Sunday 7 October 2018

தாமிரபரணியை உருவாக்கிய அகத்தியர்.

தாமிரபரணியை உருவாக்கிய அகத்தியர்
: தாமிரபரணியை கொண்டாடுவோம்


இலளிதை திரிபுரைதானே அவள் எப்படி சிவனை விட்டு பிரிவாள். உமையொருபாகன் என்று சிவபெருமானுக்கு பெயர் வருவதற்கு காரணமே அவள்தானே. சிவனையும் பிரியக்கூடாது. இச்சா, கிரியா சக்திக்கு கொடுத்த வரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதால் நாரணி என்ற பெண் உருவமும், நாராயணன் என்ற ஆண் உருவமும் எடுத்து இச்சா, கிரியா சக்திகளின் விருப்பங்களை நிறைவேற்றினாள். இதற்கிடையே சிவனும், நாரணியும் நீர் விளையாட்டில் விருப்பம் கொண்டனர். இதன்மூலம் கங்கை என்னும் மகாநதி உருவானது. தேவியின் மார்பில் புரண்டு ஓடிய நீர், மார்பில் உள்ள குங்குமம் சாந்து தோய்ந்து தாமிர நிறமானதால் அது தாமிரபரணி என்றும் பெயர் பெற்றது.

அதைத்தான் நாராயணி தனது முத்து மாலையாக எடுத்து பத்திரமாக வைத்திருந்தாள்.
அகத்தியர் பொதிகை புறப்படும்போது அந்த முத்து மாலையை அகத்தியர் வசம் கொடுக்க அவர் முன்பு தாமிரபரணி பெண்ணாக தோன்றி நின்றது. பின்பு அதை கமண்டலத்தில் அடைத்துக் கொண்டு அகத்தியர் தெற்கு நோக்கி பயணமானார். இவர் குடகு மலையில் கமண்டலத்தை ஒரு இடத்தில் வைத்து விட்டு தியானம் செய்த போது விநாயகர் காக்கை உருவெடுத்து வந்து அந்த கமண்டலத்தை கவிழ்த்தார். அதைக் கண்ட அகத்தியர் சினங் கொண்டவுடன், பயந்து போன விநாயகர் காக்கை உருவத்தை விட்டு மறைந்து சுய உருவம் எடுத்தார். அவரைக் கண்டவுடன் அகத்தியர் வணங்கி நின்றார்.

பின்பு சிவ பூஜைக்காக இந்திரன் அமைத்த பூங்கா நீரில்லாமல் வாடுவதை கண்டு தான் இந்த செயலை செய்து விட்டேன் என்று விநாயகர் அகத்தியரிடம் கூறினார். அன்று முதல் குடகுமலையில் காவிரி தோன்றி தென்நாட்டை வளம் பெறச்செய்து வருகிறது, அதன்பின் குற்றாலம் வந்த அகத்தியர் செண்பக ஆரண்யத்தில் தங்கினார். மலையடிவாரமிருந்த மகாவிஷ்ணு ஆலயத்தை சிவாலயமாக மாற்றினார். தாமிரபரணியோடு வந்த அவளது தோழிகளான சித்ரா, கடனா உள்ளிட்டோரை அம்மலைத்தொடரில் பொங்கிப் பிரவாகமெடுக்க வைத்தார். ராவணனுடன் வீணா காண போட்டியில் ஈடுபட்டார். அகத்தியரின் நாத ஓசையில் மலைகளே உருகியதால் ராவணன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

பின்னர் பாபநாசம் வந்த அகத்தியர் பொதிகைக்கு சென்றவுடன் பூமி சமன் ஆனது. இறைவனின் ஆணைப்படி தன்னோடு அழைத்து வந்த தாமிரபரணியை, தென்னகம் செழிக்க வேண்டி பூமியில் பாயச் செய்தார். அதன் பின்பு சித்திரை விசு நாளன்று இறைவனின் திருமண காட்சியை அகத்தியர் லோபாமுத்திரையுடன் கல்யாண தீர்த்தம் என்றழைக்கப்படும் இடத்தில் கண்டு மகிழ்ந்தார். அவரின் விருப்பப்படி பாபநாசம் நதிக்கரையோரம் இறைவன், உமையாளோடு வாசம் செய்தார்.

இறைவனின் ஆணைப்படி தலைப் பொதிகைக்கு சென்று அகத்தியர் தங்கினார். இறைவனின் திருப்பாதம் தொழ வேண்டியிருப்பதால்தான் தாமிரபரணி வற்றாத ஜீவநதியாய் இன்னமும் பாய்ந்து கொண்டிருக்கிறது. தாமிரபரணியின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் இறைவனும் முக்கிய தீர்த்த கட்டங்களில் தாமிரபரணியில் தீர்த்தவாரி செய்கின்றான். இதற்காக தாமிரபரணியில் பல தீர்த்த கட்டங்கள் உள்ளன. இந்த நதியில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தீர்த்தக் கட்டத்தில் குளிப்பது மிகவும் விசேஷமாகும்.