Sunday, 11 August 2019

சித்தர் வாக்கு - கோமுக தீர்த்தம் கோடி பலன் தரும்

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

கோமுக தீர்த்தம் கோடி பலன் தரும்
!

ஒவ்வொருவருடைய இல்லத்திலும் எப்போதும் கங்கை, காவிரி போன்ற புனித தீர்த்தங்கள் எப்போதும் இருந்திடல் வேண்டும். இதுவே தீர்த்தக் காப்பு! இதைத் தவிர இவற்றை விட மிகவும் புனிதமான இறை தீர்த்தம் ஒன்று உண்டு, அதுதான் “கோமுகத் தீர்த்தம்” ஆகும். கோமுக தீர்த்தம் என்றால் ஆலயங்களில் சன்னதிகளிலிருந்து அபிஷேக நீர் வெளி வருகின்ற நீர்த் தாரைப் பகுதியிலிருந்து பெறப்படுகின்ற அபிஷேக, ஆராதனை தீர்த்தம் ஆகும். இவ்வபிஷேக நீர்த் தாரையே கோமுகம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த கோமுக நீர்த்தாரையில் தான் கோடானு கோடி தேவதைகள் உறைகின்றனர். இறைவனுடைய திருமேனியைத் தழுவி வருகின்ற அபிஷேக ஆராதனை தீர்த்தமும், அபிஷேகப் பொருட்களும் கலந்து வருவதால் உலகத்தில், ஏன், இந்தப் பிரபஞ்சத்திலேயே இதற்கு நிகரானப் பிரசாதப் பொருள் எங்கும் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இது மிகுந்த மகத்துவத்தைத் தன்னுள் கொண்டுள்ளது.

கோடானு கோடி யுகங்களாக ஸ்ரீராமருடைய காலத்திற்கும் முந்தையதாக இருந்து வருகின்ற சிவலிங்க மூர்த்திகளின், பெருமாள் மூர்த்திகளை ஸ்ரீஅகஸ்தியர் போன்ற எத்தனையோ கோடி மகரிஷிகளும், யோகியர்களும் தம் திருக்கரங்களால் பூஜித்து அபிஷேகித்து வந்த இறைச் சிலைகளின் மீதும், அர்ச்சாவதார மூர்த்திகளின் மீதும் பட்டு வருகின்ற அபிஷேக நீரென்றால், ஆராதனைப் பொருட்கள் என்றால் அதனுடைய மகத்துவத்தை எப்படித் தான் எடுத்துரைப்பது! இறைவனுடைய திருமேனியைக் காண முடியவில்லையே என்று ஏங்குவோர்க்கு அத்திருமேனியில் பட்டு வருகின்ற பிரசாத தீர்த்தமே இறை தரிசனப் பலன்களைத் தந்தருளும் என்றால் கோமுக தீர்த்த மகத்துவத்தை என்னவென்று தான் சொல்வது! இந்தக் கோமுகத் தீர்த்தத்திற்குத்தான் எவ்வளவு மகிமை!

கங்கை, காவிரி, யமுனை, கிருஷ்ணா, கோதாவரி போன்ற பல்லாயிரக்கணக்கான நதி தேவதைகளே ஒன்று சேர்ந்து வந்து பூஜிக்கின்ற மூலமூர்த்திகளிடமிருந்து வருகின்ற அபிஷேக நீர் என்றால், எத்தனை ஆயிரம் நதிகளின், தீர்த்தங்களின் மகிமைகளைத் தன்னுள் கொண்டுள்ளது இந்தக் கோமுகத் தீர்த்தம்!

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

தீவினை போக்கும் கோமுக தீர்த்தம்

கோமுக தீர்த்தம் என்றால் மூல ஸ்தான சிவ மூர்த்தி அல்லது பெருமாள் மூர்த்திகளின் சன்னதிகளில் பெறப்படுவது மட்டும் அல்ல. ஸ்ரீ சனீஸ்வர மூர்த்தி, நவகிரஹங்கள், முருகப் பெருமான், பிள்ளையார் என எந்த இறைச் சன்னதிகளிலிருந்தும் நீங்கள் கோமுக தீர்த்தத்தைப் பெற்றிடலாம், மூல மூர்த்திகளிடமிருந்து பெறுகின்ற கோமுக தீர்த்தத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. எனவே இதற்கெனவே கோமுகத் தீர்த்தத்தை வைத்திருப்பதற்காகவே ஒரு விசேஷமான வெள்ளிப் பாத்திரத்தையோ அல்லது அவரவர் வசதிக்கேற்ப மண் கலயமோ, புதிய கண்ணாடி பாட்டிலையோ வைத்திருத்தல் நல்லது. அதனுடைய சக்தி குறைவதற்கு முன்னதாகவே உடனடியாகவே இல்லம் முழுதும் மாவிலைகளைக் கொண்டு அல்லது தர்ப்பையால் முதலில் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது தெளித்துப் பிறகு இல்லம் எங்கும் நிரவிடுக!

திருச்சி அருகே திருமழபாடி, திருஅண்ணாமலை அருகே உள்ள ரிஷிவந்தியம் சிவாலயங்களில் நான்கு நந்திகளுக்கு இடையே அமைந்துள்ள மிகவும் சக்தி வாய்ந்த ரிஷபாயன கோமுகம் உள்ளது. நந்தி லோகங்களுடன் தொடர்புள்ள மிகுந்த தெய்வீக சக்தி நிறைந்த கோமுகம்! திருமழபாடி கோமுக தீர்த்தம், பிரிந்த தம்பதியினரை இணையச் செய்கின்ற நற்பலன்களைத் தரும். ரிஷிவந்திய கோமுக பூஜை, சந்தான பிராப்தியைத் தரும், இக்கோமுகங்களை நன்றாக நீர் விட்டுக் கழுவி சுத்தம் செய்து விபூதி, மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு தூபமிட்டு வலம் வந்து வணங்கிடுக! இதுவும் பெறற்கரிய திருப்பணியே! நல்ல பூஜையும் கூட!

கோமுக தீர்த்தத்தை உங்களுடைய வாகனங்கள், அலுவலகங்கள், கார்ஷெட், நிலம், பாக்டரி என அனைத்து இடங்களிலும் இட்டு வருக! தீவினைகளையும், தோஷங்களையும், சாபங்களையும் நாசம் செய்யும், அற்புதமான இறை தீர்த்தப் பிரசாதம் இது!

இன்னும் சொல்லப் போனால் உங்கள் இல்லத்தில் தீர்த்தப் பிரசாதத்திற்கென விசேஷமான சுரைக் குடுவையை வைத்திருங்கள். இதில் பலவிதமான கோயில் தீர்த்தங்கள், புனிதமான கடல் தீர்த்தங்கள், கோமுகத் தீர்த்தம், பஞ்ச கவ்வியம் போன்ற முக்கியமான இறை தீர்த்தப் பிரசாதமும் கலந்திருக்கட்டும், கோமுக தீர்த்த பூஜையும் எளிய தெய்வீக மயமான தோஷ நிவர்த்தி தரும் வழிபாடுதானே இதில் உங்களுக்கு என்ன செலவாகப் போகிறது? இதனை எடுத்துரைப்பதற்கு ஒரு சற்குரு இல்லையாதலின் இதனை அறியாது நீங்கள் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகியிருக்கின்றீர்கள்! எனவே இனியேனும் இல்லந்தோறும் இந்தக் கோமுகத் தீர்த்தப் பிரசாதமானது நிறைந்திருக்கட்டும்.

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*