழுந்தருளியதற்கு என்ன காரணம் என வினவினார்.


நந்திதேவரின் அந்த வினாவிற்குச் சிவபெருமான் பதில் சொல்லுகிறார். நந்திதேவா ! இப்போது ஏதோ ஒரு விதமான அதிசயம் நடந்துள்ளது என்று தேவர்களெல்லாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். அதாவது, பிறப்பு விதிகளுக்கு மாறாக ஒருவன் தலைகீழாய்ப் பூமியைப் பிறந்து வெளிப்படுகிறானாம். அந்த தடுமாற்ற நிலையைச் சற்று பார்த்து வரலாம் என்று தான் மெல்லக் கிளம்புகிறேன் என்றார்

No comments:

Post a Comment