Saturday 24 December 2022

மதுரையை ஆண்ட உக்கிரவர்ம பாண்டியன் முருக பெருமானின் திரு அவதாரமே(திருவிளையாடல் புராணத்தில் உள்ள தகவல்களின் சுருக்கம் )

 மதுரையை ஆண்ட உக்கிரவர்ம பாண்டியன் முருக பெருமானின் திரு அவதாரமே(திருவிளையாடல் புராணத்தில் உள்ள தகவல்களின் சுருக்கம் )


பிரம்மதேவர் மதுரையம்பதியையும் கைலாயத்தையும் தராசில் வைக்க மதுரையம்பதியே சிறந்ததென அறிகிறார் .


இந்த மதுரை நகரில் மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் பிறந்தவர் மீனாட்சி தேவி


திக் விஜயத்தில் ஈசனின் மேல் காதல் கொண்டு அவரையே மணக்கிறார் மீனாட்சி தேவி


மீனாட்சி தேவி மற்றும் மாமியார் காஞ்சனமாலையின் வேண்டுகோளிற்கிணங்க ஈசனே சுந்தரேச பாண்டியனாக மதுரையை சிறிது காலம் ஆண்டு வருகிறார்.


இதற்கிடையே தனக்கு பிறகு இந்த தேசத்தை ஆள வாரிசு இல்லையே என மீனாட்சி தேவி வருத்தம் கொள்ள அதை உணர்ந்த ஈசன் முருகப்பெருமானை மகனாக அவதரிக்க அறிவுறுத்துகிறார்.


ஏறுமயில் ஏறி விளையாடும் முருகன் தாய் மீனாட்சி தேவியின் கருவிலிருந்து நிறைந்த திங்களில் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார்.


மகனுக்கு உக்கிரவர்மன் என்ற பெயர் சூட்டுகின்றனர் மீனாட்சி தேவியும் சுந்தரேச பாண்டியனும்.


பெயர்சூட்டு விழாவிற்கு தாய்மாமன் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராகவும் பிரம்மதேவர் சரஸ்வதி தேவியுடனும் வருகிறார்.


தேவகுரு பிரகஸ்பதி உக்கிரவர்மனுக்கு குருவாகி உக்கிரவர்மனுக்கு எட்டு வயதாகும் போது சகல கலையிலும் வல்லவனாக்குகிறார். சுந்தரேச பாண்டியன் தனது மகனுக்கு பாசுபதாஸ்திரத்தை அளிக்கிறார்.


16 வயது வந்தவுடன் தன் மகனுக்கு நல்லதொரு பெண்பார்த்து முடிக்க முடிவு செய்கின்றனர் பெற்றோர்கள். 


அதன்படி மணவூர் அரசன் சோமசேகரனின் மகள் காந்திமதியை உக்கிர பாண்டியனுக்கு மணமுடிக்கின்றனர்.


தாங்கள் பூமிக்கு வந்த நோக்கம் முடிந்ததால் கைலாயம் செல்ல விரும்புகின்றனர் சுந்தரேசரும் மீனாட்சி தேவியும் .இதை மகனிடம் கூறி மகனுக்கு பட்டாபிஷேகம் செய்கின்றனர்


உக்கிரவர்ம பாண்டியனை அழைத்து வேல், வளை மற்றும் செண்டு இம்மூன்றும் அளித்து பிற்காலத்தில் மதுரையம்பதியை காக்க பயன்படுத்து என அறிவுறுத்தி தாய் மீனாட்சி தேவியும் சோமசுந்தரரும் கோவியிலினுள் சிலையாகின்றனர் ( மதுரை மீனாட்சியம்மன் கோவில் வரலாறு இதுவே )


உக்கிர பாண்டியன் நல்லாட்சி நடத்தி 96 யாகங்களை முடிக்கிறார். இதைக்கண்ட இந்திரன் உக்கிரபாண்டியனால் தன் பதவிக்கு ஆபத்து என எண்ணி வருணனை அழைத்து  " ஈசன் மீனாட்சி தேவியின் தாய் காஞ்சனமாலையின் விருப்பத்திற்கிணங்க மதுரைக்கு வரவழைக்கபட்ட ஏழுகடல்கள் அங்கு இருப்பதாகவும் அவற்றை பொங்கி எழச்செய்து மதுரையை இரவோடு இரவாக அழிக்க சொல்கிறான் "


உக்கிர பாண்டியனின் கனவில் வந்த ஈசன் அவருக்கு இதை தெரிவிக்கிறார் இதனால் பொங்கி வரும் கடல்களின் மீது உக்கிரபாண்டியன் தனது தந்தை அளித்த வேலை வீசுகிறார் இதனால் ஏழு கடல்களும் துளி நீரின்றி வற்றுகிறது

(இந்த இடம் இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலருகில் ஏழுகடல் தெரு என அழைக்கப்படுகிறது)


இதன்பிறகு சேர, சோழ பாண்டிய நாட்டிற்கு பஞ்சம் வந்தது இதனால் அகத்திய முனியின் ஆலோசனை படி மூவேந்தர்களும் சோமவார விரதத்தை பின்பற்றினர் .இதன் பலனாக இந்திரன் விமானத்தை அனுப்பி மூவரையும் இந்திரலோகம் வரவழைத்தான்


சேர, சோழருக்கு விரதத்தின் பலனாக மழை பெய்விப்பதாக தெரிவித்த இந்திரன் உக்கிர பாண்டியனுக்கு முத்துமாலை ஒன்றை பரிசளிக்க விரும்புகிறான். உண்மையில் உக்கிரவர்மனை அவமதிக்கவே அந்த மாலையை இந்திரன் அளிக்க எண்ணினான்


காரணம் அந்த முத்துமாலை தனியொருவரால் அசைக்கவோ,

எடுக்கவோமுடியாது .


இந்திரன் அதை எடுத்துவர கூறியவுடன் 10 பேர்க்கு மேல் அதை எடுத்து வருகின்றார்கள்.


ஆனால் அதை உக்கிரவர்ம பாண்டியன் இடது கையால் எடுத்து அழகாக அணிந்து கொள்கிறார்


சேர, சோழ நாட்டிற்கு மழை சரியாக பெய்கிறது ஆனால் இந்திரனின் செய்கையால் பாண்டிய தேசத்தில் மழை பெய்யவில்லை. ஆனால் உக்கிரப்பாண்டியன் சோமவார விரதத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கடைபிடித்தான்


இதற்கிடையில் உக்கிரபாண்டியன் வேட்டைக்கு செல்லும்போது இந்திரனின் ஏவல் ஏற்று மழை பெய்விக்கும் மேகத்தின் அதிபதிகளை காண்கிறார் .இதனால் அவர்களை சிறைபிடிக்கிறார்.


மேகாதிபதிகளை சிறைபிடித்ததால் இந்திரனே உக்கிர பாண்டியன் மீது போர்தொடுத்து வருகிறார் .

.

போர் மிகவும் உக்கிரமாக நடக்க இந்திரன் வேறு வழியில்லாமல் வஜ்ரத்தை பாண்டியன் மீது வீச உக்கிரவர்மன் ஈசன் அளித்த வளையை வீசுகிறார்


உக்கிரவர்மனின் வளை இந்திரனின் வஜ்ரத்தை தூளாக்கி இந்திரனின் கீரிடத்தை சாய்க்கிறது.


 பிறகு உக்கிரவர்மன் இந்திரனை மனித்துவிடுகிறார் உலக நன்மைக்காக மேகாதிபதிகளை விடுவிக்க பாண்டிய நாட்டில் மும்மாரி பெய்கிறது.


அடுத்த பிரச்சனை உக்கிரவர்மனுக்கு மேரு மலையின் மூலம் வருகிறது .மேரு மலையின் அகங்காரத்தால் மேகங்கள் தடுக்கப்பட்டு மீண்டும் வறட்சியை சந்திக்கிறது மதுரையம்பதியில் வறட்சியினால் அரசின் கஜானா தீர்கிறது.


இந்த வேளையில் ஈசன் உக்கிரவர்மனின் கனவில் தோன்றி மேரு மலையில் செல்வ குவியல் இருப்பதாகவும் அதை எடுத்துவந்தால் நல்லது எனக்கூற உக்கிரவர்மரும் அவ்வாறே செல்கிறார்


ஆனால் மேருமலை தனது கர்வத்தால் உக்கிரவர்மரை எதிர்த்து போரிட உக்கிரவர்மர் ஈசன் அளித்த செண்டை வீசுகிறார் .இதனால் மேருமலையின் கர்வம் அழிந்து செல்வத்தைஅளிக்கிறது .

மேருமலையால் தடுக்கபட்ட மேகங்கள் விடுவிக்கபட்டு நல்ல மழை பெய்து மதுரையம்பதியின் வறட்சி நீங்குகிறது.


இவ்வாறு பலகாலம் ஆண்ட உக்கிரவர்ம பாண்டியன் வீரத்திலும் ஞானத்திலும் தனக்கு நிகரான தனது மகன் வீரபாண்டியனிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து சொக்கநாதரின் திருவடி நிழலில் கலந்தார்


தாய் மீனாட்சிதேவி, எம்பெருமான் ஈசன், மற்றும் முருகப்பெருமானின் அவதாரமான உக்கிரவர்ம பாண்டியன் ஆட்சி செலுத்தி அவர்களின் வழிவந்தவர்கள் ஆண்ட புண்ணிய தேசமே தமிழகத்தின் பாண்டிய நாடாகும்.


மேற்கூறப்பட்டவை திருவிளையாடல் புராணத்தில் உள்ள தகவலின் சுருக்கம் மட்டுமே!

No comments:

Post a Comment