Wednesday, 18 October 2017

நளாயினி கதை

நளாயினியின் ஒப்பற்ற சுமங்கலித்துவ மகிமை

சூரியனும் பணிந்த பதுமை
தொண்டை நாட்டில் நிடத நாடு என்ற நாடு உள்ளது. இதன் தலை நகரம் ஆதிந்தபுரம் ஆகும். அந்நாட்டை ஆண்ட ஸ்ரீநளச்சக்கரவர்த்திக்கும், சேது நாட்டு இளவரசி தமயந்திக்கும் பிறந்தவள் ஸ்ரீநளாயினி தேவி. நளாயினியின் பூர்வீக பெயர் இந்திர சேனை என்பதாகும்.

பதிவிரதையான நளாயினி ஒரு முறை தன்னுடைய கணவரான மௌத்கல்ய முனிவரை ஒரு கூடையில் வைத்து சுமந்து கொண்டு அடர்ந்த காட்டு வழியே சென்று கொண்டிருந்தாள். முனிவருடைய கால்கள் கூடைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. அப்போது காட்டில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த ஒரு ரிஷியின் தலைமேல் மௌத்கல்ய முனிவரின் கால்கள் இடித்து விட்டன. அதனால் கோபமடைந்த அந்த ரிஷி மறுநாள் சூரிய உதயமாகும்போது தன்ளை இடித்த மௌத்கல முனிவரின் தலை சுக்கு நூறாக சிதறி இறந்து விடட்டும் என்று சாபமிட்டார்.

ரிஷியின் சாபத்தைக் கேட்ட நளாயினி அம்முனிவரை வணங்கி தன்னுடைய அஜாக்கிரதையால்தான் இத்தகைய தவறு நேர்ந்து விட்டது என்றும் அதனால் தன்னுடைய கணவரை எக்காரணம் கொண்டும் சபித்து விட வேண்டாம் என்று மனறாடி கேட்டுக் கொண்டாள். நளாயினி எவ்வளவுதான் மன்றாடினாலும் அந்த முனிவர் அவள் வார்த்தைகளை சிறிதும் ஏற்கவில்லை. வேறு வழியில்லாத காரணத்தால் தன் கணவரைக் காப்பாற்றும் ஒரே வழி சூரியனை மறுநாள் காலையில் உதயம் ஆகாமல் நிறுத்தி விடுவதுதான் என்று முடிவுக்கு வந்து, கணவனைத் தவிர வேறு யாரையும் மனதினாலும் தீண்டாத பதிவிரதை நான் என்பது உண்மையானால் நாளை சூரியன் உதிக்காமல் போகட்டும், என்று வானத்தை நோக்கி முழங்கி விட்டு, தன் கணவனைச் சுமந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பி விட்டாள் நளாயினி. வீடு சென்றவுடன் தன் கணவனின் இடிபட்ட காலுக்கு மருந்து தடவி, உணவு கொடுத்து அனைத்து பணிவிடைகளையும் செவ்வனே முடித்து விட்டு உறங்கச் சென்று விட்டாள்.

ஆனால், நளாயினியின் எதிர் சாபத்தைக் கேட்ட முனிவர் திடுக்கிட்டார். தன்னையே எதிர்த்து சூரியனைச் சபிக்கும் இந்தப் பெண் யார் என்று தன்னுடைய ஞான திருஷ்டியில் பார்த்தார். அவள்தான் நளாயினி என்பதையும், அவள் ஒரு உத்தம பத்தினி என்பதையும் உணர்ந்து கொண்டார். என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போனார் மகரிஷி. பிரம்மாவை நிந்தனை செய்தால் பெருமாளிடம் விமோசனம் பெறலாம். பெருமாளை நிந்தித்தால் சிவனிடம் பிராய சித்தம் பெறலாம். சிவனையே நிந்தித்து விட்டால் கூட அதை கருணைக் கடலான சற்குரு அதை மன்னித்து விடுவார். ஆனால், உத்தம பதிவிரதா தேவியின் சாபத்திற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது.

நிச்சயமாக தன்னுடைய சாபம் பலிக்காது என்பதை உணர்ந்த முனிவர் அதற்கு எப்படிப் பரிகாரம் பெறுவது என்று யோசிக்கத் தொடங்கினார். ஏனென்றால் ஒருவருடைய சாபம் பலிக்காத நிலை ஏற்படுமானால் அந்தச் சாபத்தைக் கொடுத்தவர்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்பது இறை நியதி.

ராமரிடம் தன்னுடைய வில்லைக் கொடுத்த பரசுராமர் அதை நாணேற்ற முடியுமா என்று சவால் விடுத்தார் அல்லவா? அவருடைய சவாலை ஏற்று பரசுராமரின் தனுசில் நாணேற்றிய ராமர் அதற்கேற்ற இலக்கைக் கேட்டபோது பரசுராமர் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு தன்னுடைய தபோ பலம் அனைத்தையும் ராமருடைய பாணத்திற்கு இலக்காக வைத்தார் அல்லவா? அதே விதத்தில் இப்போது முனிவரின் சாபம் பலனளிக்காத நிலை ஏற்பட்டபோது அது அந்த முனிவரைத்தான் தாக்கும். அவர் தலை வெடித்துச் சிதறும் சம்பவத்தை அவரே சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. இந்த இக்கட்டான ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்ம லோகம் விரைந்தார் ரிஷி.

பூமியில் நடந்த விஷயங்களை எல்லாம் இந்திரன் மூலம் அறிந்த பிரம்மா எப்படியாவது அந்த ரிஷியிடமிருந்து தப்பித்துக் கொண்டால் போதும் என்று எண்ணி சரஸ்வதியிடம், தாயே, ஒரு ரிஷி பத்தினி சாபத்திற்கு பிராய சித்தம் கேட்டு என்னிடம் வர நினைக்கிறான். பத்தினி சாபத்திற்கு மும்மூர்த்திகளாலும் பிராய சித்தம் தர இயலாதே. எனவே, ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அவனை அனுப்பி விடு, என்று சொல்லி விட்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார். சரஸ்வதி தேவியும் அவ்வாறே அந்த ரிஷி வந்தவுடன் அவருக்கு பாத பூஜைகள் செய்து கௌரவித்து, பிரம்ம மூர்த்தி ஒரு புதிய லோகத்தை சிருஷ்டி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தியானத்தில் இருப்பதால் மூன்று நாட்களுக்கு யாரையும் காண இயலாது என்று கூறி விட்டாள். இல்லாவிட்டால் பத்தினி சாபத்துடன் அம்முனிவரின் சாபத்திற்கும் ஆளாக வேண்டி வருமே.

ரிஷி வேறு வழியில்லாமல் விஷ்ணுவின் வைகுண்டம் சென்றார். இதற்குள் ஒரு ஜாமம் கழிந்து விட்டது. மகரிஷியின் வரவை அறிந்த பெருமாள் பத்தினி சாபத்திலிருந்து அந்த ரிஷியைக் காப்பாற்ற முடியாது என்பதால் நாம் இப்போதைக்கு இந்த ரிஷியின் சாபத்திலிருந்து மீள வேண்டுமானால் நீலகண்டனைச் சரணடைவோம் என்று முடிவு கட்டி கருட வாகனத்தில் ஏறி விரைந்து திருக்கயிலையில் சரண் புகுந்தார்.

விஷ்ணு பகவான் கைலாயம் சென்ற செய்தியை அறிந்த ரிஷி, சரி, இதுவும் நன்மைக்கே. நாமும் கைலாயம் சென்றால் சிவன், விஷ்ணு இருவரில் ஒருவரையாவது பார்த்து சாப விமோசனம் பெற்று விடலாம் என்று நம்பிக்கையை நெஞ்சில் வளர்த்துக் கொண்டு கைலாயம் சென்றார்.

கைலாயத்தில் அந்த ரிஷிக்கு அமோக வரவேற்பு. அதிகார நந்தி அந்த ரிஷியை எதிர் கொண்டழைத்து அவரை உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமர்த்தி அற்புதமாக பாத பூஜைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அதிதி பூஜை நியதியாக பூஜை நிறைவேறும் வரை அதிதியாக வந்தவர் எந்த வேண்டுகோளையும் முன் வைக்க முடியாது அல்லவா? எனவே, நந்தீஸ்வரரின் பூஜை நிறைவேறியவுடன்தான் தான் வந்த காரியத்தைக் கூறி தான் சிவபெருமானைத் தரிசனம் செய்யும் நோக்கத்தைக் கூற முடியும்.

ஆனால், ரிஷியின் வரவை முன்னரே அறிந்த சிவபெருமான் எப்படியாவது அவரை மூன்றாம் ஜாமம் வரை கைலாய வாசலிலேயே நிறுத்தி வைக்கும்படிக் கட்டளை இட்டிருந்தார்.

ஸ்ரீ மத்யார்ஜுனேஸ்வரர் சிவாலயம்
பெட்டவாய்த்தலை

ஏனென்றால், மூன்றாம் ஜாமம் முடிந்து நாலாம் ஜாமம் ஆரம்பித்து விட்டால் சிவ பெருமான் ஆத்ம பூஜையில் ஈடுபட்டு விடுவார். திருக்கைலாய நியதிகளின்படி சிவபெருமான் ஆத்ம பூஜையில் ஈடுபட்டிருக்கும்போது தரிசனத்திற்காக யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, ஆத்ம பூஜை நேரம் வரும் வரை புதிது புதிதான தோத்திரங்களைக் கூறி அதிகார நந்தியானவர் ரிஷியை பூஜிக்கவே அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமோ கடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக அதிகார நந்தி ரிஷிக்கு பாத பூஜைகளை நிறைவேற்றி அர்க்ய பூஜையும் நிறைவேறியபோது சிவபெருமான் ஆத்ம பூஜையை ஆரம்பித்து விட்டார். அதிகார நந்தி நிம்மதியாக மூச்சு விட்டு, அந்த ரிஷியை சிவ தரிசனத்திற்காக ஒன்றும் அறியாதவர் போல் அனுப்பி வைத்தார். ஆனால், அந்த ரிஷி சிவ மூல மண்டபத்தை அடைந்தபோது அங்கு திரையிடப்பட்டு சூரிய உதயத்தில்தான் எம்பெருமானின் தரிசனம் கிட்டும் என்ற அதிர்ச்சியான செய்தி அவருக்குக் காத்திருந்தது.

செய்வதறியாது திகைத்தார் அந்த ரிஷி. ஈசனே கை விட்டு விட்டால் இனி யாரை அவர் சரணடைய முடியும்? எவ்வளவோ மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தாலும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீளும் வழி ஏதும் தெரியவில்லை. வேறு வழியின்றி பூலோகம் திரும்பினார், நளாயினி தேவியிடம் சரணடைவது ஒன்றுதான் இதற்கு வழி எனத் தெளிந்து அவள் இல்லம் நோக்கி சென்றார். அங்கே அவருக்கு ஓர் அதிசயக் காட்சி காத்திருந்தது. மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், இந்திரனும், யம மூர்த்தியும், இவ்வாறு அனைத்து தெய்வ தேவதா மூர்த்திகளும் அவர்கள் பத்தினிகளும் நளாயினியின் இல்லத்தில் குழுமி இருந்ததைக் கண்டு அந்த ரிஷிக்கு ஓரே ஆச்சரியம்.

நளாயினியின் சாபத்தால் சூரியன் எழாமல் ஈரேழு உலகங்களும் ஸ்தம்பித்து போனதால் சூரிய பகவானை மீட்பதற்காக அனைத்து தெய்வங்களும் அங்கே குழுமியுள்ளனர் என்பதை அறிந்து கொண்டார். தான் அலையாய் அலைந்து தேடிப் பார்க்க முடியாத மும்மூர்த்திகள் அந்த ஓலைக் குடிசையில் ஒன்றாய் எழுந்தருளியிருந்ததைக் கண்டு மகரிஷி பேருவகை எய்தினார். அதே சமயம் ஒரு பதிவிரதா தேவியின் சாபத்திற்கு மும்மூர்த்திகளாலும் பதில் சொல்ல முடியாது என்ற உண்மையையும் அவர் உணர்ந்து கொண்டார்.

மும்மூர்த்திகளின் வேண்டுதலுக்கு இணங்கி நளாயினி தேவி தன்னுடைய சாபத்தை திருப்பி வாங்கிக் கொண்டு சூரிய மூர்த்தியை மீண்டும் பூமியில் பவனி வரச் செய்தாள். அதனால் மகரிஷியின் தலையும் தப்பித்தது.

இவ்வாறு பதிவிரதா தேவி நளாயினியின் மகிமை அனைத்து லோகங்களுக்கும் பரவியது.

No comments:

Post a Comment