Thursday 19 October 2017

நவராத்திரியும் சுண்டலும் - மகா பெரியவா விளக்கம்

"நவராத்திரி நாளின் சுண்டல் விநியோகம் கூட ஒரு பரிகாரம் சார்ந்த செயல் என்பது பெரியவரால் விளங்கியது."

(குடிகாரக் கணவனை திருத்திய சம்பவம்)

நவராத்திரி ஸ்பெஷல் எட்டாம் நாள் கட்டுரை.

கட்டுரை-இந்திரா-செளந்தர்ராஜன்

நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

நவராத்திரியும் கொலுவும் மேல்தட்டு மக்களுக்காக என்று சில காலம் இருந்தது. குச்சு வீட்டுக்கும் கொலுவுக்கும் சம்பந்தமில்லாத படி, ஒரு இடைவெளியும் இருந்தது. அதற்கு சில வலுவான காரணங்களும் இருந்தன.

கொலு வைக்க முதலில் ஒரு பெரிய ஹால் வேண்டும். அதாவது இடம். அடுத்து, தினசரி வருகிறவர்களுக்கு வெற்றிலை – பாக்கு வைத்து தருவதோடு, சுண்டல் விநியோகம் இதில் முக்கியம். இது போக, தினசரி லலிதா சஹஸ்ரநாம பாராயணம், நைவேத்யம், பாகவதம் படிப்பது என்கிற கட்டங்கள் வேறு. இதை எல்லாம் ஒருவரால் செய்ய முடியாது. ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியம்.

அன்றாடம் வேலைக்கு போனால்தான் வீட்டில் அடுப்பெரிய முடியும் என்பவர்களுக்கு துளியும் சாத்தியமில்லை என்கிற ஒரு நிலையை, இது உருவாக்கிவிட்டது. தன்னால் தான் கொலு வைக்க முடிய வில்லை – யாராவது வைத்திருக்கும் கொலுவுக்காவது போய் வணங்கி வரலாம் என்பதற்கும் சாதி, ஏழ்மை என்கிற குறுக்கீடுகள்.

மொத்தத்தில், மிகுந்த பொருட் செறிவுள்ள நவராத்திரி என்பது மேல் தட்டு மக்களுக்காக மட்டுமே என்று இருந்த ஒரு நிலையில்தான், பெரியவர் ஒரு ஏழைப்பெண் மூலம், ‘அது அனைவருக்குமானது. மனம் பக்தியோடு விரும்ப வேண்டியதே முக்கியம்’ என்பதை உலகத்துக்கு உணர்த்தினார்.

ஒரு குடிகார கணவனோடு அல்லாடிய அந்தப் பெண்ணும், வரிசையில் நின்று பெரியவரை சந்தித்தபோது அவள் கண்களில் அப்படி ஒரு சோகம். மனமும் தற்கொலை செய்து கொண்டுவிடும் எண்ணத்தில் எல்லாம் இருந்தது.

இவ்வேளையில்தான் பெரியவர் அவள் அவலத்தை, அவள் கூறாமலே புரிந்து கொண்டார்.

இந்த நாட்டில் பெண்களின் வாழ்வு என்பதே ஒரு சூதாட்டம் போலத்தான் இருக்கிறது. நல்ல கணவன் என்னும் தாயம் எல்லோருக்கும் விழுந்து விடுவதில்லை. அவளாலும் சுயமாக ஒரு மனம் நிறைந்த கணவனை தேர்வு செய்ய வாழ்வின் வழிமுறைகளில் இடமில்லை. இது என்ன கொடுமை அல்லது சோதனை என்பதுதான் அவளுக்குள் இருந்த கேள்வி.

அதற்கு பெரியவர் சொன்ன பதில், அவளுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல; அது ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்துக்கும் சேர்த்துதான்…

‘நம்ம சமூகத்துல வீட்டுப் பொண்ணு கண்ணுல கண்ணீர் வரக்கூடாதுன்னு சொல்வா. அதுக்கு உண்மையான அர்த்தம், அவ சந்தோஷமாய் புருஷனோட பிள்ளை குட்டிகள்னு வாழணுங்கறது மட்டுமில்லை. அப்படி அவ வாழற மாதிரி, அந்த வீட்டு ஆண்மக்கள் நடந்துக்கணும். எந்த ஒரு பெண்ணை ஒரு ஆண்மகன் அழ வெச்சாலும் சரி; அதுக்கான பதில் விளைவு, அவன் சகோதரி மூலமாவோ இல்லை; அவன் பெத்தெடுக்கப் போற பெண் மூலமாவோ வந்தே தீரும்.

அம்மா, அக்கா, தங்கைகள் மேல பாசமாய் ஒரு பவ்யத்தோட இருக்கறது பெருசேயில்லை. எல்லாப் பெண்கள் கிட்டயும் இந்தப் பாசமும் பவ்யமும் இருக்கணும். சாபங்கள்ள பெண் சாபத்துக்கு வேகம் அதிகம். ஆகையால, அந்த சாபத்துக்கு ஆளாகாம வாழறதுதான் உத்தமமான ஆண்மை’ என்று, ஆண் மைக்கு பொருள் கூறிய பெரியவர், எங்காவது ஒரு பெண் கண்ணீர் சிந்து கிறாள் என்றால், அதற்கு பின்னாலே நிச்சயம் அவளது வினைப்பாடு மட்டு மல்ல; அவளது குடும்பத்து ஆண்களின் வினைப்பாடுகளும் இருக்கும் என்று கூறியதுதான் இதில் முக்கியம்.

இதனால்தான் நம் சமூகத்தில் பல பெண்களின் திருமண வாழ்க்கை என்பது அமைந்தால்தான் உண்டு, இல்லாவிட்டால் சாகும் வரை சுருதி பேதத்தோடே வாழ வேண்டி வந்துவிடுகிறது. அதனால் பாதகமில்லை. எப்பேர்பட்ட அழுக்கையும், தோக்கிற விதமாக தோத்தால் நீக்கி விடமுடியும் என்னும்போது, இந்த வினைப்பாடுகளை எண்ணி அஞ்சத் தேவையில்லை.

மனித வாழ்க்கை என்பதே ஒரு மாயா விளையாட்டுதானே? ஒருவருக்கு பிடித்த விஷயம் இன்னொருவருக்கு பிடிக்காமல் போகிறது; ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வித ரசனை. எல்லாமே மாயையால்தானே?

அப்படி இருக்க, இங்கே பாவமே செய்யாமல், புண்ணியம் மட்டுமே செய்தபடி வாழ்ந்துவிட எத்தனை பேரால் முடியும்? தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியமாலும், புரிந்தும் புரியாமலும் தவறுகள் செய்வதும், பின் வருந்தித் திருந்துவதும்தானே, மனிதர்களின் வழக்கமாக உள்ளது.

தவறுகளிலேயே மூழ்கிவிடக்கூடாது. அறச்செயல்களையும் அவர்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், திருநாள் கொண்டாட்டங்கள் வருகின்றன. மகாமகம், கும்ப மேளா என்று நடப்பதெல்லாமே பாவமூட்டையின் கனத்தை குறைப்பதற்குதானே?

அதெல்லாம் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் விசேஷங்கள். வருடாவருடமே ஒரு ப்யூரிஃபயரை, ஒரு ரெக்டிஃபிகேஷனை, ஒரு ப்ரிவென்ஷனை செய்து கொள்ளத்தான் நவராத்திரமே வகுக்கப்பட்டது.

விஷ்ணுவுக்கும், ஈஸ்வரனுக்கும், மற்றுமுள்ள முருகன், கணபதி போன்றோருக்கெல்லாம் ஒன்றிரண்டு நாள்தான் இம்மட்டில் கணக்கு.
 
அம்பாள் தாய்மை கொண்டவளல்லவா? அதனால்தான், வஞ்சனை இல்லாமல் மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் ஒன்பது ரசங்களுக்கும் ஆதாரமான ஒன்பது சக்தியை வாரி வழங்கி, தன் பிள்ளைகளை ரட்சிக்க ஒன்பது நாட்களுக்கு நவராத்திரியை நமக்கு கொடுத்துவிட்டாள்.

இப்படிப்பட்ட நவராத்திரியை அந்த ஏழைப்பெண்ணும் கொண்டாடச் சொல்கிறார் பெரியவர்.

‘பெருசா கொலு வைக்கணும்னு அவசியமில்லை. பக்தியோட நாலு பொம்மை போதும். ஒரு பலகை மேல கோலம் போட்டு, அந்த பொம்மைகளை வெச்சு தினசரி விளக்கேத்தி உருக்கமாய் வழிபடு. சிரமப்பட்டாவது தினசரி ஒரு தானியத்துல சுண்டல் பண்ணிடு. அதை உன் கையால எல்லோருக்கும் விநியோகம் செய்.

கொண்டக்கடலை சுண்டல் தரும் போது, குரு பகவானோட அனுக்ரஹத்தை உடம்பானது உறிஞ்சிக்கற ஆற்றல் ஏற்படறது. பாசிப்பயறுல சுண்டல் தரும் போதும் இதேமாதிரி நடக்கறது. கிரகங்களோட ஆற்றல் மத்தவாளுக்கு கிடைக்க நாம காரணமாய் இருக்கறதால, கிரகங்களோட கருணை நம் வரைல அதிகரிக்கறது.

நம்ம ஜாதகப்படி க்ஷீணமாய் ஒரு கிரகம் இருந்தா, அது மருந்து சாப்பிட்ட உடம்பாட்டம் பலமடையறது. உடம்பு ஆரோக்கியமானாலே, மனசும் ஆகித்தானே தீரணும்?

இப்படி ஒன்பது நாள், ஒன்பது சக்தியை நாம ஏற்படுத்தறோம். நமக்குள்ளேயும் ஏற்படுத்திக்கறோம்’ – என்று அவர் கூற, அந்த பெண்ணும் தன்னால் முடிந்த விதத்தில் நவராத்திரியை கொண்டாட, அனுக்ரஹம் என்னும் அருள் அவள் வரையில் துளித்துளியாக சேரத் தொடங்கியது. மூன்று மாதங்களில் அவள் வாழ்வில் பெரிய மாற்றம். அவள் கணவனுக்கு உடல் நலம் பாதித்தது. டாக்டர்கள் எப்படியோ காப்பாற்றிவிட்டனர். கூடவே, இனி ஒரு வேளை குடித்தாலும் உயிர் போய்விடும் என்று செய்த எச்சரிக்கை, அவனை குடியின் பக்கமே போகவிடாதபடி தடுத்தது. குடி நிற்கவும் புத்தியும் தெளிவாகியது. நல்ல நேரம் வந்துவிட்டால், அது எல்லா சாகசங்களையும் செய்யத் தொடங்கிவிடும்.

குடிகார கணவன் திருந்தவுமே நல்ல வேலையும் கிடைத்துவிட்டது. அந்தப் பெண்ணும் நவராத்திரியின் அற்புதத்தை புரிந்துகொண்டாள். பெரியவரையும் தன் கொலுவில் ஒரு கடவுளாக சேர்த்துக் கொண்டாள்.

கல்கத்தா சேட்ஜியின் பதினெட்டு புராண நூல் வெளியீடு மட்டுமே பரிகாரமல்ல; நவராத்திரி நாளின் சுண்டல் விநியோகம் கூட ஒரு பரிகாரம் சார்ந்த செயல் என்பது பெரியவரால் விளங்கியது.

உடனேயே அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்து பிள்ளை வந்துவிட்டதா என்று பரிசோதிப்பதுபோல, இந்த விஷயத்தில் பரிசோதனைகள் கூடாது.

ஆத்மார்த்தமாகவும் உருக்கமாகவும் செய்ய வேண்டியது, பின் ஆசையோடும் ஏமாற்றுவதற்காக செய்கின்ற ஒன்றாகவும் மாறி பரிகாரத்துக்குப் பதில் பெரும் பாவத்தை தந்துவிடும்.

‘இந்த நவராத்திரியின்போது நாம் குழந்தைகளாகிவிட வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்குத்தான் கோபமோ தாபமோ நிலையானது கிடையாது. உணர்ச்சிகள் வேரூன்றாமல் நாமும் குழந்தையாக மாறி, பக்தி புரியவேண்டும்.

உப நிஷதமும் ‘குழந்தையாய் இரு’ என்கிறது – என்னும் பெரியவர், அம்பாளின் முப்பெரும் அம்சங்கள் குறித்து சொன்னதையும் கேட்போம்.

சாஷாத் பராசக்தியை காத்யாயனியாகவும், மகாலக்ஷ்மியை பார்கவியாகவும், நாம் குழந்தைகளாக்கி, அந்த பாவத்திலேயே வழிபட்டால் நமக்கும் குழந்தைத் தன்மை சாஷாத்கரித்துவிடும். இந்த நாளில் வாட்டர் ஃப்ரூப் என்று சொல்வது போல், நாம் காம ஃப்ரூப், சோக ஃப்ரூப் என்று எல்லாமாக சாந்தமாக ஆய்வோம்.

குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் ஸ்ரீமாதாவாக இருக்கிற தேவி நமக்கு இந்த அனுகிரகத்தை செய்வாள்.

குழந்தையாக வந்த காத்யாயனியை தமிழ்நாட்டு கிராம ஜனங்கள் கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் யூகம். காத்தாயி என்கிற சொல் தான் காத்யாயனி என்று நினைக்கிறேன்.

பட்டாரிகை என்று பெரிய வித்யோபாசகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான், நம் கிராம மக்கள் பிடாரி என்று பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் பட்டாரிகா மான்யம் என்பதுதான் பிடாரி மான்யம் என்று திருத்திக் குறிப்பிடப்பட்டது.

இவ்வாறே, கிராம ஜனங்களும் கூட சரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். பேச்சாயி, பேச்சாயி என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாய்க்தேவி சரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.

கிராமத்து ஜனங்களை அம்பாள் புறக்கணித்துவிடவில்லை. அவர்களுக்கு ஏற்ப, போய் அவர்களிடம் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.”- என்று அம்பாளுக்கும் துர்காலக்ஷ்மி சரஸ்வதிக்கும் பெரியவர் கூறிய விளக்கமாகட்டும், அவர் காட்டிய வழியாகட்டும் அவரை ஜகத்குரு என்று சொல்வது எவ்வளவு சரியான பதம் என்று எண்ணி நெகிழ வைக்கிறது

No comments:

Post a Comment