Saturday 24 December 2022

பாண்டவர்கள் புத்தி சாதுர்யம்

 தெரிந்த மகாபாரதம்!

தெரியாத கதை!!


*எட்டு குடம் பனி நீர்*!


முன்னொரு காலத்தில் திருதராஷ்டிரர் மன்னர் அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தார். 


அவருக்கு பாண்டு என்ற தம்பி இருந்தார். 


திருதராஷ்டிரருக்கு நூறு புதல்வர்கள் இருந்தனர். 


அவர் தம்பி பாண்டுவிற்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர்.


கவுரவர்களும், பாண்டவர்களும், துரோணர் என்ற குருவிடம் கல்வி கற்று வந்தனர். 


பாண்டவர்கள் அறிவில் சிறந்தவர்களாக விளங்கினர். 


குருவிடம் எல்லாவித வித்தைகளையும் கற்று சிறந்த மாணவர்களாகத் திகழ்ந்தனர். 


இதனால் பாண்டவர்கள் மீது கவுரவர்கள் பொறாமை கொண்டனர்.


திருதராஷ்டிரரின் மூத்த மகன் துரியோதனன், "குரு துரோணாசாரியார் எங்களுக்கு சரியாக எதையும் கற்றுத் தருவதில்லை; ஆனால், பாண்டவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்கிறார்,'' என்று குருவின் மீது மன்னன் திருதிராஷ்டிரரிடம் புகார் கூறினான். 


இதனால் மன்னன் திருதிராஷ்டிரர், குரு துரோணரை அழைத்து விசாரித்தார்.


"மன்னவா! நான் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் கல்வி கற்பிக்கிறேன். 


பாண்டவர்கள் நுட்ப அறிவு உள்ளவர்களாக இருப்பதால், எதையும் விரைவில் கிரகித்துக் கொள்கின்றனர்.


ஆனால் கவுரவர்கள், சிறந்த நுண்ணறிவு படைத்தவர்களாக இல்லை. 


இதனால் அவர்கள் கற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்படுகிறது,'' என்றார்.


குரு துரோணரின் பதிலைக் கேட்டு கொண்டிருந்த கவுரவர்களுடைய 

மாமனான சகுனி, 

"மன்னா! கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்குமிடையே நாம் ஒரு போட்டி வைத்து, யார் புத்திசாலிகள் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்,'' 

என்று யோசனை கூறினான்.


"தமது புதல்வர்கள் சரியாகக் கற்றுக் கொள்வதில்லை என்று குருவே சொல்லியபின், 

போட்டி வைத்தால் அதில் பாண்டவர்கள்தான் வெற்றி பெறுவர்,'' என்று சகுனிக்கு பதிலளித்தார் மன்னர்.


"மன்னா! நான் போதித்த பாடங்களில் போட்டி வைக்காது, பொது அறிவில் போட்டி வைத்து யார் புத்திசாலிகள் என்பதை முடிவு செய்யலாம்,'' என்று துரோணர் கூறினார். 


அனைவரும் குரு துரோணரின் யோசனையை ஏற்றனர்.


முடிவில் கவுரவருக்கும் பாண்டவருக்குமிடையே அறிவுத் தேர்வு நடத்துவ தென்று தீர்மானிக்கப்பட்டது. 


இருபாலருக்கும் ஒரே அளவு பணத்தைக் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு அறை நிறைய பொருட்களை நிரப்பிவைக்க வேண்டுமென்று துரோணர் கூறினார்.


துரியோதனன் அறை முழுக்க வைக்கோலை வாங்கி அடைத்து வைத்திருந்தான். 


பீஷ்மர், விதுரர், கிருபர் போன்றோர் வந்து அறையைத் திறந்ததும் தும்மல்தான் வந்தது.


பஞ்ச பாண்டவர்களின் அறையைத் திறந்ததும் அறை முழுவதும் கோலங்கள். அதில் நேர்த்தியாக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. 


மலர்த் தோரணங்கள், பழங்கள், பால், சந்தனம் எல்லாம் தயாராக இருந்தன. 


அகில் வாசனை மனதை நிறைத்தது.


பாண்டவர்களின் மதி நுட்பத்தை எண்ணி அனை வரும் வியந்தனர். 


தாங்கள் தோற்றதை எண்ணிக் கோபமுற்ற துரியோதனன், ஒரே தேர்வில் யார் புத்திசாலிகள் என்பதை முடிவு செயலாகாது" என வாதிட்டான்.


துரோணரும் அதற்கிசைந்து நூற்றைந்து பேரையும் அழைத்து, இன்று முதல் பத்து நாட்களுக்குள் கௌரவர்கள் எட்டு குடங்களிலும், பாண்டவர்கள் எட்டு குடங்களிலும் பனி நீரை நிரப்ப வேண்டும். 


பத்தாம் நாள் காலை சூரியன் தோன்றுவதற்கு முன் நாங்கள் வந்து பார்ப்போம்" என்றார்.


‘சரி’ என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.


கவுரவர்களுக்கு இதை எப்படிச் செய்வது என்று விளங்காது போகவே, மாமன் சகுனியின் உதவியை நாடினர். 


இதற்கிடையில், ஒன்பது நாட்கள் கடந்துவிட்டன. 


பத்தாம் நாள் காலை சூரிய உதயத்திற்குள் எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்ப வேண்டும். 


அப்படி செய்யாவிட்டால், தோற்று அவமானப்பட வேண்டும் என்பதை எண்ணி அஞ்சினர் கவுரவர்கள்.


நடு நிசியில் பனி பெய்து கொண்டிருந்த போது, கவுரவர்கள் அனைவரும் தங்கள் மாமன் சகுனியின் அரண்மனைத் தோட்டத்திற்குள் சென்றனர். 


செடியின் இலைகளில் தேங்கிக் கிடந்த பனிநீரைத் தனித்தனியாக எடுத்து குடத்தில் விட்டனர். 


இப்படியே காலை சூரிய உதயம் வரை செய்தனர். 


அவர்கள் சேகரித்த பனிநீர் ஒரு குடம் மட்டுமே இருந்தது. 


மற்ற குடங்களில் எப்படி நிரப்புவது? சகுனியின் யோசனையின்படி மற்ற குடங்களில் நீரை நிரப்பி குடங்களைப் போட்டி நடக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.


பாண்டவர்களும், எட்டுக் குடங்களுடன் போட்டி நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தனர். 


போட்டியைக் காண பலர் கூடி விட்டனர். 


இரு சாரரும் பனி நீர் நிரம்பிய தங்களுடைய எட்டுக்குடங்களையும் குருவின் முன்வைத்தனர்.


மன்னர் திருதராஷ்டிரர் தன் மக்கள் எட்டுக் குடங்களில் பனிநீரை நிரப்பிவிட்டனர் என்ற மகிழ்ச்சியில்... ""துரோணரே! என் புதல்வர்கள் அறிவு படைத்தவர்கள் இல்லையா?'' என்று கேட்டார்.


"மன்னவா! சோதனை இன்னும் முடியவில்லை. சற்று நேரத்தில் சூரிய பகவான் வந்து தீர்ப்பு கூறுவார்,'' என்று குரு பதிலளித்தார்.


சூரிய பகவான் வருவதா? தீர்ப்பு கூறுவதா? அது என்ன என்று புரியாமல் அனைவரும் விழித்தனர்.


துரோணர், பாண்டவர்களிடம் தங்களுடைய எட்டுக் குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு தெரிவித்தார். 


அப்படியே அவர்களும் செய்தனர். சூரியஒளி பட்டதும், எட்டுக் குடங்களிலிருந்த நீர் மெல்ல ஆவியாக மறைந்து விட்டது. 


பின்னர் கவுரவர்களை தங்களுடைய எட்டுக்குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு கூறினார். 


எட்டுக்குடங்களும் சூரிய வெயிலில் வைக்கப்பட்டன. 

ஒரு குடத்திலிருந்த நீர் மட்டும் ஆவியாக மாறி மறைந்தது. 


மற்ற ஏழு குடங்களிலிருந்த நீர் அப் படியே இருந்ததே தவிர ஆவியாக மாறவில்லை.


"மன்னவா! தங்கள் மைந்தர்கள் ஒரு குடத்தில் மட்டும் பனிநீரையும், மற்ற குடங்களில் தண்ணீரையும் நிரப்பி விட்டனர். 


போட்டியில் யார் வெற்றி பெற்றனர் என்பதை நீங்களே தெரிவிக்கலாம்,'' என்று கூறியதும், மன்னர் பதில் கூறாது தலை குனிந்தார்.


பாண்டவர்கள் எப்படி எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பினர் என்று தருமனிடம், துரோணர் கேட்டார். 


"போட்டி முடிவுறும் பத்தாம் நாள், முன் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்னர் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளின் மீதெல்லாம் துணிகளை விரித்து வைத்தோம். இரவு முழுதும் பெய்த பனி அத்துணிகளின் மீது விழுந்து நனைந்திருந்தன. 


காலையில் அத்துணிகளை எடுத்து குடத்தில் பிழிந்து எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பி விட்டோம்,'' என்று தருமன் பதிலளித்தான்.


பாண்டவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள் என்று மக்கள் போற்றினர். 


கவுரவர்கள் அவமானத்தில் தலை குனிந்தவாறு வெளியேறினர்.

No comments:

Post a Comment