Wednesday 23 September 2020

மாடத்தி அம்மன் வரலாறு

மாடத்தி அம்மன் வரலாறு


திருச்செந்தூரிலிருந்து  சாத்தான்குளத்திற்கு போகும் வழியில் இருக்கிறது பன்னம்பாறை. இங்கு தனது சகோதரர்களால் கௌரவ கொலை செய்யப்பட்ட மாடத்தி, தெய்வமாக வணங்கப்படுகிறாள். பன்னம்பாறை கிராமத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த முருகேச பாண்டியன்-முத்துபேச்சியம்மாள் தம்பதிக்கு வரிசையாய் ஏழு ஆண் குழந்தைகள். தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என இருவரும் குல தெய்வமாம் சுடலைமாடனை நேர்ந்துகொள்ள, மறுவருடமே முத்துபேச்சி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். மாடனின் அருளால் பிறந்ததால் மாடத்தி என்று பெயரிட்டனர். மாடத்தியின் பத்து வயதில் தாய், தந்தையர் மாண்டு போனார்கள். பெற்றோர் இல்லாத குறையே தெரியாதபடி, ஏழு அண்ணன்மார்களும், அண்ணியரும் மாடத்தியை செல்லமாக வளர்த்து வந்தனர். குடும்பத்து குலவிளக்கான மாடத்தியை, அவள் மனம் நோகும்படியாக எந்த ஒரு வார்த்தையையும் பேசியதில்லை. சகோதரர்கள் நாட்டாண்மை செய்து வந்தனர். இவர்கள் தீர்ப்புக்கு கிராம மக்கள் கட்டுப்பட்டனர்.


ஒருமுறை பன்னம்பாறையை சேர்ந்தவருக்கும், அடுத்துள்ள பூச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதை மாடத்தியின் அண்ணன் கந்தையாபாண்டியன் தீர்ப்பு கூறி பிரச்னையை தீர்த்து வைத்தார். பொதுவாக இதுபோன்ற தீர்ப்புகளில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக ஒரு குறை மக்களிடையே உண்டு. மாடத்தி பருவம் அடைந்ததும், பூச்சிக்காடு கிராமத்திலிருந்து அருணாசலத்தேவர் தனது மகனுக்கு பெண் கேட்டு, மாடத்தியின் அண்ணன்மார்களிடம் தாம்பூல தட்டோடு வந்தார். அவரை வரவேற்ற அண்ணன் கந்தையா பாண்டியன் தங்கைக்கு இன்னும் ஒரு ஆண்டு முடிந்துதான் திருமணம் செய்யவேண்டும் என்று ஜோதிடர் கூறியிருக்கிறார் என்று கூறி, அவரை மரியாதையோடு அனுப்பி வைத்தார். இதற்குப் பிறகு, கந்தையா பாண்டியன் மீது வெறுப்புற்றிருந்த ஒருவர், அருணாசல தேவரிடம் சென்று, ‘‘மாமா, நீங்க ஏன் கந்தையா வீட்டுக்கு பெண் கேட்டு போனீங்க? அவனுங்க நம்ம ஊரை கேவலமா பேசுறானுங்க, புத்தி கெட்டவன்தான் பூச்சிக்காட்டுக்கு பெண் கொடுப்பான் என்று சொல்றானுங்க’’ என்று கூற, அருணாசலத்தேவர், கந்தையா பாண்டியன் குடும்பத்தினர் மீது பகை கொண்டார்.


இதைப் பிறர் மூலம் அறிந்த கந்தையா பாண்டியன், ‘இந்த சூழ்நிலையில் அவரிடம் விளக்கம் எதுவுமே சொல்ல முடியாது, எப்படி சம்பந்தம் பேச முடியும்? இனியும் தங்கையை அங்கே கட்டிக் கொடுத்தால், அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையுமா என்பது சந்தேகம்தான்’ என்று உணர்ந்து உடனடியாக மாடத்தியை ஒட்டன்புதூர் குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டிக்கு மணமுடித்து கொடுத்தனர். இதனால் பூச்சிக்காட்டாருக்கு பன்னம்பாறை கந்தையா பாண்டியன் குடும்பத்தார் மீது பகை அதிகமானது. ஒட்டன்புதூர் குளம் கிராமத்தில் மாடத்தியும், செல்லப்பாண்டியும் நல்ல அன்போடும், பண்போடும் இல்லறம் நடத்தி, சுடலை முத்து என்றும், இசக்கி என்றும் ஆண், பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். கொழும்பு சென்று பொருள் ஈட்ட எண்ணினார் செல்லப்பாண்டி. மாடத்தியும் முழுமனதின்றி, கொண்டவன் எண்ணத்திற்கு குறுக்கே நிற்கக்கூடாது என்றெண்ணி வழியனுப்பி வைத்தாள். செல்லப்பாண்டி கொழும்புக்கு சென்ற பின்னர் மாமியாருடன் ஒத்துப்போகாததால் பிறந்த வீட்டுக்கு பிள்ளைகளுடன் வந்தாள் மாடத்தி. அவளையும், குழந்தைகளையும் அன்புடன் அரவணைத்தனர் அண்ணன்மார்களும், அண்ணியர்கள்.திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசிமாத திருவிழா நடந்துகொண்டிருந்தது. தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு, அண்ணமார்கள் துணையோடு மாடத்தி திருவிழாவிற்கு சென்றாள். அங்கே மகனையும், மகளையும் ராட்டில் ஏற்றிவிட்டாள். ராட்டை நின்றதும், மகளை எடுக்கச்சென்றாள். பக்கத்தில் நின்ற ஒருவர் உயர நின்ற ராட்டிலிருந்து மகளை எடுத்து மாடத்தியிடம் கொடுக்க, மாடத்தி மகளை வாங்க, இதை பூச்சிக்காட்டை சேர்ந்த சிலர் பார்த்தனர். இதை அறியாத மாடத்தி, திருவிழா முடிந்து அண்ணிகளுடன் வீட்டுக்கு வந்தாள். இரண்டு வாரத்திற்குப் பிறகு சாத்தான்குளத்தில் ஒரு பஞ்சாயத்து - பூச்சிக்காட்டைச் சேர்ந்தவருக்கும், அவரது குடும்பத்தை சேர்ந்த பன்னம்பாறைகாரர் ஒருவருக்கும் இடையே. அதற்கு கந்தையா பாண்டியன் சகோதரர்கள் பன்னம்பாறைக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னதால் ஆத்திரப்பட்ட பூச்சிக்காட்டுக்காரர்கள் கந்தையா பாண்டியனை பார்த்து, ‘‘ஊருக்கு எல்லாம் நியாயஞ்சொல்லும் உன் குடும்ப கௌரவத்தை, உன் உடம்பிறந்த குழி தோண்டி புதைச்சிட்டா’’ என்றார்.


‘‘என்னலே! செல்லுதே?’’ என்று கோபத்துடன் எழுந்தான் சகோதரன் சுடலைமுத்துபாண்டியன். ‘‘மாசி திருவிழாவில, உன் தங்கச்சி மாடத்தி, எவனோ ஒருத்தன் கூட ஜோடி போட்டு ராட்டினம் ஆடினாளே, அவளுக்கு என்ன தீர்ப்ப சொல்லப்போற?’’ என்ற கூறி, நாகூசும் அளவுக்கு பேசினர், பூச்சிக்காட்டை சேர்ந்தவர்கள். உடனே அந்த இடத்திலிருந்து கடும் சினத்துடன் புறப்பட்டனர் கந்தையா பாண்டியனும் அவரது தம்பிகளும். வீட்டுக்கு வந்த அவர்கள் தீவிரமாக ஆலோசித்தனர். ‘தாயி... தாயி’ன்னு பாசமா வளர்த்த தங்கச்சி, நாலுபேரு சபையில கேவலப்படுத்திட்டாளே’ என்று எண்ணி, அவள் மரணம் மட்டுமே இதற்கு சரியான தீர்வு எனவும் முடிவு செய்தனர்.  மறுநாள் காலையில் சந்தன பாண்டியன், தங்கையிடம், ‘‘தாயி, விறகு வெட்டப்போணும். ஓலைப்பெட்டியை எடுத்துக்கிட்டு கல்லாட்டாங்குடி தோட்டகாட்டுக்கு  விரைசல வந்து சேரு’’ என்று கூறிவிட்டு வேகமாக முன்னே சென்றான். ஏழு பேரும் கல்லாட்டாங்குடி ஆலமரத்து கிளைகளில் அமர்ந்து கொண்டனர். குலசாமியை வேண்டிக்கொண்டனர். ‘ஐயா, நம்ம குடும்ப கௌரவத்துக்கு பங்கத்தை ஏற்படுத்திட்டா உடம்புறந்தா.


அதனால இந்த முடிவு எடுத்திருக்கிறோம். எங்களை மன்னிச்சிரு அப்பனே’ என்று வேண்டிக்கொண்டனர். தங்கச்சி வந்து விறகு எடுக்க வேண்டும் என்பதற்காக, காய்ந்த மரக்கிளைகளை கொஞ்சம் வெட்டிப்போட்டிருந்தனர். வீட்டிலிருந்து மாடத்தி புறப்பட்டபோது, மகன் சுடலை தடுத்தான். ‘‘ஆத்தா, நானும் உங்கூட வாரேன்,’’ என்றான். ‘‘வேண்டாம் அய்யா, ஆத்தா முள்ளு காட்டுக்குப் போறேன், நீ வீட்டுல உக்காந்து விளையாடிட்டு இருய்யா’’ என்று ஆறுதல் கூறினாள். வீட்டின் தலை நடை அவள் தலையை தட்டியது. அப்போது மூத்த அண்ணி குறுக்கிட்டு, ‘‘மாடத்தி இருந்து போம்மா,’’ என்றாள். இரண்டாவது அண்ணி, ‘‘இந்தாம்மா தண்ணி குடிச்சிட்டு போ,’’ என்று நீர் நிரம்பிய செம்பை கொடுத்தாள். மாடத்தியும் சிறிது குடித்துவிட்டு புறப்பட்டாள். தெருவில் எருமை மாடு கத்தியபடியே எதிரே வந்தது. தெருமுனையில் நாய்கள் ஊளையிட்டன, கறுப்பு பூனை மாடத்தியை கடந்து சென்றது. எதையும் பொருட்படுத்தாமல் அண்ணன்மார்கள்மீது கொண்ட பாசம், பயம் காரணமாக நடையை வேகப்படுத்தினாள். கல்லாட்டாங்குடி ஆலமரத்தடி வந்து சேர்ந்தாள். இரண்டாவது அண்ணன் சுடலை முத்து பாண்டியன், ‘‘விறக  வேகமா எடு தாயி,’’ என்றான்.


மாடத்தியும் குனிந்து இரண்டு சுள்ளி விறகு எடுக்கையில் மரக்கிளையிலிருந்து கீழே குதித்த கந்தையா பாண்டியன், வீச்சருவாளால் தனது தங்கையின் கழுத்தில் வெட்ட, மாடத்தியின் தலை தனியே போய் விழுந்தது. கோபத்துடன் அவள் ராட்டினம் ஆடியது, குலத்திற்கு களங்கம் சேர்த்தது என்ற குற்றச்சாட்டுகளை வார்த்தைகளாய் கொப்பளித்தான். விழுந்த தலை பேசியது. ‘‘அண்ணே, எவன் பேச்சையோ கேட்டு, என்னை இப்படிப் பண்ணிட்டியே, என் புள்ளங்களும், புருஷனும் வந்து கேட்டா என்ன பதில் சொல்லுவீக? ஏழு அண்ணன்மார்களிலே ஒருத்தனுக்குக் கூடவா தங்கச்சிங்குற இரக்கம் இல்லாம போச்சு? நான் எந்த தப்பும் பண்ணலையே! மூத்தவனே, இனி உன் வம்சத்துல புள்ளைகளே புறக்காது, கொள்ளிக்கே புள்ளையத்து கொடி முடிந்து போவே. பக்கத்துணை இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் அண்ணன்மார்களே, உங்க பரம்பரையில இனி எந்த உசுரும் தங்காது. என் சுடைலமாடசாமி, நீ இருக்கிறது உண்மையானா இவனுங்களை நீரே கேளும்..’’ என்று சபித்தபடி அவள் கண்களை மூட, தனியே கிடந்த அவள் உடல் துடிதுடிக்க, முண்டமாக கிடந்த உடலிலிருந்த கைகள் மண்ணை அள்ளி வீசியபடி அடங்கியது. உடனே சகோதரர்கள் மாடத்தியின் உடலை எரித்தனர். அவளது தலையை மண்ணில் புதைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர்.


வீட்டில் மாடத்தியின் பிள்ளைகள், ‘‘மாமா, எங்க ஆத்தாவ எங்க மாமா?’’ என்று கேட்டு அழுதன. ‘‘ஆத்தா வருவா,’’ என்று ஆறுதல் கூறியவாறு மருமகளை தோளில் தூக்கினான் மாமன். அவனையறியாமல் கண்ணீர் வழிந்தது. அப்போது மருமகள் கூறினாள். ‘‘ஏன், மாமா கண்ணீர் விடுற? நம்ம சுடலைமாடசாமி இருக்கு. எங்க ஆத்தா சொல்லியிருக்கு, சாமி நம்ம கூடவே இருக்காமே’’ என்றதும் இவன் கண்களில் நீர் பெருகியது. அடுத்த நாள் அதிகாலையில் நாய் ஒன்று மாடத்தியின் தலையை கவ்விக்கொண்டு அவர்கள் வீட்டு தெருவில் கொண்டு போட, மாடத்தியின் தோழி ஓடி வந்து ‘‘அண்ணேன், நம்ம மாடத்தி தலை,’’  என்று அலறினாள். அதன் பின்னரே அனைவருக்கும் மாடத்தி இறந்தது தெரியவந்தது. அன்றிலிருந்து பதினாறாவது நாள் மூத்த அண்ணன் இறந்தான், மாடத்தியை தவறாக பேசியவர்கள் மட்டுமன்றி பூச்சிக்காடே அழிந்து போயிற்று, மாடத்தியின் குடும்பத்திலும் ஒவ்வொருவரும் தொடர்ந்து இறந்திட அவர்களின் வாரிசுகளும் மாடத்தியின் வாரிசுகளும் மாடத்தியை சாந்தம் அடையச் செய்து அவள் இறந்த இடத்தில் கோயில் எழுப்பி பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இன்று அந்த ஊரில் மாடத்தி தெய்வமாக நின்று அருள்பாலிக்கிறாள்...

No comments:

Post a Comment