Friday, 19 October 2018

நிருதி மூலை - தென் மேற்கு

*நிருதி மூலை - தென் மேற்கு*

நிருதி திக்கு விநாயகப் பெருமானுக்கு உரிய திசையாகும். பிரார்த்தனைக்கு உரிய விசேஷமான இடமும் இதுவேயாம். இது குறித்த சுவையான ஒரு இறை விளையாட்டைக் காண்போம்.

ராம பக்தரான ராமதாசர் நவாபிடம் பணி புரிந்து வந்தார். அரசாங்க காரியத்திற்காக நவாப் கொடுத்த பணத்தைக் கொண்டு ராமபிரானுக்கு கோயில் கட்டி விட்டார். செய்தி அறிந்த நவாப் ராமதாசரை அழைத்து அரசாங்கப் பணத்தை எடுத்து எப்படி கோயில் கட்டலாம் என்று கேட்டார்.

ராமதாசர் தான் இறைவனுக்கு மட்டுமே கோயில் கட்டியதாகவும் அனைவரும் ராமபிரானின் அடிமைகள் என்பதால் அரசாங்க பணத்தை எடுத்து கோயில் கட்டியது தவறு கிடையாது என்று வாதிட்டார். அதை நவாப் ஏற்றுக் கொள்ளவில்லை.

அரசாங்கப் பணத்தைத் திருடினால் அதற்கு மரண தண்டனை வழங்க வேண்டும். ஆனால், ராமதார் இறைவனுக்காக அதை செலவிட்டதால் நவாப் அதை மன்னித்தார். ஆனால், செலவழித்த பணத்தை வட்டியுடன் திரும்பித் தந்தால் அவரை விட்டு விடுவதாகவும் இல்லையெனில் சிறைத் தண்டனை வழங்கப் போவதாகவும் நவாப் தெரிவித்தார்.

ராமதாசரும் தன்னுடைய உற்றார், உறவினர், நண்பர்களிடம் ராமருக்குக் கோயில் கட்ட செலவான பணத்தைக் கடனாக தருமாறு கேட்டார். ஆனால், எவருமே அதற்கு முன் வராததால் மிகவும் மனம் நொந்து போனார். அப்போதுதான் ராமர் ஒருவர்தான் தன்னுடைய உண்மையான உறவினர், அவர் ஒருவர் மட்டுமே தன்னுடைய நிரந்தர நண்பர் என்பதை உணர்ந்தார்.

கனத்த நெஞ்சத்துடன் நவாபிடம் சென்று தன்னால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்று கூறி தான் அரசாங்கப் பணத்தை எடுத்த குற்றத்திற்கு உரிய தண்டனையை வழங்குமாறு கேட்டார். நவாபும் வேறு வழியின்றி ராமதாசரை சிறையில் அடைத்து விட்டார்.

சிறையில் வாடிய ராமதாசர் ராம நாமத்தை இரவு பகலாக ஓதிக் கொண்டே இருந்தார். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாகி வருடங்களும் உருண்டோடின.

ராமதாசரின் வேதனைக் குரல் வைகுண்டத்தை அடைந்தது. லட்சமி தேவி பெருமாள் மூர்த்தியிடம், ”சுவாமி, உங்கள் பக்தன் எவ்வளவு காலமாய் உங்களைக் கூவி அழைக்கிறான். ஆனால், தாங்கள் சிறிதும் அவனைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்களே? அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை,” என்றாள்.

பெருமாள், ”தேவி, பக்தர்கள் அழைத்தால் மறு கணமே கருட வாகனத்தில் விரைந்து சென்று அவர்களைக் காப்பாற்றுவதுதானே என்னுடைய தலையாய கடமை. அப்படி இருக்கும்போது ராமதாசர் அழைத்தால் போகாமல் இருப்பேனா? இவ்வளவு கடுமையான சிறைத் தண்டனை பல வருடங்களாக அனுபவித்தும் இன்னும் ஏன் அவன் என்னை அழைக்கவில்லை என்று புரியவில்லை,” என்று சிறு குழந்தையைப் போல் கேட்டார்.

லட்சுமி தேவிக்கு ஒன்றும் புரியவில்லை. ”என்ன சுவாமி சொல்கிறீர்கள், சுவாமி? அவன் உங்களை அழைக்கவில்லையா? அவனுடைய ராம நாம ஒலி பூமியிலும் வானத்திலும் ஒலித்து எங்கும் வியாபித்துள்ளதே.”

பெருமாள், ”நீ சொல்வது எனக்கு சிறிதும் புரியவில்லை, தேவி. அவன் ஒரே ஒரு முறை என்னை அழைத்தால் போதும். உடனே சென்று அவனைக் காப்பாற்றி விடுவேன்,” என்று மீண்டும் கூறினார்.

தேவிக்கு குழப்பம் அதிகரித்தது. சற்று நேர யோசனைக்குப் பின் அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. தனக்கே ராமதாசரின் ராம நாம ஒலி தொடர்ந்து கேட்கிறது என்றால் தன்னுடைய பிராண நாயகனுக்கு நிச்சயம் அந்த ஒலி கேட்டிருக்கும். ஆனால், அதை தனக்குத் தெரியாது என்று மறுக்கிறார் என்றால் அதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தாள் தேவி.

உண்மையில் பெருமாள் மூர்த்தி ஒரு நாடகத்தை நடத்த திட்டம் வைத்திருந்தார். இறைவனிடம் பக்தன் கொண்டாடும் பக்தியில் பல படித்தரங்கள் உள்ளன. இறை பக்தியில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளதே அடிமை என்னும் பாவத்தில் தோன்றும் பக்தி நிலை. மிக மிக உன்னத பக்தி நிலை இது.

ராமதாசர் தன்னை ராமரின் பக்தனாக நினைத்தால் ஒரு நொடியில் ராமர் பூலோகம் வந்து ராமதாசரைக் காப்பாற்றி இருப்பார். ஆனால், ராமதாசரோ தன்னை ராமபிரானின் தாசன் அதாவது அடிமை என்ற உன்னத நிலையில் நிலைக்க விரும்பினார். எனவே, இத்தகைய உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் அதற்கான காலம் கனியும் வரை காத்திருக்கத்தானே வேண்டும்.

ராமதாசரும் விடாமல் ராம நாமத்தைக் கூவிக் கொண்டே இருந்தார். பன்னிரெண்டு வருடங்கள் கடந்தன. ஒரு நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பெருமாள் மூர்த்தி லட்சுமியிடம், ”தேவி நீயும் நீண்ட காலம் ராமதாசரைக் காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாய். எனக்கோ அவன் குரல் கேட்கவில்லை. இப்போது ஒரு வழி முறை உள்ளது. அதாவது அவன் பிரார்த்தனைக்கு உரிய திசையான நிருதி திக்கில் இருந்து ராம நாமத்தை அழைத்தால் அப்போது அந்த நாமம் என்னுடைய காதில் விழும். நானும் உன்னுடைய விருப்பப்படி அவனைக் காப்பாற்றி விடுவேன்,” என்றார்.

தேவியும் மிகவும் மகிழ்ச்சியடைந்து இந்தச் செய்தியை எப்படி ராமதாசருக்குத் தெரிவிப்பது என்று யோசித்தாள். அப்போது நந்தவனத்தில் புறாக்கள் பறக்கும் ஒலி கேட்டது. உடனே தேவி ஒரு புறாவை அழைத்து ராமதாசரிடம் சென்று எம்பெருமான் கூறிய செய்தியைத் தெரிவிக்குமாறு வேண்டினாள்.

அந்தத் தெய்வீகப் புறாவும் வைகுண்டத்திலிருந்து பூலோகம் வந்து ராமதாசரின் சிறைக்கு மேலிருந்த ஜன்னலில் உட்கார்ந்து ராம நாமத்தை ஒலிக்க ஆரம்பித்தது.

ராமா ராமா ராமா ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ராமா ராமா ராமா

என்று கூவி விட்டு அங்கிருந்து பறந்து சென்று வைகுண்டத்திற்கு வந்து விட்டது.

புறாவின் ராம ஒலியைக் கேட்டார் ராமதாசர். புறாக்கள் தெய்வீக லோகத்திலிருந்து செய்தியைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தவர் ராமதாசர்.

இதில் சில வாஸ்து ரகசியங்களும் உண்டு. பொதுவாக, வீடுகள் கட்டும்போது சமையல் அறை, முற்றம், பூஜை அறை இந்தந்த அளவுகளில் இருக்க வேண்டும் என்ற வாஸ்து சாஸ்திர அளவு கோல் இருப்பது போல என்னென்ன அமைப்புகள் எவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டும் என்ற சாஸ்திர நியதிகளும் உண்டு.
அதன்படி இருபது அடி உயரத்தில் புறாக் கூண்டுகள் அமைத்தால் அக்கூண்டில் தெய்வ லோகத்து பட்சிகள் வந்து இறை மூர்த்திகளிடமிருந்து செய்தி கொண்டு வரும் என்பது வாஸ்து நியதி.

அந்த வாஸ்து நியதியை அறிந்த ராமதாசர் அந்த புறா இருபது அடி உயரத்தில் இருந்த ஜன்னலில் அமர்ந்ததால் அது தெய்வீக லோகத்திலிருந்து செய்தி கொண்டு வந்தது என்பதை எளிதில் உணர்ந்து கொண்டார். ஆனால், அந்த செய்தி என்ன என்பது அவருக்குப் புரியவில்லை. மீண்டும் மீண்டும் அந்த வைகுண்டப் புறா ஓதிய ராம நாமத்தினை நினைவுக்குக் கொண்டு வந்து சிந்திக்கத் தொடங்கினார். பல மணி நேரத்திற்குப் பின் புறா கூறிய இறைச் செய்தி அவருக்குப் புரிந்தது.

ஆறு முறை ராம நாமத்தை புறா தொடர்ந்து ஓதியது. ஆறு எண்ணிற்கு உரிய திசை நிருதி. எனவே நிருதி மூலையில் நின்று ராம நாமத்தை ஓதினால் நிச்சயம் ராமபிரானின் தரிசனம் கிட்டும் என்று அவருடைய உள்ளுணர்வு அவருக்குத் தெளிவாக தெரிவித்தது. எல்லையில்லா உவகையுடன் ராமதாசரின் நிருதி மூலையில் நின்று கொண்டு பசி தாகத்தை மறந்தவராய் ராம நாமத்தை ஓத ஆரம்பித்தார்.

பெருமாள் மூர்த்திக்கு ராமதாசரின் ராம நாமம் தெளிவாகக் கேட்டது. குறும்புப் புன்னகையுடன் லட்சுமியை நோக்கி, “இப்போதுதான் ராமதாசரின் இறை நாமம் என்னுடைய காதில் கேட்கிறது. நான் உடனே சென்றாக வேண்டும். ஆனால், நவாபுக்குக் கொடுக்கத் தேவையான பணம் இல்லையே என்ன செய்வது? என்னிடம் இருப்பது இந்த பழைய வில்தான். இதை வைத்துக் கொண்டு யார் பணம் தருவார்கள்?” என்று ஒன்றும் அறியாதவர்போல் பெருமாள் கேட்டார்.

லட்சுமி தேவியும், ”நீங்கள் கூறுவதும் உண்மைதான். ஏற்கனவே நீங்கள் குபேரனிடம் வாங்கிய கடனே தீராமல் இருக்கிறது. அப்படி இருக்கும்போது யார் உங்களுக்குக் கடன் தருவார்கள்? வேண்டுமானால் நான் சேர்த்து வைத்த பணத்தில் இருந்து உங்களுக்குத் தருகிறேன். சீக்கிரம் சென்று நம் குழந்தையை மீட்டு வாருங்கள்,” என்று கூறி ஒரு பொன் முடிச்சை பெருமாள் மூர்த்தியிடம் கொடுத்தாள் லட்சுமி தேவி.

பெருமாள் ராம லட்சுமண மூர்த்திகளாய் மாறி நவாபிடம் வந்தார்கள். நவாபிடம் தங்களை ராமதாசரின் நெருங்கிய உறவினர்கள் என்றும் தங்கள் பெயர் ராம்சிங், லக்ஷ்மண் சிங் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். சிறையில் வாடும் ராமதாசரை அழைத்துப் போக வந்திருப்பதாகக் கூறினர். அவர்களைக் கண்ட நவாப் தன்னை மறந்தான். ராம லட்சுமணர்களின் கம்பீரத் தோற்றம் அவனை ஈர்த்தது. அவனுடைய கண்கள் அந்த திவ்ய மூர்த்திகளிடமிருந்து நகர மறுத்தன. தன் வாழ்நாளில் இதுவரை கண்டிராத ஒரு தெய்வீகப் பரவச நிலைக்குச் சென்று விட்டான் நவாப்.

ராமதாசர் தர வேண்டிய பணத்திற்கு வட்டி, கூட்டு வட்டி எல்லாம் கணக்கிட்டு ஒரு பெரிய தொகையைக் கேட்டான் நவாப். லட்சுமண சுவாமி லட்சுமி தேவி கொடுத்த பொற்காசு மூட்டையை நவாபிடம் கொடுத்தார். அதை அவிழ்த்துப் பார்த்த நவாபின் மனம் மாறியது. அரசன் பக்தன் ஆனான்.

“ஹமாரா அல்லா ஆ கயா” (நமது இறைவன் வந்து விட்டான்) என்று கூறி ஆனந்தக் கூத்தாடினான் நவாப். தன்னை மறந்த நிலையில் இருந்த நவாபிடம் ராமதாசரை சிறையிலிருந்து விடுவிக்குமாறு கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து மறைந்தனர்.

நேராக சிறைக்குப் பறந்து வந்தான் நவாப். ராமதாசரின் பாதங்களில் தடாலென விழுந்து வணங்கினான். ராமதாசருக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னுடைய அரசாட்சி, அரண்மனை, நாடு, நகரம் அனைத்தையும் உன்னுடைய காலடியில் சமர்ப்பிக்கிறேன். வேறு எது வேண்டுமானாலும் கேள். என்னுடைய உயிரை வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறேன். ராம்சிங், லட்சுமண்சிங் என்ற அந்த இருவரை மட்டும் எனக்குக் கொடுத்து விடு,” என்று கதறி அழுதான் நவாப்.

ராமதாசருக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிய ஆரம்பித்தது. ராமதாசர் நேரே தான் கட்டிய கோயிலுக்குச் சென்றார். ”ராம் நாம் சத்ய ஹை” அதாவது ராம நாமமே உண்மை. அதுவே நித்தியமானது, சாசுவதமானது என்று கூறிக் கொண்டே ராமருடன், ராம நாமத்துடன், ராம ஜோதியுடன் இரண்டறக் கலந்தார் ராமதாசர்.

இறைவனுடன் நெருங்கி உறவாட, பிரார்த்தனை செய்ய உகந்த திசையே நைதிருதி ஆகும். இதை நன்முறையில் பயன்படுத்தி பயன் பெறுவது பக்தர்கள் கடமை.

பிரார்த்தனைக்கு மட்டும் அல்லாது கடன் வாங்கவும் நிருதி திசை உகந்தது. கடன் வாங்குபவர்கள் நிருதி மூலையிலோ அல்லது அந்தத் திசையை நோக்கி நின்று கொண்டோ கடன் கேட்டால் எளிதில் கடன் கிடைக்கும். அவ்வாறு பெற்ற கடனைத் திருப்பித் தருவதும் சுலபமாகும்.