Wednesday, 28 August 2019

பசுவதை செய்யாதீர் 🙏🙏

கருணைத் தெய்வம்
காஞ்சி மஹான்
------------------------------------
ஐரோப்பிய நாடான கிரிஸின் இளவரசி காஞ்சி மஹா பெரியவரின் பரம பக்தை.
இளவரசிக்கு அவர்களது நாட்டின் அரசு முலம் ஒரு  தொகை ஒவ்வொரு வருடமும் மன்னர் குடும்பம் தர்ம கார்யங்கள் செய்வதற்காக அவர்களது பட்ஜெட்டில் ஒதுக்கப்படும்.

மேற்கத்திய   நாட்டில் சர்ச் மூலமாக அந்த பணம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும். 
இளவரசி பெரியவரின் பக்தையான பின்னர் அந்த பணத்தினை  சர்ச் முலம் விநியோகம் செய்யாமல் அவர் நம் நாட்டிற்கு வந்து பெரியவரின் யோசனையின் பேரில் பல நல்ல காரியங்களை அந்த பணத்தின் முலம் செய்யலானார்.
இளவரசி மஹா பெரியவரின் ஆக்யையின் பேரில் ஒரு தர்மத்தின் முலம் ஒவ்வொரு வருடமும் டின் டின்னாக டன் கணக்கில்   அவர்களது  நாட்டிலிருந்து பால் பவுடரினை எடுத்து வந்து நம் நாட்டில் விநியோகம் செய்வார்கள்.

குறிப்பாக மருத்துவமனை, காசநோய் மையம்,  அநாதை இல்லம் ஆகியவற்றிக்கு இலவச விநியோகம் செய்ய. மீதி இருக்கும் பால் பவுடர் ஸ்ரீமட  நிர்வாகத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு.

இதே கால கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் கறவை மாடுகள் இலட்ச கணக்கில் கொல்லப்பட்டு கொண்டிருப்பதாக    ஒரு செய்தி பத்திரிகைகளின் மூலம் மஹா பெரியவர்களின் காதுகளில் எட்டியது. மிகவும் வருத்தப்பட்டார்.
அந்த சமயத்தில் கிரிஸ் இளவரசியும் பெரியவர் அவர்களை காண வந்திருந்தார். இது குறித்து பெரியவர் இளவரசியிடம் நீண்ட நேரம் விசாரித்தார்.
இளவரசி கூறியதாவது எங்களது மேலை  நாட்டில் அதிக பால் உற்பத்தி வேண்டும் என்பதற்காக பசுவிற்கு அது உண்ணும் புல் மற்றும் தவிடு தவிர மாமிச உணவும் தரப்பட்டது அதாவது காய்ந்த மீன் உணவு எலும்பு  துண்டுகள் போன்றவை தரப்பட்டு அவை முப்பது லிட்டர் வரை பால்கள் தந்து   கொண்டிருந்தன.

சில காலம் கழித்து அந்த பசுக்கள் கன்று  ஈன்ற பின்னர் அவைகளுக்கு ஒருவிதமான நோய் / வியாதி ஒன்று வந்தது அந்த வியாதி வந்த பின்னர் பசு மாடுகள் மிக்க கோபம் கொண்டன மனிதர்களை கண்டாலே முட்டி கடிக்க ஆரம்பித்து விட்டன. இதனை சரி செய்ய எங்களால் இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை எனவே இந்த வியாதி கண்ட பசுக்களை எல்லாம் கொன்று விட முடிவு செய்து மேற்கத்திய நாடுகளிலெல்லாம் இவ்வாறு தான் பசுக்கள் கொல்லப்படுகின்றன. தற்போது அந்த வியாதி வேகமாக  பரவி வருவதாக பெரியவரிடம் இளவரசி வருத்தத்துடன் கூறினார்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட மகாபெரியவர் இரண்டு வார்த்தைகளை மட்டும் கூறி வியாதி குணமாக ஒரு  உபாயத்தையும் கூறினார்.

இளவரசியே, மனிதன் காட்டிலிருந்து முதன்முதல் தன்னோடு அழைத்து வந்த ஜீவன்கள் இரண்டு
ஒன்று நாய் அது மனிதனின் பாதுகாப்பிற்காக, நாய் மிகவும் மோப்ப சக்தி மிக்கது, எஜமானனிடம்   நன்றி விஸ்வாசதிற்கு பெயர் போனது.
மற்றொன்று பசு மாடு மிகவும் சாதுவான ஒரு மிருகம் அதன்  பால் மனிதனுக்கு உணவு, அதன் சாணம் சுகாதாரமான ஒரு பொருள்   மற்றும் அதனிடம் பெறும் பஞ்சகெளவ்யம்  என்பது ஒரு மருந்து
காலம் காலமாக மனிதனோடு வாழ்ந்த ஒரு ஜீவனுக்கு மிருக உணவை கொடுத்து அது மிருக குணம் பற்றி கொண்ட பின்னர் வியாதி வந்த பின்னர் மிருக குணம்தானே வெளிக்காட்டும். தவறு மனிதனுடையது அல்லவா?

இந்த நாட்டில் வேத காலம் முதல் இந்த இரண்டு ஜீவன்களும் வீட்டிலேயே வளருகின்றன. பல விடுகளிலும் இரண்டும் சக மனிதர்களை போலவே வாழுகின்றன. இன்னும் சொல்லப்போனால் பல வீடுகளில் ஒரு பசுவின் தாய் அதன் கன்று மேலும் அதன் கன்று என காலம் காலமாக வாழுகின்றனவே. இந்த பிரச்னை இந்த நாட்டில் இது வரையில் கேள்விபடவே இல்லையே.
உங்கள் நாட்டில் மட்டும் ஏன் இந்த பிரச்னை?

சரி இதற்கு உபாயம் கண்டால் பசுக்களை கொல்வதை உங்களால் நிறுத்திவிட முடியுமா?
 
நான் இந்த மடத்தின் மடாதிபதியாக பட்டமேற்ற காலத்தில்  தஞ்சாவூர் ஜில்லாவில் பல காலம் விஜயம் செய்திருக்கிறேன் . அந்த பகுதி மிக்க வளமான பகுதி காவிரி பகுதி. மாடுகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் அங்கு
அதிகம்    கொள்ளிடக்கரை பால் மிகவும் பிரிசித்தி பெற்றது. அப்பகுதி மக்கள் மாடு வளர்ப்பதில் பெயர் போனவர்கள். அவர்கள் எக்காரணம் கொண்டும் மாட்டினை வதை செய்யமாட்டார்கள்.  மனிதர்களை போல் மாட்டினையும் வியாதி வந்தால் கூட தங்களது வீட்டில் தான் பராமரிப்பார்கள். ஆகவே அங்கு வாழும் கோனார் என்னும்   சமூகத்தினர் ஆடு மாடுகளை பராமரிப்பதில் கைதேர்ந்தவர்கள்.  அந்த கோனார்களுக்கு விவசாயிகளிடமிருந்து மானியம் உண்டு.

அந்த பகுதியில் திருவிடைமருதூரில் ஒரு கால்நடை வைத்தியர் ஒருவர் இருக்கிறார் அவர் பிறவி செவிடர். அவர் குடும்பம் பரம்பரையாக மாடுகளுக்கு வைத்தியம் செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. இன்னும் சொல்லப்போனால் அவர் மாடுகள் விடும் ஒரு விதமான பெருமூச்சிலிருந்தே அவற்றிக்கு என்ன பிரச்சினை என்பதை உணர்ந்து கொள்ளும் திறன் மிக்கவர். அவரை நாளையே இங்கு வரவழைத்து உங்களிடம் அறிமுகப் படுத்துகிறேன் நீங்கள் அவருக்கு நோயின் தன்மை குறித்து விளக்குங்கள் அவர் இங்கேயே மருந்து தயார் செய்து தருவார். எடுத்துச் சென்று உங்களது நாட்டில் சில மாடுகளுக்கு கொடுத்து பாருங்கள் வியாதி குணமாகிறதா என்று பார்கலாம் என்றார்.

செவிட்டு கோனாரும் வந்தார். அவருக்கு வியாதி குறித்து விளக்கப்பட்டது. மருந்து தயாரித்து கொடுத்தார். மருந்து கிரிஸிற்கு
அனுப்பப்பட்டது.

ஒரு மாதத்தில் கிரிஸிலிருந்து  மடத்திற்கு தகவல் வந்தது மருந்து கொடுத்த மாடுகள் குணமாகி மீண்டும் பால் கொடுக்க ஆரம்பித்து விட்டதாக மகிழ்ச்சியுடன்.  அதோடு ஒரு வேண்டுகோளும் அவர்கள் தரப்பிலிருந்து வைக்கப்பட்டது அவர்களது நாட்டிலிருந்து ஒரு பத்து கால்நடை மருத்துவர்கள் மருந்து செய்வது எப்படி என அறிய வர உள்ளார்களாம். கோனார் அவர்கள் சொல்லி கொடுப்பார்களா என்று கேட்டு.

செவிட்டு கோனாருக்கு தகவல் அனுப்பப்பட்டு செவுட்டு கோனார் மகிழ்ச்சியுடன் மருந்து செய்வதை சொல்லி கொடுத்தார்.

சொல்லி கொடுத்து விட்டு பெரியவரிடம் ஆசி பெற சென்ற செவிட்டு கோனாரிடம் மஹாபெரியவர் அவா ஊரு மாட்டுக்கு என்ன வியாதின்னு  சைகை மூலம் கோனாரை வினவ

செவிட்டு கோனார் "ஆமா சாமி மனுஷன் மாறி வளர்க்க வேண்டிய மாட்டை மாம்சம் போட்டு மிருகம் மாதிரி வளர்த்தா அது என்ன செய்யும் அந்த குணமும் அதோட வியாதியும் தான் வரும். அந்த வியாதிக்கு கோமாரின்னு பேரு. இப்ப எல்லாம் சரியா போய்டும் கவலை வேண்டாம் சாமி. ஆனா ஒண்ணு மட்டும் நீங்க அவங்களுக்கு கொஞ்சம் நல்லா எடுத்து சொல்லிடுங்க சாமி. மாட்ட மட்டும் கொல்ல வேணாம்  மாட்ட கொன்னா நாடு உருப்படாதுன்னு. அவுங்க எப்ப கேட்டாலும் நான் மருந்து தறேன் மாட்ட மட்டும் கொல்ல கூடாதுன்னு   கண்டிச்சு சொல்லிடுங்க எனக்கு துண்ணுரு குடுத்து ஆசி பண்ணுங்க சாமி நான் வர்றேன்".

காஞ்சி மகான் எனும் சொல்லே மந்திரம்!
கருத்துடன் ஜெபித்து வந்தால் நினைத்தது கை கூடும்...
♦♦♦♦♦♦♦♦♦
ஸ்ரீ மஹா பெரியவா ஸ்வாமி குரு பாதம் சரணம்...♦♦
இந்த பதிவினை  முதன்முதலாக அப்லோடு செய்தவர்க்கு நன்றி♦
ஹர ஹர சங்கர ,
ஜய ஜய சங்கர!