Monday 17 June 2019

ஶ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கண்டி, கடப்பா மாவட்டம், ஆந்திரா ஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர். கடப்பா மாவட்டம்

இன்றைய கோபுர தரிசனம்...

ஶ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கண்டி,
கடப்பா மாவட்டம், ஆந்திரா

ஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர்.

கடப்பா மாவட்டம்

கடப்பா என்னும் பெயர் ’கட்டபா’ என்கிற தெலுங்கு சொல்லிருந்து வந்தது. கட்டபா என்றால் வாசல் அல்லது நுழைவாயில் என்று பொருள். முன்பு ஶ்ரீ வெங்கடேஸ்வரரை தர்சிக்க இங்கிருந்து மக்கள் செல்வார்கள் அதனால் ’தேவுனி கட்டபா’ என்று அழைக்கப்பட்டது. பின் மருவி கடப்பா என்று அழைக்கப்படுகிறது.

பாலகொண்டா மலைத்தொடர்

கடப்பாவின் அருகில் விம்பல்லி என்னும் கிராமம் உள்ளது. பாபாக்னி என்னும் நதி பாலகொண்டா மலைத்தொடர்கள் வழியாக வந்து, விம்பல்லி கிராமத்தில் ஓடுகிறது.

பாலகொண்டா என்னும் பெயர் வர காரணம் இரண்டு வகையாக கூறப்படுகிறது. முதலாவதாக மலை சரிவுகளில் மேச்சலில் இருக்கும் பசுகளிலிருந்து பால் அருகிலிருக்கும் கிராமங்களுக்கு கிடைப்பதால் மலை தொடர் பாலகொண்டா என்ற பெயர் பெற்றது.

இரண்டாவதாக கூறப்படுவது பாபாக்னி நதி நீரின் நிறம் வெளுமையாக பால் போன்று உள்ளதால் மலைத்தொடர் பாலகொண்டா என்ற பெயர் பெற்றது.

பால என்பது பாலையும் கொண்டா என்பது மலையையும் குறிக்கும் தெலுங்கு சொற்கள்.

பாபாக்னி நதி

பாபாக்னி நதி நந்தி மலையில் தொடங்குகிறது. கடப்பா, சித்தூர், அனந்தபுரம் வழியோடி ராய்சொடி தாலுக்குக்கு சென்று, பினாங்கினி நதியில் கலக்கிறது. இன்று இது பென்னாறு என்று அழைக்கப்படுகிறது.

பாபாக்னி என்று அந்நதிக்கு பெயர் வர காரணம் மிகவும் சுவாரசியமானது. இப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டு பகுதியாக இருந்தது, அங்கு சென்சு என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அப்பகுதியில் வேட்டையாட வந்த மன்னர் ஒருவரால் சென்சு மக்களின் தலைவருக்கு மரணம் விளைந்தது. அதன் பின் மன்னருக்கு குஷ்ட ரோகத்தினால் அவதிபட வேண்டி வந்தது. எவ்வளவோ வைத்தியங்கள் பார்த்தும் அது சரியாகவில்லை. சென்சு தலைவரை கொன்றதின் பாபமாக இருக்கும் என பல க்ஷேத்திரங்களுக்கு சென்று வந்தான். இருப்பினும் குணமாகவில்லை. ’கண்டி க்ஷேத்திரத்தின் அருகில் இருக்கும் புனித நதியில் நீராடினால் வியாதி குணமாகும்’ என்ற அசரீரியின் வாக்கு கேட்டது. வாயு தேவரால் பூஜிக்கப்பட்டு தவமிருந்த இடமாதலால், கண்டி க்ஷேத்திரத்திற்கு வந்து மன்னர் அப்புனித நதியில் தினம் நீராடி தவம் மேற்கொண்டார். பின் சில நாட்களில் அவர் செய்த பாபம் மறைய வியாதியும் குணமாயிற்று.

நதியில் நீராடல் பாபங்களை சாம்பலாகி விடுவதால் இப்புனித நதி பாபாக்னி [பாப+அக்னி] என்ற பெயரை உடையதாகிற்று.

*கண்டி க்ஷேத்திரம்*

பாலகொண்டா மலைத்தொடர் ஒரு சிறிய பள்ளத்தாக்கை உருவாக்கியுள்ளது.

மாரெல்லமாடகா என்னும் கிராமத்தினை வாயிலாக வைத்து பாபாக்னி நதி பாலகொண்டா பள்ளத்தாக்கில் பாய்கிறது.

ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்,

பள்ளத்தாக்கு என்பதனை ’கண்டி’ என்று தெலுங்கு மொழியில் கூறுவார்கள். சுமார் இருநூறு அடி உயரத்திலுள்ள பாலகொண்டா மலைத்தொடர் இடையே பாய்ந்து வரும் பாபாக்னி நதி கடப்பா பிரதேசத்தில் சம்வெளியை தொடுகிறது. கண்டி க்ஷேத்திரத்தில் மலைகளிடையே வடகிழக்கு பகுதியிலிருந்து வரும் பாபாக்னி நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது.

பூமானந்தா ஆஸ்ரமத்தை சேர்ந்த ஶ்ரீ ராமகிருஷ்ணானந்தா ஸ்வாமிகள் இந்த க்ஷேத்திரத்தை கண்டி க்ஷேத்திரம் என்று அழைக்கலானார்.

கண்டி க்ஷேத்திர ஶ்ரீ ஆஞ்சநேயர்
பாபாக்னியின் வலது கரையை ஒட்டி அமைந்துள்ளது மிக அருமையான ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில். பார்க்க கண் கொள்ளா காட்சி. நதிகரை ஓரம், பின்னால் மலைத்தொடர், அமைதியான சூழல், நதி ஓடும் சப்தம் தவிர வேறு ஒன்றும் காதுக்கு எட்டாது. தியானம் செய்ய அருமையான இடம்,

அங்கு ஶ்ரீ ஆஞ்சநேயருக்கு கோவில் வந்தது மிக சுவாரசியமான நிகழ்வு.

வாயு தேவர் பாபாக்னியின் கரையில் கண்டி க்ஷேத்திரத்தில் தவம் புரிந்து கொண்டிருந்தார். சீதையை தேடி ராமர் தெற்கு நோக்கி பயணித்த நேரமது. ராமரின் பாத துளிகளை பூஜித்த வாயு தேவர், இந்த க்ஷேத்திரத்தில் சற்று இளைபாறுமாறு கேட்டுக்கொண்டார். ராமர் தான் சீதையை தேடி தான் போவதாகவும், அயோத்தி செல்லும்கால் வாயுவின் உபசாரத்தினை ஏற்பதாகவும் கூறி விடைப்பெற்றார்.

இலங்கையில் ராவணன் மறைவும், ராமரின் வெற்றியும் பற்றி செய்தி வாயு தேவருக்கு கிடைத்தது, பாலகொண்டா மலைத்தொடர்களிடையே இருந்த வாயு தேவர், அயோத்தி திரும்பும் ராமரை வரவேற்க மலைகளிடையே தங்கத்தினாலான தோரணங்கள் கட்டி, தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். ஶ்ரீராமரை வரவேற்க தயாராயினார்.

*ஶ்ரீ ராமர் வரைந்த சித்திரம்*

வாயு தேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அயோத்திக்கு திரும்பி கொண்டிருந்த ராமர் இந்த க்ஷேத்திரத்தில் சற்றே இருந்து விட்டு கிளம்பினார். இங்கு இருந்த நேரத்திலும் ராமருக்கு தம்பி பரதனை பார்க்க சென்றிருந்த ஆஞ்சநேயரின் நினைவாகவே இருந்தது. தனது அம்பினால் அருகிலிருந்த கல்லில் ஆஞ்சநேயரின் சித்திரத்தை வரையலானார். அயோத்திக்கு புறப்பட்டு செல்வதற்கான அவசரத்தில் ஆஞ்சநேயரின் சித்திரம் முழுமையாக வரையும் முன் புறப்பட்டார். ஆஞ்சநேயரின் சித்திரம் முழுமை ஆக இடது சுண்டுவிரல் பாக்கியிருந்தது.

*முடிவடையா ஶ்ரீஆஞ்சநேயர் சித்திரமும்
ஶ்ரீவியாசராஜாவும்*

ஶ்ரீ ராமரால் மிக மெல்லிய கோடுகளாய் வரையப்பட்ட ஶ்ரீஆஞ்சநேயரின் சித்திரத்தை ஶ்ரீவியாசராஜ தீர்த்தர் அவர்கள் செதுக்கி சிற்பமாக வடித்தார்.

இன்று நாம் பார்க்கும் ஶ்ரீராமராலும் ஶ்ரீவியாசராஜ தீர்த்தரும் நமக்கு அளித்த அறிய படைப்பு / பொக்கிஷம்.

ஶ்ரீராமர் வரைந்த சித்திரத்தை சிற்பமாக ஶ்ரீவியாசராஜர் மாற்றும் பொழுது நடந்த நிகழ்வு மிக ஆச்சரிய தக்கது.

ஹனுமாரின் பக்தரான ஶ்ரீவியாசராஜர், சித்திரதினை சிற்பமாக மாற்றும் பொழுது ஹீனப்பட்ட இடது சுண்டு விரலை நேர் செய்து செதுக்கினார். ஆனால் அவ்விடத்திலிருந்து இரத்தம் வருவதைக் கண்டு, தனது தவறை உணர்ந்தார்.

ஶ்ரீராம பக்தரான ஹனுமார், தன்னை ஶ்ரீராமர் எப்படி பார்த்தாரோ அப்படியே இருக்க விரும்பினார் என்பதனை உணர்ந்தார்.

ஶ்ரீவியாசராஜா அவர்கள் 1447 வருடம் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியில் நந்நாளில் இக்கண்டி க்ஷேத்திரத்தில் ஶ்ரீ ஆஞ்சநேயருரை புனருத்தாரணம் செய்வித்தார்.

*திரு தாமஸ் மன்ரோவும் கண்டி க்ஷேத்திரமும்*

வாயு தேவன் இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீராமரை வரவேற்க தங்க தோரணம் கட்டியது உண்மை, தோரணம் இரு மலைகளுக்கு இடையில் இருப்பதை இன்றும் பார்க்க முடியும். இக்கலியுகத்திலும் இறைவனிடம் பக்தியுள்ளவர்களுக்கு இத்தோரணம் தெரிந்துள்ளது. இப்பிறவியில் தனது கடமைகளை பக்தியுடனும், சிரத்தையுடனும் செய்திருப்பரகள் கண்ணில் இத்தோரணம் தெரிவது சத்தியம். இதை கண்டவர் மறுபிறவியின்றி இருப்பார் என்பது தின்னம்.

அப்படி பட்ட பெரும் பாக்யம் ஶ்ரீ தாமஸ் மன்ரோவுக்கு கிடைக்கப் பெற்றது. அவர் கடப்பாவிற்கு கலக்டெராக இருந்த பொழுது இந்நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வை, மதராஸ் மாவட்ட கெஸட், கடப்பா மாவட்டம், பகுதி-1, அத்யாயம்-1 பக்கம்-3, மற்றும் அத்யாயம் 15, பக்கம் - 217 ஆகிய இடங்களில் 01.10-1914 தேதியிட்ட கெஸடில் பதிவு செய்துள்ளார்.

ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில் - கண்டி க்ஷேத்திரம்
மத்வ சம்ரதாயத்தை பின்பற்றும் ஸ்வாமி வஸந்தாசார்யர் ஶ்ரீ ஹனுமாருக்கு இப்புனித க்ஷேத்திரத்தில் திருக்கோயில் கட்டினார். உலகினருக்கு ஶ்ரீ ஹனுமாரின் மகிமையை வெளிச்சம் போட்டு காட்டினார். இவ்வாஞ்சநேய பக்தர் பிற்காலத்தில் உடுகவி கண்டி ஆச்சார்யா என்று புகழ் பெற்றார். கடப்பா மாத்வ சங்கம் இவ்வாசரியரை பெருமை படுத்த அவருக்கு கோயில் வளாகத்தில் சிலை நிறுவியுள்ளனர்.

ஶ்ரீஹனுமாருக்கு அளிக்கப்படும் பிரஸாதம், அடுத்ததாக இவ்வாசரியருக்கு அளிக்கப்படுகிறது, பின்பே வினயோகிக்கப் படுகிறது.

கண்டி ஶ்ரீஹனுமார்
கண்டி க்ஷேத்திரத்தில் பகவான் மிகவும் தேஜஸ்வியாக ஜொலிக்கிறார். எப்படி இளம் சூரியன் பிரகாசமாக இருக்குமோ எப்படி ஜொலிக்கிறார்.

பகவான் தனது இடது திருக்கரத்தில் சௌகந்திகா [சுகமான மணம்] புஷ்பத்தை வைத்துள்ளார். இவரின் வலது திருக்கரம் அபய முத்திரை தரித்துள்ளது. தன் பக்தர்களுக்கு பயம் இன்மையை அருளுபவர் இவர். பகவானின் வால் எழுந்து தலைக்கு மேல் சென்று, நுனி சுருண்டு உள்ளது. பகவான் முகத்தில் மீசை வைத்துள்ளர்.

பகவானின் தோற்றம் பக்தர்களுக்கு பயமின்மை மட்டும் அளிக்கவில்லை, தைரியம், வீரம், விழிப்புணர்ச்சி எல்லாவற்றையும் அளிப்பவாரக அமைந்துள்ளது.

திருக்கோயிலின் இருப்பிடம்
ஆந்திர பிரதேசத்தில் கடப்பா மாவட்டத்தில், சக்ரயபேட்டாவில் உள்ள வீரன்நாகாட்டு பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரம் கண்டி க்ஷேத்திரம் என்று பிரபலம். ராய்சூட்டி செல்லும் வழியில், வேம்பள்ளியிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ராய்சூட்டி அல்லது வேம்பள்ளியிலிருந்து பேருந்துகள் உள்ளன.

காலை 6மணி முதல் மதியம் 2மணி வரையிலும், திரும்பவும் மாலை 5மணி முதல் 8மணி வரையிலாக கோவில் திறந்திருக்கும்.

காலை வேத மந்திரத்தினால் பகவானுக்கு பள்ளி எழுச்சி நடைப்பெறுகிறது. வடைமாலையும், வெற்றிலை மாலையும் பகவானுக்கு இங்கு விசேடமாக சாற்றப்படுகிறது. சந்திரமாண்ய சிரவண மாதத்தில் விசேடமாக பூஜைகள் செய்விக்கப் படுகிறது.

அனுபவம்

பக்தர்களுக்கு பயமின்மை, தைரியம், வீரம், விழிப்புணர்ச்சி, கல்வி ஞானம், வேள்வி ஞானம், எல்லாவற்றையும் கண்ட மாத்திரத்தில் அளிக்க வல்ல கண்டி க்ஷேத்திர ஶ்ரீஆஞ்சநேயரை தரிசிப்போம் வாருங்கள்,

வாழ்நாளில் 1008 கோபுர தரிசனம் செய்தவர்களுக்கும், 108 கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் மறுபிறவி என்பது கிடையாது.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ ஶ்ரீ ராமஜெயம்,
ராம நாமமே சொன்னால் அங்கே வருவார் ஹனுமார், க்ஷேமங்கள் யாவையும் தருவார், ஶ்ரீ ராம பக்த ஹனுமார்.