Friday 10 January 2020

ரகுவீரம்

*ஆனந்த இராமாயணம்*
*ஸார காண்டம்*
*மூன்றாவது ஸர்க்கம் - 19*

ஒரு மாதம் கழித்து தசரதர் நான்கு புதல்வர்களோடும் நான்கு மருமக்களோடும் சுற்றத்தோடும் நட்போடும் நால்வகை சேனையோடும் அயோத்திக்குப் புறப்பட்டார். சீதையையும் அவள் சகோதரிகளையும் ஜனகராஜன் முதலான அரண்மனைவாசிகளும் மிதிலை நகர்வாசிகளும் பிரியாவிடை கொடுத்து அனுப்பினார்கள்.

சிறிது தூரம் கூடவே வந்த ஜனகராஜனைத் தசரதர், "ஜனகராஜரே! உமது பட்டணத்துக்குத் திரும்புக." என்றார்.

ஜனகர் கண் கலங்கினார். கண்ணில் நீர் மறைக்க தசரதரிடம், “தசரத மகாராஜரே, இவர்கள் நால்வரும் என் செல்ல மகள்கள். இனிமேல் அவர்கள் அனைவருக்கும் நீரே காப்பு. " என்று கூறினார். ஜனகராஜர் தம் பரிவாரங்களோடு மிதிலா நகர் புறப்பட்டார்.

தசரதர் தேரைப் பின்பற்றி மற்றவர் தம் பயணத்தை அயோத்தி நோக்குத் தொடர்ந்தனர்.

*பரசுராமர் - 1*

பயணமானது மூன்று காததூரம் வந்திருக்கும். சுற்றிலும் அமங்கல நிமித்தங்கள் தோன்றன. தசரதர் மனம் கலங்கி வசிஷ்ட முனிவரிடம், " தவ சிரேஷ்டரே! இப்போதுதான் சுப காரியத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்புகிறோம். இது என்ன! அபசகுனங்கள் தோன்றுகின்றன. காரணம் என்ன?" என்று கேட்டான்.

“தசரதா, இவை இப்போது வரப்போகும் இடர்களைத் தெரிவிக்கின்றன. ஆனால் கவலைப்படாதே. நம்மைச் சுற்றி சாத்வீக விலங்குகளான மான் கூட்டம் வலம் செல்கின்றன. எனவே நன்மையே விளையும் ." என்றார் வசிஷ்டர்.

இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே பெரும் காற்று சுழன்றது. நிலப்பகுதிகளில் உள்ள தூசிகளெல்லாம் காற்றுடன் சுழல, அவை அனைவரின் முகங்களிலும் அப்பிக் கண் திறக்க முடியாமல் தொந்தரவு செய்தன. குதிரைகள் மிரண்டன. அவற்றைப் பூட்டிய கயிறுகளைப் பிடித்து அடக்கத் தேரோட்டிகள் பிரயாசைப்பட்டனர். பூமியில் சிறியதொரு நடுக்கம் உண்டானது. அனைவரும் தள்ளாடினர். அவை அனைத்தும் மெள்ள மெள்ள அடங்குகையில் அவர்கள் முன்பு பரசுராமர் வந்து நின்றார்!

கார்த்தவீரியார்ஜுனனைக் கொன்றவர்; இருபத்தோரு முறை இப்பூமியைச் சுற்றி வந்து குறுக்கிட்ட சத்ரிய அரசர்களையெல்லாம் கொன்றொழித்தவர்; பிரகாசமாய் நீலமேகமொத்த  வண்ணமுடையவர். பரசு என்னும் ஆயுதம் ஒரு கையிலும் மறுகையில் வில்லேந்தியும் அவர்கள் முன்பாக நின்றார்.

நல்ல உயரத்துடனும் சிறந்த ஆகிருதியுடனும் கண்கள் கோபத்தால் பொறி பறக்க, முகம் சிவந்து, அனைவருக்கும் கூற்றுவன் என்று கூறத்தக்க விதத்தில் அவர்கள் முன்பு தோன்றினார்.

பரசுராமரைப் பார்த்தவுடன் தசரதர் மிகவும் நடுக்கமுற்றார். ஆனாலும் அவரைப் பணிந்து வரவேற்றார். பரசுராமரின் தாள் பணிந்த தசரதர், “என் மகன் இராமன் பாக்கியவானாவான்.” என்றார்.

ஆனால் பரசுராமர் தசரதரைப் பொருட்படுத்தவில்லை. கடுங்கோபத்துடன் இராமனிடம், “இராமா! சத்ரிய வம்சத்தின் தரத்தையே குறைத்துவிட்டாய். என் பெயரை வைத்துக் கொண்டுத் தவறுதலாக இந்தப் பிரபஞ்சம் முழுவதும் புகழடைந்து விட்டாய்?”

மேலும் சொன்னார்,

“நீ உண்மையான சத்ரியனாக இருந்தால், என்னுடன் போரிடு. பழைய, நைந்துபோன  வில்லொன்றை உடைத்துப் போட்டுவிட்டு உன்னை நீயே புகழ்ந்து கொள்கிறாய்! இரகு வம்சத்தைச் சேர்ந்தவனே! இதோ இந்த விஷ்ணு தனுசை நாணேற்றிக் காண்பி! நான் உன்னோடு போரிடாமல் விட்டுவிடுகிறேன்!

இல்லாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன்! சத்ரியர்களை அழிப்பதற்காகவே நான் பிறந்தவன்!"

பரசுராமர் மூர்க்கமாகப் பேசினார்.

"ஸ்வாமி! எனக்கு ஒரே ஒரு ஒழுக்க நியதிதான் உள்ளது. ஆனால் உங்களுக்கோ பல நியதிகள் உள்ளன. இரகு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பசுக்களை, பிராமணர்களை, பெண்களைத் தாக்குவதில்லை!” ஸ்ரீராமர் நிதானமாகப் பேசினார்.

“என்னுடன் சேர்த்து அனைவரும் உமது பாதங்களில் எமது உயிரைச் சமர்ப்பிக்கிறோம். நீர் விரும்புவதை விரும்பியதைச் செய்து கொள்ளலாம். நீர் விரும்பினால் எங்களைக் கொல்லலாம், ஆனால், நான் ஒருபோதும் பிராமணனோடு போரிட மாட்டேன்."

இராமனின் இந்த நிதானமான சொற்கள் பரசுராமரை மேலும் கோபப்படுத்தியது. பூமி நடுங்கிற்று. பெருங்கடல்கள் யாவும் காலங்கின. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இருள் சூழ்ந்தது.

சாது மிரண்டால் காடு தாங்காது! ஆனால் நிஜ சாது யார்? சாத்விக தசரதராமனுக்கும் கோபம் வந்தது. பரசுராமரின் கையிலிருந்த நாராயண வில்லைப் பறித்தார். தம் அம்பறா துணியிலிருந்து அம்பொன்றை எடுத்து, " பிராமணரே! என் வார்த்தைகளைக் கவனியுங்கள். இராமபாணம் வீணாகலாகாது. எதை நான் இலக்காகக் கொள்ள வேண்டும்? சொல்லுங்கள். இந்த மூவுலகையும் அழிக்க அனுமதி கொடுங்கள். இல்லை, உங்கள் பாதங்களை நோக்கி அம்பு விடவா?"

ஸ்ரீராமனின் சொற்களைக் கேட்டார் பரசுராமர். அவரது முகம் கவிழ்ந்தது. தமது வாழ்வில் நடந்த பழைய விஷயங்கள் அவரது நினைவுக்கு வந்தன. இப்போது பரசுராமர் நிதானமாகப் பேசத் தொடங்கினார்.

"நீள் தடக்கை உடைய இராமா, நீரே இந்த அண்டம் முழுமையும் படைத்தவர், காப்பவர், அழிப்பவர் என்பதை நான் உணர்கிறேன். நீரே பரமபுருஷர். புருஷோத்தமராகிய விஷ்ணு. என் பாலப் பருவத்தில் கோமதி நதியின் புனிதமான பகுதிக்குச் சென்று சாரங்கபாணியாகிய மஹாவிஷ்ணுவை வணங்கித் தவம் புரிந்தேன்.

இதற்குப் பிறகு சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றை உடைய விஷ்ணு என்னிடம், "பிராமணனே, தவத்தை விடுத்து எழுந்திரு. உன் தவவலிமையை உணர்ந்தேன். எனது சிறு அம்சமாகிய நீ, ஆயிரம் கைகளை உடையவனும் உன் தந்தை கஸ்யபரைக் கொன்றவனுமான கார்த்தவீரியார்ஜுனனை அழிப்பதன் மூலம் பூமாதேவியின் பாரத்தைக் குறைப்பாய். உன் தவ வலிமையின் மூலம் அவனை அழிப்பாய். இருபத்தோருமுறை இப்பூமியைச் சுற்றி வந்து சத்ரியர்களை அழிப்பாய். அந்த வெற்றியைக் கஸ்யபருக்கு அர்ப்பணித்த பிறகு உன் சினம் தணிந்து அமைதி பெறுவாய்.

திரேதாயுகத்தில், தசரதராஜனின் மகன் இராமனாக அவதரிப்பேன். அப்போது நீ என்னைச் சந்திப்பாய். அப்போது உனக்கு நான் அளித்த தேஜஸைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். அதன் பிறகு இந்தப் பிரபஞ்சத்தில் பிரம்மதேவனின் ஆயுள்காலம் முடிவடையும் வரைக்கும் தவம் செய்துகொண்டிருப்பாய்.” என்றார்.

பரசுராமர் மேலும் கூறினார்…

“இராமா, பிரம்மதேவரின் வேண்டுதலால் நீ இப்பூமியில் அவதாரம் செய்தாய். உன்னால் அளிக்கப்பட்ட திவ்ய காந்தியை(ஒளி) இன்று நீ மீள எடுத்துக்கொண்டாய். உன்னை நான் தரிசித்துப் பேசியதால் என்னுடைய வாழ்வு நிறைவுற்றது. வழிபடத்தக்கவனே இராமா! இந்தப் பிரபஞ்சத்தின் இறைவனே! காருண்ய இராமா! உனக்கு மரியாதை செலுத்துவதற்காகத் தலை வணங்குகிறேன். இவ்வுலகத்தை வெற்றிகொண்ட என்னால் விளைந்த நல்ல புண்ணியங்கள் அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். நீ அவற்றை உன் அம்பால் தொடுத்து எடுத்துக்கொள்வாயாக.”

இராமன், ஓர் அம்பினால் பரசுராமரது புண்ணிய பலன்கள் யாவையும் எடுத்துக்கொண்டார். அதன்பிறகு மகிழ்வடைந்த ஸ்ரீராமன், “பரசுராமா! நீ விரும்பிய வரத்தைக் கேள்.” என்றார்.

பார்கவராகிய பரசுராமர் மனமகிழ்ந்து சொன்னார், “மதுசூதன இராமா, நீ என்மீது அன்பு செலுத்துவாயெனில் உன் பக்தர் கூட்டத்தில் என்னைச் சேர்த்துக்கொள். எல்லையற்ற கருணையை எனக்கு அளிப்பாயாக.”
“அப்படியே ஆகட்டும்.” இராமன் அருள் புரிந்தார்.

பரசுராமர், இராமனை வலம் வந்து வணங்கினார். பின் இராமனின் அனுமதி பெற்று மகேந்திர மலைக்குத் தவம் புரியச் சென்றார்.

“பிரியமுள்ள பார்வதி! தேவர்களையெல்லாம் வென்றவன் இராவணன். அவனைத் தன் ஆயிரம் கரங்களால் சிறைப் பிடித்துவைத்தவன் கார்த்தவீரியார்ஜுனன். அப்படிப்பட்டவனை யுத்தத்தில் கணநேரத்தில் அழித்தார் பரசுராமர். அப்படிப்பட்ட பரசுராமரை ஓர் அம்பால் வெற்றி கொண்டார் இராமன்.  இராமனின் வீரத்தை எப்படி உன்னிடம் சொல்வேன்! எவ்வளவு சொன்னாலும் அவரது வீரத்துக்கு முடிவே இருக்காது!”

சிவபெருமான் பெருமையுடன் அன்னை பார்வதியிடம் சொன்னார்.