Tuesday 14 January 2020

ஆழ்வார் பாசுரங்களின் மணம்

🙏
🕉

மனோரஞ்சிதம் பூவை முகர்ந்திருக்கிறீர்களா ? ஆம் என்றால் தொடர்ந்து படிக்கலாம். எந்தப் பழத்தை நினைத்துக்கொண்டு இம்மலரை முகர்கிறோமோ அப்பழத்தின் வாசனையை இம்மலர் தரும் என்பார்கள்.

அறிவியல் படித்தவர்களைக் கேட்டால் அந்த மலரில் “Methyl benzoate” என்ற ரசாயனப் பொருள் இருக்கிறது. அது பல பழங்கள், பூக்களில் இருக்கிறது அதனால் உங்களுக்கு அந்த மாதிரி வாசனை வருகிறது என்று விளக்கம் சொல்லுவார்கள்.

ஆழ்வார் பாடல்கள் படிக்கும் போது அறிவியலைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட வேண்டும். மனோரஞ்சிதம் பூவில் வரும் வாசனையை ஆங்கிலத்தில் ‘fragrance’ என்று சொல்லலாம். வாசனை, நறுமணம், சுகந்தம்.. ? என்று பல தமிழ் வார்த்தைகள் இருந்தாலும் எது சரியான வார்த்தை ?

நமக்குத் தெரிந்த வாசனை சிலவற்றைப் பார்க்கலாம். வத்தக்குழம்பு கொதிக்கும் போது ”வாசனை தூக்குகிறது….. இப்பவே பசிக்குது”  என்று இலையைப் போட்டு உட்கார்ந்துவிடுவோம்.  மழைக்கு முன் வரும் வாசனையை  ’மண் வாசனை’ என்கிறோம். ”மங்கை இவள் வாய் திறந்தால் மல்லிகைப் பூ வாச‌ம்” என்று சினிமா கவிஞர்கள் எழுதிவிட்டார்கள். சுகந்த மணம் தரும் ஊதுபத்தி விளம்பரத்தால்  சுகந்தம் புகை சமாச்சாரம் ஆகிவிட்டது. இப்படி வாசனைகளுக்கு அடையாளங்கள் இருக்கிறது.

ஆனால் மனோரஞ்சிதம் வாசனையை இப்படி அடையாளப்படுத்த முடியாது.  வீட்டில் ஒரு பாத்திரத்தில் மனோரஞ்சிதம் பூவை மிதக்கவிட்டால் “என்னப்பா ஒரு விதமான வாசனை வருகிறது” என்போம். எல்லாம் கலந்து கட்டிய அந்த வாசனையை விவரிக்க முடியாது.

ஆண்டாள் திருப்பாவையில் பாமாலையாகப் பாசுரங்களைத் தொடுக்கும் போது அதில் வரும் வாசனையான சொற்களை ஒரு லிஸ்ட் போடலாம்.

”வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்” என்றும்,
”நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்” என்று சொல்லிவிட்டு பிறகு ”கந்தம் கமழும் குழலி!” என்று பல வாசனையான சொற்களை அடுக்கிக்கொண்டு போகிறாள்.

”மாரி மலை முழைஞ்சில்” என்ற இந்த பாசுரத்திலும் ஆண்டாள் ஒரு வாசனையான சொல்லை நமக்கு அறிமுகப்படுத்துகிறாள்.

பாசுரத்தில் சிங்கம் தானே வருகிறது வாசனை எங்கே வருகிறது ?

“வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து” உதறிய போது ‘வேரி’ என்ற சொல் வந்து விழுகிறது. இதற்கு உரையாசிரியர்கள் ’பரிமளம் கமழ்கிறது’ என்கிறார்கள்.

பரிமளம் என்ற வார்த்தையை ஆழ்வார்கள் எந்த பாசுரத்திலும் உபயோகிக்கவில்லை, ஆனால் கம்பநாட்டாழ்வார் உபயோகித்துள்ளார்.

ஸ்ரீராமர் சித்திரகூட மலையின் அழகைச் சீதா பிராட்டிக்குக் காட்டி அதன் அழகைச் சொல்லும் கம்பரின் இந்த பாடலில் ...

இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய்!
அலவும் நுண் துளி அருவி நீர், அரம்பையர் ஆட,
கலவை, சாந்து, செங் குங்குமம், கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன - பாராய்!

அரம்பையர் ஆடிய போது, அவர்களின் உடலில் பூசியிருந்த ’கலவை, சாந்து, செங் குங்குமம், கற்பகம் கொடுத்த பலவும்’ அருவி தண்ணீரில் கலந்து அதனால் பரிமளம் வீசுகிறது என்கிறார்.

பரிமளம் என்ற சொல்லுக்கு, ஆண்டாள் வேரி என்ற உயர்ந்த சொல்லை உபயோகிக்கிறாள். ஆங்கிலத்தில் ‘‘fragrance’  என்ற சொல் கிட்டே வருகிறது.

சிங்கத்தின் பிடரியில் இருக்கும் மயிரில் பரிமளமா வீசுமா ?  வீட்டில் வளர்க்கும் நாய் பக்கம் சென்றாலே ஒரு வித சூடான வாசனை வரும், சிங்கம், புலி இவையிடம்  கூடுதலாக  ‘ஒரு விதமான’ வாசனை தானே வரும் ஆனால் ஆண்டாள் சிங்கத்தின் பிடாரியில் பரிமளம் என்று சொல்லுகிறாளே என்று சந்தேகம் வருவது இயற்கையே. 

இங்கே சிங்கத்தை நாம் மிருக காட்சி சாலையின் சிங்கமாகப் பார்க்கிறோம் ஆனால் ஆண்டாள் சிங்கத்தைக் கண்ணனாகப் பார்க்கிறாள் !

சரி இந்த சிங்கத்துக்கு எப்படி அந்த வாசனை வந்தது என்று கொஞ்சம் ஆராய நம்மாழ்வாரின் மாரி, வாரி, காரி வேரி என்ற இந்த ரைமிங் பாசுரத்தைப் பாருங்கள்

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை*
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்*
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்*
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.


குளிர்ந்த திருவேங்கடம் மலையில் மழை என்றும் மாறாமல் பெய்யும்.
குளிர்ந்த நீர்நிலைகள் மாறாத சோலைகள் நிறைந்த குருகூர் சடகோபன் சொன்ன  இந்த பத்து பாசுரங்களைச் சொன்னால், பரிமளம் மாறாத தாமரை மலரிலே நித்திய வாசம் செய்யும் திருமகள் எல்லா பாவங்களையும் போக்கியருள்வாள் என்கிறார்.

திருமங்கையாழ்வார் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம்

எஞ்சல் இல் இலங்கைக்கு இறை எம் கோன்-
 தன்னை முன் பணிந்து* எங்கள் கண் முகப்பே
நஞ்சு-தான் அரக்கர் குடிக்கு என்று
 நங்கையை அவன் தம்பியே சொன்னான்*
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்;
 வேரி வார் பொழில் மா மயில் அன்ன*
அஞ்சு அல் ஓதியைக் கொண்டு நடமின்;
 அஞ்சினோம்  தடம் பொங்கத்தம் பொங்கோ

இராவணனுக்கு முன்பாக அவன் தம்பி விபீஷ்ணாழ்வான் ”இப் பிராட்டி அரக்கர் குலத்துக்கு நஞ்சு போன்றவள்” என்று உரைத்தான். அப்படிச் சொல்லியும் இராவணன் பணியவில்லை. அதனால் வானவர் விரும்பியபடி துன்புற்றோம். பரிமளம் மிகுந்த மயில் போன்ற கூந்தலையுடைய சீதையைக் கொண்டு நாங்கள் அஞ்சினோம்.

இந்த இரண்டு பாசுரத்திலும் வேரி என்ற சொல் பிராட்டியுடன் சம்பந்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அதனால் தான் விவரிக்க முடியாத வாசனையாக இருக்கிறது.

இங்கே சிங்கத்துக்கு எப்படி இந்த வாசனை வருகிறது என்று பார்க்கும் முன் மண்ணுக்கு எப்படி வாசனை வருகிறது ?

பூமிக்கு இயற்கையாகவே வாசனை இருக்கிறது. நம்மாழ்வார் ”மண்ணை இருந்து துழாவி, வாமனன் மண் இது” என்று கண்டுபிடித்தார்.  பெருமாளின் திருப்பாதம் பட்டு அதற்கு வாசனை வந்துவிட்டது என்கிறார்.

தண்ணீருக்கு வாசனை கிடையாது.  நம்பெருமாள் திருமஞ்சனத்தின் போது நம்பெருமாளின் சம்பந்தம் பட்டு விவரிக்க முடியாத வாசனையாகிறது.

காற்றுக்கும் வாசனை கிடையாது ஆனால் வாசனையை அழைத்துக்கொண்டு போகும் மீடியமாக இருக்கிறது. திருப்பாணாழ்வார் பெரிய பெருமாளைக்  “வெண்ணெய் உண்ட வாயன் iவன் கண்ணன் என்று கண்டுபிடிக்க காற்று உதவியது.

நிலம், நீர், காற்றுக்கு பெருமாளின் சம்பந்தம் பெற்றதால் வாசனையாகிறது.

சில பாசுரங்கள் முன் “கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் ’கிடந்த’ மலர்மார்பா” என்கிறாள் ஆண்டாள்.

இந்த பாசுரத்தில்  ”மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் ’கிடந்து’ உறங்கும்” என்கிறாள். கண்ணன் நப்பின்னையுடன் கிடக்கிறான்; சிங்கம் பேடையுடன் ’மன்னி; கிடந்து உறங்குகிறது.

பட்டர் அருளிய திருப்பாவை தனியன் “நீளாதுங்கஸ்தன கிரிதடீ ஸுப்தம் முத்போத்ய க்ருஷ்ணம்” இதன் அர்த்தம் “ நப்பின்னையினுடைய மார்பில் தலைசாய்த்து உறங்கினவனான கண்ணன்” என்கிறார்.

சாதாரண ஊதுபத்தி டப்பாவே ஊதுபத்தி  சம்பந்தத்தால் வாசனையாக இருக்கும் போது, எப்போதும் ’வேரி மாறாத’ பிராட்டியின் நெஞ்சிலே படுத்து உறங்கும் கண்ணனிடம் பரிமளம் கமழ்வதில் வியப்பு ஏதும் இல்லையே.

பெருமாளுக்கு பிராட்டி சம்பந்ததால் வாசனை வருகிறது!

ஆண்டாள் “வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி” என்கிறாள். இங்கே ஆண்டாள் ஏன் ‘உதறி’ என்கிறாள் ? ஸ்வாமி தேசிகனின் பாதுகா சகஸ்ரம் கொண்டு ஏன் என்று பார்க்கலாம்.

நம்பெருமாளின் புறப்பாட்டின் போது ஸ்வாமி தேசிகன் பின்னாடி தான் செல்வாராம். ஈரத் தமிழில் ஆழ்வார்களின் பாசுரங்கள் பெருமாளின் காலை வருடி அது பின்னே வரும் போது வேதங்களுடன் சேர்ந்து எல்லாம் கலந்த பரிமளம் கமழும் கூடவே, நம்பெருமாளின் மீது படிந்த துகள்களை நம் மீது தெளிக்கும் போது கலக்கம் எல்லாம் போய், பிறகு  சொக்குப் பொடி போட்டது போல நாம் நம்பெருமாளின் பின்னே செல்வோம்.

“வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறும் போது, பெருமாள், பிராட்டி சம்பந்தமான வாசனையான அந்த துகள்களை நம் மீது பட்டு நமக்கு  தெளிவு உண்டாகி, சொக்குப் பொடி போட்டது போல பெருமாள் பின்னாடி செல்வோம்.

🕉🙏🕉