Sunday 11 December 2022

முத்துமாரியம்மன் கோவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

 #திருமண_பாக்கியத்தை_அளிக்கும்_முத்துமாரியம்மன்_கோவில்


திருமண பாக்கியத்தை அளிக்கும் முத்துமாரியம்மன் கோவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் எனும் ஊரில் அமைந்துள்ளது.


#தலவரலாறு


ஒரு முறை இப்பகுதியில் வசித்து வந்த ஒரு வணிகர், வியாபாரத்திற்காக அடிக்கடி மதுரைக்கு சென்று வருவார். மீனாட்சியின் பக்தரான அவருக்கு குழந்தைகள் கிடையாது. இவர் மீனாட்சியிடம் தனது கவலையை கூறி புலம்பினார். 


மீனாட்சியும் குறைகளை தீர்க்க எண்ணினாள். ஒருசமயம் இவர் மதுரை சென்றுவிட்டு ஊருக்கு வரும்போது வழியில் ஒரு சிறுமி தனியே நின்று அழுது கொண்டிருந்தாள்.இதைக்கண்ட வணிகர் தனது கவலையை போக்கவே இக்குழந்தை கிடைந்துள்ளதாக நினைத்து மகிழ்ந்தார். 


குழந்தையை தன்னுடன் அழைத்து வந்தார். இங்குள்ள குளத்தின் கரையில் குழந்தையை அமர வைத்துவிட்டு நீராடினார். பின் குழந்தையைக் காணவில்லை. இதனால் வருத்தம் கொண்ட வணிகர் நடந்ததை மனைவியிடம் கூறினார்.


இருவரும் தங்களுக்கு கிடைத்த குழந்தையும் சென்றதை எண்ணி உறங்கச் சென்றனர். அன்றிரவில் வணிகரின் கனவில் தோன்றிய அம்பிகை, தானே குழந்தையாக வந்ததை உணர்த்தினாள். மேலும், கற்றாழைக் காட்டில் ஓரிடத்தைச் காட்டி அங்கு தனது பாதச்சுவடு இருப்பதாகச் சொன்னாள். 


அதன்படி அங்கு சென்ற வணிகர், சுவடு இருந்த இடத்தில் மண்ணை பிடித்து வைத்து, கோவில் எழுப்பினார். பிற்காலத்தில் இவளுக்கு சிலை வடித்து கோவில் பெரியளவில் கட்டப்பட்டது. பின் இந்த அம்மனுகு முத்து மாரியம்மன் என்ற பெயர் சூட்டப்பெற்றது.


#தலபெருமை


முத்து மாரியம்மன் நான்கு கரங்களில், உடுக்கை, கத்தி, சூலம், அக்னி ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தலையில் அக்னி கிரீடம் உள்ளது. சிறுமியாக வந்ததால் இவளை கன்னித்தெய்வமாகவே பாவித்து வழிபடுகிறார்கள். 


எனவே, திருமண பாக்கியத்திற்காக தாலி அணிவிக்காமல், தாலிப்பொட்டு செய்து, அதை பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர். பங்குனி மாதம் 15ம் தேதி காப்பு கட்டி விழா துவங்குகின்றனர். இதற்கு முந்தைய ஒரு நல்ல நாளில் கோவில் வளாகத்தில் கைப்பிடியளவிற்கு மண் எடுத்து வைத்து, அதையே அம்பாளாகப் பாவித்து தீபராதனையுடன் பூஜை செய்கின்றனர். இங்கு முதலில் பிடிமண் வைத்து வழிபாடு துவங்கியதன் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.


#பிரார்த்தனை


திருமண பாக்கியம் கிடைக்கவும், குழந்தை வரம் கிடைக்கவும் இந்த அம்மனை வேண்டிக்கொண்டு அங்குள்ள வில்வ மரத்தில் தாலியும், தொட்டிலும் கட்டி வழிபடுகின்றனர். கண் நோய்கள் தீர இங்கு அம்மனை கண் மலர் செய்து வைத்து பிரார்த்திக்கின்றனர். 


அம்மன் சன்னதியில் கொடுக்கும் அபிஷேக நீரை சாப்பிட்டால் அம்மை நோய் தீரும். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் பால் குடம் எடுத்தும், அங்கபிரதட்சணம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Thayamangalam Sree Muthumariamman Temple https://maps.app.goo.gl/DuzFvZMfd6f4pGK98

No comments:

Post a Comment