Wednesday 1 July 2020

நோய்களுக்கு தீர்வு தரும் அற்புத மலை

நோய்களுக்கு தீர்வு தரும் அற்புத மலை!

சிவன்மலை கோவில் படி ஏறினாலே, மிகப்பெரிய சக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். தீராத காய்ச்சலுக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. மலை மீது, சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, பூஜை செய்து உட்கொண்டால், உடனடியாக காய்ச்சல் நீங்கும் எனதல வரலாறு கூறுகிறது.சிவன்மலையை வணங்கினாலே, சுப்ரமணியரை வணங்கியதாக அர்த்தம் எனவும் தல வரலாறு கூறுகிறது. சிவன்மலையில் உள்ள மரங்கள், மூலிகை செடிகள் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவையாக இருந்துள்ளன. நீர், நிலம், மழை வளம் நிறைந்ததாகவும், தேவர்களால் பூஜிக்கப்படும் இடமாகவும், தேவதைகள் நிறைந்த இடமாகவும் விளங்குகிறது.திருத யுகத்தில் பொன் மலையாகவும், திரேத யுகத்தில் வெள்ளி மலையாகவும், துவார யுகத்தில் தாம்பர மலையாகவும், கலியுகத்தில் சிவன்மலையாகவும் உள்ளதாகவும், 18 சித்தர்களில் ஒருவரான சிவ வாக்கிய சித்தர் மூலிகை சேகரிக்கும்போது, முருகப்பெருமானை வழிபட, ஆலயம் அமைத்து, வழிபடும்போது அருள்பெற்றதால், சிவ வாக்கியருக்கு கிடைத்த பேறு, பக்தர்களுக்கு கிடைத்து வருவதாக ஐதீகம் உள்ளது. இதனால், பல நோய்களுக்கு தீர்வு தரும் அற்புத மலையாக சிவன்மலையை பற்றி, தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.தனக்கு உதவியாகவும், போர்ப்படை தளபதிகளான நவ வீரர்கள், சிவன்மலையில் உள்ளதை, நாரதர் மூலம் அறிந்த சுப்ரமணியர், தணிகை மலையில் தினைப்புனம் காத்துக் கொண்டு, வள்ளியம்மையை காதல் மணம் புரிந்து, இங்கு வந்து குடி கொண்டதாகவும் வரலாறு உள்ளது. இங்கு கருவறையில், மூலவராக வள்ளியம்மை உடனமர் ஸ்ரீஅன்னதான மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இதனால், வள்ளி மணாளன் என்ற திருப்பெயராலும் அழைக்கப்படுகிறார்.முருகனை நினைத்து வள்ளி இங்கு தவமிருந்து, அறச்சாலை அமைத்து பணி புரிந்ததாகவும், வள்ளியறச்சாலை, மருவி வள்ளியரச்சல் ஆனதாகவும், காங்கேய நாட்டில் ஒரு பகுதி வள்ளியறச்சாலையாக இருந்ததாகவும் தல வரலாறு உள்ளது. வள்ளி, தெய்வானை சமேத, சுப்ரமணியர் திருமண கோலமும், வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதிகளும் உள்ளன.முருகனை பல பெயர்களால் அழைக்கின்றனர். சிவ+அசலம்+பதி = சிவாசலபதி என அழைக்கப்படுகிறார். சிவமலைக்கு தலைவர், காங்கேய நாட்டுக்கு தலைவர் என்பதால் காங்கேயன், கார்த்திகை பெண்கள் வளர்த்ததால், கார்த்திகேயன், வள்ளியம்மையுடன் காட்சி தருவதால், வள்ளி மணாளன் மற்றும் சிவாச்சல கந்தவேல், மரகத மயூரன், சிவன்மலை குகன், கொளுந்து கிள்ளி சேமான் எனவும், பிரம்மா வரம் கொடுக்கும் குமார கம்பீர வீரன், கொக்கரியாய் விளையாடி, கொட்டாரவித்த மண் உதிர மயிலேறி வரும் உத்தண்ட சேவிக தீரன், படர் களத்தில் கொக்கரித்துடர் கிழித்த குக்குட கொடிக்குமரன் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.சிவாச்சல முருகப்பெருமான் சர்வ அணிகலன்களும் அணிந்துகொண்டு, சிவன், பராசக்திக்கு மகா பூஜை செய்து, ஆதி பிரம்மாவை அழைத்து, முகூர்த்தம் பார்க்கச் சொல்லி, தேவர்கள், ரிஷிகளும் பூ மாறி பொழிய, சகல சேனைகளுடன், பஞ்ச கன்னியர்கள் நடன நாட்டியத்துடன், கையந்து மிசரி, மல்லாரி, துடிபரை, கைத்தாளம், சேகண்டி, பேருகை, முரசு, மத்தளம், துடும்பை உள்ளிட்ட 18 வாத்தியங்களுடன் வீரபாகு முதலான வீரர்களுடன், சிவன்மலை வழியாக அசுரர்களை அழிக்க, திருச்செந்தூருக்கு படையெடுத்து சென்றதாகவும், செவி வழி செய்திகள், புராண கதைகள் உள்ளன. பக்தர்களின் மனம் எனும் குகைக்குள் அருள்பவர் என்பதால் குகன் என்றும் அழைக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.தந்தை சிவனின் சக்தியை போல, இச்சா சக்தியாக வள்ளியம்மையாலும், கிரியா சக்தியாகிய தெய்வானையாலும், ஞான சக்தியாக வேலாயுதத்தாலும் உணர்த்துவதால், சிவனின் அனைத்து அம்சங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது

முகவரி: அருள்மிகு சுப்ரமணியர்,
சிவன்மலை கோவில் போஸ்ட், காங்கயம், 638701,
திருப்பூர் மாவட்டம்.
தமிழ்நாடு.
அலுவலகம்: 04257 - 220680
மலை கோயில்: 04257 - 220630
தொலைபேசி: 04257 - 223630
E-mail Id: sivanmalaikovil@yahoo.com

No comments:

Post a Comment