Tuesday 14 January 2020

சாரங்கம் - ராம பாணம்

🙏
🕉
’சார்ங்கம்’ என்றால் உடனே உங்களுக்கு ஸ்ரீராமரின் வில் நினைவுக்கு வந்திருக்கும். ஆனால் கும்பகோணம் நினைவுக்கு வருமா ?

’ஆராவமுதே ! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே’  என்ற இந்த ஒரு பாசுரமே ஸ்ரீராமரின் சாரங்கம் போல் நாதமுனிக்குக் கிடைக்க  அதிலிருந்து சடகோப சர மழை 4000 அம்புகளாகப் புறப்பட்டவை தான் திவ்யபிரபந்தம்.

கும்பகோணம் பெருமாளின் பெயர் சாரங்கபாணி !  ஆராவமுதமான ஆழ்வார் பாசுரங்களைக் கொடுத்து  ஆராவமுதாழ்வாரானார் !

திருமழிசையாழ்வார் கும்பகோணம் சாரங்கபாணியைப் பார்த்தவுடன் அவருக்கு ஸ்ரீராமர் காட்டில் சீதையைத் தேடிச் சென்றது நினைவுக்கு வர,  உடனே


நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞான மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ? இலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே!
”காட்டில் சீதாபிராட்டியைத் தேடி நடந்ததால் கால்கள் நொந்ததோ ; வராகனாய் உலகைப் பெயர்த்து எடுத்த களைப்பா ? பக்தன் வந்தது தெரியாமல் படுத்துக்கிடக்கிறீரே எழுத்திருக்கக் கூடாதா ?” என்று கேட்க உடனே பெருமாள் எழுத்திருக்க முற்படப் பெருமாளைச் சிரமப்படுத்துகிறோமே என்று உடனே ஆழ்வார் “வாழி கேசவனே” என்று பாடினார் என்ற கதை உங்களுக்குத் தெரிந்தது தான். 

ஸ்ரீராமரின் வில்லை அனுபவிக்கும் முன் அவரின் வில் பற்றி வார்த்தா மாலையில் ஒரு சின்னக் கதை வருகிறது அதைப் பார்க்கலாம்.


குருகுலம் ஒன்றில் மூன்று மாணவர்கள் ஒரு குருவனிடம் படிக்கிறார்கள். ஸ்ரீ ராமாயண பாடம் படித்த பின் குரு ஸ்ரீ ராமாயணத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்ற சிஷ்யர்களைப் பார்த்துக் கேட்டார்.

முதல் சிஷ்யன்: ”ஸ்ரீராமர் மனிதப் பிறவி எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டப்பட்டார் சரீர சம்பந்தமே இருக்கக் கூடாது என்றான்.
 குருவும் ”சரி அப்படியானால் இந்தச் சரீர சம்பந்தத்தை அறுக்க நீ தபஸ் முதலிய உபாயங்களைச் செய்யப் புறப்படு” என்று அனுப்பிவிட்டார்.
இரண்டாவது சிஷ்யன் : ”தாய் தந்தையரைப் போற்ற வேண்டும். அவர்கள் சொல்பேச்சு கேட்டு, அவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும்”.  குருவும் ” நீ திருமணம் செய்துகொண்டு உன் மாதா பிதாவிற்குத் தொண்டு செய்யப் புறப்படு” என்று அனுப்பிய பிறகு கடைசி சிஷ்யனைக் கேட்டார்.
மூன்றாவது சிஷ்யன் :  ”ஸ்ரீராமரின் வில்லே நமக்கு உபாயம்” என்றான். குரு சிஷ்யனைத் தழுவிக்கொண்டார்.


வில்லுக்கு என்ன பெருமை ? அது வெறும் ஆயுதம் தானே என்று நாம் நினைப்போம்.
 ”ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து” ஒரு வில்லால் கொந்தளிக்கின்ற கடலை அடைத்தார் ராமர் என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

இங்கே வில்லா கடலை அடைத்தது ? இல்லை ஸ்ரீராமர் தான் ! 
 ஸ்ரீராமரின் வீரத்தைப் பல விதமாகப் புகழ்ந்து பேசியுள்ளார்கள். வால்மீகி ராமனுடைய வீரத்தை அவர்களுடைய பகைவர்களும் கொண்டாடுவார்கள் என்கிறார்.


கம்பர் கணக்கு போட்டுக் காண்பிக்கிறார்


ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர் படின், கவந்தம் ஒன்று எழுந்தாடும்;
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின் மணி கணில் என்னும்;
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே

இதன் பொருள் :

யானைப் படை - 1000
தேர்ப் படை - 16,000
குதிரைப் படை - 1,00,00,000
சேனைத் தலைவர்கள் - 1000
இவைகள்  எல்லாம் மடிந்து விழுந்தால் ஒரு தலையற்ற உடல் எழுந்து ஆடுமாம். இப்படி ஆயிரம் தடவை தலையற்ற உடல் எழுந்து ஆடும்போது ஸ்ரீராமரின் வில்லில் இருக்கும் மணி ‘கணில்’ என்று ஒரு முறை ஒலிக்குமாம்.

அதாவது மேலே உள்ள லிஸ்டை x 1000 தடவை செய்தால் ராமருடைய மணி ஒரு முறை ஒலிக்கும்.  யுத்தத்தில் அவருடைய மணி இப்படி மூன்று மணி நேரம் தொடர்ந்து ஒலித்தது என்றால் அவர் எவ்வளவு பேரை வீழ்த்திருக்க வேண்டும் ! அப்பேர்பட்ட வீரம் இராமனுடையது !

ஸ்வாமி தேசிகன் ரகுவீர கத்தியத்தில் “ஜய ஜய மஹா வீர மஹா தீர” என்று வீரமாக ஆரம்பிக்கிறார். 
அதிகார சங்கரத்தில் தேசிகனின் பாசுரம் இது
உத்தம வமர்த்தலம் அமைத்ததோர்
எழில் தனுவுயர்த்த கணையால்
அத்திவரக்கன் - முடிபத்தும் ஒரு
கொத்தென உதிர்த்த திறலோன்

உயர்ந்த போர்க்களத்தில் அமைக்கப்பட்ட நிகரற்ற அழகிய வில்லிலிருந்து செலுத்தப்பட்ட அம்பினால் ராவணனுடைய தலை பத்தையும் ஒரு கொத்தாக அறுத்துக் கீழே தள்ளின பலமுடைய ராமர் என்கிறார்.

நம்மாழ்வார்

ஒருவர், இருவர், ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும்தோறும்
திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை
மருவி உறைகின்ற மாயப்பிரானே.

யுத்தத்தில் ஸ்ரீராமர் ஒருவராகவும் இருவராகவும் மூவராகவும் மாறிமாறி பின்னர் தன் உருவமே யாருக்கும் தெரியாதபடி மிகவேகமாகச் சுழன்று சுழன்று போர் புரிந்தான் என்று  திரைப்படத்தில் கிராபிக்ஸ் மூலம் இன்று நாம் பார்ப்பதை நம்மாழ்வார் அன்றே பார்த்துவிட்டார். இப்படி சுழன்று அடிப்பதை நினைக்கும்போதே நமக்குப் பயமாக இருக்கும் ஆனால் ஆழ்வாருக்கு ’தித்திப்பான்’ ( இனிப்பாக இருக்கிறான் )  என்கிறார்.


ஆண்டாள் ராவணனுக்கு மற்ற ஆழ்வார்கள்போல இவ்வளவு வார்த்தை விரயம் செய்யாமல், சாதாரணமாக நகத்தால் பூச்சி இருக்கும் இலையைக் கிள்ளி எறிவது போல் ’கிள்ளிக் களைந்தான்’ என்று இரண்டே இரண்டு வார்த்தையில் பொல்லா அரக்கனான ராவணனைச் சிக்கனமாக முடித்துவிட்டாள்.

இவ்வளவு வீரம் உடைய ஸ்ரீராமர் டெஸ்ட் கிரிக்கெட்டில்  ’டொக்கு வைக்கும் மொக்கப் ப்ளேயரு’ மாதிரி ராவணனிடம் ஏழு நாள் சண்டை போட்டு ஏன்  இழுத்தடிக்க  வேண்டும் ? ஒரே அடியில் அடித்திருக்கலாமே ?

மிகுந்த ஞானியான கூரத்தாழ்வான்   “இன்று போய் நாளை வா?” என்று ஸ்ரீராமரின் குணத்தை எதில் சேர்க்க முடியும் ? சீல குணமா, வீர குணமா இந்த குணத்தை எப்படி விவரிக்க முடியும் ? என்று அவரே குழம்புகிறார்.

எதற்காக ஸ்ரீராமர் அவனை இவ்வளவு நாள் விட்டு வைத்தார் என்றால் ராவணன் தான் ஸ்ரீராமரை விரோதியாக நினைத்தான். ஆனால் ஸ்ரீராமர் என்றுமே அவனை விரோதியாக நினைக்கவில்லை.

பெருமாள் நான் உன்னை ரக்ஷிக்க வருகிறேன் என்று வரும்போது வேண்டாம் அவனை விலக்காமலிருந்தாலே போதும் அவர் நம்மை ரக்ஷித்து விடுவார்.  நானே என்னை ரக்ஷித்துகொள்கிறேன் என்று நினைப்பது தான் பெரிய குற்றம். அது தான் ராவணன் செய்தது!.

யுத்தத்தில் ராவணன் “ராமா என்னை நீ இரண்டாகப் பிளந்தாலும் என் உயிரற்ற உடல் பின்னோக்கி விழுமே தவிர முன்னோக்கி விழாது” என்கிறான். அதாவது முன்னோக்கி விழுந்தால் அந்த நொடியில் ஸ்ரீராமர் தன்னை நோக்கிச் சரணம் என்று விழுந்துவிட்டானோ என்று அருள் புரிந்தாலும் புரிந்துவிடுவார்.  கடைசி வரை ராவணன் பெருமாளிடமிருந்து  விலகியே இருந்தான். வீழ்ந்தான்.

யுத்தத்தில் ஸ்ரீராமர் கையில் வில் இருக்கிறது எதிரே ராவணன் கையிலும் வில் இருக்கிறது. சண்டையில் ராவணனின் கையில் இருக்கும் வில் கீழே விழப் பெரியவாச்சான் பிள்ளை ”ராவணனை  வீரன்” என்று பாராட்டுகிறார்.
அதாவது நாம் அவனிடம் சரணம் என்று விழுந்தால் பெருமாள் தோற்றுவிடுவார்; நாம் வீரன் ஆகிவிடுவோம் !
ஸ்ரீராமன் காட்டுக்குச் சென்றது, அகலிகை, குகன், சபரீ, சுக்ரீவன், அனுமார், விபீஷணனைப் போன்ற பயிர்களைத் தோட்டத்தில் வளர்க்க. தோட்டத்தில் சில செடிகளின்  இலையில் ஒரு பூச்சி இருந்தால் அதைக் கிள்ளி எறிவது போல வாலி, ராவணனைக் கிள்ளி எறிந்தார் என்று சொல்ல வேண்டும்
பெரியாழ்வார்

“சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்” என்று தான் ’விரும்பிய சொல்’ என்கிறார்.
’வில்லாண்டான்’  என்றால் வில்லை வைத்து அடித்தான் என்பதில்லை வில்லை வைத்துக்கொண்டு அடிக்காமலிருந்தார் என்பது தான் அதன் சரியான அர்த்தம். ஸ்ரீராமனிடம்  கருணைக்கும் வீரத்துக்கும் போட்டி வந்தால் கருணை தான் ஜெயிக்கும்.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனையில் “கோடி நதுலு தனுஷ்கோடி”  என்ற பாடலில் “கோடி நதிகள் ராமனின் வில் நுனியில் ( தனுஷ்கோடி )  இருக்க ஓ மனசே நீ ஆறுகளுக்குத் திரிகின்றாயே” என்கிறார்.

சாரங்கம் என்றால் ஸ்ரீராமர் நினைவுக்கு வருவார்.  தனுஷ்கோடி (இதுவும் ஸ்ரீராமரின் வில் தான்) என்றால் விபீஷண சரணாகதி நினைவுக்கு வரும்.  முன்பு பார்த்த கதையில் அந்தச் சிஷ்யன் ”ஸ்ரீராமரின் வில்லே தஞ்சம்” என்று ஏன் சொன்னான் என்று புரிந்திருக்கும்.

Bottom line  : Rama has a bow, to defeat him, all you have to do his just bow !
🕉🙏🕉