Friday, 5 October 2018

அஷ்டபந்தனம் என்றால் என்ன

அஷ்டபந்தனம் என்றால் என்ன?
கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி
செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது
நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து
ஆக்கல் அட்டபந்தனம் ஆம்

அஷ்டபந்தனம் - சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி ஆகிய எட்டுப் பொருட்களைக் கொண்டு செய்த சாந்து.

சுக்கான்கல் என்பது வெள்ளை அல்லது கபில நிறத்துடன் கூடியது தேர்ந்தெடுக்கப்படும். அடுப்பில் இரும்புச் சட்டியில் இட்டு வறுத்தால் வெடிக்காத வகையே சிறப்பானது என்கின்றனர்.

கொம்பரக்கு என்பது மரப்பட்டையுடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். இதுவே தூய்மையானது என்கின்றனர்.

சாதிலிங்கம் என்பது வைப்புப் பாஷாண வகை எனத் தெரிய வருகிறது. நவ பாஷாணத்திலும் ஒன்று என அறிகிறோம். அஷ்டபந்தனத்தில் இது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

குங்கிலியம் தூசு, தும்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

செம்பஞ்சு வாதாங்கொட்டையைப் போல் இருக்கும் எனவும் பிஹாரில் இருந்து வருவதாகவும் "கோக்தி" என்னும் பெயர் எனவும் தெரியவருகிறது.

தேன்மெழுகு, இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே எனினும் இதில் மஞ்சள் நிறத்தை விட வெண் மெழுகே அஷ்டபந்தனத் தயாரிப்பில் முக்கியமானது.

எருமை வெண்ணெய் புத்தம்புதியதான மண்பாண்டத்தில் போட்டு வைத்தால் வெண்ணெயின் ஈரப்பசையை அது உறிஞ்சி எடுத்து விடும். பின்னர் பயன்படுத்துவார்கள்.

கற்காவி அல்லது நற்காவி அழுக்குச் சிவப்பாகக் கட்டியாக இருக்கும் என்கின்றனர்.  கட்டிப்பட்டிருப்பதையே சிறப்பானதாகவும் கருதுகின்றனர்.

இதில் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட அளவு முறை இருக்கிறது. அந்த அளவில் சேர்த்து மர உரலில் போட்டு மர உலக்கையால் இடிக்க வேண்டும். கல்லுரலில் போடக் கூடாது.  வெண்ணெயைத் தவிர்த்து மற்றவற்றைப் போட்டு வெண்ணெயைச் சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும்.

முதலில் இடும்போதும் ஒவ்வொன்றாகத் தான் மர உரலில் போட வேண்டும். இடிப்பவர்கள் மனத்தூய்மை, உடல் தூய்மையுடன் இருக்க வேண்டும். சிவ நாமத்தையோ நாராயண நாமத்தையோ உச்சரித்த வண்ணம் இடிக்க வேண்டும். பண்டங்களும் தூய்மையாக இருக்கவேண்டியதோடு அல்லாமல், பண்டங்களைச் சேர்க்கும் அளவும் மாறக்கூடாது. இடிப்பதற்கும் கால அளவு உண்டு.  இதன் பின்னர் பிரதிஷ்டை செய்கையில் முக்கியப் பீடத்திற்கும் துணைப் பீடத்திற்கும் சேர்க்கைக்காகத் திரிபந்தனம் என்பதைச் சேர்ப்பார்கள்.

 திரிபந்தனம்:

சுக்கான் தூள், சர்க்கரை, தொல் பேயான் நற்கனியும்
ஒக்கக் கலந்தமைத்தல்  உற்றதிரி பந்தனம் ஆம்

இதற்குச் சுக்கான் தூள், கருப்பட்டிக் கசிவு, முற்றிக் கனிந்த பேயன்பழம் ஆகியவை தேவை. சுக்கான் கற்களை நன்கு பொடித்துக் கொண்டுக் கொஞ்சம் பெரிய சல்லடையால் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  வாயகன்ற மண் சட்டியில் அந்தப் பொடித்த சுக்கான் தூளைப் போட்டுச் சூடேற்ற வேண்டும்.  சிறிது சிறிதாகக் கருப்பட்டிக் கசிவையும், பேயன் பழத்தையும் போட்டுக்கொண்டு கிளறிக் கொடுத்துக் கொண்டே வர வேண்டும். கைச்சூடு தாங்க முடியாத அளவுக்குப் பதம் வர வேண்டும். அப்போது பெரிய மர மத்துக் கொண்டு நன்கு மசித்துக் கூழாக்குவார்கள். பின்னர் கற்களுக்கு இடையே அவற்றைப் பயன்படுத்துவார்கள்.  கலவை செம்மையாக இருந்தால் தான் பிடிமானம் உறுதியாக இருக்கும்.

இத்தனையையும் முறையாகச் செய்து பின்னரே பீடத்தில் கடவுள் சிலைகளை முறைப்படி பிரதிஷ்டை செய்வார்கள். இவைகளைப் போட்டுப் பிரதிஷ்டை செய்தாலே அவை உறுதியுடன் பீடத்தில் நிற்கும்.