Sunday 11 December 2022

கொடுங்குன்றம் மங்கைபாகர் கோயில்.

 கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் செய்த பாவங்கள் நீங்குவத்ற்கு வழிபட வேண்டிய  மூன்றடுக்குள்ள சிவாலயமான கொடுங்குன்றம் மங்கைபாகர் கோயில்.

  

சிவகங்கை மாவட்டம்,தற்போது பிரான்மலை என அழைக்கப்படும் கொடுங்குன்றீஸ்வரர் கோவில்,

2 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த மூன்றடுக்கு 

ஆலயமாகும்.


தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் இது 5வது தலம்


தல வரலாறு:


ஒரு சமயம் 

வாயுபகவானுக்கும்

ஆதிசேஷனுக்கும் 

தங்களில் யார் பலசாலி 

எனபோட்டி. 


ஆதிசேஷன் மேரு 

மலையைச்சுற்றிக்

கொள்ள வேண்டும் 

என்றும், அதைவாயு பகவான் 

தனது பலத்தால் 

பெயர்க்க வேண்டும் 

என்பதே போட்டி.


ஆதிசேஷன் தன் 

பலத்தால் மலையை 

இறுகப்பற்றிக்கொண்டார்.


வாயு பகவான் 

எவ்வளவோமுயன்றும் 

மலையை அசைக்க 

முடியவில்லை.


இந்த போட்டியின் போதுமேரு மலையிலிருந்து சில துண்டுகள் 

பெயர்ந்து விழுந்தது. 


அவ்வாறு விழுந்த 

குன்றே இங்கே பிரான் மலையாக

உள்ளது.


இம்மலையில் சிவன் 

பாதாளம், பூலோகம்,

கைலாயம் என மூன்று 

அடுக்குகளில் இருந்து

காட்சி தருகிறார்.


பாதாளத்தில் உள்ள கோவிலில்

இறைவன் : கொடுங்குன்றநாதர் 

இறைவி : 

குயிலமுத நாயகி 

என்ற பெயரில் அருள் பாலிக்கின்றனர்.


மலைக்கு கீழே உள்ள கோயிலான கொடுங்குன்றநாதர் சந்நிதியே பாடல் பெற்ற பதி.


ஐப்பசி முதல் பங்குனி வரை 6 மாதங்களுக்குச் சூரியக் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுவது சிறப்பு.


குறிஞ்சி நிலத்தில் அமைந்த கோயில் என்பதால் இத்திருக்கோயிலில் 

இந்த நிலத்திற்குரிய தேன், திணைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த பொருள்களை நெய்வேத்யமாக படைக்கின்றனர்.


பூலோகம் என சொல்லப்படும் மத்தியில் உள்ள கோவிலில்

இறைவன் : விஸ்வநாதர்

இறைவி : விசாலாட்சி,என்ற பெயரிலும்

மற்ற சன்னதிகளில் பைரவர், குருபகவான்.

அருள் பாலிக்கின்றனர்


இம்மலையின் நடுப்பகுயில் உள்ள கோவிலில் மிக முக்கியமான சந்நிதியாய் விளங்குவது பைரவர் சந்நிதியாகும்.


இங்குள்ள பைரவர் வடுக பைரவராய் எழுந்தருளியிருக்கிறார். 


வடுகன் என்றால் பிரம்மச்சாரி என்ற பொருள் உண்டு. 


வீரன் என்ற பொருளும் கூறப்படுகின்றது. 


கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம் எனத் திகழ்கின்றது பைரவர் கோயில். 

தெற்கு நோக்கிய சந்நிதியில் பைரவர் சூலம், உடுக்கை, கபாலம், நாகபாசம் போன்றவற்றுடன் 

நின்ற திருக்கோலம் கொண்டிருக்கின்றார். . 


சற்று உக்ரமான தோற்றத்துடன் காணப்படும் இவருக்கு, வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளது. 


பண்டை அரசர்களால் வழிபாடு செய்யப்பட்டதால் வீரத்தின் அடையாளமாக வாள் சார்த்தி வைக்கப்பட்டுள்ளதாம். 


பைரவருக்கு வலப்புறம் உள்ள சந்நிதியில் காசிவிஸ்வநாதர்-

விசாலாட்சி எழுந்தருளியுள்ளனர். வடுக பைரவர் தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி சந்நிதிகளும் உள்ளன.


முண்டாசுரன் என்னும் அரக்கன், சிவனைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றதால், ஆணவத்துடன் அனைவரையும் கொடுமைப்படுத்தினான். 


பிரம்மனையே அவன் போருக்கு அழைக்க, அவன் செருக்கை அழித்து அவனை அழிக்க, சிவன் ஏற்ற திருக்கோலமே ஸ்ரீ வடுகபைரவர் ஆகும். 


ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும், காரியத்தடைகளையும் களைபவர் இத் தலத்து பைரவர். 


கருப்பு வஸ்திரம் சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து இவரிடம் வேண்டிக் கொண்டால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


அடுத்து கீழே உள்ள மலையின் அடிவாரப் பகுதியில் கிழக்குப் பார்த்து கொடுங்குன்றநாதர் 

மிகச் சிறிய லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கின்றார். 


கொடுங்குன்றநாதர் சந்நிதி வலம் வரும்போது அறுபத்துமூவர் மூலமூர்த்தங்களும், விநாயகர், அம்மையப்பர் சந்நிதிகளும் உள்ளன. 


நவக்கிரக சந்நிதிகளில் எல்லா கிரகங்களும் அமர்ந்த நிலையில் உள்ளன. 


அம்பாள் குயிலமுதநாயகி நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். 


இக்கோவிலின் வடகிழக்குப் பிரகாரத்தின் கூரைப் பகுதியில் தொங்கும் கல்வளையங்கள் சிற்பக் கலைச் சிறப்பு மிக்கவை.


மேல்நிலையில் உள்ள கோவில் கைலாயத்தில்

இறைவன் : மங்கைபாகர்

இறைவி : தேனம்மையாக அருள் பாலிக்கின்றனர்.


மலைமீது சுவாமி (மங்கைபாகர்) சந்நிதிக்கு அருகில் “பெயரில்லா மரம்” உள்ளது. 


இதுகாறும் இம்மரத்தை எவராலும் பெயர் தெரிந்து சொல்லப்படாமையால் “பெயரில்லா மரம்” என்றே அழைக்கின்றனர்.


கைலாயம் எனப்படும் மேலடுக்கிலுள்ள கோயில் சன்னதியில் மங்கைபாகர், அம்பிகையுடன் இணைந்து, அகத்தியருக்கு திருமணக்காட்சி அருளிய கோலத்தில் காட்சி தருகிறார். 


இதை சிவனின், “அந்நியோன்ய கோலம்’ என்கிறார்கள்.


மற்ற கோவில்களில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்யும் பொழுது சுவாமி சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் மூலிகை மருந்துகள் வைப்பது வழக்கம். 


ஆனால் இக்கோவிலில் சிவன் சிலைக்கு கீழே இவ்வாறு வைக்கப்படுவது இல்லை.


இவர் முதலும் முடிவும் இல்லாதவராக இருப்பதால் அஷ்டபந்தனம் சாத்தப்படுவதில்லை என்கிறார்கள். 


இவருக்கு ஒருமுறை அணிவித்த வஸ்திரத்தை மறுமுறை அணிவிப்பது இல்லை.


மங்கைபாகர் சிலை, 

நவமூலிகைச் சாற்றால் செய்யப்பட்டதாகும். 


எனவே, இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. 


பவுர்ணமியன்று காலையில் புனுகு, சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர்.


இவரது சன்னதியின் எதிரில் நந்தி கிடையாது. 


சிவன், அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார். 


எனவே, இங்கு நந்திதேவர் இல்லாமல் சிவன் அம்பிகையுடன் காட்சி தந்தருகிறார்.


இந்த சன்னதியின் முன்மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் காணச்சென்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.


இத்திருத்தலத்தில் சிவன் கையில் நான்கு வேதங்களை வைத்தபடி காட்சி தருகிறார். 


எனவே இவருக்கு வேதசிவன் என்ற பெயரும் உண்டு. 


கல்வியில் சிறப்பிடம் பெற மாணவர்கள் இவருக்கு வெள்ளை நிற மலர்மாலை சாத்தி வெண்நிற வஸ்திரங்களை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.


சந்தனம், புனுகு தைலக் காப்பிட்டு, அபிஷேகம், ஆராதனை செய்து இவரை வழிபட்டால் எண்ணியது நிறைவேறும், திருமணத் தடைகள் அகலும் என்பது நம்பிக்கை. 


வரலாறு :


கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றதால், வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது.


உலகை சமப்படுத்த, அகத்தியரை தென்திசையில் பொதிகை மலைக்குச் செல்லும்படி சிவன் கூறினார்.


அகத்தியருக்கோ, சிவனின் திருமணத்தைக் காண வேண்டுமென்ற  தனது எண்ணத்தை சிவனிடம் கூற, தென்திசையில் எனது திருமணக்காட்சி உனக்கு கிடைக்கும் என்று ஆசி வழங்குகிறார் ஈசன். 


அப்போது அகத்தியர் சிவனிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் ஈசனது திருமணக்கோல காட்சி கிடைக்க வேண்டும் என வேண்ட, அதையும் ஏற்றார் சிவபெருமான்.


அதன்படி அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில், பல இடங்களில் சிவனின் திருமணக்கோலத்தை தரிசித்தார். 


அவ்வாறு அவர் தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று.


தலவிருட்சம் : 

உறங்காப்புளி மரம்


பாடியோர்: திருஞான

சம்பந்தர் தேவாரம், அருணகிரிநாதர் திருப்புகழ்


திருப்புகழ் தலம்: 

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். 


திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன.


இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும், இரு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். 


அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடன காட்சி காட்டியதாக ஐதீகம். 


இக்கோவிலில் தனி சன்னதியில் இருக்கும் முருகன் வயோதிக கோலத்தில் காட்சி தருகிறார். 


வழக்கமாக முருகன் சன்னதிக்கு எதிரில் மயில்வாகனம் தான் இருக்கும். 


ஆனால் இங்கு முருகன் சன்னதிக்கு எதிரில் யானை இருக்கிறது. 


முருகன் சன்னதி எதிரில் 18 துவாரங்களுடன் கூடிய மதில் உள்ளது. இந்த மதில் வழியாகத்தான் யானையைப் பார்க்க முடியும்.


முருகன் பத்மாசுரனை சம்ஹாரம் செய்ததால் தோஷம் உண்டானது. 


தோஷ நிவர்த்திக்காக இத்தலத்தில் இரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றதாக ஐதீகமுண்டு.


இந்த இரு லிங்கங்களே கொடுங்குன்றநாதர் சன்னதி பிரகாரத்தில் சொக்கலிங்கம், இராமலிங்கம் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்கள். 


பெயரே தெரியாத மரம் ஒன்றின் கீழ் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி யோக நிலையில் சுமார் நாலேமுக்கால் அடி உயரம் கொண்ட திருவுருவச் சிலை இருக்கிறது. 


இப்பகுதியில் இது போன்ற திருவுருவச்சிலை வேறு எங்கும் காணக்கிடைப்பது இல்லை. 


இத்திருத்தலத்தின் தலவிருட்சமாக பல நூறாண்டு கண்ட உறங்காபுளி என அழைக்கப்படும் புளியமரம் உள்ளது. இம்மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. 


இத்தலத்திற்கான

அருணகிரிநாதர் (திருப்புகழ்).


இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன

ரியாவரு மிராவுபக லடியேனை


இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு

மிலானிவ னுமாபுருஷ

னெனஏய

சலாபவ மலாகர சசீதர விதாரண

சதாசிவ மயேசுரச கலலோக

சராசர வியாபக பராபர மநோலய

சமாதிய நுபூதிபெற  நினைவாயே


நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன

நியாய பரிபால

அரநதிசூடி


நிசாசர குலாதிப திராவண புயாரிட

நிராமய சரோருகர  னருள்பாலா


விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ

வியாதர்கள் விநோதமகள் மணவாளா


விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை

விராலிமலைமீதிலுறைபெருமாளே.


இத்தலத்திற்கான சம்பந்தரின் பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்

கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்

ஆனிற்பொலி யைந்தும்அமர்ந் தாடியுல கேத்தத்

தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.


பொருள் : வளைந்த பிறைமதி வானின்கண் விளங்கும் மழை மேகங்களைக் கிழித்து ஓடிச் சென்று சேரும் குளிர்ந்த சாரலை உடைய கொடுங்குன்றம், பசுவிடம் விளங்கும் பால் நெய் தயிர் கோமயம் கோசலம் ஆகிய ஐந்து பொருள்களையும் மகிழ்ந்தாடி உலகம் போற்றத் தேன்போலும் மொழியினைப் பேசும் உமையம்மையோடு சிவபிரான் மேவிய திருத்தலமாகும்.


மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட


குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்


அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை


நிரவச்சடை முடிமேலுடன் வைத்தானெடு நகரே.


பொருள் : கடம்பு, குருக்கத்தி, முல்லை ஆகியவற்றின் நாள் அரும்புகள் குரவமலர்களோடு விண்டு மணம் விரவும் பொழில் சூழ்ந்த தண்ணிய கொடுங்குன்றம், அரவு, வெள்ளிய இளம்பிறை, மணம் விரவும் கொன்றை மலர் ஆகியவற்றை நிரம்பத் தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகராகும்.


-திருஞானசம்பந்தர் (தேவாரம்)


மலையடிவாரத்தில் கோயிலின் நுழைவாயில் முன்புறம் அடையவளைந்தான் என்ற பெயர் கொண்ட திருக்குளம் உள்ளது.


அதனை அடுத்துள்ள ராஜா மண்டபத்தைக் கடந்து, விநாயகரை வழிபட்டுப்பின் உச்சிக் கோயில், இடைக்கோயில், அடுத்து அடிவாரக் கோயில் என வழிபட வேண்டும் என்பது மரபாக இருக்கிறது. 


சித்திரை மாதத்தில் பெருவிழாவும், தை மாதத்தில் பைரவருக்கு சிறப்பு விழாவும் நடைபெறுகின்றது.


இக்கோயிலில் உள்ள பெரிய மணியின் ஒலியானது, 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சப்தமாக ஒலிக்கக் கூடியது.


கடையேழு வள்ளல்களுள் ஒருவனும், முல்லைக்குத் தேர் ஈந்தவனுமான பாரி வள்ளல் ஆட்சி செய்த இடம் இப்பகுதி. 


அக்காலத்தில் இப்பகுதி பறம்பு நாடு என்றும் இம்மலை பறம்பு மலை என்றும் அழைக்கப்பட்டது. 


இன்று காலப்போக்கில் மருவி ‘பிரான்மலை’ ஆகிவிட்டது.


மலை உச்சியில் விநாயகர், முருகன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர். 


மலைப்பாதையில் ஆங்காங்கே புண்ணிய தீர்த்தங்கள், கிராம தேவதைகளின் சன்னிதானங்கள் உள்ளன.


இத்திருக்கோயில் தீர்த்தம் சிறப்பு மிக்கதாகும். இத்தீர்த்தத்தம் குஷ்டவிலக்கி சுனை என்று அழைக்கப்படுகிறது. 


இச்சுனையின் நீரில் நாள்பட்ட தோல்வியாதி உள்ளவர்கள் இச்சுனையில் குளித்து சிவனை வழிபட்டால் தோல்வியாதி நீங்கும் என்பது ஐதீகம். 


ஒரு ஏழை மூதாட்டி இத்திருத்தலம் கட்டுவதற்கு தன்னால் முடிந்த ஒரு அணா பணத்தை தந்ததாகவும் அதை வாங்க மறுத்ததால் அதன் பின் கட்டிய கோவிலின் சுவர்கள் நிலைபெறாமல் சரிந்தன. 


அதையடுத்து அந்த மூதாட்டி கொடுத்த பணத்திற்கேற்ப சிறு கல்துண்டு பதித்தவுடன் சுவர் நின்றதாக கூறுகின்றனர். 


அதற்கு சான்றாக பைரவர் ஆலயத்தில் பெரிய சுற்றுச்சுவர்களுக்கிடையே சிறு கல்துண்டு நிறுவப்பட்டுள்ளது.


நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள் திருமண கோலத்தில் காட்சி அளிக்கும் மங்கைபாகர் தேனம்மையை தரிசித்தால் திருமணம் கைகூடும்.


முல்லைக்கு தேர் கொடுத்த பாரி


இன்றும் இத்தலத்தில் பாரி உற்சவம் என்னும் ஒரு விழா எடுக்கிறார்கள். 


இவ்விழாவில் முல்லைக்கு தேர் கொடுத்த வைபவம் நடக்கும். 


பாரி மன்னனின் திருவுருவச் சிலையை ஒரு தேரில் வைத்து பறம்பு மலை அடிவாரத்திற்கு கொண்டு செல்கிறார்கள் 


அங்கு முல்லைக் கொடியின் அருகில் தேரை நிறுத்திவிட்டு திருவுருவச் சிலையை கோவிலுக்கு திருப்பி கொண்டுவந்து விடுவர். 


அதன் பின் அப்பகுதி மக்களுக்கு மன்னர் தானம் செய்யும் படி அரிசி அளப்பு வைபவம் நடக்கும். 


அப்போது பக்தர்களுக்கு அரிசியை தானமாக தருகின்றனர்.


மூலிகை நிறைந்த மலை


இக்கோவில் திருவண்ணாமலை ஆதினத்திற்குட்பட்ட குன்றக்குடி ஆதீனத்தில் உள்ளது. 


இந்த பரம்பு மலை சுமார் இரண்டாயிரத்து அடி உயரம் கொண்டது. மலையெங்கும் மூலிகைகள் நிறைந்துள்ளன. 


சுவாசக்கோளாறுகள் உள்ளவர்கள் இம்மலையேறினால் அதில் உள்ள மூலிகை காற்றை சுவாசிக்க அப்பிரச்சனை தீரும் என்று பக்தர்கள் இன்றும் மலையேறுகின்றனர்.


மார்கழி, தை மாதம் குறிஞ்சி மலர்கள் மலையெங்கும் பூத்துக் குலுங்கும். உச்சிமலையில் கார்மேகங்கள் உரசி செல்வது பார்ப்பவர்களை சில்லிட வைக்கிறது. 


வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஆங்கிலேயர்களை பகைத்துக் கொண்டு இங்கு மறைந்திருந்தார் என கூறுகின்றனர். 


அந்த இடம் இன்றும் ஊமையன்குடம்பு என்ற   பெயரால் அழைக்க படுகிறது.


இரும்பால் ஆன பழமை வாய்ந்த பீரங்கி உச்சிமலையில் இருப்பது இத்தலத்திற்கு மேலும் சிறப்பு. 


இங்கு இருக்கும் சிவனை தரிசித்து மலையில் ஏறி மேலிலுள்ள சுனையில் தீர்த்தம் எடுத்து வேண்டிக்கொண்டால் எண்ணியது ஈடேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.


ஏறுவதற்கு மிகவும் கடினமானது என்பதாலும், கொடிய பல வளைவுகளைக் கொண்டிருப்பதாலும் 

இது கொடுங்குன்றம் என்றழைக்கப்படுகின்றது. 


அடிவாரத்தில் இருந்து மலையுச்சிக்கு சுமார் ஐந்து கி.மீ. நடக்க வேண்டும். 


செங்குத்தான படிகளைக் கொண்டதாக இருக்கிறது. சில இடங்களில் படிக்கட்டுகள் இல்லை. 


சித்தர்கள் பலர் இன்னமும் சூட்சும வடிவில் இந்த மலையில் வாழ்வதாக நம்பப்படுகிறது.


மலையுச்சியில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. பிற்காலத்தில் வாழ்ந்த 


ஒரு இஸ்லாமியப் பெரியவரின் சமாதியும் (தர்கா) உள்ளது. 


முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் பாரி வாழ்ந்ததால் இந்த ஊர் என்றும் எப்பொழுதும் பசுமையாகவும், வளமாகவும் காணப்படுகின்றது.


ஆலயத்திற்கு செல்லும் வழி : மதுரையில் உள்ள மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுப் பொன்னமராவதி செல்லும் பேருந்துகள் பிராமன்மலை வழியாகச் செல்கின்றன. மதுரையிலிருந்து சிங்கம்புணரி, மேலூர் ஆகிய ஊர்களுக்குச் சென்றால் அங்கிருந்து பிரான்மலைக்குப் பேருந்துகள் உள்ளன. 


இந்த சிவஸ்தலம் பாண்டிய நாட்டில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருப்புத்தூரில் இருந்து 20 கி.மி. தொலைவில் உள்ளது.


கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் செய்த பாவங்கள் நீங்க, மூன்றடுக்குள்ள சிவாலயமான பிரான்மலை மங்கைபாகர் கோயிலை தரிசனம் செய்து பேறு பெற சென்று வரலாமா!

No comments:

Post a Comment