Sunday, 15 October 2017

வாணியம்பாடி பெயர்க்காரணம் - சரஸ்வதி வழிபட்ட தலம்

கல்வி வரமருளும் வாணியம்பாடி கலைவாணி

வாணியம்பாடியில் ஆயிரத்தி இருநூறு ஆண்டுகள் பழமையான  ஸ்ரீஅதிதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது ஒரு நட்சத்திரக் கோயிலாகும். இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தனித்தனி சிறப்புக் கோயில்கள் அமைந்துள்ளன. இதில் புனர்பூசம் நட்சத்திரத்திற்குரியதே இந்த அதிதீஸ்வரர் கோயிலாகும்.  ஒருசமயம் பிரம்மா சரஸ்வதிதேவியிடம் உலக உயிர்களைப் படைக்கும்  நான்தான் பெரியவன் என்றும், அனைவரும் பிரம்மா, சிவன், விஷ்ணு என்ற வரிசையில் முதலில் என் பெயரைத்தான் கூறுகிறார்கள் என்றும் கர்வத்துடன் கூறினார். இதைக் கேட்ட சரஸ்வதிதேவி சிரித்து விடவே கோபமடைந்த பிரம்மா சரஸ்வதிதேவியை பேசும் சக்தியற்றவளாகப் போகும்படி சபித்து விட்டார். இதனால் மனவருத்தம் அடைந்த வாணி பூலோகத்தில் சிருங்கேரி என்ற தலத்திற்கு வந்து தவம் இயற்றினாள். தேவர்களை அழைத்து யாகம் செய்து அவர்கள் மூலமாக கலைவாணியைக் கண்டுபிடிக்கலாம் என்று பிரம்மா யாகத்தைத் தொடங்கினார்.

ஆனால், மனைவியின்றி யாகம் செய்தால் அதன் பலனைப் பெற இயலாது என்று தேவர்கள் தெரிவித்தார்கள். எனவே, பிரம்மா பல இடங்களிலும் தேடி கடைசியில் சிருங்கேரியில் சரஸ்வதிதேவியைச் சந்தித்தார். வாணியை சமரசம் செய்து தன்னுடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். வழியில் பாலாற்றின் வடகரையில் இருந்த சிவன் கோயிலில் வழிபாடுகளைச் செய்தார். இதனால் மகிழ்ந்த சிவனும் பார்வதியும் வாணியை ஆசிர்வதித்து அவரைப்பாடும்படி கூற வாணி பேசும் சக்தியை திரும்பப் பெற்று இனிய குரலில் பாடினார்.  “வாணி பாடிய தலம்” என்பதால் இத்தலம் வாணியம்பாடி என்று பெயர் பெற்றது. பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இத்திருக்கோயிலின் மேற்கு கோபுரம் மூன்று நிலைகளை உடையது.

கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டுள்ளது.  மூலவர் ஸ்ரீஅதிதீஸ்வரர் மேற்கு திசை நோக்கியும் இறைவி ஸ்ரீபிரஹன் நாயகி தெற்கு திசை நோக்கியும் அமைந்து அருட்பாலிக்கிறார்கள். இத்திருக்கோயிலில் சரஸ்வதி தேவி தனிச் சந்நதியில் கிழக்கு திசைநோக்கி காட்சி தருகிறார். இக்கோயிலில் திண்டி மற்றும் முண்டி ஆகியோர் துவார பாலகர்களாக உள்ளார்கள்.  தட்சிணாமூர்த்தி மிகுந்த கலையம்சத்தோடு வித்தியாசமான கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவர் மான், மழு ஏந்தி சின்முத்திரையோடு நந்தி மீது அமர்ந்து காட்சி தருகிறார்.  இத்திருக்கோயிலில் மஹாகணபதி சந்நதி, வள்ளிதெய்வானை சமேத சுப்ரமணியர் சந்நதி, சுவாமி ஐயப்பன் சந்நதிகளும் அமைந்துள்ளன.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இக்கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் கூடும். வாணி வழிபாடு செய்து அருள் பெற்ற தலமாகையால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இங்கு வந்து வழிபாடு செய்யலாம்.  இத்திருத்தலத்தில் நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  இத்தலத்தில் உள்ள பைரவரை ராகு காலங்களில் வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும். கோயிலின் தலவிருட்சம் வில்வமரம். தீர்த்தம் சிவ தீர்த்தம். வேலூரிலிருந்து பெங்களூரு பாதையில் 65 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மேலும், ஜோலார்பேட்டையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது.






No comments:

Post a Comment