Saturday 24 December 2022

1008 விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் 144 ஆவது நாமம் , ஸ்ரீ போஜனாய நமஹ

 1008 விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் 144 ஆவது நாமம் , ஸ்ரீ போஜனாய நமஹ


*அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்*!


*விஷ்ணு ஸஹஸ்ரநாமக்கதைகள*!!


நல்ல ஆரோக்கியத்தையும், நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் தரவல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.


அந்த உடலுக்கு ஏற்பட்ட நோய்கள் மட்டுமின்றி ஆத்மாவைப் பீடித்துப் படுத்தும் நோயாகிய பிறவிப் பிணியையும் போக்க வல்ல மருந்து  விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.


அந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள 

1000 திருநாமங்களின் பொருளை எளிய கதைகள் மூலம் உணரலாம், வாருங்கள்.


144::.போஜனாய நமஹ (Bhojanaaya namaha)


“முருகா! முருகா!” என்று வேகமாக அழைத்தபடி கைலாயத்துக்குள் நுழைந்தார் விஸ்வாமித்ரர்.


“வாருங்கள் மாமுனியே!” என வரவேற்றார் முருகன். 


“எனக்கொரு சந்தேகம். அதை முதலில் நீ தீர்த்து வை!” என்றார் விஸ்வாமித்ரர்.


“என்ன சந்தேகம்?” என்று கேட்டார் முருகன். 


“என் கதையை முதலில் உனக்கு நினைவூட்டுகிறேன்!


அதன்பின் சந்தேகத்துக்கு வருகிறேன்!” என்று சொன்ன விஸ்வாமித்ரர், தனது பழைய வரலாற்றை நினைவு கூர்ந்தார்.


முன்னொரு சமயம், ஏதோ சில காரணங்களால் மழை பொழியவில்லை. 


அதனால் பூமியில் பெரும் வறட்சி ஏற்பட்டு,

ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத நிலை உண்டானது. 


அவ்வறட்சிக் காலத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக

உண்ண உணவின்றிக், குடிக்கத் தண்ணீரின்றி நான் தவித்தேன். 


என்னால் பசியையும் தாகத்தையும் அடக்க முடியவில்லை.


உண்பதற்கு ஏதாவது உணவு கிடைக்காதா என ஏங்கத் தொடங்கினேன்.


அப்போது ஒரு மாமிசக் கடையைக் கண்ட நான், அந்தக் கடைக்காரனிடம் மாமிசத்தை வாங்கிச் சாப்பிட்டாவது

பசியைப் போக்கிக் கொள்ளத் தீர்மானித்தேன். 


ஆனால் பகல் பொழுதில் ஊரார் பார்க்கும் வேளையில் மாமிசக் கடையில் போய் நிற்க

எனது மனம் இடம் கொடுக்கவில்லை. 


அதனால் அன்று மாலை போர்வையைப் போர்த்திக் கொண்டு அந்தக் கடைக்குச் சென்று நாய் மாமிசம் 

கொஞ்சம் தருமாறு கேட்டேன். 


ஆனால் கடைக்காரன் 

என்னை அடையாளம் கண்டுகொண்டான்.


“ஐயோ! முனிவரே! உங்களுக்கு மாமிசத்தைக் கொடுத்தால், எனக்குப் பாபம் ஏற்படும். 


நான் நரகத்துக்குச் செல்ல நேரிடும்!

நான் தர மாட்டேன்! என்னை மன்னித்து விடுங்கள்!” என்று கதறினான்.


அன்று இரவு அவன் கடையை மூடிவிட்டு உள்ளேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.


மீண்டும் கடைக்குள் நுழைந்து மாமிசத்தை எடுத்து உண்ணப் பார்த்தேன். 


ஆனால் கடைக்காரன் விழித்துக் கொண்டான்.


என்னைக் கண்டவுடன், “ஏ இந்திரனே! உனக்குக் கருணையே இல்லையா? 


நீ மழை பொழியாததால் பூமியில் விளைச்சல் இல்லை.

மக்கள் பசி பட்டினியால் வாடுகிறார்கள். 


மகா முனிவரான விஸ்வாமித்ரர் நாய் மாமிசத்தை உண்ணும் நிலைக்கு வந்துவிட்டார்!


உடனடியாக மழையைக் கொடு!” என்று இந்திரனை நோக்கி உரக்கச் சொன்னார்.


அடுத்த நொடியே மழை பொழியத் தொடங்கி விட்டது. 


ஊரிலுள்ள ஆறுகள் குளங்கள் குட்டைகள் ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.


அருகிலிருந்த நதிக்குச் சென்று நீரைப் பருகி என் தாகத்தைத் தீர்த்துக் கொண்டேன்.


இவ்வரலாற்றை முருகனிடம் சொன்ன விஸ்வாமித்ரர், “முருகா! நான் தமிழகத்துக்குச் சென்றிருந்தேன்.


திருநெல்வேலிக்கு அருகே உள்ள ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் என்றொரு யோகி வாழ்ந்ததாகவும்,

அவர் ஒரு சொட்டு தண்ணீர் அருந்தாமல், ஒரு வாய் உணவு உண்ணாமல் முப்பத்திரண்டு ஆண்டுகள் புளியமரப் பொந்தில் யோகத்தில் அமர்ந்திருந்ததாகவும் 

மக்கள் கூறினார்கள்.


என்னால் உணவின்றிப் பன்னிரண்டு வருடங்களைக் கழிக்க முடியவில்லை.


ஆனால் முருகா உனக்கு மிகவும் விருப்பமான பூமியாகிய தமிழகத்தில் நம்மாழ்வார் என்பவர் முப்பத்திரண்டு ஆண்டுகள் உணவு, தண்ணீர் இன்றி வாழ்ந்தாரே! அது எப்படி?” 

என்று கேட்டார்.


“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும்

எல்லாம் கண்ணன் எம்பெருமான்”


என்று நம்மாழ்வாரே பாடிய படி, கண்ண பிரானையே தனக்கு உண்ணும் உணவாகவும், தாகம் தீர்க்கும் தண்ணீராகவும்,

மெல்லும் வெற்றிலையாகவும் கொண்டிருந்தபடியால், அவருக்கு வேறு உணவோ, தண்ணீரோ, வெற்றிலையோ தேவைப்படவில்லை!


திருமால் தனது பக்தர்களுக்குத் தானே தாரக, போஷக, போக்யங்களாக இருப்பதால்

அந்த பக்தர்களுக்குத் தனியாக சோறு, தண்ணீர், வெற்றிலை என எதுவும் தேவைப்படுவதில்லை!” என்று விடையளித்தார் முருகன்.


இவ்வாறு தன் மெய்யடியார்களுக்குத் திருமாலே உணவாக இருப்பதால், ‘போஜனம்’ என்றழைக்கப்படுகிறார்.


அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 

144-வது திருநாமம்.


“போஜனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால்

தனது அழகையும் குணங்களையும் உணவாகத் தந்து அவர்களை மகிழ்விப்பார்.

No comments:

Post a Comment