Tuesday 17 September 2019

கோவை மாவட்டத்திலுள்ள காரமடையிலுள்ள "அரங்கநாதர் திருக்கோயில்"

கோவை மாவட்டத்திலுள்ள காரமடையிலுள்ள "அரங்கநாதர் திருக்கோயில்" பற்றிய தகவல்களைக் காணலாம்.   

அரங்கநாதர் திருக்கோயில், காரமடை, கோவை மாவட்டம், தமிழ்நாடு

மூலவர்: அரங்கநாதர்
தாயார்: அரங்கநாயகி
உற்சவர்: வெங்கடேச பெருமாள்
தலமரம்: காரை மரம்
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், கருட தீர்த்தம், அஷ்ட தீர்த்தம்

சிறப்பு:
1. லிங்க வடிவில் பெருமாள் அருள் புரியும் ஒரே திருத்தலம்.
2. சடாரிக்கு பதிலாக ராமபாண சேவை வழங்கப்படுகிறது.
3. பெருமாள் சமவெளியிலும், தாயார் அருகிலுள்ள மலைமீதும் அருள்பாலிக்கின்றனர்.

ஊர்: காரமடை, கோவை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

பயண வழிகாட்டல்:
1. கோவையிலிருந்து சுமார் 26.8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
2. மேட்டுப்பாளையத்திலிருந்து சுமார் 7.8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
3. அன்னூரிலிருந்து சுமார் 19.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தலவரலாறு:
ஒருமுறை பெருமாளின் திருமண கோலத்தை தரிசனம் செய்ய ஆவல் கொண்டார் கருடாழ்வார். அவரின் ஆவலை பூர்த்தி செய்ய திருவுளம் கொண்ட பெருமாள், துணைவி ஸ்ரீதேவியுடன் இத்தலம் வந்து, கருடாழ்வாருக்கு திருமண கோலத்தில் திருக்காட்சி அருளினார். பிறகு இத்தலத்தில் நித்திய வாசம் கொண்டார். காலங்கள் உருண்டோடின. பசுக்களை மேய்க்கும் இடையர் குலத்தவன் ஒருவன், தன்னிடமிருந்த பசுக்களில் ஒன்று மட்டும் பால் சுரக்காமல் இருப்பதை உணர்ந்தான். உண்மையைக் கண்டறிய மறுநாள் அந்த பசுவை மட்டும் கண்காணித்தான். சிறிது நேரத்திற்கு பிறகு மந்தையை விட்டு விலகி சென்ற பசுவை பின்தொடர்ந்தான். குறிப்பிட்ட ஒரு புதரில் பசு தானாகவே பால் சொரிவதைக் கண்டு வியந்தான். அங்கு அப்படி என்ன இருக்கிறது என்ற ஆவல் எழ, புதரை வெட்டினான். வெட்டிய இடத்தில் குருதி பீறிட, மேலும் ஆராய அஞ்சிய அவன் ஊருக்குள் திரும்பினான். தான் கண்டதை ஊர் மக்களிடம் கூறினான். வியந்த மக்கள் ஒன்று கூடி, இடையன் கூறிய இடத்திற்கு சென்று, கவனத்துடன் புதரை நீக்கினர். அந்த இடத்தில சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருந்த சதுர வடிய கல்லைக் கண்டனர். ஆனந்தம் கொண்டனர். இருப்பினும், சுயம்பு மூர்த்தியானது சிவபெருமானா அல்லது பெருமாளா என்று ஊர்ஜிதம் செய்ய முடியாமல் திகைத்தனர். பிட்சு மண்டராயர் என்ற பக்தரின் கனவில் தோன்றிய பெருமாள், காரை மரங்கள் நிறைந்த அந்த வனத்தில் தானே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருப்பதாக கூறினார். அதன் பிறகு, பெருமாளுக்கு திருக்கோயில் எழுப்பப்பட்டது என்பது தலவரலாறு.

தலபெருமைகள்:
1. பெருமாளின் லிங்கவடிவ சுயம்பு திருமேனியை இத்தலத்தில் மட்டுமே தரிசனம் செய்ய இயலும். சுயம்பு திருமேனி சதுர வடிவில் உள்ளது. மேலும், வெட்டு பட்ட தழும்பு காணப்படுகிறது.
2. மலைமேல் அருள்புரியும் தாயாரை "பெட்டத்தம்மன்" என அழைக்கின்றனர். திருமண கோலத்தில் கருடாழ்வாருக்கு திருக்காட்சி அருளிய பெருமாளுக்கும், தாயாரான பெட்டத்தம்மனுக்கும் மாசிமாதம் நடைபெறும் பிரம்மோட்சவத்தின் ஐந்தாம் நாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சமவெளியிலிருக்கும் திருக்கோயிலிலிருந்து அர்ச்சகர் மலை கோயிலுக்கு சென்று, கும்பத்தில் தாயாரை எழுந்தருள செய்து, மீண்டும் திருக்கோயிலுக்கு திரும்புவார். தாயாரை வரவேற்கும் வைபவத்தின் போது, கருவறையிலிருக்கும் ராமபாணதிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. பிறகு கும்பத்தை கருவறையில் வைத்து பூஜை செய்யப்படுகிறது. மறுநாள் காலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதுவே ஆதி காலத்திலிருந்து உள்ள கோயிலின் அமைப்பு. பக்தர்கள் அனைவராலும் மலைமேல் உள்ள தாயாரை தரிசனம் செய்வது சிரமம் என்பதால், பிற்காலத்தில் பெருமாள் சன்னதிக்கு வலப்புறம் தாயார் சன்னதி எழுப்பப்பட்டது.
3. பொதுவாக அணைத்து திருக்கோயில்களிலும் மூலவருக்கு அருகில் உற்சவர் அருள்புரிகிறார். மாறாக, இத்திருத்தலத்தில் கருவறையில் மூலவரும், முன் மண்டபத்தில் உற்சவரும் சேவை சாதிக்கின்றனர். உற்சவர் ஒருபோதும் கருவறையினுள் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் உண்டு. சிறிய சுயம்பு மூர்த்தியான மூலவர், உற்சவரால் மறைக்கப்படக் கூடாது என்பதே அந்தக் காரணம்.
4. இத்திருத்தலத்தின் மூலவர் சன்னதியில் சடாரி சேவை இல்லை. மாறாக ராமர்பாண சேவை வழங்கப்படுகிறது. இந்த ராமர்பாணத்தினுள் சக்கரம் மற்றும் ஆதிசேஷனின் ஆக்கம் இருப்பதாக ஐதீகம். உற்சவர் சன்னதி அருகில் சடாரி சேவை உண்டு.
5. மூலவரின் கோஷ்ட மூர்த்திகளாக வேணுகோபாலன், ராமர் மற்றும் கோபிகை பெண்களின் திருவுருவங்கள் உள்ளன.
6. பிரம்மோட்சவத்தின்போது நடைபெறும் கவாள சேவை, தண்ணீர் சேவை மற்றும் பந்த சேவை இத்தலத்திற்கே உரிய தனித்துவங்களாகும்.