Sunday 16 June 2019

அகத்தியர் வாக்கு - ஸ்ரீ ராமர்

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

அகத்திய மஹரிஷிகள் ஹனுமன்தாசனுக்கு ஸ்ரீ ராம காதையை தொடங்கும் முன், ராமரின் ஜாதகத்தை அலசி விரிவாக அதன்  பெருமைகளை,மனிதர்களுக்கு புரியவைப்பதற்காக, தான் ஏற்றுக்கொண்ட அவதாரத்தில் எத்தனை துன்பங்களையும், தாங்க தயார் என்று இறை தீர்மானித்து, *எல்லா கிரகங்களும் உச்சத்தில் இருந்த நேரத்தில், இறையே தன் பிறவியை தீர்மானித்தது. அனைத்து கிரகங்களும் உச்சத்தில் இருந்தால், பொதுவாக  மிக உயர்ந்த வாழ்க்கைதான்  அமையும் என்று மனிதர்கள் நினைத்திருந்த காலத்தில், மற்றவர்கள், உயர்ந்தோர் எதிர்பார்க்காத நிலையில், தான் எத்தனை சிரமங்களை தாங்க வேண்டியிருக்கும் என்பதை சூசகமாக உணர்த்துவதற்காக இந்த அவதாரம் எடுத்தார்* என்று கூறினார்.

பொறுமையாக இரு. எதற்கும், காலம் நேரம் பார்க்கிற உனக்கே அது புரியவில்லையா? *குருவாரம் என்பது குருவருள் கூட்டுவது. அன்று எல்லா சித்தர்களும், முனிவர்களும், மகான்களும், தன்னை வழிபடுகின்ற நல்ல உள்ளங்களை கரையேற்ற நிறைய அறிவுரைகளை தருவார்கள். அப்படிப்பட்ட நல்ல நேரத்திற்காகத்தான் உன்னை காத்திருக்க வைத்திருக்கிறேன்.* ஸ்ரீ ராமரையும், அனுமனையும் உன் குருவாக போற்றி வாழ்ந்து வரும் உனக்கு, அவர்கள் சாட்சியாக இது உரைக்கப்படவேண்டும், என்பதே என் அவா. இன்னும் நிறைய அதிசயங்களை போகப்போக நீ உணர்வாய். ஆகவே, வரும் குருவாரத்துக்காக காத்திரு.

நாடியில் அகத்திய பெருமான் வந்து அருளலானார். "ஒவ்வொரு மனிதருக்கும், திருமணத்தில் திருப்புமுனை அமையும். அவன் வாழ்வே சில வேளை தலைகீழாக மாறிவிடும். மனித அவதாரம் எடுத்த ஸ்ரீராமருக்கும் அதுதான் நடந்தது. அவரது திருமணம்தான் இராமாயண காவியம் உருவாக காரணமான திருப்புமுனையாக அமைந்தது. உலகுக்கே, தன் செயலால் உணர்த்த வந்த தெய்வம், அதன் பின் நடந்ததை எல்லாம் ஒரே மனநிலையில் எடுத்துக் கொண்டதினால், மிகப் பெரிய சித்தத்தன்மையை அடைந்தது. சித்தர்களாகிய நாங்களே "அடடா! எந்த தவமும், யோகமும், பயிற்சியும் இல்லாமலேயே கூட, எதையும் அதனதன் போக்குப்படி ஏற்றுக்கொண்டு, சந்தோஷ, வருத்தமின்றி வாழ்ந்தாலும், மிகப் பெரிய சித்தனாக முடியும் என்கிற பாடத்தை, அன்று அவரிடமிருந்து கற்றுக் கொண்டோம். நாங்களே எங்களை பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டோம் என்றால் பார்த்துக்கொள்" என்று மனம் திறந்து ஸ்ரீராமபிரானை பாராட்டி மகிழ்ந்தார்.

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*