Tuesday 16 June 2020

திருமூலர பகுதி – 1/8

திருமூலர்

                பகுதி – 1/8

சிந்திக்க  வைக்கும்  சித்தர்கள் தொடரின்  முதல்  பகுதியில் நாம்  **போகர்  சித்தரின்  மாயாஜாலங்கள்**  என்ற  தலைப்பில்  அவரது  மந்திர ஜாலங்களை பற்றி  மூன்று பகுதிகளாக  பார்த்தோம்.

அதன்  தொடர்ச்சியாக  இந்தப் பகுதியில்  பள்ளிக்கரணை அன்னை  ஆதிபராசக்தி ஆலயத்தில்,  மந்திரப்பாவை அன்னையின்  முன்னர்  யோக நிலையில்  வீற்றிருந்து அருள்பாலிக்கும்  18  தமிழ் சித்தர்களில்  ஒருவரான *திருமூலர்  சித்தரை  பற்றியும்* அவர்  செய்த  சில  ^சித்துக்களைப்   பற்றியும்^  நாம்  காண  இருக்கின்றோம்.

திருமூலர்  என்றாலே  நமக்கு ஞாபகம்  வருவது  *திருமந்திரம்*   என்ற 
மந்திர  நூல்  மட்டுமே.

வாங்க  சில  பிரபலமான திருமந்திரங்களை  முதலில் பார்க்கலாம்.

சிலருக்கு  இதை  முதன் முதலில்  சொன்னவர் திருமூலரா?   இல்லை  நான் இதை  சொன்னது  பிரபலமான அரசியல்  தலைவர்  அல்லது சினிமா  வசனம்  என்றல்லவா நினைத்தேன்!”  என்று ஆச்சரியமாகக்கூட  இருக்கும்.

மேலும்  *அய்யன் திவள்ளுவருக்கும்* ^^திருமூலருக்கும்^^ நெருங்கிய தொடர்பு   உள்ளது என்பதற்கான  ஆதார பூர்வமான  பதிவை  2018  லேயே  பதிவு  செய்துள்ளோம், அதையும்  தவறாமல்  லிங்க்கை க்லிக்  செய்து  காணுங்கள்.

"யான்  பெற்ற  இன்பம்  பெறுக இவ்வையகம்".   -மந்திரம்: 85

அன்பே  சிவம் - "அன்பும் சிவனும்  இரண்டென்பர் அறிவிலார்"- மந்திரம்: 270

"ஒன்றே  குலமும்  ஒருவனே தேவனும்".          -மந்திரம்: 2104

"யாவற்கும்  ஆம்  இறைவற்கு ஒரு  பச்சிலை".    -மந்திரம்: 252
           
  இந்த  மகான்  சுமார்  5000 ஆண்டுகளுக்கு  முன்பே வாழ்ந்ததாக  சொல்லுவார்கள். காரணம்  இவர் ^திருவாவடுதுறையிலுள்ள சிவன்  ஆலயத்தில்^   யோக நிலையில்   வீற்றிருந்து வருடத்திற்கு  ஒரு   நாள்  யோகம்  கலைந்து  எழுந்து,  அன்று  தம்  சிவ  வழிபாடுகளை  செவ்வனே  ஆலயத்தில்   முடித்து,   ஆலய   முகப்பில்   இருக்கும்   அரச  மரத்தடியில்   அமர்ந்து  ஒரு  மந்திரம்   அன்று  எழுதி  முடித்து  மீண்டும்  யோக  நிலைக்கு  சென்று   விடுவார்.

  இவ்வாறு  3000  பாடல்கள் எழுதியதால்  இந்த   காலகட்டம் 3000   ஆண்டுகள்  ஆகிறது. மேலும்  *திருவள்ளுவர்*  திருமூல   நாயனாரை தம்முடைய   குருவாக   ஏற்றுக்   கொண்டதாக  ^திருவள்ளுவரே^   "ஞான வெட்டியான்"  என்ற  நூலில்
148  வது  பாடலில் தெரிவித்துள்ளார்.

“நிசதியினால்  சரீரத்தில் வாய்வுக்  கெல்லாம்
நிஷ்களமா  யதிகாய  நிலைத்த தாண்டே
இசைத்ததிரு  மூலனா  ருரைத்த வண்ண
மினியதொரு  ஞானவெட்டி யியம்பி  னேனே."

 திருவள்ளுவர்  காலமும்  சுமார் கிமு  2050  ஆண்டுகளுக்கும் முன்  என  சொல்லப்படுகிறது. இதனால்  திருமூல  நாயனார் சுமார்  5000  ஆண்டுகளுக்கு முன்பே   ஆன்மிக தத்துவங்களை   உலகுக்கு அளித்த  முன்னோடி   என தெரிகிறது.

 இதன்  மூலம்  ஆன்மீகயியல் என்பது  இந்தியாவில்  5000 வருடங்களுக்கு  முன்பிருந்தே தொடர்ந்திருக்கிறது  என்பது தெரிய  வருகிறது.

  சிலர்  கூறுவது  போல்  ஓரிரு ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பு   நுழைக்கப்பட்ட   ஆன்மிகம் அல்ல   என்பதைனையும் அறியலாம்.

திருமூலர்  என்கிற  பெயர் வரக்காரணம்  என்ன  என்பதை முதலில்  பார்க்கலாம். வாங்க…

 இவரின்  இயற்  பெயர் *சுந்தரநாதன்*  என கூறப்படுகிறது.  இவர் கயிலையில்  நெடுங்காலம் தங்கி  யோகம்  புரிந்தவர். இவர் நந்தி  என்று  கூறும்  சிவனின் சீடராக  இருந்து   உபதேசம் பெற்றதாக  கூறுகிறார்,

 அத்துடன்  இவருடன்  சக சீடர்களாக  மேலும்  7  பேர் பயின்றதாக  இவர்  தம் பாடலில்  எழுதியுள்ளார் (மந்திரம்:67).

“நந்தி  அருள்பெற்ற  நாதரை நாடின்
நந்திகள்  நால்வர்  சிவயோக மாமுனி
மன்று  தொழுத  பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர்  என்னோடு எண்மரும்  ஆமே.”

அதாவது,   நந்தியம்  பெருமானிடத்தில்   உபதேசம் பெற்ற  சீடர்கள்  நந்தியென பெயர்  கொண்ட  4  வரும், சிவயோக  மாமுனி,  பதஞ்சலி, வியாக்கிரமர்  என்று சொல்லப்படக்  கூடிய  மூவரும், ஆக 7  மாமுனிவர்களுடன், தானும்  ஒருவன்  என்று திருமூலர்  எழுதியுள்ளார்.

 அதாவது  கயிலாயத்தில், நந்தியம்  பெருமானிடம் நேரடியாக  உபதேசம்  பெற்ற சீடர்கள்,  எண்மர்  என்று தெரிகிறது.

இதனை  தெய்வ  புலவர் *சேக்கிழார்*  அவர்கள்  தமது. பெரிய  புராணத்தில்  திருமூல நாயனாரின்  வரலாற்றில் "கைலாயத்தில்  ஒரு  சித்தர் பொதிகையில்  சேர்வார் காவிரி  சூழ்  சாத்தனுர்  கருதும் மூலன்'  எனப்   பாடியுள்ளார்.

அதுபோலவே   திருமூலரிடம் உபதேசம்  பெற்ற முதன்மையான  சீடர்கள்  எழுவர்  என்றும்  அவர்கள் யார்-யார்  என்றும்,  தம்முடைய 69  வது  பாடலில்  எழுதியுள்ளார். 

அவர்கள்:  மாலாங்கன், இந்திரன்,  சோமன்,  பிரம்மன், உருத்திரன்,  காளாங்கி, கஞ்சமலையன்  என்று சொல்லப்படும்  முனிவர்கள் ஆவார்கள்.   மந்திரம்  69:

மந்திரம்  பெற்ற  வழிமுறை மாலாங்கன்
இந்திரன்  சோமன்  பிரமன் உருத்திரன்
கந்துரு  காலாங்கி  கஞ்ச மலையனோடு
இந்த  எழுவரும்  என்வழி  ஆமே
 ||69||

திருமூலரை  குருவாகக் கொண்ட  இந்த  தவ  முனிகள் வழியாக  *திருமூல  வர்க்கம்* என்னும்  பரம்பரை வந்தது.

 அதேப்  போல்  நந்தியை குருவாகக்  கொண்டு  யோகம் பயிலுபவர்கள்  *நந்தி வர்க்கத்தினர்*   என்றும் அழைக்கப்   படுகிறார்கள்.
   
 திருமூல  வர்க்கத்தினர்
 **இரச  குளிகைகள்**   செய்வதில்  வல்லவர்களாக  இருப்பதுடன்,  அதன்   மூலம்  காய  சித்தி  பெற்று  சிவயோகம்  புரிவார்கள்.

  நந்தி வர்க்கத்தினர் 
**மந்திர உச்சாடனங்களை**   மனம்  ஒருமித்து  உச்சாடனம்  செய்து   காயசித்தி  அடைந்து சிவயோகம்   புரிவார்கள்.

நந்தியின்  மூலம்  மிக  உயர்ந்த ஞான  தெளிவை  பெற்ற திருமூலர்  கயிலை  நாதனாம் சிவபெருமானை  வேண்டி  சில வருடங்கள்  கடும்  தவம் செய்தார்.

அவருடைய  ஆசீர்வாதத்தினால்  குளிகை தயாரிக்கும்  முறையை  அறிந்து  கொண்டார்.  குளிகை என்பது,  பாதரசத்தை மணியாக  கட்டுவது. 
இந்த  ரசத்தை  யாராலும் எளிதாக  கட்டுதல்  இயலாது.

 சிவனருள்  பெற்ற சித்தர்களால்  மட்டுமே  இது சாத்தியப்படும்.   இந்த ரசத்துடன்  சேர்கின்ற மூலிகைகள்  உலோகங்கள் மற்றும்  பஞ்சபூதங்களின் விகிதாச்சாரத்திற்கு  ஏற்ப குளிகைகளின்  ஆற்றல்கள் வெவ்வேறு  விதமாக  செயல் படும்.

இப்படிப்  பட்ட  அற்புதமான பல்வேறு  வகையாக செயல்படக்  கூடிய  நூற்றுக்கும் மேலான  விதங்களில் குளிகைகளை  செய்யும் வல்லமைப்  பெற்றவர், திருமூலர்.

இவர்,  இந்தக்  குளிகைகளைப் பயன்படுத்தி  முறையான யோகம்  பயிலும்  மார்க்கத்தை வகுத்தவர்.

 நமது  உடலில்  உள்ள  6 ஆதாரங்கள்,  ஞானம்  நிறைந்து  இருக்கும்  சஹஸ்ரத்தளம்,  இவைகளை  எல்லாம்   இயக்கி மும்மூர்த்திகளின்   சக்திகள், பஞ்சபூதங்களின்  ஆற்றல்கள், இவைகளை  பெறக்  கூடிய வழிகளைக்  கண்டறிந்தவர்.

 இந்த  வகையில்,  முறையாக யோகம்  பயில  தமது சீடர்களுக்கு  உபதேசித்த  குருவும்   ஆவார்.

இந்த  வகை  யோகம் பயிலுபவர்கள்   திருமூல வர்க்கம்  என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த  ரசவாத  வித்தைகளில் இவர்  மிகுந்த  திறமை பெற்றிருந்தாலும்,  உடலுக்குரிய  மருத்துவ  சிகிச்சைகள்  செய்யும்  முறையை  முழுமையாக  அறிந்து  கொள்ளவில்லை.  இந்த  குறையை  நீக்கிக்  கொள்ள  நினைத்த   திருமூலர்,  இந்த  சித்த  மருத்துவ  முறைகளை, அறிந்து   கொள்ள  விரும்பினார்.

இந்த  வைத்திய  முறையில் சிறந்தவர்  யார்  என்று திருமூலர்  நந்தியம் பெருமானை  வணங்கி வேண்டினார்.

நந்தியம்  பெருமான்  நல்ல படியாக  சித்த  மருத்துவ பயிற்சிகளை  பெற விரும்பினால்,  *அகத்திய பெருமானைத்தான்*  குருவாகக்  கொள்ள  வேண்டும். அவர்  அனைத்து கலைகளிலும்  வல்லவர். அவருக்கு  தெரியாத  கலை என்று  எதுவுமே  இல்லை.

 சிவபெருமானிடம்  மிகுந்த அன்பு  கொண்டவர்.  நேரடியாக பேசக்கூடியவர்.  தற்போது அவர்,  தென்  திசையில்  உள்ள பொதிகை  எனும்  மலையில், ஆஸ்ரமம்  அமைத்து  தம் சீடர்களுடன்,  தங்கியுள்ளார். அவரை  அணுகி  குருவாக ஏற்றுக்கொண்டால்,  அவர்  மூலம்  இந்த  மருத்துவத்தைப்  பற்றி  முழுமையாக  தெரிந்து  கொள்ளலாம்”  என்று திருமூலரிடம்,  நந்தியம் பெருமான் கூறினார்.

அதன்  பின்னர்  சில  காலம், கயிலை  மலையில்,  தங்கி, சிவபெருமானை  வணங்கி வந்தார்.  பிறகு  சிவபெருமான் தரிசனம்  கிடைக்கப் பெற்றார். அவரிடம்  பொதிகை  மலைக்குச்  செல்ல  அனுமதி கோரினார்.  பயிற்சியில் முழுமையாக  வல்லமையும்  பெற  ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்  கொண்டார்.

சிவபெருமான்  ஆசீர்வதித்து, திருமூலரை  தென்  திசைக்கு அனுப்பி வைத்தார். திருமூலரும்   அகத்தியரை காண  விரும்பி  பயணத்தினை மேற்கொண்டார்.

பொதிகை  மலையை  அடைந்த திருமூலர்,  அங்கு  அகத்திய பெருமான் இல்லை  என்பதை அறிந்து  கொண்டு  அவரின் சீடர்களை  அணுகி  “அய்யன் எங்கே?:  என்று  ஆவலுடன் கேட்க,  சீடர்கள்,  குரு *சதுரகிரியில்*   தற்பொழுது இருப்பதாக  தெரிவித்தனர்.

 உடனடியாக  சதுரகிரிக்கு சென்ற  திருமூலர்,  அங்கேயே அகத்தியரிடம்  சித்த  மருத்துவ முறைகளை  முழுமையாக கற்றுக்   கொண்டு,  குருவிடம் ஆசி  பெற்று, கயிலை  செல்ல விரும்பி,  தனது  பயணத்தை மேற்கொண்டார்.

 அச்சமயம்  இவர்  பல சிவாலயங்களில்  தங்கியும்,  பல  ஊர்களில்  ஆன்ம போதனைகள்  அளித்துக்  கொண்டும்,  பல  ஊர்களில் ஏற்பட்டு  இருந்த   வறட்சி நிலைகளை  நீக்கி  செழுமைகள்  செழிக்க  ஆலய வழிபாடுகள்  செய்ய  மக்களை வற்புறுத்தியும்  வந்தார்.

 அதனால்  பல  வறட்சியான ஊர்கள்  வழிபாடுகளால் செழுமையடைந்ததடன், மக்களிடையே  நல்லொழுக்கம் ஏற்படவும்  காரணமாயிற்று.

 இந்த  நிலையில்தான்  அவர் தென்னகம்  அடைந்து திருவாவடுதுறையின் அருகிலுள்ள  சாத்தனுர்  எனும் கிராமத்தை  அடைந்து,  மாலை நேரத்தில்  சிறிது  ஒய்வு  பெறும்  பொருட்டு  ஒரு மந்தைவெளிக்கு  அருகில் உள்ள  ஒரு  மரத்தின்  கீழ் சாய்ந்து  அமர்ந்திருந்தார்.

 அப்பொழுது,  அருகிலுள்ள மந்தைவெளியில்  இருந்த மாடுகள்  அனைத்தும் கதறிக்  கொண்டும், அழுது  கொண்டும், அங்கும்,  இங்கும்  ஓடத் தொடங்கின.

இதனை  திருமூலன்  என்று பின்பு  பெயர்  கொண்ட சுந்தரநாதன்  மந்தைவெளி சென்று  பார்த்தார்.  அங்கே மாடுகளை  மேய்க்கும்  மூலன் என்பவன்  மாண்டு  கிடக்க தங்களுக்கு  வீடு  செல்லும் நேரமாயிற்றே  என்று  மாடுகள் மூலனைச்  சுற்றி  வந்தன.
   
  இந்த  மாடுகளை  கண்டு இரக்கமுற்ற  சுந்தரநாதன்  தம் அருகிலுள்ள  தோப்பிற்கு சென்று  பத்திரமாக  தன் உடலை  கிடத்தி  தம்  ஆவியைப் பிரித்து  மூலன்  உடலுக்குள் செலுத்தினார்.

மேலே  என்ன  நடந்தது என்பதனை  அடுத்த  பகுதியில் காணலாம்.

🙏 பகிர்வு🙏
🌿ஆர்.வீ.சரவணன்🌿

No comments:

Post a Comment