Friday, 7 June 2019

வெட்டுடையார் காளியம்மன்

வெட்டுடையார் காளியம்மன் !

பிரிந்த கணவன் மனைவியை சேர்த்து வைக்கும் வெட்டுடையார் காளியம்மன்!
சக்தி மந்திரம்!இன்று 4/6/2019 செவ்வாய்க்கிழமை சக்தியின் அருளை பெற இம்மந்திரம் ஐந்து முறை படிக்க வேண்டும்! அதன் பின்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் படிக்க வேண்டும்!
வெட்டுடையார் காளியம்மன் நீதி தேவதைதிருவடிகள் சரணம்  !ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்

தன் உயிரை விட தன் நாட்டு அரசியின் உயிரே மேலானது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அரசிக்கு வந்த ஆபத்தை தன் தலையில் சுமந்த கன்னிப்பெண். தனக்காக உயிர்விட்ட பெண்ணுக்காக ஆலயம் அமைத்து வழிபட்ட அரசி. எங்கே நடந்தது இப்படி ஓர் அற்புதம். எங்கே இருக்கிறது அந்த ஆலயம். சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்கிருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அரியாக்குறிச்சி என்னும் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் ஆலயம்தான் அது. ஆலயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்னதாக,கோயில் உருவான வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

வெள்ளையர்களை எதிர்த்து, முதலில் எதிர்ப்புக்குரல் கிளம்பியது தென்னகத்தில்தான். அப்போது இந்தப் பகுதியே போர்க்கோலம் பூண்டிருந்தது. அப்போது சிவகங்கைச் சீமையை முத்துவடுகநாதர் என்பவர் ஆண்டு வந்தார். அவர் எதிரிகளால் கொல்லப்படவே, அவருடைய மனைவி வேலு நாச்சியார் தனது படைத்தளபதிகளான மருது சகோதரர்களின் உதவியோடு அரியாக்குறிச்சி வழியாக தப்பிச் சென்றார். வெள்ளையர் படை அவர்களைத் தேடி அலைந்து திரிந்தது.

அரியாக்குறிச்சியில் கன்னிப் பெண்ணொருத்தி ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டனர் வெள்ளையர்கள். அந்தப் பெண்ணிடம் வேலுநாச்சியார் பற்றி விசாரித்தனர். அவள் தகவல் சொல்ல மறுக்கவே அடுத்தகணமே அவளின் தலையைத் துண்டித்தனர். அப்பெண் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தாள்.

தகவல் அறிந்து அங்கு வந்த வேலுநாச்சியார் அவளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வழிபடத் தொடங்கினார். தனது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாக அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

வெட்டுப்பட்ட உடையாள்தான் வெட்டுடையாளாக மாறி இன்றளவுக்கும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள் என்று மெய்சிலிர்க்கிறார்கள் காளியின் பக்தர்கள்.

தீர்க்கமான கண்களுடன் கருணை பொங்கும் முகத்தோடு தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறை தீர்க்கிறாள் அம்மன். வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டு கம்பீரமாக வீற்றிருக்கிறாள் காளி. நம் கண்களுக்கு தெய்வீக ஒளியாகக் காட்சி அளிக்கும் காளியம்மன், நம்மைப் பாதுகாக்க எட்டுக் கரங்களுடன் காட்சி அளிக்கிறாள்.

மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் மாங்கல்யத்தை அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கிச் செல்கின்றனர். கணவன் -மனைவி, உறவினர்கள், இப்படி யாரிடமாவது சண்டை போட்டு வெகுநாட்கள் பிரிந்து இருப்பவர்கள், இங்கு வந்து திருநீறு பூசி ஒன்று சேரும் இடமாகவும் இக்கோயில் திகழ்கின்றது.

குழந்தை வரம் வேண்டுவோர் கோயிலில் உள்ள விசிறி மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக் கொள்வர்.பக்தர்கள் நினைத்தது நடப்பதால், நாளுக்கு நாள் பக்தர்களின் வருகையானது பெருகி வருகின்றது.
கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.

நடைபெறும் திருவிழாக்கள்:

பங்குனி மாதம் பத்து நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவிழா நாட்களில் அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

இந்நாட்களில் காளி கேடயம், பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்கக் குதிரை ஆகிய வாகனங்கங்களில் பவனி வருவது உண்டு. விழாவின் 9-ம் நாளில் தேர் பவனியும் நடைபெறும். இக்கோயிலில் ஆடிப்பெருக்கு அன்று சந்நிதி முழுவதையும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும். கோயிலில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது

வெட்டுடையார் காளியம்மன் நீதி தேவதை! துடிப்பான தெய்வம்! அம்மனை வேண்டிக்கொண்டால், துன்பங்கள் பறந்தோடும்; வாழ்க்கை சிறந்தோங்கும்!

அந்தரி சுந்தரி அதிபயங்கரி சக்தி
மந்தாகினி வாலைக்குமரி மஹாசக்தி
நிரந்தரி நீலி கால பைரவி
திரிசூலி தேவி மஹிஷாசுர மர்த்தினி
சரணம் சரணம் சரணம் தேவி
எனைக் காத்தருள்வாய மஹாசக்தி

இம்மந்திரம் ஐந்து முறை படிக்க வேண்டும்! அதன் பின்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் படிக்க வேண்டும்!

காரணமும் தனுவு  நினைக்கெனத் தந்தேன்
காளி நீ காத்தருள் செய்யே!

மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்;
மாரவெம் பேசயினை அஞ்சேன்;
இரணமும் சுகமும் பழியு நற்புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்!

சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்!
தாயெனைக் காத்தருள் கடனே!

தவத்தினை எளிதாப் புரிந்தனள்; யோகத்
தனி நிலை ஒளியெனப் புரிந்தாள்;

சிவத்தினை எளிதாப் புரிந்தனள்; மூட்ச்
சித்தமும் தெளிவுறச் செய்தாள்;

பவத்தினை வெறுப்ப அருளினாள்; நாளும்
பான்மைகொ ளவள்மயம் புரிந்தாள்;

அவத்தினைக் களைந்தாள்; அறிவென விளைந்தாள்;
அருந்தவமா வாழ்கவிங் கவளே!

ஓம்  ஓம்  ஓம்!
வெட்டுடையார் காளியம்மன் நீதி தேவதைதிருவடிகள் சரணம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்