Sunday 18 August 2019

சங்கு சக்கரம் பொறித்த சுயம்புலிங்கம்

மஹா பெரியவா

தாள்பட்ட தலம்:

சங்கு சக்கரம் பொறித்த சுயம்புலிங்கம்












காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்து ஏரிக்கரையில் இருந்த பிள்ளையார் கோயிலில் மகாபெரியவர் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்.

அப்போது அவருக்கும் அவரது பரிவாரங்களுக்கும் அங்கே வசித்து வந்த கௌரிப் பாட்டி சேவை செய்தார்.

அவரிடம் மகாபெரியவர், இந்த ஊரைவிட்டு எங்கும் போகக் கூடாது என்று அன்புக் கட்டளையும் இட்டிருக்கிறார்.

அதற்குச் சந்தோஷமாகத் தலையசைத்தார் கௌரிப் பாட்டி. அவருக்கு மற்றுமொரு கட்டளையும் அளித்தார் பெரியவர்.

வராஹீஸ்வரர் கோயிலை எடுத்துக் கட்டும் பொறுப்புதான் அது.

தானே தந்தையின் தயவில் வாழ்வதாகக் கூறி கௌரிப் பாட்டி தயங்கினார்.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இயன்ற உணவளித்தால் போதும், கோபுரம் கட்டத் தேவையான பொருட்கள் வந்து சேருமென்று கூறியிருக்கிறார் மகாபெரியவர்.

அவரது வாக்கைச் சத்திய வாக்காகக் கொண்டு அதன்படியே செய்துவந்தார் அந்த அம்மாள்.

அன்று மொட்டையாக இருந்த கோபுரம் இன்று ஏழு அடுக்கு கொண்ட கோபுரமாக கம்பீரத்துடன் காட்சி அளிப்பது மகாபெரியவர் வாக்கு தந்த வரம்.

வராஹீஸ்வரர் வந்தது எப்படி?

பிரளய காலத்தில் நீரில் மூழ்கிய பூமி தேவியை ஹிரண்யாக்ஷன் கடத்திக்கொண்டு ஆழ்கடல் நீருக்குள் சென்றுவிட்டான்.

 பூமித் தாயாரைக் காப்பாற்றுவதற்காக ஸ்ரீமன் நாராயணன் வராஹ அவதாரம் எடுத்தார். தனது அகன்ற மூக்கில் உலக உருண்டையைத் தூக்கிக்கொண்டு நீரில் மேல் நோக்கி வராஹம் உந்தி எழுந்தது.

 பிடிமானம் இல்லாமல், பூமி உருண்டை வடிவம் தள்ளாட, தனது பற்களில் கோரைப் பற்கள் இரண்டை மட்டும் வெளிப்புறமாக நீட்டி வளர்த்தாராம் பெருமாள். அவற்றைப் பற்றுக்கோலாகக் கொண்டாள் தாயார் என்கிறது ஸ்ரீவராஹ புராணம்.

இந்த வராஹப் பெருமாள், பூமியை நீருக்கு மேல் நிலைநாட்டிய பின் தன் உருவைச் சிறியதாகக் குறைத்துக் கொண்டார்.

அவ்வுருவை வேடனாக வந்த ஈஸ்வரன், வேல் கொண்டு வீழ்த்தி அதன் கோரைப் பற்களை ஆபரணமாக அணிந்து கொண்டார் என்கிறது இத்திருத்தல புராணம், அதனால் இந்த லிங்கரூப சிவனுக்கு வராஹீஸ்வரன் என்பது திருநாமம்.

இந்த சுயம்புலிங்கத் திருமேனியில் சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளதை விஜயநகரப் பேரரசு காலக் கல்வெட்டு குறிப்பிட்டுச் சொல்கிறது.

 தமிழ்ப் பெயராக திருப்பன்றீஸ்வரர் எனத் திருநாமம் கொண்டுள்ளார் மூலவர்.

சரபேஸ்வரர் திருமேனியும் இக்கோயிலில் அமைந்துள்ளதால், இத்தலம் ராகு கேது தோஷ நிவிர்த்தி தலமாகக் கருதப்படுகிறது.

மூலவர் வராஹீஸ்வரர், பித்ரு தோஷத்தை நீக்கி பக்தர்களுக்கு அருளுபவர் என்பது ஐதீகம்.

தாமல் எங்குள்ளது?

தாமல் என்ற இந்த ஊர் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.