Wednesday 30 August 2017

கலிநீசன் பாகம் 3 Kaliyugam Part 3

சிவபெருமானை ஏளனமாக நினைத்து, எள்ளி நகைத்த கலிநீசனுக்கு, வானவர்களெல்லாம் சேர்ந்து, சிவபெருமானின் வானளாவிய பெருமைகளையெல்லாம் புகட்டினார்கள். ஆனால் அந்தக் கலிநீசனின் புத்திக்கு வானவர்கள் போதித்த நல்லுபதேசங்கள் எட்டவில்லை.
எனவே, அந்தக் கலிநீசன் தேவர்களைப் பார்த்துச் சொல்லுகிறான். தேவர்களே ! இந்த சிவபெருமானின் பெருமைகளைச் சிறப்பாகச்சொன்னீர்கள். நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருந்தால், அதாவது இவரே சர்வதையும் படைத்தது உண்மையானால், எனக்குப் பொருத்தமான அளவும் அழகும் உடையதோர் பெண்ணை உருவாக்கித் தரச்சொல்லுங்கள் பார்ப்போம் என்று அந்தக் கலிநீசன், சிவபெருமானை மிகவும் இழிவாக நினைத்துச் சொன்னான்.
கலிநீசன் தம்மை மிகவும் தரக்குறைவாக நினைக்கிறான் என்பதை உணர்ந்த சிவபெருமான், கலிநீசனைப் பார்த்துச் சொல்லுகிறார். நீ கேட்டது மிக நல்லது. உன் விருப்பப்படியான ஒரு பெண்ணை யாம் படைத்துத் தருகிறோம் என்று சொல்லிவிட்டு, அதற்கான உபாயத்தை ஒரு கணம் சிந்தித்த சிவபெருமான், மீண்டும் கலிநீசனைப் பார்த்து உனக்கு உண்டான பலத்திற்கு ஈடான ஒரு பெண்ணைப் பிறவி செய்து தந்தால் போதுமா என்று கலிநீசனிடம் சிவபெருமான் கேட்டார்.

சிவபெருமான் அப்படிக் கேட்டதுமே, கலிநீசன் சிவபெருமானை நோக்கி சொல்லுகிறான், என்னுடைய பலத்திற்குச் சமமான பலத்தோடு பெண்ணைப் பிறவி செய்ய வேண்டாம். என்னுடைய பலத்தில் பாதி அளவு பலமும், அழகில் என்னைவிட அதிகமானவளாகவும், ஆங்காரத்தில் என்னைவிட பாதியுடையவளாகவும், மலரின் இதழ்களையொத்த உதடுகளையுடைய வாய் அழகும், தேங்காயக் குரும்பல் போன் அழகான மார்புகளையுடையவளாய், வாழிப்பான உடல் வாகும், கவர்ச்சியான கண்களும் வசீகரமான பார்வையும், வயப்படுத்தும் அக்குல் உடையவளாகவும், ஒடுங்கிய இடையும், அதற்கிசைந்த கைகளும், கால்களும், கண்களும், பற்களும் அமைந்தவளாய், மலர்ச்சரங்களைச் சூடுகின்ற கூந்தல், பின்னழகைவிட முதன்மை வாய்நததாகவும் இருக்க வேண்டும்.
மொத்தத்தில் அவளுடைய விரல்களும், சொற்களும், பற்களும், தொடையழகும், நடையழகும், இடையழகும், கூந்தல் சடையழகும் உடையழகும், இறுக்கமான உடலமைப்பில் ஓர் மென்மையும், அந்த அழகுக்கு ஏற்ற அத்தம் களபம், கஸ்தூரி ஆகியவற்றைப் போன்ற வாசனையுடையவளாய், மூவர் முதலான தேவர்களுக்கெல்லாம் மோக மயக்கத்தை ஏற்படுத்தத் தக்கதோர் பெண்ணைப் பிறவி செய்து உயிர் கொடுத்து தாரும் என்றான்.

கலிநீசனின் அவ்வுரையால் அகமகிழ்ந்த சிவபெருமான், இப்போது இந்தக் கலிநீசன் கேட்டபடியான பெண்ணை எப்படி பிறவி செய்வது என்று சிந்தித்தவாறு, தம் அருகில் அமர்ந்திருக்கும் லோகமாதாவாகிய உமாதேவியைப் பார்த்து, உமையவளே ! கலிநீசன் கேட்டபடியான பெருமைமிகு பெண்ணை எவ்வாறு படைத்துக் கொடுக்கலாம்? அதற்கான ஓர் உபாயத்தை உடனே சொல் என்றார்.
உடனே உமையவள் சிவபெருமானை வணங்கியவாறு, ஒப்பு உவமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆதிப் பரம்பொருளே ! என்னுடைய பெருமானே ! இந்தக் கலிநீசனை பாதியாக பகிர்ந்து, அதை வலது, இடது எனப் பிரித்து, அவனுடைய இடது பக்கத்து விலா எலும்பைக் கழற்றி எடுத்து, அந்த எலும்பை ஒரு பெண்ணாகப் படைத்து, உடனடியாக அந்தப் பெண்ணை இந்தக் கலிநீசனுக்குக் கொடுத்துவிடுங்கள் சுவாமி என்றாள்.

உமையவள் சொன்ன உபாயத்தை உடனே செயல்படுத்தும்படி தேவர்களிடம் உத்தரவிட்டார் சிவபெருமான். தேவர்கள் கலிநீசனைக் குனிய நிறுத்தி அவனுடைய இடுப்போடு சேர்த்து ஒரு கயிற்றால் வரிந்து கட்டினார்கள். கட்டி முடித்ததும் கலிநீசனை நிமிர்ந்து நில் என்றனர். தேவர்கள் சொன்னதுபோல் கலிநீசன் நிமிர்நதான். அவன் திமிறி நிமிர்ந்தபோது அவனுடைய இடது விலாப்புறத்திலிருந்து ஒரு எலும்பு சதையைக் கிழித்துக் கொண்டு தெறித்து வெளியே வந்தது.
அந்த எலும்பைக் கண்ட சிவபெருமான், வெளிகொண்ட இந்தக் கலிநீசனின் விலாவிலிருந்து இந்த எலும்பை எடுத்ததினால் இது அவனுடைய பலத்தில் நேர்பாதிபலம் பொருந்தியதாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே, அந்த எலும்பைக் கலிநீசனின் உடலிலிருந்து கழற்றி எடுக்கச் செய்து, அந்த எலும்பை மணம் மிகுந்த மங்கையாக உருவாக்க வேண்டுமென்று மன்மதனை நினைத்தார். உடனே அந்த எலும்பு வனப்புடைய நங்கையாக உருமாறியது.

கலிநீசன் நினைத்தது போல் அழகுடையதோர் ஆரணங்கை, அவனுடைய இடது புறத்து விலா எலும்பின் மூலமாக சிவபெருமான் சிருஷ்டித்தார். அவளோ, பாசத்தைப் பிரதிபலிக்கும் பாசாங்குடன் தன் கயல்விழிப் பார்வையால் கலிநீசனின் மோகத்தை மும்மடங்காக்கும் அழகும் பகட்டும், அலங்காரப் பளபளப்போடும், கட்டுப்படுத்த முடியாத காம இச்சை கரைபுரளப் பிறந்தாள்.
அந்த கட்டழகு நங்கையைக் கண்ட கலிநீசனோ, ஏதோ கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுவிட்டதுபோல் மெய்மற்நத கோலமாக அவள் அருகே சென்று அவளுடைய முகத்தைத் தன் முகத்தோடு அணைத்துக்கொண்டான். நாள்தோறும் நல்ல பல தர்மங்களைச் செய்தோருக்கு வைகுண்டலோக வாழ்வு கிட்டியதும் பேரின்பத்தில் திளைப்பார்களே அதுப்போல் அந்த பெண்ணைக் கண்டதும் கலிநீசன் பேரின்பம் அடைந்தான். அதனால் அவனை அள்ளி அணைத்து அங்கமெல்லாம் முத்தமிட்டான்.
அவளுடைய அழகான மார்பகங்களைக் கண்டு ஆசைப் பெருக்கினால் அங்கலாய்த்தான். அவளை அலாக்காகத் தூக்கித் தன் இடுப்பிலே வைத்துக்கொண்டு படுத்துக்கொள்வோமா என்று பாய் விரிக்க ஆயத்தமானான். இவ்வண்ணமாக அந்தப் பெண்ணோடு உறவாடி மனம் பேதலித்த கலிநீசன் மண்ணோடு மண் மருவுததைப் போல் அந்தப் பெண்ணுடன் கலந்துவிட வேண்டுமென்றுதான் அவனுடைய அங்கமெல்லாம் உருகியதே தவிர அந்தப் பெண்ணையும், அவனையம் படைத்தருளி வைத்தாரே அந்தப் பரம்பொருளைப் பற்றிய சிந்தனையே அந்த கலிநீசனிடம் சிறிதளவும் இல்லை.

இப்படி சிவபெருமானும், பல்வேறு தேவர்களும், வானவர்களும் அமர்ந்திருக்கும் அந்தச் சபையில் அங்கிருப்போர் யாரைப்பற்றியும் நினைக்காமல், அந்தப் பெண்ணைத் தூக்கி வைத்து முத்தமிடுவதிலேயே முனைப்பாக இருந்த அந்தக் கலிநீசனைப் பார்த்து, தேவர்களும், வானவர்களும், சொல்கிறார்கள், மாநீசா ! மண்ணாளப்போகும் மனிதா! உனக்குப் பெண்ணைப் படைத்துத் தந்த பெரியோனாகிய சிவபெருமானை வணங்கி உனக்குத் தேவையான வரங்களைக் கேளு என்றார்கள்.

சிவபெருமானை வணங்கி அவரிடம் உனக்கு தேவையான வரங்களைக் கேளு என்று தேவர்கள் கலிநீசனிடம் சொன்னதுமே, கபடனாகிய அந்தக் கலிநீசன், சிவபெருமானின் பாதங்களில் விழுந்து வணங்கி, ஈசனே ! என்னுடைய எண்ணத்திற்கு இணங்கி எனக்கு ஏற்புடையதோர் இளம் நங்கையை படைத்துத் தந்த நாயகா, சர்வ லோகங்களுக்கும் கிருபைபுரிகின்ற பேரருளே ! இனிமேல் எனக்கு விருப்பமான வரங்களை, கனிவாகப் பேசும் உதடுகளையுடைய தங்களின் திருவாயால் உடனடியாகப் பலனளிக்கும் வகையில் தந்தருளுங்கள் தயாபரனே என்றான்.

அதைக் கேட்ட சிவபெருமான் கலிநீசனின் முகத்தை பார்த்து, இப்போது உனக்கு என்ன வரம் வேண்டுமென்றார்.
உடனே அந்தக் கபடனாகிய கலிநீசன் சிவபெருமானின் பாதங்களைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, மேலுலகாகிய பூலோகம், புவலோகம் சுவலோகம், சனலோகம், தபோலோகம், மகலோகம், சத்தியலோகம் ஆகிய ஏழு லோகங்களும் கீழுலகாகிய அதலம், விதலம், சுதலம், தராதலம், இராசாதலம், மகாதலம், பாதலம் ஆகிய ஏழு லோகங்களும் அதிரும்படியான பல வரங்களைக் கேட்க முனைந்தான்.
முதல் வரமாக மகாவிஷ்ணுவின் சிறப்புப் பொருந்திய திருமுடியையும், அவருடைய சக்கராயுதத்தையும், தேரையும் தர வேண்டும் என்றும், அத்துடன், சிவபெருமானாகிய தங்களை நான் நினைக்கும்போதெல்லாம் என்னுடைய புருவ மத்தியில் வெள்ளொளிப் பிளம்பாய்க் காணுதற்குரிய பேராற்றலையும் வேதாந்த தத்துவங்களைத் தோற்றுவிக்கும் யுத்தியையும், தாங்கள் தரப்போகும் வரத்தின் வலிமையால் எங்கும், எதிலும் நானே முதன்மையானவனாக இருப்பதற்கான வாய்ப்புகளையும் தாரும் என்றான்.

மேலும் சிவபெருமான், உமையவள், பிரம்மதேவன், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, காலன், காமாட்சி, சரஸ்வதி, மகாளி, விநாயகர், முருகர், கிங்கிலியர், தவநிலை, தெய்வநிலை மற்றும் பிரபஞ்ச சுழற்சிகளுக்குக் காரணமான அடிப்படை ரகசியங்கள் அனைத்தையும் எனக்கு வரமாக அருளும் என்றான்.

இவ்வரங்களைத் தவிர இன்னும் பல வரங்களை அந்த பொல்லாக் கலிநீசன் கேட்டான். அவை யாவும் மிகக் கொடுமையான விளைவுகளை உண்டாக்கத் தக்க வல்லமை பொருந்திய வித்தைகளேயாகும். அவற்றையும் வரிசையாகச் சொல்லப்பட்டுள்ளது.
கூடுவிட்டுக் கூடு பாய்வதற்கான காரக்கருவாகிய மூடுமந்திரம், உலகத்தை உருப்படாமலாக்கி மக்களின் மனநிலையைச் சீரழிப்பதற்கான மந்திரம் முதலான தந்திரங்களையும், நோய் நொம்பலங்களிலிரு
ந்து விடுபடுவதற்கான வைத்திய வாகடங்களையும், உலகிலுள்ள மாந்தர்கள் யாவரையும் ஏதோ ஒரு காரணத்தால் மயக்க நிலைக்குள்ளாளக்கி அவர்களின் அறிவு நிலை தடுமாறும்போது அவர்களையெல்லாம் என் வயமாக்கும் மோகினி வைசியமும் ஈசனே எனக்கருளும் என்றான்.

அத்துடன், பெண்களுக்கு ஆசையை அடக்கவும் அதிகரிக்கவும் ஏதுவான மோகன வைசியம், வேண்டத் தகாதவர்களின் பேச்சைாற்றலைக் குறைப்பதற்கான மந்திர வித்தை, உலகோரை என் இச்சைக்கு இசைய வைக்கும் மோகன மந்திரம், ஆணையும், பெண்ணையும் பிரித்து வைப்பதற்கான மாரண வித்தை (மந்திரத்தால் மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிக்கும் வித்தை), குற்றம் குறைகள் என பிரித்துகாட்டி குடும்பங்களைக் கெடுப்பதற்கான மாரண வித்தை, என்னை எதிர்ப்போரை துஷ்டதேவதைகளை ஏவிவிட்டுக் கொல்வதற்கான மந்திரம், அவர்களுக்குப் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து தொலைத்துக்கட்டுவதற்கான வழி முறையும், இந்த உலகத்தைத் தாழ்வுறச் செய்வதற்கான தந்திர வித்தைகளும், எல்லா வகையானதையும் ஈடழிக்கும் வல்லமையும், மக்களின் ஒற்றுமையில் மன வேறுபாட்டை உண்டாக்கி அவர்களின் உணர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் சச்ரவு உபாயங்களும், அவற்றிற்கான கருப்பொருளையும் தருவதோடு, அதற்கான பூசை விதிகளையும், அப்பியாச முறைகளையும் அட்சர இந்திரங்களையும், அதற்கான உபதேசங்களையும், தங்களுக்கே உரித்தான நியதிகளையும் எனக்குத் தாங்கள் அருள வேண்டும்.

நீரிலும், நெருப்பிலும் அமர்ந்திருப்பதற்கான வித்தைகளும், நிலவிலே உலவி, அந்த நிலவுக்கே நிழலுண்டாக்குவதற்கான யுத்திகளும், மிருகங்களை கட்டுக்குள் வசப்படுத்தி வேலை வாங்குவதற்கான வாதை முதலான பேய்களையும் எனக்குவிட்டு தாருமையா !
அஷ்டகருமம் (வசியம், மோகனம், ஆக்ருஷனம், ஸ்தம்பனம், பேதனம், வித்வேஷனம், உச்சாடனம், மாரணம்) எனப்படும் எட்டு மந்திர கருமங்களை அடக்கி ஆள வரம் தாருமையா கூர்மையற்ற பிசாசுகளெல்லாம் நானிடும் கட்டளைப்படி எனக்குப் பணிபுரிய வையும், மந்திர வித்தை, மாய வித்தை, தந்திர வித்தை, இந்திரவித்தை ஆகிய அனைத்தையும் எனக்குத் தந்தருளுமையா !
கேடு விளைவிக்கக்கூடிய எந்தக் கிரகங்களும் என்னுடைய வாழ்க்கைக்குள் புகுந்துவிடாமலும், அப்படியெ அந்தக் கிரகங்களால் ஒரு வேளை எனக்கு இன்னல் ஏற்படும் பட்சத்தில் அதிலிருந்து மீளுவதற்கான குளிகை என்ற நிழல் கிரக சக்தியையும் எனக்குத் தாங்கள் அருள வேண்டும்.

எனக்கு ஏதேனும் நோய்கள் ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்கான வைத்திய சாஸ்திரமும், இன்னும் பல்வேறு விதமான சாஸ்திரங்களையும் எனக்குத் தருவதோடு, மும்மூர்த்திகளின் உருவ அமைப்பையும், அவர்களின் உற்பத்தியைப் பற்றியும், ஏனைய தேவர்களுடைய பிறப்பு பற்றிய விவரங்களையும் தெளிவாக எனக்குத் தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment