Saturday 15 August 2020

என் மனதில் குருநாதர் அகத்திய பெருமான் குறிப்பாக உணர்த்தியதை உங்களுடன் சூட்சுமத்தில் பகிர்ந்து கொள்கிறேன்


போன வாரம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருக்கும் போது உபன்யாசம் செய்யும் ஒருவர் ஒரு சித்தர் பாடலை பாடி அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியை எடுத்து கூறி விளக்கி கொண்டு இருந்தார். கல் எங்கேயாவது பேசுமா - சித்தர் பாடல் சொல்கிறது - நட்ட கல்லை சுற்றி வந்து மொன மொன வென சொல்லும் மந்திரம் ஏதடா - நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்று கூறி, ஒரு இடத்தில் நட்ட கல் பேசி காரியம் செய்த ஒரு சரித்திர நிகழ்வை குறிப்பிட்டு கூறினார்.

ஆனால் அந்த சித்தர் பாடலின் வெளி அர்த்தத்தை மட்டும் தான் அவர் கூறினாரே ஒழிய அதன் உள் அர்த்தத்தை அறிந்து கொண்டதாக தெரியவில்லை.

ஒரு முறை சென்னையில் உள்ள என் குருஜி ஒருவர் அதற்கு விளக்கம் கொடுத்து இருந்தார். எனது சிந்தனை மடல்கள் மீண்டும் அந்த சென்னை குருஜி சொன்ன விஷயத்தை அசை போட..... இவை எல்லாம் ஒரு 10 நொடிக்குள் மனதில் எண்ணங்களாக தோன்றி மறைந்தன.

அங்கே என் உள் வாழும் என் குருநாதர் உடனடியாக ஒரு பதில் உரைத்தார்/ பொதுவாக ஒரு ஆராய்ச்சி சிந்தனையில் ஈடுபடும் போது வெகு நேரம் சிந்திக்க வேண்டும் பரிசோதனை செய்ய வேண்டும், கட்டுரை வடிவமைக்க வேண்டும் - ஆனால் இங்கே எந்த சிந்தனையும் இல்லாமல் வருவது தான் பிரவாகம் எனப்படும் - நமது அறிவுக்கு வெளியே இருந்து எண்ணங்களும் கருத்துகளும் வரும் பொது தான் வியப்பாக இருக்கிறது.

குருநாதர் கூறுகிறார்

மகனே நாதன் உள் இருக்கையில் என்றால் நீ நினைக்கும் பொருள் அல்ல மகனே. நீ நினைக்கும் பொருளானது நாதன் ஆகிய இறைவன் நம் உள்ளே உறைந்து உள்ளான் நட்ட கல் அங்கே எப்படி பேசும், இறைவன் உள்ளே அகத்தில் உறைந்து உள்ளான் புறத்தில் செல்லாமல் இறைவனை அகத்தில் தேடு என்று தானே நீ நினைத்தாய் - அதுவும் உண்மையே, ஆனால் இன்னும் உயர்ந்த ஆழ் நிலை செல்ல வேண்டும் மகனே, வா நான் உன்னை அழைத்து செல்கிறேன் ,

நாதம் என்றால் என்னவென்று உனக்கு தெரியும் உன் உள்ளே நாதம் ஒலிக்கும் நாதத்தின் சக்தி என்னவென்பதும் உனக்கு தெரியும் நாதம் தான் பிரணவம் என்பது உனக்கு தெரியும். நாதம் தான் உயிர் என்பதுவும் உனக்கு தெரியும்.

மொத்த பிரபஞ்சமே ஒரு ஒலி வடிவிலான சப்த த்வனி என்று அறிஞர்கள் ஞானிகள் கூற நீ கேட்டு இருக்கின்றாய். மனைவிகள் தன கணவன்மார்களை இறைவனாக நினைத்து எவ்விதம் அழைப்பார்கள் - நாதா என்றும் பிராண நாதா என்றும் அழைப்பார்கள். ஆக உன் உள்ளே இருக்கும் பிராணனே இறைவன். 

பிராணன் என்பது தனிப்பொருள், பிரணவம் என்பது பொதுப்பொருள், பிரணவத்தின் இருந்து பிரிந்து வந்தது தான் பிராணன்.

பிராணன் என்று குறிப்பிடும் போதே பிராண சக்தி என்று தான் குறிப்பிடுவார்கள். பிராணன் தான் உயிர் சக்தி என்பது உண்மை. மக்கள் பேசும் பொது என் பிராணனை வாங்காதே என்று உண்மையான வாக்கியமாக கூறும் சொல் வழக்கு இருந்து வருகிறது.

பல வகையான ப்ராணன்கள் உள்ளன மனித உடலில் உனக்கு தெரியும். அவை அனைத்தையும் இயக்குவது உயிர் நாதம். நாதன்  ஆகிய பிராண நாதன் உள்ளே இருக்கிறது. அதை உணர்ந்து கொள்ள முயற்சி செய்வது தான் யோகம் மற்றும்  த்யான முறைகள். அதற்கு மனதை தயார்படுத்தவே ஆலய வழிபாடு.

நேற்று உரைத்தது போல சதா இறைவன் நினைவுடன் இருந்தால் இறை சக்தி அவன் உள்ளே ஏறும். ஆக சித்தர் பாடலில் குறிப்பிடுவது பிராணன் நாத ப்ரம்மம் ஓம்கார த்வனி.

வெளி அமைதி என்பது வேறு உள் அமைதி என்பது வேறு. வெளி அமைதி என்பது நிசப்தம். உள் அமைதி என்பது எண்ணங்களற்ற நிலை. உள் அமைதி கொண்டால் நாத ஒலி தெள்ள தெளிவாக கேட்கும். உள்ளே பல எண்ணங்கள் ஆரவாரம் செய்து கொண்டு இருக்கும் போதும் நாதம் ஒலித்து கொண்டே தான் இருக்கும். முதலும் முடிவும் இல்லாத ஒன்று தான் நாதம். ஆனால் எண்ணங்களின் ஆரவார ஓசையில் நாம் லயித்து நாதத்தை தவற விட்டு விடுகின்றோம்.

எனவே நாதன் உன் உள்ளே இருக்கிறார், அவர் பேசுவார் - பேசுவார் என்றால் அது வார்த்தைகள் அல்ல - அது தான் வார்த்தைகளின் மூலம். பேசா மந்திரம், பிரணவம், மௌன மொழி, ஊமை எழுத்து. வெளியே கல்லில் அல்லது வேறு ஒரு பொருளில் நாதம் என்பது உணர முடியாது. உள்ளே உறைந்திருக்கும் நாதனை வெளியே எங்குமே உணர முடியாது. எண்ணங்கள் தவிர்த்து அமைதி கொண்டு நாதத்தில் லயித்து இருக்கும் பொது தான் யாம் அவனை ஆட்கொள்வோம். அதன் பின் அவன் என் பொறுப்படா .... சிரிக்கிறார் ....முற்றும்


அகத்தியர் அடியவன்
தி. இரா. சந்தானம்
கோவை 9176012104
பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம்
மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம்

1 comment:

  1. அருமையான விளக்கம்... நன்றி இறைவா..

    ReplyDelete