Monday 10 August 2020

தர்மம் வெல்லும்

*தர்மமே நமக்கு எப்போதும் துணையாக நிற்கும்..!*

தர்மத்தை கடைப்பிடிப்பதால் என்ன பலன்?

சுகமான வாழ்வு கிடைக்குமா?

நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் உண்டு,

இது ஒரு வகை எதிர்பார்ப்பின் வெளிப்பாடே, எந்த ஒரு செயலையும் நாம் எதையேனும் எதிர்பார்த்தே செய்கிறோம்,

ஒரு செயல் செய்வதால் நமக்கு ஏதேனும் அதிலிருந்து நன்மை கிடைக்க வேண்டும், அப்படியென்றால் தான் நம் மனம் ஆர்வமுடன் அச்செயலை செய்ய இணங்குகிறது,

துளி கூட லாபமில்லையெனில், துரும்பை கூட தூக்க நம்மில் பலருக்கு விருப்பமில்லை,

இதுவே இன்றைய உலக நிதர்சனம்...

ஆனால், இது ஒரு தவறான எண்ணமாகும்,

எச்செயலையும், பலனை எதிர்பாராது செய்ய வேண்டும் அப்பொழுதுதான் அதன் விளைவுகள் (இன்பம்/துன்பம்) நம்மை பாதிக்காது...

இதையே கண்ணன் அழகாக கூறினான்,

"பலன் மேல் பற்றுதல் நீக்கி பணியாற்றுக" அதாவது, "கடமையை செய், பலனை எதிர்பாராதே"...

துன்பத்தை தவிர்க்கும் ஒரு எளிய வழி, "No Expectation"...

சரி இப்போது தர்மம் பற்றிய முதல் வரிக்கு வருவோம், எதனால் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்? அதனால் என்ன பயன்?

இக்கேள்விக்கு நான் பதிலளிப்பதை விட, "தர்மமே" முக்கியம் என்று வாழ்ந்து காட்டிய, அதன் காரணமாக "தருமர்" என்று போற்றப்பட்ட "யுதிஷ்டிரரின்" பதிலை காண்போம்,

சூதாட்டத்தின் சூழ்ச்சியால், சதிகாரர்களின் பிடியில் சிக்கி சிறுமைப்பட்டு 13 ஆண்டு கால வன வாசம் புறப்பட்டனர் பாண்டவர்கள்,

அனைவர் மனமும் குமுறிக் கொண்டிருந்தது,

பொறுக்க மாட்டாமல் சீறும் எரிமலையென வெடித்து விட்டான் பீமன், "அண்ணா!

நியதிப்படி அஸ்தினாபுர சம்ராஜ்ஜியம் முழுவதும் தமக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் வழங்கப்படவில்லை, பாழ் நிலமான, காடுகள் நிறைந்த பாதி ராஜ்ஜியமே வழங்கப்பட்டது...

சரி தொலைகிறது என்று அதை அரும்பாடுபட்டு, செப்பனிட்டு ஆண்டவனருளால் சுவர்க்க புரி ஆக்கி, திசையெட்டும் வென்று, "ராஜசூய யாகம் " செய்து, அரும்பாடுபட்டு உருவாக்கிய ராஜ்ஜியத்தை வஞ்சனையாக "சூது" என்னும் சூழ்ச்சி செய்து பறித்ததோடு, பலர் முன்னிலையில் பாவையின் துகிலுறித்தவரை பழி தீர்க்க வேண்டாமா? ஆணையிடுங்கள், இன்றோடு 13 நாட்கள் முடிகிறது, சாஸ்திரப்படி சில விஷேச காலங்களில் நாட்களை, ஆண்டுகளாக கொள்ளலாம், அவ்வகையில் நமது 13 ஆண்டு வன வாசம் முடிவுற்றது, அஸ்தினாபுரத்தினை தாக்குவோம், சபதத்தை நிறைவேற்றுவோம் வாருங்கள்..."

யுதிஷ்டிரன், "பீமா, சாஸ்திரத்தை நமது இஷ்டத்திற்காக வலைப்பது முறையன்று, அவ்வாறு செய்வது அதர்மமாகும்! "

இதைச் சொல்லி பீமனை சமதானம் செய்தார், ஆனால் அதுவரை அமைதியாக இருந்த மாதா "திரௌபதி" பொங்கி எழுந்தாள்,

 "தர்மம், தர்மம் எனக் கூறி தாம் அடைந்ததென்ன? தர்மத்தை கடை பிடித்து வாழ்ந்தமையால் என்ன பிராப்த்தம் பெற்றீர், எந்த சுகத்தை அடைந்தீர்? புகழிழந்து, புவியிழந்து, போக்கிடமின்றி, புகழிடம் தேடி அழைகின்றோம், தர்மத்தை கடைப்பிடிப்பதனால் உண்டாகும் பலன் இதுதானா? " இதுவரைக்கும் தன் வாழ்வில் நடந்த / பெற்ற காயங்களினால் ஏற்பட்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் திரௌபதி...

நியாயமான கேள்விகள்!!!

இதற்கு தர்ம ராஜனான யுதிஷ்டிரன் சொன்ன பதில், அக்காலம் தொட்டு எக்காலத்திற்க்கும் ஏற்புடையது...

யுதிஷ்டிரன், "அருமை பாஞ்சாலி, தர்மத்தை கடைபிடித்தால், ராஜ்ஜியம் கிட்டும், சுகபோக வாழ்க்கை கிட்டும், ஆடம்பரம் அனைத்தும் பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழலாம், என்றெல்லாம் எண்ணி நான் தர்மத்தை கடைபிடிக்கச் சொல்லவில்லை,

எந்த பலனையோ, பயனையோ எதிர்பார்த்து நான் தர்மத்தை கடைப்பிடிக்கவில்லை, நீ கூறிய அரச வாழ்வு, ஆனந்தம் தரும் ஆடம்பரம் போன்றவை கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்,

ஆனாலும் நான் தர்மத்தை கடை பிடிப்பேன் காரணம், அது "தர்மம்"... தர்மம் என்றால் "தவிர்க்க கூடாதது " என்றும் ஒரு பொருளுண்டு,

ஆகவே தர்மத்தை என்னால் எச்சூழ்நிலையிலும் கைவிட இயலாது..."

(அப்படின்னா? தர்மத்தை கடை பிடிக்குறவங்களுக்கு எதுவுமே கிடைக்காதா? என்று அதிர்ச்சியடையாதீர்கள் முழுதாக படியுங்கள்)

திரௌபதி, "மன்னியுங்கள், மடமையால் தம் மனதை
புண்படுத்திவிட்டேன், மனதில் தோன்றிய அச்சத்தால் வினவுகிறேன், எனில் தர்மத்தை கடைபிடிப்பதால் எப்பயனும் இல்லையா? "

யுதிஷ்டிரன், "தர்மம் அங்கீகாரத்தை தரவல்லது,
வலிமையை, வெற்றி பெறுவதற்கான ஆற்றலை தர வல்லது,
 நிலையான, உண்மையான மகிழ்ச்சியை தர்ம மார்க்கம் மட்டுமே தரவல்லது...

ஒருவன் இறந்த பின்னும் அவனுக்கு வழிதுணையாவது அவன் வாழ்வில் கடைபிடித்த தர்மமே ஆகும்...

வாழும் போது வெற்றிக்கு துணையாகவும், வாழ்விற்க்கு பின் முக்திக்கு துணையாகவும் நிற்பது தர்மமேயாகும்...

அனைத்திற்க்கும் மேலாக, அருளே வடிவான ஆண்டவன் முன் எவ்வித குற்ற உணர்வும், அச்சமுமின்றி,
நின்று, உரிமையோடு எதையும் வேண்டிட தர்மம் என்னும் ஆதாரம் அவசியமாகும்...

தர்மத்தை கடைபிடிக்கும் ஒருவனுக்கே இவையாவும் கிடைக்கும்,

ஆனால் இவை கிடைக்கும் என்றெண்ணி / எதிர்பார்த்து ஒருவன் தர்மத்தை கடைபிடித்திடலாகாது...

ஏனெனில் எதிர்பார்ப்பிற்க்குள் சுயநலம் என்னும் தீய குணம் மறைந்துள்ளது,

எனவே, தர்மத்தை எவ்வித பிரதி பலனும் எதிர்பாராது, கடமையாக கருதி கடைபிடித்திடுவோர் மேற்கொண்ட பலனை பெறுவர்..."

விளக்கி முடித்தார் யுதிஷ்டிரர்,

புரிந்து கொண்டனர், திரௌபதி சமேத பாண்டவ சகோதரர்கள்...

நாமும் இந்த அற்புதமான தர்மத்தின் பாதையை புரிந்து கொண்டு தர்மத்தை கடைப்பிடிப்போம்..

No comments:

Post a Comment