Wednesday 18 October 2017

சனிக்கு மற்றோர் பெயர் விதி என்பது

சனிக்கு மற்றோர் பெயர் விதி என்பது
. ஒருவர் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்பவே இப்பிறவி அமைகிறது. இப்பிறவியில் எந்த அளவுக்கு தன்னுடைய கர்ம வினைகளைக் கழிக்கிறாரோ அந்த அளவிற்கு அடுத்த பிறவிகள் நலமாய் அமையும். இல்லாவிட்டால் மேலும் மேலும் பாக்கிகள் வளர்ந்து துயரமே மேலோங்கும், பிறவிகள் வளரும். இதைத்தான் ஆதி சங்கரரும் புனரபி ஜனனம், புனரபி மரணம் என்று வர்ணித்துள்ளார்கள். மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறப்பதால் என்ன பயன்? பிறவித் தளையை அறுப்பதுதான் விவேகம் என்று எல்லா மகான்களும் வலியுறுத்துகிறார்கள்.

உதாரணமாக, ராமன் என்பவர் பஸ்சில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். முந்தைய பிறவியில் ராமன் கோவிந்தனுடைய காலை மிதித்து விட்டார். இந்தப் பிறவியில் கோவிந்தன் ராமனுடைய காலை மிதித்தால்தான் இந்த மிதித்தல் பாக்கி தீரும். இருவருடைய பாக்கியைத் தீர்ப்பதற்காக எத்தனை கோடி ஆண்டுகள் இடையில் கழிந்தன என்பது எவருக்கும் தெரியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். சித்தர்கள் கணக்குப்படி ஒரு மனிதப் பிறவி கிடைப்பதற்கு ஒரு கோடி ஆண்டுகள் ஆகும். அப்படியானால் ராமனும் கோவிந்தனும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நமது பூமியில் மனிதர்களாய்ப் பிறந்தார்கள் என்பது தெரியாது.

தற்போது இருவரும் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது முற்பிறவி உந்துதலால் கோவிந்தன் ராமனுடைய காலை மிதிப்பார். இப்போது ராமன் என்ன செய்ய வேண்டும்? பொதுவாக, இந்தச் சூழ்நிலையில் இரண்டு விதமான நிகழ்ச்சிகள் ஏற்படலாம். கோவிந்தனுடைய செயலை ஏதோ தெரியாமல் செய்த தவறு என்று நினைத்து ராமன் கோவிந்தனை மன்னித்து விடலாம். அவ்வாறு செய்தால் தீர்க்கப்படாத பழைய பாக்கி இத்துடன் தீர்ந்து விடுகிறது. ராமனும் கோவிந்தனும் இந்தச் சிறிய விஷயத்திற்காக மீண்டும் பிறவி எடுக்க வேண்டாம்.

இரண்டாவது, நிகழ்ச்சியாக ராமன் கோவிந்தனின் செய்கையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கோவிந்தனை வசை பாடவோ அல்லது அடிக்கவோ செய்யலாம்? அவ்வாறு தகாத வார்த்தைகளைப் பேசி, உடலால் இம்சிக்கும் செயல்களைச் செய்தால் இது இன்னும் ஒரு பிறவிக்கு வழி வகுக்கும். இது உண்மை. இதுவே இறைவனின் விதி. இதிலிருந்து யாருக்கும் விலக்கு கிடையாது.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஒரு நிகழ்ச்சி நாம் அனுபவிக்க வேண்டிய பாக்கியா அல்லது நாம் புதிதாக ஏற்படுத்தும் ஒரு கர்ம வினையா என்று எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு நிகழ்ச்சி நாம் அனுபவிக்க வேண்டியதாக இருந்தால் வேறு வழியின்றி அதை அனுபவித்து விடலாம். இல்லாவிட்டால் அதை எதிர்ப்பதற்காக நாம் போராடலாம்.

மனித வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் பாக்கியா கர்மமா என்பதை யாராலும் உணர முடியாது என்பதே தெய்வீக உண்மை. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நம்மைக் காத்து வழிகாட்டவே சித்தர்கள் அற்புதமான அனுபவ மொழிகளை உபதேசமாக அருளியுள்ளனர்.

“வருவதை ஏற்றுக் கொள்,”. இதுவே சித்தர்களின் எளிமையான ஆனால் நடைமுறைக்கு மிகவும் பயனுள்ள உபதேசமாகும்.

மேற்கண்ட கால் மிதித்தல் நிகழ்ச்சியை நினைவு கூறுங்கள். இப்போது ராமன் சித்தர்களின் அருளுரையை ஏற்று மௌனமாக கோவிந்தனின் செயலைப் பொறுத்துக் கொண்டால் அவருக்கு மீண்டும் பிறவி எடுக்காத நிலை ஏற்படும். ஒருவேளை ராமனுக்கும் கோவிந்தனுக்கும் முற்பிறவி பாக்கி இல்லை என்றால் கோவிந்தனுடைய செயலை ராமன் எதிர்ப்பதால் தவறு இல்லை அல்லவா? உண்மைதான், அது ராமனுக்கு எந்தக் கர்மாவையும் ஏற்படுத்தாது. ஆனால், ராமன் சித்தர்களின் அமுத மொழியை ஏற்று பேசாமல் இருந்து விட்டால் கோவிந்தன் ராமனுடைய காலை மிதிக்கும்போது அவர் மௌனமாக இருந்த காரணத்தால் கோவிந்தனுடைய புதிய கர்மச் செயல் ராமனுக்கு சில புண்ணிய சக்திகளை அளிக்கும்.

அவ்வாறு கிடைக்கும் புண்ணியத்தின் பலனை மனிதக் கணக்கில் அளவு கூற இயலாது. இருப்பினும் உதாரணத்திற்காகக் கூற வேண்டுமானால் முற்பிறவி பாக்கி இல்லாமல் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடித்தால், அந்த அடியை வாங்குபவர் திருப்பி அடிக்காமல் தாங்கிக் கொண்டால் அடிக்கும் மனிதருடைய 50 வருட புண்ணிய சக்தி அடிபட்ட மனிதருக்கு போய்ச் சேரும் என்பது இறைவனின் விதி. இதுவே புண்ணியத்தால் பணம் பெறும் கலியுக சேமிப்பு விதியாகும்.

அதே போல முற்பிறவி பாக்கியில்லாமல் ஒருவர் மற்றொருவரை கடுமையான வார்த்தைகளால் தாக்கினால் அவருடைய ஒரு வருட புண்ணிய சக்தி திட்டு வாங்கியவருக்கு போய்ச் சேருகிறது என்பதை நினைவில் கொள்ளவும். இவ்வாறு தகாத வார்த்தைகளால், செயல்களால், புண்ணிய சக்திகள் மிகவும் குறைந்த நிலையை அடையும் போது அது வாய்ப் புற்று நோய், தொண்டையில் கட்டி, வாய்ப் பேச முடியாமல் மூச்சு முட்டுதல் போன்ற நோய்களாக இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகி விடுகிறது. இத்தகைய கர்ம பாக்கி நிகழ்ச்சிகள் ஏற்படும்போது அதை முறையாகச் செயல்படுத்தி அனுவிக்க வேண்டிய கர்ம வினைகளை அனுபவித்து மீண்டும் பிறவி எடுக்காத நிலையை ஏற்படுத்தித் தர நமக்கு உதவுபவரே சனீஸ்வர மூர்த்தியாவார். அதனால்தான் பெரியோர்கள் அவரை விதி என்று அழைத்தார்கள்.

No comments:

Post a Comment