Thursday, 9 January 2020

அன்னை சீதையின் முற்பிறவி

ஆனந்த இராமாயணம்*
*ஸார காண்டம்*
*மூன்றாவது ஸர்க்கம் - 12*
இது ஹரி குமார் என்பவரது வாட்ஸ் அப் பதிவு. அவருக்கு நன்றி.
*பத்மை*

விஸ்வாமித்திரர் சொன்னதைக் கேட்ட ஜனகர், தம் மனத்தில் தோன்றிய கருத்தை அனைவரிடமும் கூறினார்…
"எனது முதல் மகள் இப்பூமியின் எந்தப் பெண்ணுக்கும் பிறக்காத அயோநிஜை. அவளை இராமனுக்குத் திருமணம் செய்து தருகிறேன். என் இரண்டாம் மகளான ஊர்மிளையை இலட்சுமணனுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறேன்.

குசத்வஜன் என்று எனக்கொரு சகோதரன் இருக்கிறான். அவனுக்கும் இரு மகள்கள். அவர்களும் சீதையுடனேயே வளர்ந்தவர்கள். அவர்களுள் மாண்டவி என்பவளை பரதனுக்கும் ஸ்ருதகீர்த்தி என்பவளை சத்ருக்கனனுக்கும் திருமணம் செய்து வைக்கிறேன். தாங்கள் அனைவரும் இந்த என் யோசனைக்குச் செவிசாய்க்க வேண்டும்.”

மேலும் சொன்னார், “எனது நாலு பெண்களையும் தங்கள் புதல்வர்களுக்குத் திருமணம் செய்து வைக்கச் சம்மதிக்க வேண்டும் தசரதரே!"

"அவ்வாறே ஆகுக ஜனகரே!"

தசரதர் மேலும் கேட்டார், " சீதை பூமியிலிருந்து தோன்றியவளா? பெண் தொடர்பற்றுப் பிறந்த அயோநிஜையா? சீதையைப் பற்றி விவரமாகச் சொல்லுங்கள்.”

ஜனகராஜரின் புரோகிதரான சதாநந்தரிடம் கேட்டார்.

இராமனின் பாதம்பட்டு உயிர்பெற்ற அகலிகையின் மகனான சதாநந்தர், "தசரத மன்னரே! அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்றுதான். சீதையின் வரலாற்றைக் கூறுகிறேன், கேளுங்கள்.”

வெகுகாலம் முன்பு பத்மாக்ஷன் என்ற அரசன் இருந்தான். உலக மக்கள் விரும்புவது செல்வத்தைத்தான் என்பதை உணர்ந்து கொண்டான். செல்வத்தைத் தருபவளான திருமகளையேத் தனது மகளாகப் பெற்று வளர்க்க விரும்பினான். காட்டுக்குச் சென்று இலட்சுமி தேவியைக் குறித்துத் தவம் செய்தான். பத்மாக்ஷனது தவத்தினால் மகிழ்ந்த இலட்சுமி அவன் முன் தோன்றினாள்.

"அரசனே, நான் மஹாவிஷ்ணுவுக்குக் கட்டுப்பட்டவள். உனக்கு மகளாக நான் பிறக்க அவரது இசைவைப் பெற வேண்டும்.” என்று இலட்சுமி தேவி கூறினாள்.

பத்மாக்ஷன் விடாமுயற்சியுடன் திருமாலைக் குறித்துத் தவமியற்றினான். அவனது தவத்தில் மகிழ்ந்த நாராயணர் அவன் முன் தோன்றினார்.

பத்மாக்ஷனிடம், " உன் எண்ணம் நிறைவேறும்." என்று கூறிய மஹாவிஷ்ணு அவனிடம் மாதுளங்கனியொன்றைக் கொடுத்துவிட்டு மறைந்தார்.

பத்மாக்ஷன் அவரை  வணங்கிவிட்டு மாதுலிங்கனியைவிண்டு பார்த்தான். மாதுளங்கனியின் ஒரு பாதியில் விதைகள் இருந்தன. மறுபாதியில் தங்கமயமான பெண் குழந்தை ஒன்று இருந்தது. ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்த பத்மாக்ஷன் குழந்தையை தமது நாட்டுக்குக் கொண்டு போய் வளர்க்கத் தொடங்கினான். அக்குழந்தையின் அழகில் மயங்கினர் அவன் நாட்டவர். எல்லாரையும் கவரும் அழகுடையவளாக இருந்த அந்தக் குழந்தையை பத்மை என்று அழைத்தனர்.

பத்மை வளர்ந்தவுடன் அவளுக்குத் திருமணம் செய்விக்க நிச்சயித்தான் மன்னன். உலகிலுள்ள அரசர்கள் அனைவருக்கும் பத்மைக்கு நடக்கவிருக்கும் சுயம்வரத்துக்கு அழைப்பு விடுத்துக் கடிதம் அனுப்பினான்.

பத்மாக்ஷனின் ஓலையைக் கண்ட அனைத்து அரசர்களும் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு சுயம்வரத்திற்குக் கிளம்பி வந்தனர். சுயம்வரத்தைப் பார்ப்பதற்காக தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் போன்றவர்கள் வந்தார்கள்.  இராவணன் போன்ற அசுரர்களும் இந்தச் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்தார்கள். அனைவரும் சுயம்வர மண்டபத்தில் அமர்ந்தனர். அவர்களை வரவேற்ற பத்மாக்ஷன், "வெளியே வானத்தில் பரவியிருக்கிற நீல நிறத்தை உடலில் பூசிக்கொள்கிறாரோ அவரே என் மகளை மணக்கத் தக்கவர். அவருக்கே என் மகள் பத்மையைக் கல்யாணம் செய்து கொடுப்பேன்." என்றான்.

" இது இயலாத செயல்! யாரால் வானத்திலிருந்து நீல நிறத்தை எடுத்து உடலில் பூசிக்கொள்ள முடியும்?" என்று வந்திருந்த அரசர்கள் வெகுண்டனர். பத்மாக்ஷனுடன் போர் செய்யத் தீர்மானித்து இருக்கையிலிருந்து எழுந்தனர். பத்மாக்ஷனுக்கும் வந்திருந்த அரசர்களுக்கும் யுத்தம் மூண்டது. சரம் சரமாக பத்மாக்ஷன் வில்லிலிருந்து அம்புகள் சரமாரியாகப் பொழிந்தன. பெரும்பாலானோர் தோல்வி கண்டு ஓடி விட்டனர்.

அசுரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பத்மாக்ஷனுடன் கோரயுத்தம் செய்தனர். பத்மாக்ஷன் மாண்டான். அரக்கர்கள் ஒன்று சேர்ந்து பத்மையை இழுத்துக்கொண்டு போக வந்தனர். பத்மையோ அவர்கள் அவளைத் தேடி அந்தப்புரம் வருவதற்குள் அக்கினிப் பிரவேசம் செய்தாள். அவளைத் தேடி வந்த அரக்கர் கூட்டம், அரண்மனை முழுவதும் அலைந்தது. அரண்மனை தரைமட்டமானது. நகரெங்கும் அசுரர் கூட்டம் பத்மையைத் தேடித்தேடி அலைந்தது. ஊரே தரைமட்டமானது.

சுயம்வரத்திற்கு வந்திருந்த முனிவர்கள் வருத்தத்துடன் தங்கள் இருப்பிடம் திரும்பினர். பத்மாக்ஷனுடன் அவன் மனைவியர் உடன்கட்டை ஏறினர்.

அக்னியில் மறைந்திருந்த பத்மை வெகு நாள்கள் கழித்து வெளிப்பட்டு அக்னி குண்டத்தின் அருகிலேயே அமர்ந்திருந்தாள். வான் வழியில் சென்று கொண்டிருந்த இராவணன் தற்செயலாக அந்த வழியாகப் பறந்து கொண்டிருந்தான்.

"அரசே! கீழே பாருங்கள்! வெகுகாலத்திற்கு முன் மயானமாகக் காணப்படும் இந்தப் பகுதியில் பத்மாக்ஷன் என்னும் அரசனின் மகளான பத்மையின் சுயம்வரத்திற்கு நீங்கள் சென்றீர்களே! அந்தப் பெண்ணின் பொருட்டு பெரிய யுத்தம் நடந்து அனைவரும் மாண்டனரே! அவள் அந்த அக்னி குண்டத்தின் அருகில் அமர்ந்திருக்கிறாள், பாருங்கள்!" என்றான் இராவணனின் அமைச்சன் சாரணன்.

குனிந்து கீழே பார்த்த இராவணன், பத்மையின் அழகில் மயங்கினான், புஷ்பக விமானத்தைப் பூமி நோக்கிச் செலுத்தி அவளை அபகரிக்க இறங்கினான். இராவணனைக் கண்ட பத்மை மறுபடி எரிந்து கொண்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி மறைந்தாள். இராவணன் திகைப்படைந்தான். தன்னுடன் வந்திருந்த அரக்கர்களைக் குடங்குடமாக நீர் எடுத்து வரச் செய்து அக்னி குண்டத்தில் ஊற்றச் செய்தான்.

அந்த அக்னி குண்டம் நன்றாக அணைந்த பிறகு அதனைக் குச்சியால் கிளறினான். சாம்பலின் உள்ளே ஐந்து இரத்தினக் கற்கள் இருந்தன.

இராவணன் அந்த ஐந்து இரத்தினங்களையும் ஒரு பேழையில் எடுத்துக் கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறி இலங்கைக்குச் சென்றான். தன் அரண்மனையின் பூஜை அறையில் அந்தப் பேழையை வைத்தான்.

தன் மனைவி மண்டோதரியுடன் படுக்கையறையில் இருந்தான். அவளிடம், "மண்டோதரி, நான் உனக்காக ஐந்து இரத்தினக் கற்கள் கொண்டு வந்திருக்கிறேன். பூஜை அறையில் ஒரு பெட்டியில் வைத்திருக்கிறேன். எடுத்துக் கொள்." என்றான்.

மண்டோதரி ஆசையாக உடனே சென்றாள். பூஜையறையிலிருந்து அந்தப் பேழையை எடுத்துக்கொண்டுபோய்த் தன் கணவன் முன்னிலையில் திறக்க வேண்டும் என்று விரும்பினாள். பேழையைத் தூக்க முயன்றாள். முடியவில்லை. பலம் கொண்டமட்டும் முயன்றும் முடியாததால் வெட்கப்பட்டு இராவணனிடம் விஷயத்தைச் சொன்னாள்.

இராவணன் தன் மனைவியைப் பார்த்து நகைத்து, "நான் அந்தப் பேழையை எடுத்துக் கொண்டு வருகிறேன்." என்று புறப்பட்டான். பூஜையறையிலிருந்த அந்தப் பேழையை எடுக்க முயன்றான். அது நகரவில்லை. ஆச்சர்யமாக இருந்தது. தன் இருபது கைகளாலும் தூக்கப் பார்த்தான். முடியவில்லை.

இராவணனுக்கு அச்சம் உண்டானது. அதை எடுத்துக் கொண்டு போகாமல் அங்கேயே திறக்க முயன்றான். திறந்து கொண்டது. உள்ளே கதிரவனின் ஒளி போன்ற பெண்ணொருத்தி வெளிப்பட்டாள். அவள் வேறு யாருமல்ல! அவன் இலங்கைக்குக் கடத்திக் கொண்டுபோக நினைத்த பத்மை!

அவளைப் பார்ப்பதற்கு மண்டோதரியிலிருந்து அனைவரும் வந்துவிட்டனர். மற்ற இராட்சசர்களும் வந்துவிட்டனர். பிரகாசமான அவள் மேனியின் ஒளி கண்டு அனைவரின் கண் கூசியது.

" மண்டோதரி, இவள் பத்மாக்ஷன் என்னும் அரசனின் மகள் பத்மை. இவளுக்கு நடந்த சுயம்வரத்தில் இவள் தந்தை விடுத்த நிபந்தனையால் பெரிய யுத்தம் உண்டாயிற்று. இவள் பொருட்டு உண்டான போரில் பத்மாக்ஷன் மாண்டான். அவனது நகரும் நாடும் மயானமானது. இவளைப் பிடிக்க அரக்கர்கள் முயன்றனர். இவளோ நெருப்புக் குண்டத்தில் இறங்கி மறைந்துவிட்டாள். பல காலம் கழித்து மீண்டும் அந்த அக்னி குண்டத்திலிருந்து வெளிவந்தவளை நான் பார்க்க நேர்ந்தது. அவளைப் பிடிப்பதற்குள் மறுபடி அக்னி குண்டத்தில் இறங்கி மறைந்தாள். அந்த அக்னியை நீர் ஊற்றி அனைத்து விட்டுக் கிளறிப் பார்த்தேன். அதில் கிடைத்த ஐந்து இரத்தினங்களை இங்கு உனக்காகக் கொணர்ந்தேன். இப்போது திறந்து பார்த்தால்!... மறுபடி இவள் இருக்கிறாள் !" என்றான் இராவணன்.

மண்டோதரிக்குப் பயம் பிடித்துக் கொண்டது.


"அன்பரே, இவள் இந்தச் சிறு பிராயத்திலேயே தன் குலத்தை நாசம் செய்திருக்கிறாள்! இன்னும் பெரியவளானால் என்னென்ன செய்வாளோ? இவளை எதற்காகக் கொண்டு வந்தீர்கள்? உடனடியாக இவளை இதே பேழையில் வைத்து மூடி ஏதாவது காட்டுப் பகுதியில் எறிந்து விடச் செய்யுங்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இவள் இங்கு இருந்தால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று தோன்றுகிறது. "

மண்டோதரி சொன்னாள்.

அவள் சொன்னதைப் ஒப்புக் கொண்ட இராவணன், தனது வீரர்களிடம் விமானத்தில் அவளை ஏற்றிக் கொண்டு போய் வனாந்திரத்தில் விட்டுவிட்டு வருமாறு கட்டளையிட்டான்.

மண்டோதரியும் அவர்களைப் பார்த்து, "இவள் குலத்தையே நாசம் செய்யக்கூடியவள். இவளைப் பெட்டியோடு பூமியில் யாரும் காணாதவாறு புதைத்து விடுங்கள். வெளியில் எங்கும் எறிந்து விடாதீர்கள். இன்னும் சில நாள்களில் ஞானி ஒருவரின் வீட்டில் வரப்போகிறாள்." என்றாள்.

பேழையுடன் வீரர்கள் விமானம் ஏறும் சமயத்தில் பேழையிலிருந்து பத்மை எல்லாருக்கும் கேட்கும்படி உரக்கச் சொன்னாள், “மறுபடி நானிங்கு வருவேன். என் பொருட்டு இராவணனும் மற்ற அசுரர்களும் மாளப் போகின்றனர். நிகும்பனின் மகன் பெலிண்டரகன், நூறுதலை இராவணன், மூலகாசுரன், கும்பகர்ணனின் மகன் சூரன் போன்றோரைக் கொல்லுவதற்காக இங்கு வருவேன்.”

இராவணன் அசந்து போனான். மற்ற இராட்சசர்கள் "ஹா!” என்று அரற்றினார்கள். இராவணன் கோபத்துடன் வாளையுருவி பத்மையை வெட்டப் புறப்பட்டான். மண்டோதரி அவனைத் தடுத்தாள்.

"அன்பரே! அவள் வாக்குப் பொய்க்காது. உமது ஆயுளை இப்போதே முடித்துக் கொள்ளாதீர்கள். எமனை இப்போதே வரவழைக்காதீர்கள். இவளை முதலில் அனுப்பி விடுங்கள். "

வீரர்களுடன் விமானம் வானத்தில் விரைந்தது. கடல், கரை, காடு, மலை, நாடு, நிலம் என்று தாண்டித் தாண்டி விதேக நாட்டின் மிதிலை நகரத்தின் அருகே வயல் விவசாய நிலத்தைத் தோண்டி அந்தப் பெட்டியைப் புதைத்து மூடிவிட்டு மீண்டும் இலங்கை போய்ச் சேர்ந்தனர்.

அந்த நிலத்தை அந்தணர் ஒருவருக்கு விதேகராஜன் ஜனகன் தானம் செய்தான். அந்த நிலத்தை உழவர் ஒருவரிடம் ஒப்படைத்து நல்ல நேரம் பார்த்து உழச் செய்தார். சிறந்த நேரத்தில் அந்த உழவர் கலப்பையைக் கொண்டு உழுகையில் அப்பேழை தட்டுப்பட்டது. உடனே அப்பெட்டியைத் தோண்டியெடுத்துச் சிரமத்துடன் சுமந்து கொண்டு போய் அந்தணரிடம் இறக்கினார் அந்த உழவர்.

"அந்தணரே! நீங்கள் குறித்த நேரம் மிகச் சிறப்பான நேரம் போலிருக்கிறது! பெரிய புதையல் இருக்கிறது போலும்! தூக்குவதற்குக் கனமாக இருந்தது. பெற்றுக்கொள்ளும்."

அந்தணர் அந்தப் பேழையைத் திறந்து கூடப் பார்க்காமல் வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் விதேகராஜனது அவையில் கொண்டு போய் வைத்தார்.
“அரசரே! நீங்கள் எனக்குப் பூமியை மட்டுமே தானஞ் செய்தீர்கள். அதற்குள் இருப்பது உங்களுக்கே சொந்தம். எனவே பெட்டியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.”

" முடியாது அந்தணரே! தானம் கொடுத்த போதே எல்லாமே உங்களுடையதாகிவிட்டது. இந்தப் பேழையும் உங்களுக்குத்தான்.”

மன்னரும் வேதியரும் வாதம் செய்தனர். அமைச்சர்கள் எழுந்து இருவரையும் அமைதிப்படுத்தினர். முதலில் அந்தப் பெட்டியைத் திறந்து உள்ளே இருப்பதைப் பார்க்கலாம் என்றனர்.

ஜனகமன்னன் கட்டளையிட பெட்டியைத் திறந்தனர்.

உள்ளே சூரிய ஒளியைத் தோற்கச் செய்யும் ஒளிர்வுடன் கன்னிகை ஒருத்தி இருந்தாள். அரசன் மிகுந்த சந்தோஷம் கொண்டான். வேதியர் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

ஜனக மன்னன் அந்தப் பெண்ணைப் பேழையிலிருந்து இறக்கி அந்தப்புரத்துக்குச் சென்றான். வானிலிருந்து தேவர்கள் மங்கல இசைக் கருவிகள் முழங்க பூக்களைத் தூவினர். அவளைத் தன் பெண்ணாகக் கருதி, ஜாதகம் எழுத ஜோசியர்களை வரவழைத்தான். மற்ற சடங்குகளைச் செய்விக்க வேத விற்பன்னர்களை வரவழைத்தான். அவர்கள் அனைவருக்கும் தானமாகப் பல பொருள்களை அளித்தான்.

முதலில் மாதுளங்கனியிலிருந்து வெளிப்பட்டதால் அவளுக்கு மாதுளங்கி என்ற பெயர் ஏற்பட்டது.

அக்னி குண்டத்தில் வாசம் செய்தவளாதலால் அக்னி கர்பை என்றும் அழைக்கப்பட்டாள்.

இரத்தினமாக இருந்ததால் இரத்தினவதி எனப்பட்டாள்.

பூமியிலிருந்து வந்தவளாதலால் பூ புத்திரி என்றும் அழைக்கப்பட்டாள். பத்மாக்ஷனின் மகளாக இருந்ததால் பத்மை என்று அழைக்கப்பட்டாள். பூமியினின்று ஏர் நுனியினால் வெளிப்பட்டமையால் சீதை என்று அழைக்கப்பட்டாள்.

மிதிலையின் மகள் ஆகையால் மைதிலி என்றும் விதேக நாட்டின் இளவரசியாதலால் வைதேகி என்றும் ஜனகராஜனின் மகளாக ஜானகி என்றும் பல பெயர்களுடையவளானாள் பத்மை!

*சீதா கல்யாண வைபோகமே - 1*

"ஆகவே முன்பு பத்மையின் சுயம்வரத்தில் பத்மாக்ஷன் எண்ணப்படி வானத்தின் நீல நிறத்தைப் பூசிக்கொண்டவராக ஸ்ரீராமன் விளங்குகிறார். அவரே தற்போது சீதையை அடைந்தார். நீங்கள் மேலும் மூன்று மருமகள்களைப் பெறுகிறீர்கள்." என்று சீதையின் பூர்வ கதையைக் கூறி முடித்தார் அகலிகையின் மகனான சதாநந்தர்.

சீதா - இராமன் கல்யாணத்துக்கு இராமனின் மாமன்மார் கோசல அரசன், மகத அரசன், கேகய அரசன் ஆகியோர் மிதிலைக்குத் தம் படைகளோடு வந்து சேர்ந்தனர். ஜனக மன்னன் அவர்களுக்குத் தக்க மரியாதை செய்து, வேண்டிய உடைகளையும் அணிகலன்களையும் அளித்து, ஊர்வலமாக அவர்களை நகருக்குள் அழைத்துவந்தான். 

ஸ்ரீராமனை நகருக்குள் அழைத்து வரவும் அவருடைய பெற்றோரையும் மற்றோரையும் ஊர்வலமாக அழைத்து வர யானைகளை ஏற்பாடு செய்தான் ஜனகராஜன். இராமன் தம் தந்தையை நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். அவரைத் தூக்கி நிறுத்தி தசரதன் பலமுறை தழுவி மகிழ்ந்தார்.

இராமன் தம் குரு வஸிஷ்டரிஷியையும் தாயார் மூவரையும் நிலத்தில் வீழ்ந்து வணங்கினார்.

ஸ்ரீராமன் ஏறியமர்ந்த யானை முன் செல்ல, மற்றவர்கள் ஏறியமர்ந்த யானைகள் பின் தொடர ஊர்வலம் தொடங்கியது. சங்கீதக் கலைஞர்கள் இசைக்க, நடனமணிகள் ஆட அனைவருடனும் இராமபிரான் பட்டணப் பிரவேசம் செய்தார். ஊர்வலத்தை நகர மக்கள் அனைவரும் கண்டு களித்தனர். தங்கள் வீடுகளின் மேலிருந்து மலர்களைச் சொரிந்தனர். தசரதரும் அவரது பரிவாரங்களும் மிகச் சிறப்பான விடுதியில் நுழைந்தனர்.

அவர்களையெல்லாம் உரிய இடங்களில் தங்க வைத்து விட்டு ஜனகராஜன் புரோகிதர்களையும் கணிகர்களையும் அழைத்துப் பேசி, சீதாவின் கல்யாண முகூர்த்த நேரத்தைப் பற்றிக் கேட்டறிந்தான். நகரம் முழுக்க அலங்காரம் செய்யத் தனது அமைச்சர்களுக்குக் கட்டளையிட்டான். வீதிகளைத் தூய்மை செய்தும் தோரண அலங்காரம் செய்தும் வாசனை நீர்களைத் தெளித்தும் ஆங்காங்கே வண்ணவண்ண மலர்களால் பதாகைகளை நிறுவியும் நகரெங்கும் மங்கல இசைக்கருவி முழங்கச் செய்தும் மிதிலா நகரை அழகுபடுத்தினர்.