Saturday 26 September 2020

புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் தான் திருமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் நம் அனைவரையும் காக்கும் பொருட்டுத் தோன்றினார்

பெருமை மிகு புரட்டாசி ! புரட்டாசி என்றாலே நம்முடைய நினைவிற்கு வருபவர் பெருமாள் தான் ! ஆம். புரட்டாசி மாதம் திருமால் வழிபாட்டில் மார்கழிக்கு இணையான இடம் பெற்றுத் திகழ்கின்றது. ஆண்டாளுடைய பாவை நோன்பினால் மார்கழி மாதத்திற்குப் பெருமை. கலியுக தெய்வம் திருமலையப்பனுடைய தோற்றத்தினால் புரட்டாசி மாதத்திற்குப் பெருமை. ஆம். புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் தான் திருமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் நம் அனைவரையும் காக்கும் பொருட்டுத் தோன்றினார்


. பொதுவாக ஓரோர் நட்சத்திரத்திற்கும் அதிதேவதையாக ஓரோர் தெய்வம் உண்டு. அந்த வகையில் திருவோண நட்சத்திரம் மஹாவிஷ்ணுவுடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது. ஆக பெருமாள் நட்சத்திரத்தில் பெருமாள் தோன்றினார். பெருமாள் என்றால் பெரும் ஆள் ( மிகப் பெரிய ஆள் ) , பெருமை மிகு ஆள் என்றெல்லாம் பொருள்கள் உண்டு. ஈடு இணையற்றவராகையால் அவர் பெருமாள் எனப்படுகிறார். நம்மாழ்வார் அவனை அயர்வறும் அமரர்களதிபதி என்று போற்றுகிறார். ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயன் என்று பாடுகின்றார். உலகைப் படைத்துக் காத்து இரட்சிக்கும் உயரிய தன்மையினால் வரும் பெருமையினாலும் அவர் பெருமாள் எனப்படுகிறார். பல பெருமைகள் அவருக்கு இருப்பினும்; அவர் ஒப்பற்றவராயினும் தன்னுடைய அடியவர்களிடத்தில் மிகுந்த அன்புடையவர்; அவர்களுக்கு வசப்பட்டவர் என்பதே அவருக்குத் தலையாய பெருமை. ஆழ்வார்கள் இறைவனுடைய அந்த நீர்மைக் குணத்திற்குத் தோற்று, பாசுரங்கள் பாடுகின்றார்கள். நம்முடைய பாவங்களை அழித்து தன்னையே நமக்கு நல்கிடும் தயாளன் அவன். அதனால் தான் அவனுக்குத் திருமால் என்று பெயர். மால் என்றால் கருமை, பெருமை, அளவற்ற அன்பு என்றெல்லாம் பொருள்கள் உண்டு. கண்ணனென்னும் கருந்தெய்வம் என்று பாடுகிறாள் ஆண்டாள். பக்தர்களிடத்தில் அளவற்ற அன்புடையவன். அதனால் தான் வைகுந்தத்துறையும் அந்த இறைவன் இங்கே நிலவுலகில் பல திருத்தலங்களில்; முக்கியமாக வேங்கடத்துச்சியில் ( திருமலை திருப்பதியில் ) நம் கண்களுக்கு விருந்தாகின்றான். வேங்கடம் என்றாலே பாவங்களைப் போக்குமிடம் என்று தான் அர்த்தம். ( வேம் என்றால் பாவம்; கடம் எரித்து நீறாக்குதல் என்று பொருள் ) பாவங்களைத் தொலைக்கத் தானே நாம் படாத பாடு படுகிறோம்.. கவலைப்படாதீர்கள்..புரட்டாசிப் பெருமாளான ஸ்ரீநிவாசனை வணங்கி வழிபடுங்கள். பாவங்களிலிருந்து விடுபடுவீர்கள். கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக ஸ்ரீநிவாசப் பெருமாள் போற்றப்படுகின்றார். பக்தர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதொன்றையே குறிக்கோளாகக் கொண்டு உயர்ந்த அந்த மலையின் மேல் இறைவன் நிற்கின்றான். திருப்பதிக்குச் சென்று வந்தால் திருப்பம் வரும் என்கிற வசனம் பிரசித்தமானது. ஆம் ! அழுகை பீறிட ஓடி வரும் குழந்தைக்குத் தன் தாய் மடியே புகலாவது போல்; ஸம்ஸார தாபங்களால் துவளும் அடியவர்களுக்கு மலையப்பனுடைய திருவடிகளே புகலாக விளங்குகின்றது. ருக் வேதமும் மேற்சொன்ன கருத்தை உறுதிப்படுத்துவதைக் காண்போம். மனிதர்கள் ஆசைகளுக்கு வசப்பட்டு வாழுபவர்கள். பல நோக்கங்கள், குறிக்கோள்கள், பயன்கள் என்று தொடர்ச்சியான தேடலும் ஓட்டமுமே அடையாளமாகிப் போனவர்கள். என்ன தான் முயற்சிகளுக்குக் குறைவில்லையென்றாலும் பலருக்கு வெற்றிக்கனி அது எட்டாக்கனியாகவே இருப்பதையும் நாம் பார்க்கிறோம். தொடர்ச்சியான தொய்வில்லாத முயற்சிகளோடு; இறையருளும் சேர்ந்து கொண்டால், ஒருவன் வெற்றி பெறுவதற்குத் தடையே இல்லை. ஒரு சிலர் இம்மையில் இன்பங்களை விரும்புகின்றனர். ஒரு சிலர் மறுமையில் நல்லுலகங்களைச் சென்று சேர்ந்து நெடுங்காலம் சௌக்கியமாக வாழ ஆசைப்படுகின்றனர். அந்தமில் பேரின்பத்தை எதிர் நோக்கி நிற்கின்றவர்களும் உண்டு. ஆசை மட்டும் இருந்தால் போதுமா ? அறிவும் திறமையும் இருந்தால் இம்மை & மறுமைச் செல்வங்கள் நம் கை வசம் வரக் கூடும். பெரும்பாலும் நம்மிடத்திலே ஆசை மட்டும் தான் உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் அறிவோ ஆற்றலோ நம்மிடம் இராது. அப்படிப்பட்ட நிலையில் நாம் என்ன செய்வது ? வெறுங்கையால் முழம் போடுவது போல் வெறும் ஆசையை வைத்துக் கொண்டு நாம் பெருப்பெருத்த பலன்களை அறுவடை செய்ய முடியுமா ? முடியும் என்கிறது ருக் வேதம். அதோடு அதற்கான வழிமுறையையும் நமக்குச் சொல்லித் தருகிறது. சுலபமான வழி தான் ! இரண்டு காரியங்களை நாம் செய்தால் போதும் ! நம் எண்ணங்கள் யாவும் நிறைவேறி விடும். அதெப்படி அத்தனை உறுதியாக நீங்கள் சொல்லுகிறீர்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்பக் கூடும். சிந்தித்துப் பாருங்கள் அன்பர்களே ! வேதம் ஒரு போதும் பொய்யுரைக்காது. ' வேத நூல் ஓதுகின்றது உண்மையல்லதில்லை '. எனவே வேதத்தை நம்பி நாம் அது சொன்ன வழியில் அடியெடுத்து வைத்தால் வேத்யன் ( இறைவன் ) நம்மை நோக்கி வரத் தொடங்கி விடுவான். சரி ..நாம் செய்ய வேண்டிய இரண்டு காரியங்கள் என்னென்ன என்று பார்ப்போம். முதலில் நீங்கள் திருமலையப்பனுடைய பக்தர்களிடம் நல்லிணக்கத்தைப் பேணுங்கள். அவர்களோடு கூடுங்கள். ஆண்டாளும் 'கூடியிருந்து குளிர்ந்து' என்று பாடினாளன்றோ ! எனவே அவர்களுடன் சேர்ந்து திருமகளுக்குத் தன் திருமார்பில் இடம் தந்த பெருமான் உறையும் மலையை நாடிச் செல்லுங்கள். அகலகில்லேனிறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பன் என்று போற்றப் படுகின்ற எம்பெருமானைச் சிந்தையில் நிறுத்திப் புறப்படுங்கள். கவலைகளைக் கவனத்தில் கொள்ளாதீர்.. கோவிந்தா கோஷம் உங்கள் வசமிருக்கட்டும். கோவிந்தா கோஷம் உங்கள் வசமிருந்தால்; உங்கள் கவலைகள் / கோரிக்கைகள் தாமாகவே இறைவன் வசத்திற்கு, அவன் அருட்பார்வைக்குச் சென்று விடும். கவலைகள் தீர்க்கப்பட்டு; உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். வேதம் நமக்குச் சுலபமான வழியைத்தானே சொல்லியுள்ளது. செய்வோமா.. கோவிந்தா கோஷத்துடன் நீங்கள் தயாரா ?! கோவிந்தா ! கோவிந்தா !! கோவிந்தா !

No comments:

Post a Comment