Tuesday 29 August 2017

வாயு தத்துவம் - சித்துக்காடு ரகசியம்

#‎வாயு #தத்துவம்
------------------------
குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகிறது? குழந்தை பிறந்தவுடன் அழுவது ஆரோக்கிய நிலையைக் குறிக்கும். குழந்தையின் முதல் சுவாசமே அழுகையாக வெளிப்படுகிறது என்பது மருத்துவர்களின் கொள்கை. ஆனால், குழந்தை அழுவதற்கு உண்மையான காரணத்தை அளிக்க வல்லவர்கள் சித்தர்களே.

குழந்தை பிறந்தவுடன் தான் எப்போது இறக்கப் போகிறோம் என்பது அதற்கு தெளிவாக இறைவனால் உணர்த்தப்படுகிறது. அதே சமயம் தான் இறக்கும் முன் நிறைவேற்ற வேண்டிய நற்காரியங்களும் அதற்கு இறை ஆணையாக தெரிவிக்கப்படுகிறது. மனிதப் பிறவியோ குறுகியது. செய்ய வேண்டிய நற்காரியங்களோ ஏராளம். எனவே, இவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் எப்படி இத்தனை நற்காரியங்களை செய்து முடிக்க முடியும் என்ற இயலாமையால் எழும் வேதனையே குழந்தையின் அழுகையாக வெளிப்படுகிறது என்பது சித்தர்கள் நமக்குக் காட்டும் உண்மைப் பாடமாகும்.

குழந்தை அழும்போதுதான் முதன்முதலில் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து வெளிவிடும் என்பது உண்மையே. ஆனால், அந்த முதல் சுவாசத்தை குழந்தை எங்கிருந்து பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?

இந்த உலகில் பிறக்கும் எந்தக் குழந்தையும் தனது முதல் மூச்சுக் காற்றை ஸ்ரீதாந்த்ரீஸ்வரரின் நந்தி வாகன மூர்த்தியிடமிருந்தே பெறுகிறது என்பது இதுவரை நீங்கள் அறியாத இரகசியமாகும். சென்னை அருகே உள்ள சித்துக்காடு திருத்தலமே இந்த உலகின், பிரபஞ்சத்தின் வாயு மையமாகும். இத்திருத்தல நந்தீஸ்வர மூர்த்தியே பெருமானிடமிருந்து பெறும் வாயு தத்துவத்தை மக்கள் சுவாசிக்கக் கூடிய பிராண வாயுவாக மாற்றி மக்களுக்கு முதல் சுவாசக் காற்றாக அளித்து அருந் தொண்டாற்றி வருகிறார். இப்பெருமானுக்கு நன்றி செலுத்துவது ஒவ்வொரு மனிதனின் கடமை அல்லவா? இப்பூவுலகிலிருந்து விடை பெறும் முன்னர் ஒரு முறையாவது சித்துக்காடு திருத்தல இறைவனையும் நந்தீஸ்வர மூர்த்தியையும் தரிசிப்பது இப்புவியில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமையாகும்.

நந்தி எம்பெருமானின் அற்புதத் தொண்டை சாதாரண மக்களும் உணரும் வண்ணம் இப்பெருமான் தெளிவான இரு நாசித் துவாரங்களுடன் இன்றும் காட்சி அளிக்கிறார். கண்டு அருள் பெறுங்கள்.

எனவே மனிதனுக்கு இன்றியமையாத வாயுக் காற்றை, சுவாசக் காற்றை பரிபாலிக்கும் மூர்த்தியாக நந்தியெம்பெருமான் எழுந்தருளி இருப்பதால் நந்தீஸ்வர மூர்த்திக்கு நாம் இயற்றும் வழிபாடுகள் வாயு தத்துவத்தை தூய்மைப்படுத்தும் என்பது உண்மை.

தங்கள் கையால் முறையாக அரைத்த சந்தனக் காப்பு, பசு வெண்ணெய்க் காப்பு, கொள்ளுக் காப்பு, தைலக் காப்பு போன்ற காப்புகளால் நந்தீஸ்வரரை வழிபட்டு, பசு நெய் தீபங்கள் ஏற்றி வணங்கினால் மனித வாழ்வு தித்திக்கும், இறையருள் சித்திக்கும்.

முதல் மூச்சை சித்துக்காடு நந்தீஸ்வரர் அளித்தால் மனிதனின் இறுதி மூச்சைப் பெறுபவர் யார்? மனிதனின் இறுதி மூச்சிற்குச் சொந்தமானவரும் நந்தீஸ்வர மூர்த்திதான். ஆனால், இது தன்னிச்சையாக நடப்பதல்ல. எந்த அளவிற்கு ஒரு மனிதன் இறைவனின் அருளாணையை ஏற்று தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்காக அர்ப்பணித்து வாழ்கின்றானோ அதைப் பொறுத்து அவனுடைய இறுதி மூச்சு சென்றடையும் இடம் அமையும்.

ஒரு சற்குருவின் மேற்பார்வையில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களின் இறுதி மூச்சு திருக்குற்றால நந்தீஸ்வரரின் திருப்பாதங்களை அடையும் என்பதை சித்தர்கள் மக்களின் இறுதி கால இரகசியங்கள் குறித்த கிரந்தங்களில் குறித்து வைத்துள்ளார்கள்.

பெரும்பாலான பக்தர்கள் நந்தியெம்பெருமானின் காதுகளில் தங்கள் கனவுகளைக் கூறும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? சித்தர்களின் கோணத்தில் கனவுகள் வெறும் எண்ணத்தின் பிரதிபலிப்புகளாக அமைவதால், கனவுகளுக்குத் தேவையில்லாத முக்கியத்துவத்தை அளிப்பதால் எவ்வித பலனும் கிட்டாது. யார் ஒருவர் இறக்கும் தருவாயில் திருக்குற்றால நந்தீஸ்வர மூர்த்தியைத் தியானித்து அப்பர் பெருமானின் மரண பயம் நீக்கும் ம்ருத்யுஞ்ஜய துதியான,

உற்றார் யார் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது

குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் யாருளரோ

என்ற துதியை ஒருமுறையாவது ஓதுகின்றார்களோ அவர்களுடைய வேண்டுகோளை எம்பெருமான் மனமுவந்து ஏற்பதால் அதுவே அவர்கள் இப்புவியில் ஏற்கும் கடைசி பிறப்பாக அமையும் என்பது உறுதி.

திருக்குற்றால நாதர், அம்பாள் குழல்வாய் மொழியம்மை, நந்தியெம்பெருமான் இவர்கள் வழிபாடு மட்டும் அல்லாது எந்த இறை மூர்த்தியையோ, அவதார மூர்த்திகளையோ, கீழ்க்காணும் உத்தமர்களையோ நினைத்து இறுதி மூச்சை விடுத்தாலும், உயிர் பிரிந்தாலும் பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பது உறுதி.

No comments:

Post a Comment