Saturday, 6 October 2018

வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில்.

மாரியம்மனின் ஆலயங்களுக்கெல்லாம் தாய்த்தலமாக விளங்குகிறது வேலூர் அருகே உள்ள வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில்.

மாரியம்மனாக ரேணுகாதேவி அவதாரம் எடுத் தபோது வெட்டுவாணத்தில் தான் முதன்முதலாக  எழுந்தருளினாள் என்று புராணத்தில் கூறப்படுகிறது.

400 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இத்திருத்தலம் பாலாற்று நதியின் தென்கரையில் அமைந்திருக்கிறது. ஜமதக்னிரேணுகாதேவியின் மகனாக பிறந்த பரசுராமர் விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறார்.

 ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்ற வாக்கிற்கு ஏற்ப தாயின் தலையை வெட்டிச் சாய்க்க புறப்பட்டார் பரசுராமர். அவ்வாறு தாய் ரேணுகாம்பாளின் தலையை கொய்த இடம்தான் வெட்டுவாணம் என புராணங்களில் கூறப்படுகிறது.

ஒரு சமயம் விவசாயி ஒருவர் வெட்டுவாணத்தில் உள்ள கசக்கால்வாயை சீர்படுத்தியபோது சிலை ஒன்று தென்பட்டுள்ளது. அந்த சிலை மீது தவறி மண்வெட்டி பட்டதில் ரத்தம் வழிந்தது. அப்போது அம்மன் அருள் வந்த ஒருவர் வாக்கின்படி ரேணுகாம்பாளுக்கு அந்த இடத்திலேயே கோயில் எழுப்பி வழிபாடு செய்யப்படுகிறது.

கோயிலை சுற்றிலும் மகாசக்தி வாசம் செய்கிறாள். கோயிலில் நுழைந்தவுடன் இடப்பக்கத்தில் 100 ஆண்டுகள் பழமையான தல விருட்சமான வேப்ப மரம் உள்ளது. தலவிருட்சத்தை அடுத்து உற்சவ நாயகியாக அருள்புரிகிறாள் 

எல்லையம்மன். ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு உற்சவநாயகி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

நாகதோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கோயிலில் உள்ள நாக கன்னிக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் தோஷம் விலகி அம்மன் அருள் கிடைக்கும்.

 நாகக்கன்னி மண்டபத்தை அடுத்து திருக்கேணி உள்ளது. அம்மனுக்கு வேண்டி முடி காணிக்கை கொடுப்பவர்கள் இந்தத் திருக்கேணியிலிருந்து நீர் எடுத்து குளித்தால் எல்லாப் பாவமும் நீங்கி வேண்டுதல் நிறைவேறும்.


கொடிமரத்தை தரிசித்துவிட்டு கோயிலுக்குள் நுழைந்தால், கருவறையில் பிரகாசிக்கிறாள் எல்லையம்மன்.  16 கலைகளுடன் பிரகாசிக்கின்ற அம்மனை முழுநிலவு அன்று நடக்கும் பவுர்ணமி பூஜையில் தரிசிப்பது மிகவும் சிறப்பு. அப்போது அம்மனையும், சந்திரனையும் நேருக்குநேர் சந்திக்க வைக்கும் வைபவம் நடைபெறும்.

அதேபோல அமாவாசை தினத்தில் அம்பாள் மடியில் எலுமிச்சை கனி வைத்து அதன் சாற்றைப் பருகலாம். அதேபோல அந்தக் கனியை எப்போதும் உடன் வைத்திருந்தால் அனைத்து காரியங்களும் சுபமாகும்.

இந்த கோயிலுக்கு வந்தால் தீராத நோய்களும் தீர்ந்துபோகும்; அம்மை வந்து அவதிப்படுபவர்கள் சன்னதியில் தங்கியிருந்து கோயில் குளத்தில் நீராடி, அம்மனுக்கு அபிஷேகம் செய்த மஞ்சள் தீர்த்தத்தை அருந்தினால் அம்மை தானாக இறங்கிப்போவாள்.

மாங்கல்ய தோஷம், திருமணத் தடங்கல் இருப்பவர்கள்  தல விருட்சத்தில் மஞ்சள் தாலியைக் கட்டினால் தோஷம் நீங்கும், திருமணத் தடங்கல் விலகும்.  அதேபோல மாங்கல்ய தோஷம், திருமணத் தடங்கல் அகல  சுயம்வரா பார்வதி சர்வமங்கலா கவுரி பூஜை என்ற சிறப்பு வழிப்பாடு நடைபெறுகிறது. இந்தப் பூஜை செய்வதால் திருமணப் பிரச்னைகள் இல்லாமலே போகும்.  இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். 

அதன்படி ஆடி முதல் வெள்ளியில் இருந்து 10 வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை, அலங்காரம், உற்சவம் உள்பட நாள்முழுவதும் விழா நடைபெறும். அதன்படி முதல் வெள்ளி வரும் 20ம்தேதி தொடங்குகிறது. 6ம்  வெள்ளியில் நடைபெறும் லட்ச தீப விழாவின்போது விளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

அதேபோல் ஆடி மாதத்தில் வேப்பிலை ஆடை கட்டி பிரார்த்தனை நிறைவேற்றுவதற்காக கர்நாடகா, ஆந்திரா என்று வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அங்கப்பிரதட்சணம் செய்தும், அக்னிச்சட்டி எடுத்தும், மாவிளக்கு போட்டும் வேண்டினால் நினைத்த காரியங்கள் கைக்கூடும் என்பது ஐதீகம்.

இக்கோயில் வேலூர்பெங்களூர் நாற்கர சாலையோரம் பள்ளிகொண்டா அருகே அமைந்துள்ளது. வேலூரில் இருந்து 18 கி.மீ. தூரம் உள்ளது.
thanks dinakaran