Monday 17 June 2019

சௌரிராஜ பெருமாள் கோவில், திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம்

 சௌரிராஜ பெருமாள் கோவில், திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம்

மூலவர் - நீலமேகப் பெருமாள்
உற்சவர் - சௌரிராஜ பெருமாள்
தாயார் - கண்ணபுரநாயகி
தீர்த்தம் - நித்ய புஷ்கரிணி
ஊரின் புராணப் பெயர் - கிருஷ்ணபுரம்
ஊரின் பெயர் - திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம் (மாவட்டம்)

மங்களாசாசனம் பாடியவர்கள் - நம்மாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார்

விமானம் - உத்பலாவதக விமானம்

திருவிழா
பிரம்மோற்சவம் - வைகாசி, மாசி மாதங்களில்

தலச் சிறப்பு
உற்சவர் சௌரிராஜர் அழகிய முடியுடன் காணப்படுகிறார்.
பெருமாள் நின்ற கோலம்.

இக்கோவிலின் அர்ச்சகர் பெருமாளின் பூமாலையைத் தம் காதலிக்குச் சூட்டிவிட்டார். அந்த நேரத்தில் மன்னர் வந்துவிட்டார். மன்னருக்குச் சூட வேறு மாலையில்லாததால் காதலிக்குச் சூட்டிய மாலையைக் கழற்றி எடுத்து மன்னருக்குப் போட்டுவிட்டார். அம்மாலையையைச் சூடிக்கொண்ட மன்னர் அதில் ஒரு முடியைக் கண்டுபிடித்தார். அது யார் முடி என்று அர்ச்சகரிடம் வினவினார். அர்ச்சகர் மிரண்டுபோய் பெருமாளின் தலையில் உள்ள முடி என்று கூறிவிட்டார். பெருமாளின் முடியா என்று திகைத்த மன்னர் தமக்குப் பெருமாளின் முடியைக் காட்டுமாறு அர்ச்சகரிடம் கேட்டார். மறுநாள் காட்டுவதாக அவர் கூறினார். மன்னரிடம் கூறிய பொய்க்கு என்ன தடங்கல் வருமோ என்று அஞ்சிய அர்ச்சகர், பகவானை சரணடைந்தார்.

மறுநாள் வந்த மன்னருக்கு அச்சத்துடன் பெருமாளின் தலையைக் காட்ட, பெருமாளும் முடியுடன் காட்சி அளித்தார். சௌரிராஜர் என்று அழைக்கப்பட்டார்.

அமாவாசையன்று உலா செல்லும்போது பெருமாளின் முடியை நாம் தரிசிக்க முடியும்.

பெருமாள் பிரயோகச் சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். அருகிலேயே கருடன் வணங்கிய நிலையில் காணப்படுகிறார்.

வைகாசி பிரம்மோற்சவத்தில் விடியற்காலையில் சிவனாகவும் மாலையில் பிரம்மானாகவும் இரவில் விஷ்ணுவாகவும் பெருமாள் காட்சி அளிக்கிறார். பெருமாளின் மும்மூர்த்திகள் தரிசனம் மிகவும் விசேஷமானது.
விபீஷணாழ்வாரை சகோதரனாக ஏற்ற இராமபிரான் இத்தலத்தில் அவருக்குப் பெருமாளாக நடந்துகாட்டிக் காட்சி அளித்தார். அமாவாசைதோறும் உச்சி கால பூஜையின்போது விபீஷணனுக்கு நடந்துகாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கருடன் தம் தாயை விடுவிப்பதற்காகப் பாற்கடலில் அமிர்தம் பெற்றுத் திரும்பிக்கொண்டிருந்தார். யாருக்கும் கிடைக்காத அமிர்தம் தன் கையில் இருப்பதை எண்ணி கருடாழ்வாருக்குக் கருவம் வந்தது, தமது ஆற்றலை நினைத்துப் பெருமித உணர்வுகொண்டார். அந்நேரத்தில் இத்தலத்தின் மீது சென்றதால் தம் ஆற்றலை இழந்துக் கடலில் வீழ்ந்தார்.

தவற்றை உணர்ந்த கருடாழ்வார் தம் பிழை பொறுக்கக் கடவுளைச் சரணடைந்தார். பெருமாள் அவரை ஏற்றுக்கொண்டார். மாசி மாதம் பௌர்ணமியில் கடற்கரையில் கருடனுக்குக் காட்சி தருகின்றார்.

முனையதரையன் என்ற குறுநில மன்னர் அனுதினமும் பெருமாளை வணங்கிவிட்டு உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தமது சொத்தையெல்லாம் பெருமாள் சேவைக்காகச் செலவழித்ததால் வறுமைநிலை அடைந்தார். பேரரசருக்கு வரி கட்டமுடியாமல் போனது.

முனையதரையனை பேரரசரன் சிறைப் பிடித்தான். அவனது கனவில் தோன்றிய பெருமாள் முனையதரையனச் சிறையிலிருந்து விடுவிக்கச் சொன்னார். முனையதரையனை சகல மரியாதையுடன் விடுவிக்கப்பாட்டார். வீட்டுக்கு வந்த முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் அவரது மனைவி. பெருமாளுக்கு மனத்திலேயே நைவேத்தியம் செய்துவிட்டு உண்டார்.

மறுநாள் அர்ச்சகர் கோவிலுக்கு வந்தபோது சுவாமி கருவறையில் வாயில் பொங்கலுடன் காணப்பட்டார். இந்த அதிசயத்தை அனைவரும் பார்த்தனர். பின்னர் அது முந்தைய இரவு முனையதரையன் படைத்த பொங்கல் என்று அறிந்தனர். இன்றளவும் இரவு பூஜையில் சுவாமிக்குப் பொங்கல் நைவேத்தியம் செய்கின்றனர். அப்பொங்கலுக்கு முனையதரையன் பொங்கல் என்று பெயர்.

உத்தராயணத்தின்போது மூன்று நாள்கள் அனைத்து நதிகளின் அதிதேவதைகளும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.

அமாவாசை நாள்களி பித்ரு பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்திரன் இங்கு வந்து நவகிரஹ பிரதிஷ்டை செய்து தன் தோஷத்தைப் போக்கிக்கொண்டான். அவன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம், கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்குப் பார்த்தபடி இருக்கிறது. இந்த நவகிரகம் 12 ராசிகளுடன் இருக்கிறது.

இத்தலம் பூலோக வைகுண்டம் ஆகும். எனவே இங்கு சொர்க்கவாசல் இல்லை.

பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்றாக உள்ள தலம் இது.

கருவறைக்கு மேலுள்ள விமானத்தில் முனிவர்கள் தவம் இருக்கிறார்கள். எனவே இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாது. சுற்றிலும் மதில் எழுப்பபட்டிருக்கிறது.

முன் காலத்தில் வெளிநாட்டவர் இக்கோவில் மதில்களை இடிக்க வந்தனர். திருக்கண்ணபுரத்து அரையர் மனம் வெதும்பிக் கையில் உள்ள தாளத்தைப் பெருமாளின் மீது வீசி எறிந்தார். அது பெருமாளின் புருவத்தில் வடு உண்டாக்கிவிட்டது.

ஓம் நமோ நாரயணா என்ற மந்திரத்தின் முடிவு  இங்குதான் நிகழ்ந்தது.

அஷ்டாக்ஷர ஸ்வரூபி, மந்திர உபதேசம் பெற்ற தலம்.

மற்ற தலங்களில் அபய முத்திரையுடன் காட்சி அளிக்கும் பெருமாள், இங்கு தானம் வாங்கும் பாவனையுடன் இருக்கிறார். மக்களின் துன்பங்களைப் பெருமாள் வாங்கிக் கொள்வதாக ஐதீகம்.

திருமங்கை ஆழ்வார் சௌரிராஜரிடம் உபதேசம் பெற்றிருக்கிறார்.

திருக்கண்ணபுர திவ்ய தேசத்தின் இறைவனை குலசேகர ஆழ்வார் இராமனாக நினைத்துத் தாலேலோ என்று பாடியுள்ளார்.

தல வரலாறு
முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டித் தவம் செய்தனர். விஷ்ணுவிடம் அஷ்டாக்ஷர மந்திர உபதேசம் பெற்ற உபரிசிரவசு மன்னன் தன் படையெடுத்துவந்தான். வழியில் பசியெடுக்கவே படைவீரர்கள் வயலில் தவம் புரிந்துகொண்டிருந்த மெலிந்த தேகம் உடைய முனிவர்களையும் வெட்ட முனைந்தனர். அவர்களுக்காகப் பெருமாள் ஒரு சிறுவன் வடிவில் வந்து போரிட்டார். அச்சிறுவனிடம் தோற்ற உபரிசிரவசு தனதுஅஷ்டாக்ஷர மந்திரத்தை ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. சிறுவன் உருவத்தில் உள்ளவர் விஷ்ணு என்று மன்னன் அறிந்துகோண்டு சரனடைந்தான். பகவான் நீலமேகப் பெருமாளாகக் காட்சி தந்தருளினார். மன்னன் விஸ்வகர்மாவைக்கொண்டு இங்கு ஒரு கோவிலை எழுப்பினான்.

வேண்டுதலும் நேர்த்திக்கடனும்
வேண்டுவன அனைத்தையும் நல்கும் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்தும் முடிக்காணிக்கை கொடுத்தும் பிரார்த்தனை செய்கின்றனர்.