Monday, 8 October 2018

மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது எது, குருதேவா?’ என்று போகர் தன் ஆசான் அகத்தியரைப் பார்த்துக் கேட்கிறார்

மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது எது, குருதேவா?’ என்று போகர் தன் ஆசான் அகத்தியரைப் பார்த்துக் கேட்கிறார்
. பணம், கல்வி, உற்றம், சுற்றம், நண்பர்கள் என இவை எல்லாம் மனித வாழ்க்கைக்குத் தேவையானவை என்று நாம் நினைத்திருக்க, ஆசான் அகத்தியரோ, ’மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது குறிக்கோள். குறிக்கோள் இலாத மனிதன் அழிந்து போவது திண்ணம்’ என்று குறிக்கோளின் மகத்துவத்தைப் பறைசாற்றுகின்றார். பரீட்சையில் நுõறு மார்க் எடுக்க வேண்டும், நோபள் பரிசு பெற வேண்டும், கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பவை எல்லாம் நல்ல குறிக்கோள்கள் என்று கூற முடியாது. எந்த குறிக்கோள் உன்னை இறைவனை நோக்கி முன்னேற வைக்கிறதோ அதையே குறிக்கோள் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.
பன்னிரு ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள், திருக்கயிலாய பொதிய முனிப் பரம்பரையில் உதித்த அகத்தியர் முதலான சித்தர்கள், திருஅண்ணாமலையில் உறையும் கோடிக் கணக்கான சித்தர்கள் இவர்கள் வரலாறுகளை ஊன்றிப் படித்தீர்களானால் குறிக்கோள் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன, எந்த குறிக்கோளை ஏற்று நிறைவேற்றினால் மனித வாழ்வு செம்மை அடையும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். நல்ல குறிக்கோள்களை ஏற்று அதை உயிர் மூச்சாக நிறைவேற்றும் முதல் கட்டமாகத்தான் பெரியோர்கள் வைராக்யம் என்ற ஒன்றை நமக்கு ஏற்படுத்தித் தந்தார்கள். தினமும் எறும்பு, பறவைகள், மீன்களுக்கு உணவிடுவது, கோயில்களில் குப்பை பொறுக்குவது, மாதம் ஒரு முறை பசு மாட்டுத் தொழுவங்களைத் துõய்மைப் படுத்துவது, கோயில் நந்தவனங்களை சீர் அமைத்துத் தருவது, வருடம் ஒரு முறை காசி, ராமேஸ்வரம், அயோத்தியா போன்ற புனிதத் தலங்களுக்கு நல்ல இறையடியார்களை குடும்ப சகிதமாக பணம், உணவு, ஆடைகள் கொடுத்து அனுப்பி வைப்பது, ஏழைகளுக்கு இலவச திருமணங்களை நிறைவேற்றுவது என்றவாறாக தின வைராக்யம், மாத வைராக்யம், வருட வைராக்யம், ஆயுள் வைராக்யம் என வளமான வைராக்கியங்களை ஏற்று நிறைவேற்றி வாருங்கள். தினம் ஒரு நல்ல காரியம் செய்து அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதே எளிமையான தியான முறையாகும். எளிமையான இந்தத் தியானமே உங்களை இறுதியில் இறைவனிடம் கொண்டுசேர்க்கும் உத்தம மார்கமாகும்.