Monday, 8 October 2018

சேஷாத்திரி ஸ்வாமிகள்


சேஷாத்திரி ஸ்வாமிகள்

ஞானப் பைத்தியம்

தூக்கம் என்பது ஒரு குட்டி மரணானுபவம். ரிஹர்ஸல்.  பிறந்த எந்த உயிருக்கும் அத்தியாவசியம் உறக்கம். இருட்டு. இருள் உறக்கத்திற்கு தேவை.    ஆழ்ந்த நித்திரை உடலை உலகை உற்றாரை ஏன் தன்னையே மறக்க வைக்கிறது.  கவலையற்ற நோய் மறந்த, பசியற்ற,  சுகானுபவம்.   இதுவே  மீளாது தொடர்ந்தால் அதன் பெயர் தான் மரணம். நன்றாக தூங்கியவன் ''சுகமாக'' தூங்கினேன் என்கிறான். நித்திரையினால் வியாதி, அவிவேகம் வளரும் எனவே தான் ரிஷிகள் ''தூக்கத்துக்கு இடம் கொடேல்'' என்பார்கள். ரிஷிகள் முனீஸ்வரர்கள் தூக்கத்துக்கு நேரம் அதிகம் செலுத்துவதில்லை.  நான் ரிஷியோ முனிவனோ அல்ல. ஆனாலும் ரெண்டுமணி நேரம் தான் தூங்குகிறேன்.

சேஷாத்திரி ஸ்வாமிகள் தூக்கம் அறியாதவர். கீதையில் 2-69 வது ஸ்லோகத்தில் ''யா நிஸா'' - என்று வருமே அந்த இருளை, தூக்கத்தை ஜெயித்தவர். நள்ளிரவில் எல்லோரும் தூங்கும்போது அவர் சிலையாக அமர்ந்து நிஷ்டை யில் இருப்பார். அல்லது பேய் போல் எங்காவது திரிந்து கொண்டிருப்பார்.

எவராவது   எப்போதாவது தூங்கி கொண்டிருப்பதை பார்த்துவிட்டால் ''எழுந்திரு தூங்காதே, எமன் பிடித்துக் கொண்டு போயிடுவான்'' என்று சொல்வார்.

யாருக்கோ ஒருவர்க்கு பத்தாயிரம் ரூபாய் தொலைந்து போனது. சேஷாத்திரி ஸ்வாமிகளை அணுகி வணங்கி வேண்டினார். அன்றே அது ஆச்சர்யமாக கிடைத்து விட்டதால் அந்த மனிதர் ஒரு பஞ்சு மெத்தை, ரெண்டு தலையணைகளை கொண்டு வந்து கம்பத்திளையனார் சந்நிதியருகே தரையில் ஒரு தூண் அருகே போட்டு வைத்தார். அங்கே தான் சில ராத்திரி வேளைகளில்  சேஷாத்திரி ஸ்வாமிகள் வந்து அமர்வார். படுப்பார். When I visited Kambathilaiyanar Sannidhi in Thiruvannamalai Arunacharlaeswarar temple I was shown the place where Seshadri Swamigal used to lie down on the mattress. I worshipped Him mentally.

அதிலே தான் ஊசிப்போன மாணிக்க சாமி தரும் கப்பரை சோற்றையும்  பசித்தபோது  சாப்பிடுவார். மீதியை அந்த படுக்கையிலேயே சிந்தி விடுவார். சேறோ.  மண்ணோ, சகதியோ, புழுதியோ  எல்லாம் அந்த படுக்கையில் தான். படுக்கை விரித்த வண்ணமாகவே இருக்கும். யாரும் அதன் அருகே செல்லமாட்டார்கள். அதை வணங்குவார்கள். சிறிது புழுதி, மண்ணை அங்கிருந்து எடுத்து அணிந்துகொள்வார்கள். வீட்டுக்கும்   எடுத்துச் செல்வார்கள். 1921லிருந்து 1928 வரை அந்த படுக்கை அங்கிருந்தது. அந்த புழுதி மண் ப்ரஸாதத்தால் எண்ணற்றோர் நோய் நீங்கி, சுபிட்சம் அடைந்ததாக கூறுவார்கள். சேஷாத்திரிகள் ஸ்வாமிகள் சக்தி அப்படிப் பட்டது.

பகலில் எப்போதாவது சாது சாத்திரம் என்ற ஒரு பழைய கட்டிடத்தின் பின்புறத்தில் இருந்த கொல்லை தாழ்வாரத்தில் பார்க்கலாம். அங்கே தேவையற்ற சாமான்கள் நிரம்பியிருக்கும். துடைப்பம், பக்கெட், முறம், கொம்புகள், உலக்கை, மிதியடிகள், இவைகளுக்கு நடுவே  ஆனந்தமாக  படுப்பார். அவரோடு நிறைய சிற்றெறும்புகள், கட்டெறும்புகள்,  சுள்ளென்று கடிக்குமே  அந்த  செவ்வெறும்புகள் இருக்கும். ஆனால் அவரை துன்புறுத்தாது. நல்ல நட்பு..

சில நாட்கள் காலை வேளையில் பால் மடம் என்று ஒரு இடத்தில் யாரோ வேண்டாமென்று தூக்கிப்போட்ட  ஒரு உடைந்து போன கட்டில் கிடந்தது. அதில் தான் அவரை அமர்ந்த கோலத்தில்  பார்க்கலாம்.

இரவில் கம்பத்திளையனார்  சந்நிதி பஞ்சணை மெத்தை!! ஒன்று நிச்சயம். எப்போது என்றைக்கு எங்கே இருப்பார் என்பது அவருக்கே கூட தெரியாது.அவர் பேசுவதே புரியாது. தனக்குத் தானே பேசிக் கொள்வார். சிரிப்பார். அழுவார். கோபப்படுவார். பைத்தியம் என்ற பட்டம் அவருடன் ஒட்டிக்கொண்டிருந்தது.

அவர் பேசுவதில் ஒரு சில மாதிரி தருகிறேன். மூளை கலங்கி விடாதீர்கள்.

யாருக்கோ குடும்ப கலவரத்தில் மத்தியஸ்தம் பண்ணுவது போல், நீதிபதி தீர்ப்பு சொல்பது போல், குற்றவாளி கெஞ்சுவது போல், மனைவியிடம் கணவன் கோபிப்பது போல், சகோதர்கள் சண்டை போல், குரு சிஷ்யனுக்கு உபதேசிப்பது போல், ராஜா மந்திரியிடம் சொல்வது போல்,எல்லாம் இருக்கும். சிலர் கேட்ட வார்த்தைகள் இவை.

''அவன் யாரு, இவன் யாரு?
சொந்தக்காரன் தாண்டா பேசறேன்!,
கோலமாவது காலமாவது போங்கடா எல்லோரும் எழுந்து,
என்ன அவசரம் உனக்கு பேசாம உக்காரு,
வாயால மூச்சு விட்டு வீடு மெழுகி உத்தியோகம் பாக்கணும்.
ஊருக்கு வந்தா தான் கல்யாணம்..
கோயில், குளம், நாய், குரங்கு, பேச்சு ஒண்ணுதானா?
தூங்கினால், அப்பம், வடை. வண்டி வண்டியா
பிணம் போகிறது.
தேசாந்திரம் போனா கழுதை என்ன செய்யும் சுவாமி?
அதோ வெள்ளைப் புடவை கட்டிண்டு சொகுசா அக்கா, கூடவே தங்கை மாமன், மச்சினன்,
ரயில் வண்டிப் புகை, வெள்ளைக்காரன் தானே போட்டான்?
பேமானி, விடுவானா?
சுண்டைக் காய் கூடையை தூக்கினாலும் உத்யோகம் பெரிசு சுவாமி!
ராவும் பகலும் கூக்குரல்.
நூல் நூத்து காலணா சம்பாதிச்சியா? வடையா கிடைச்சுது?
கத்தரிக்காயும் பூசணிக்காயும் கடைக்கு தான் வந்து சேரும். பூசாரி தான் உடுக்கடிப்பான்.
அடடா, அப்பப்பா! தேவேந்திர விமானம். ஒச்சலெது ஒழிச்சலெது.
என்னத்தை சொல்றது. வேறே வழியில்லை அவ்வளவு தான்.
விதவை ஊஞ்சலாடட்டுமே. கச்சேரிலே அழுவாளா?
ஆமாமா, பட்டினத்தார், தாயுமானவர், ஆதி சங்கரரே தான்.
 நாளைக்கு வா நாளைக்கு வான்னு படிச்சு படிச்சு சொன்னா கேட்டாளா? ராவணன் சீதையை கொண்டுபோய்ட்டான். யார் என்ன பண்ண முடியும்?
மழை பெஞ்சு பசியெடுத்தா என்ன சீனிவாசன் மலைமேல் தானே நிக்கிறான்?
ஊருக்கு பால் குடிச்சிட்டு ஒவ்வையார் பாட்டு கேட்டா?
வாடகை வண்டிக்காரன் ரயிலுக்கு தான் ஓட்டுவேன் என்கிறான்.
குப்பை மேட்டில் தான் குடியிருக்கணும். கோச் வண்டியும்  விளக்குமாறும் வீட்டுக்கு வருமா?
எலியை பூனை கடிக்கிறது.
அம்மா கேட்கிறாள் எனக்கு என்ன கதி?
ராக்ஷஸி ராக்ஷஸி என்கிறாளே உங்க வீட்டிலேயுமா?
ஏன் சுவாமி கேக்க மாட்டான்? பொண்டாட்டி வேணும் அவனுக்கு. இங்கே பத்து பேர்னா, அங்கேயும் பத்து பேர். எதுக்கு யானை வந்து நிக்கிறது? ராமன் புருஷோத்தமன் டா.
கடைக்கு திருநாளுக்கு தேர்ன்னு எதுக்கு போறே? கல்யாணப் பெண் குப்பை மேட்டில் குதிக்கிறா. நான் என்ன பண்றது? காளிதாஸா  நீ தாண்டா மஹா கவி?

மண்டையை குழப்பிவிட்டேன் அல்லவா?.  மன்னிக்கவும். இந்த வார்த்தைகளை எதற்கு எந்த சம்பவங்களில் யாரிடம், யாருக்கு, எப்போது யாரைப்பற்றி குறிப்பிட்டார் என்ற தகவல் இந்த ஜென்மத்தில் கிடைக்கப் போவதில்லை. ஆனால் அவற்றின் பின்னே மகா ரகசியகங்கள் பொதிந்து இருக்கின்றன என்பதை மட்டும் உணர்ந்து கொள்வோம்.  அந்தந்த சம்பந்தப்பட்டவர்களுக்கு  சுள்ளென்று உறைக்கும் , புரியும். ஞானி எங்கேயோ எப்போதோ நடந்ததை இப்போது கூறுவார். நமக்கு புரியாது. .