Saturday 24 December 2022

ஸ்ரீ வேத வியாஸரின் பிறப்பு...

 ஸ்ரீதேவி பாகவதம் - 4


ஸ்ரீ வேத வியாஸரின் பிறப்பு... 


                            (நல்ல சந்ததி உண்டாக்கும்) 


தன்னுடைய ஒரே புதல்வன் இல்வாழ்க்கையைத் துறந்து தவஞ்செய்யச் சென்று விட்டதை அறிந்த வேதவியாசர் மனம் வருந்தினார். அவரால் அவ்வருத்தத்தைப் போக்கிக்கொள்ள முடியாது போகவே, பெற்ற தாயை தரிசித்தால் மைந்தனது துக்கம் தீரும் என்பதால் வேதவியாசரும் தனது தாயைக் காண அவரது இருப்பிடத்தை நோக்கிச் சென்றார். 


இவ்விதமாக சூத முனிவர் கதை சொல்லிக்கொண்டிருந்த போது, அதனைக் கேட்டுக் கொண்டிருந்த நைமிசாரணிய முனிவர்கள் சூத முனிவரை நோக்கி, "முனிவர் புங்கவரே! அன்பு கூர்ந்து வேதவியாசரின் பிறப்பு வரலாற்றைக் கூறியருள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். அவர்களது வேண்டுகோளுக்கிணங்க சூத முனிவர் வேதங்களை வகைப்படுத்தியவரும், பதினெட்டு புராணங்களை இயற்றியவரும், பிரம்மசூத்திரம் செய்த பகவான் வியாஸ முனிவரின் ஜனன வைபவத்தைச் சொல்ல முற்பட்டார். 


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சேதி நாட்டை உபரிசரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் தன் தவ வலிமையால் வானத்தில் பறக்கும் விமானம் ஒன்றைப் பெற்றிருந்தான். கிரிஜா என்ற பெண்மணியை மணந்த அவனுக்கு நான்கு புதல்வர்களும் ஒரு புதல்வியும் பிறந்தனர். 


ஒருநாள் காட்டு விலங்குகளால் தங்கள் பயிர்களுக்கு அடிக்கடி சேதம் விளைவதாக பொதுமக்கள் உபரிசரனிடம் முறையிடவே, அவ்விலங்குகளை வேட்டையாடி அழிப்பதற்காக அவன் காட்டுக்குச் சென்றான். காட்டில் பல விலங்குகளை வேட்டையாடி அழித்த உபரிசரன் நெடுந்தூரம் சென்று விட்டான். அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது, தன் மனைவி வீட்டு விலக்காகி நீராடும் நாள் அது என்று. தன் மனைவியுடன் முறைப்படி கூட வேண்டிய நாளில் கூடாது போனால் தனக்கு நரக தண்டனை கிடைக்குமே என்று அஞ்சியவன், உடனே தனது வீரியத்தை ஒரு தொன்னையில் வைத்து, அங்கு வந்த ஒரு மிகப்பெரிய கழுகிடம் அபிமந்திரித்துக் கொடுத்து, அதைச் சிதறாமல் தன் மனைவியிடம் சேர்ப்பிக்குமாறு கூறினான். கழுகும் அவன் கூறியபடியே கவனமாக அதை எடுத்துக் கொண்டு வானில் பறந்து சென்றது. 


இவ்வாறு கழுகு பறந்து கொண்டிருந்த போது, அங்கு மற்றொரு கழுகு வந்து, தொன்னையில் இருப்பது மாமிசத் துண்டு என நினைத்து அதனை அபகரிக்க அக்கழுகுடன் போரிட்டது. போரில் தொன்னையில் இருந்த வீரியம் கழுகிடமிருந்து நழுவி யமுனை நதியில் விழுந்தது. அவ்வளவில் அங்கிருந்த மீன் ஒன்று அதை விழுங்கி விட்டது. இங்ஙனம் விழுங்கிய மீனானது அத்திரிகை என்ற சாபமடைந்த தேவமகளே! 


ஒருமுறை அத்திரிகை ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு சந்தியாவந்தனம் செய்ய வந்த ஒரு பிராமணனின் காலை விளையாட்டாக இழுத்தாள். இதனால் கோபமடைந்த பிராமணன் அவளை மீனாகப் போகும்படி சாபமிட்டான். அவளே தற்போது உபரிசரனின் வீரியத்தை விழுங்கினாள். வீரியத்தை விழுங்கிய மீன் கருவுற்றது. அந்நிலையில் ஒரு மீனவனது வலையில் அது சிக்கியது. பெருத்த வயிற்றுடன் இருந்த அந்த மீனைக் கண்டு அதிசயித்த மீனவன் அதன் வயிற்றை இரண்டாகப் பிளந்தான். அப்போது அதன் வயிற்றில் ஓர் மானுட ஆண் குழந்தையும், ஒரு மானுட பெண் குழந்தையும் இருப்பதைக் கண்டு மேலும் அதிசயித்து அக்குழந்தைகளை எடுத்துக்கொண்டு அந்நாட்டு மன்னனாகிய உபரிசரனிடம் சென்று சேர்த்தான்.


உபரிசரன் ஆண் குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு, பெண் குழந்தையை மீனவனிடமே கெடுத்து விட்டான். செம்படவன் அக்குழந்தையை வளர்த்து வந்தான். அப்பெண் நாளடைவில் வளர்த்து அம்மீனவனின் தொழிலைக் கற்றுக் கொண்டு மீன் பிடித்து விற்பனை செய்பவளாகவும், படகோட்டியாகவும் வாழலானாள். 


அப்போது ஒருநாள் பராசர முனிவர் யமுனை ஆற்றங்கரையை அடைந்து அக்கரைக்குச் செல்ல மீனவனின் உதவியை நாடினார். மீனவனுக்கு உணவருந்த நேரமானதால் தன் மகளை அழைத்து முனிவரை அக்கரையில் விடும்படிக் கூறினான். அவளும் அப்படியே தந்தை கூறியபடி முனிவரை படகில் ஏற்றிக்கொண்டு அக்கரைக்குச் செல்லலானாள். அவளைக் கண்ட முனிவருக்கு அவளோடு கூட ஆசை பிறந்தது. அதை அவளிடம் கூறவே, அவளோ பல நியாயங்களை எடுத்துக் கூறித் தடுத்தாள். "பெண்ணே! முனிவர்களுக்கு இச்சை என்பது தோன்றுவது அரிதான விஷயமாகும். தற்போது அமைந்திருக்கும் நேரம் நல்ல நேரமாகும். இந்நேரத்தில் கூடினால் பிறக்கப் போகும் குழந்தை மிகவும் புகழ் பெற்றவனாக விளங்குவான். நீ பயப்படாதே! நான் உனது நிலையை மாற்றுகிறேன். உன்னைத் தீண்டி இன்பம் பெறும் வண்ணம் உனது உடலிலிருக்கும் நாற்றத்தைப் போக்குகிறேன். இங்கேயே உனக்காக ஒரு தீவை உருவாக்குகிறேன். இரவையும் உண்டாக்குகிறேன். உனக்குக் குழந்தை பிறந்ததும் மீண்டும் நீ கன்னியாக மாறும் ஆற்றலை உனக்குத் தருகிறேன். என்னைப் பற்றி அனைவரும் அறிவர். நீயும் அறிவாய். என்னைத் தடை செய்யாதே!" என்று கூறவே, அவளும் அவருடைய சொல்லுக்கு இசைந்தாள். 


உடனே அம்மீனவப் பெண்ணின் மீதிருந்த துர்நாற்றத்தை மாற்றிய பராசரர், அவளைத் தனக்கேற்றவாறு மாற்றினார். அவளுக்குப் பரிமளகாந்தி என்ற பெயர் வைத்தார். பின்பு தன் ் தவ வலிமையால் நடு ஆற்றில் ஓர் அழகிய தீவை உண்டாக்கி, இரவுப் பொழுதையும் உண்டாக்கினார். பின் அப்பெண்ணுடன் கூடி இன்புற்று அவளிடமிருந்து விடை பெற்றுச் சென்றார். 


சிறிது நேரத்திலேயே பரிமளகாந்தி தேவர்களும் அதிசயிக்கத்தக்க வகையில், கோடி சூரிய பிரகாச ஒளியைப் போன்ற ஒளிவீசும் ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவ்வாறு பிறந்த அக்குழந்தை "அம்மா! நீ எப்போது என்னை நினைக்கிறாயோ அப்போது உன்னிடம் நான் வருவேன்!" என்று கூறிவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றுச் சென்றது. அவள் மீண்டும் கன்னிப் பெண்ணாக மாறினாள். இவ்வாறு பராசர முனிவருக்கு பரிமள காந்திக்கும் பிறந்த புதல்வரே வேத வியாஸர் ஆவார். 


வியாஸரின் அதிசயிக்கத்தக்க பிறப்பினைக் கேட்ட முனிவர்கள் ஆனந்தமடைந்தனர். இக்கதையை நவராத்திரி தினத்தில் கேட்டு அம்பிகையை வழிபடுபவர்க்கு நற்சந்தான விருத்தி ஏற்படும்.

No comments:

Post a Comment