Tuesday 29 October 2019

ஜீவநாடி அற்புதங்கள்

ஜீவநாடி அற்புதங்கள்

கையில் ஒரு மஞ்சள் பை.  சாந்தம் நிரம்பிய கருணை விழிகள்.  மிகவும் ஆஜானபாகு.  பன்னிரண்டு திருமண்.  வெண்மையான பூணூல்.  பஞ்சகச்சம் கட்டி இடுப்பில் மேல்துண்டு கட்டியிருந்தார்.  உடலில் தேகமே தெரியாதவாறு புசு புசுவென்று ஆரோக்யமான ரோமங்கள்.  கன்னத்தில் தாடியும் மீசையும் கரு கருவென்று இருந்தன.

அவரைப் பார்த்தது, ஏதோ ஒரு வைதீக பிராம்மணர் என்று அனைவருக்கும் தெரிந்தது.  யாருக்கும் பரிச்சயம் இல்லாததால் சட்டென்று உள்ளே கூப்பிடவில்லை.  ஆனால் அந்த முன்னிரவு நேரத்திலும் அவரது முகத்தில் விளகொளிபட்ட பொழுது மிகப் பெரிய மகான் என்பதை உணர்த்தும் வகையில் "தேஜஸ்" எங்கள் அனைவரது கண்களிலும் வீசியது.

"உள்ளே வாருங்கள்" என்று ஒட்டு மொத்தமாக நாங்கள் அனைவரும் கூப்பிட்டோம்.  அவர் யார், எங்கிருந்து வருகிறார் என்று ஒருவர் கூட விசாரிக்கவே இல்லை.

கையைக் கூப்பிக்கொண்டு உள்ளே வந்த அவர், கை - காலைத் தண்ணீரால் சுத்தம் செய்து கொண்டு, நேராக பூசையில் இருந்த ஸ்ரீராமர் படத்தின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார்.

இரண்டு நிமிடம் மானசீக த்யானம்.

பின்னர் தனக்குத் தெரிந்த ராம மந்திரத்தைக் கண்ணை மூடிக் கொண்டு இனிய குரலில் பாட ஆரம்பித்தார்.  ஏற்கனவே பூசை எல்லாம் முடிந்திருந்ததால் கூட நாங்களும் அவர் பின்னால் பாடினோம்.  இந்த நாம சங்கீர்த்தனம் அந்த பூஜை ஹாலிலே இனம்புரியாத ஆனந்தத்தை உண்டாக்கியது என்பது மட்டும் உண்மை.  இந்த பஜனை கீர்த்தனைகள், சற்று முன்னர் பிரத்யட்சமான "நைவேத்ய ஆச்சர்யத்தை" கூட மறக்க வைத்துவிட்டது என்று சொன்னாலும் மிகையில்லை.

சுமார் பதினெட்டு நிமிடங்கள் அமர்க்களமாக பஜனை நடந்து முடிந்தது.  வந்தவர் தன்னை யாரென்று சொல்லவே இல்லை.  பஜனை முடிந்த கையோடு மீண்டும் ராமரை சாஷ்டாங்கமாக வணங்கி விடை பெற்றுக் கொள்ள எத்தனித்தார்.

வால்டேர் சுவாமிக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. சட்டென்று எழுந்து அவர் கழுத்தில் பூசையில் வைத்திருந்த மாலையைப் போட்டார். பழங்கள், வெற்றிலை பாக்கோடு கொடுத்தார்.

பின்னர் "நைவேத்யப் பிரசாதம் சாப்பிட்டு விட்டுப் போகலாமே" என்றார்.  அவர் அதற்கு சிரித்துக் கொண்டு "பிரசாதத்தைச் சாப்பிட்டு விட்டேன்" என்று சொல்லிவிட்டுச் "சரி சரி இந்த பூசையில் நைவேத்யம் ஆகாதது ஏதாவது இருந்தால் கொடுங்கள்.  கையோடு எடுத்துக் கொண்டு போகிறேன்" என்றார்.  அவரது பேச்சு எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

எனினும் சமையல் அறையிலிருந்து சக்கரை பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், வடை ஆகியவற்றை ஒரு பெரிய பொட்டலமாகக் கட்டி அவரிடம் கொடுத்தார். அதைத் தன் இரு கைகளாலும் வாங்கிக் கொண்டார்.  பையில் கூடப் போடவில்லை.  எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வந்தவர் நிமிஷப் பொழுதில் விறு விறுவென்று காற்று வேகத்தில் வாசல் வழியே நடந்தார்.  திரும்பிக் கூட பார்க்கவில்லை.

"யார் அவர்?" என்று பின்னர் வால்டேர் சுவாமி எங்களிடம் கேட்டார்.

"எங்களுக்குத் தெரியாது.  ஆனால் ஒரு அதிதியாக வந்தார்.  இது போதுமே" என்றார் அந்த வீடிற்குரியவர்.

அவரைப் பார்த்தால் பிரசாதத்திற்காக வந்தவர் போலில்லை என்று மட்டும் எனக்குத் தெரிந்தது.  ஆனால் ஏதாவது சொல்லிக் குழப்பத்தை உண்டு பண்ணக் கூடாது என்று வாயை அடக்கிக் கொண்டேன்.

வந்தவர் யாராக இருக்கும் என்று எல்லோரும் அவரவருக்குள் பேசினார்கள். கையோடு நாடி கொண்டு போகாததினால் என்னாலும் அவரை யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில் அனுமன் வந்து நைவேத்தியத்தை உண்டதாக சொல்லப்படும் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ள பெருங்கூட்டமே அங்கு அலை மோதியது.  அடுக்களையில் நிறையச் சுடச்சுட சமைத்து வைத்திருந்த பிரசாதமோ - ஆறிக் கொண்டிருந்தது.  சில நிமிஷங்களுக்குப் பின் எல்லோரும் நைவேத்தியம் சாப்பிட வரிசையாக உட்கார்ந்த போது கொஞ்ச நேரத்திற்கு முன்பு வந்து விட்டுச் சென்ற பெரிய மனிதர், தன் கையோடு கொண்டு வந்திருந்த மஞ்சள் பையை விட்டு விட்டுச் சென்றிப்பதை கண்டோம்.  திரும்பி அவர் வந்தால் அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்தேன்.  அதற்காக அந்தப் பையை எடுத்துப் பத்திரப்படுத்திய பொழுது அந்தப் பைக்குள் சில நிமிஷங்களுக்கு முன்பு நாங்கள் கட்டிக் கொடுத்து நைவேத்தியப் பொட்டலங்கள் அப்படியே இருந்தது.

ஆனால் எல்லாமே காலியாக இருந்தது.

எந்தப் பேப்பரில் இல்லை வைத்துக் கட்டிக் கொடுத்தோமோ அந்தப் பேப்பர் பிரிக்கப்பட்டு இலையிலிருந்து சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை, வடை, சுண்டல் எல்லாம் சாப்பிட்டதற்கு அடையாளமாக அப்படியே காணப் பட்டது.

இன்னொரு பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தால் அதில் அனுமனுக்குச் சாற்றப்படும் "செந்தூரம்" காணப்பட்டது.  ஆச்சரியத்தால் அனைவரது கண்களிலும் வியப்பு கூடியது.  இதை எல்லோரும் அன்றைக்கு கண் கூடாகக் கண்டனர்.  அப்படியென்றால் "அனுமன்" தான் வந்து விட்டுப் போயிருக்கவேண்டும் என்ற நம்பிக்கை, அங்கிருந்த அத்தனை பேருக்கும் ஏற்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

அன்றைக்கு பரிகாசம் செய்தவர்கள், நான் பொய் சொல்லி கதைவிட்டதாக எண்ணி என் மீது வெறுப்புக் கொண்டவர்கள், பகுத்தறிவு தனக்குத்தான் இருக்கிறது, எனக்கு இல்லை என்று நண்பர்களாகப் பழகிக் கொண்டே மறைமுகமாகக் கிண்டல் செய்தவர்கள், அத்தனை பேர்களும் வாய் மூடி மௌனமாக நின்றார்கள்.

இதை கண்ட பின்புதான் என் மீது என் தாய்க்கே நம்பிக்கை பிறந்தது.  இருப்பினும் என் தந்தை இந்தச் சம்பவத்திற்கு பின்புகூட நம்பவில்லை.

குடும்பப் பொறுப்பை விட்டுவிட்டு இப்படிக் கோமாளியாக நாடி படிக்க ராத்திரியும் பகலும் அலைகிறானே.  எப்படிக் குடும்பம் உருப்படப் போகிறது என்று தவியாய் தவித்தார்.  ராத்திரி நேரமெல்லாம் அப்போது யார் யாரோ வருவார்கள். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் நானும் இரவு நேரமானாலும் குளித்துவிட்டு வந்தவர்களுகேல்லாம் நாடி படித்தேன்.  இது என் தந்தைக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.

இனிமேல் இந்த நாடி இந்த வீட்டில் இருக்ககூடாது.  அப்படி இருந்தால் அதை என்ன செய்வேன் என்று தெரியாது என்று கடுமையாக ஒரு நாள் சொல்லவே, நான் வேறு வழி இன்றி என் நண்பர் வீட்டில் அதைக் கொடுத்துப் பாதுகாப்பாக வைத்தேன்.  பின்னர் அங்கு வரச் சொல்லிப் படிக்க ஆரம்பித்தேன்.  "தொந்தரவு விட்டது", என்று எனது தந்தைக்குப் பெரு மகிழ்ச்சி.  ஆனால் சரியானபடி பூசை செய்யாததினால் அகஸ்தியர் கோபம் கொண்டு சில மாதங்கள் நாடியில் தோன்றாமல் போனதும் உண்டு.

அச்சயமத்தில் என்னைத் தேடி நாடி பார்க்க வருகிறவர்களிடம் உண்மையச் சொன்னபோது "அப்படி எனில் அனுமன் தரிசனம் கிடைத்து எல்லாம் பொய் தானா?" என்று முகத்தில் அறையும்படி கேட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்.  அப்படியும் நடந்ததுண்டு.

ஒருநாள்........

அகஸ்தியரிடம் "அன்றைக்கு பூசை நேரத்தில் வந்தது ஆஞ்சநேயர் பிரபு தானே" என்று கேட்டபொழுது "ஆமாம்" என்று மறுமொழி சொன்னார்.  இந்த சந்தோஷத்தை எல்லோரிடமும் சொல்லத் துடித்தேன்.  ஆனால் இதற்குப் பிறகு அகஸ்தியர் போட்ட கட்டளை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"கலியுகத்தில் பிரார்த்தனை மூலம் தெய்வ தரிசனம் கிடைக்கும்.  நிறையப் புனித ஆத்மாக்களுக்கு அங்கங்கே இன்றைக்கும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.  என் மூலம் தான் தரிசனம் கிடைக்க வேண்டும் என்பதில்லை.  என்னுடைய மைந்தன் என்பதால் உனக்கு தெய்வ தரிசனத்தைக் கோடிட்டுக் காட்டினேன்.

உனக்கு மனதை அடக்கும் பலம் இருக்கிறதா, உன்னைச் சுற்றி இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள், எப்படி இரட்டை வேஷம் போடுகிறார்கள் என்பதைச் சோதிக்கவே யாம் விழைந்தோம்.  எத்தனையோ தேவ ரகசியங்கள் உனக்குச் சொல்லி இந்த பூ உலகில் ஆன்மீகக் குருவாக மாற்ற வேண்டும் என்று நினைத்ததுண்டு.

ஆனால் உனக்கு வாயடக்கம் இல்லை.  ரகசியங்களைக் காக்கும் திறமையும் இல்லை.  நடந்ததை அப்படியே சட்டென்று எல்லோரிடமும் சொல்லிவிடுகிறாய்.  இந்த ஜனங்கள் நீ சொல்வதை நம்புகிறார்கள் என்று எண்ணினால் அது மிகப் பெரிய ஏமாற்றம்.

கலியுகத்தில் அவர்களுக்கு ஆன்மீகம் வேப்பங்காய்.  இத்தகைய தரிசனம் கிரேதாயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகத்தில் தான் நடக்கும்.  இப்பொழுது நடக்காது என்று நம்புகிறார்கள் பேதை மனிதர்கள்.  அவர்களுக்கு எப்படித் தெரியும் இந்த ஆன்மீக ஞானம்.  யார் யார் இதனை நம்புகிறார்களோ யாருக்கு பூர்வ ஜென்மவாசனை இருக்கிறதோ அவர்களுக்கு மாத்திரம் தான் இனி என் தரிசனம் கிடைக்கும்.  என்னையும், இந்த நாடியைப் படிக்கும் உன்னையும் நம்பாதவர்கள் நாடி படிக்க வந்தால் அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று உபதேசித்தவர், கடைசியில்

"நீ கேட்டாய் என்பதால் உன்னைச் சேர்ந்தவர்களுக்கு அனுமன் அந்த நைவேத்தியத் திருவிளையாடல் மூலம் தரிசனம் தந்தார்.  இதற்கு நான் என்ன பாடு பட்டிருப்பேன் என்று உனக்குத் தெரியாது.  அதனால் இன்றிலிருந்து இன்னும் பன்னிரண்டு அமாவாசை நான் உனக்குத் தெரியமாட்டேன்.

என்னை மறுபடியும் தரிசனம் செய்ய வேண்டுமென்றால் இன்று முதல் தெய்வ ரகசியங்களை உன்னோடு வைத்துக் கொள்.  தப்பித்தவறி வெளியே சொன்னால் இனி நான் உன்னைவிட்டுப் பிரிந்துவிடுவேன்.  இன்னொன்று.  இந்தப் பன்னிரண்டு அமாவாசைக்குள் அறுபடை வீட்டினை மூன்று தடவை தரிசனம் செய்து ஒரு கோடி மூலமந்திரம் ஜெபித்தால் தான் மறுபடியும் நாடி படிக்க முடியும்.  இல்லையெனில் தென் மேற்குத் திசையிலிருந்து முருகன் பெயர் கொண்ட சிம்மராசிக்காரன் மகம் நட்சத்திரத்தை சேர்ந்த ஒருவன் உன்னைத் தேடி ஒரு சனிக்கிழமை மதியம் வருவான்.  அவனிடம் இந்த ஜீவநாடியை ஒப்படைத்துவிடு" என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

அகத்தியரின் கோபத்திற்கு ஆளான இந்தச் செய்தியை எப்படி வெளியே சொல்வது? சொன்னால் கெட்ட பெயர்.  என் மீது இன்னும் அவநம்பிக்கை அதிகமாகும்.  சொல்லாவிட்டால், என்னைத் தேடி வருபவர்களுக்கு எப்படி பதில் கூறுவது?  நாடி படிக்காமல் சொன்னால் உணமையாக இருந்தாலும் கூட நம்பமாட்டார்கள்.  என்னால் நாடி படிக்காமல் இருப்பதில் வருத்தமில்லை.  ஆனால் அகஸ்தியரின் பெரும் கோபத்திற்கு ஆளாகிவிட்டோமே என்று தான் தூக்கமில்லாமல் தவித்தேன்.

அன்றைக்கு வைகாசி விசாகம்.

எதற்கும் நாடியைப் பிரித்துப் பார்ப்போமே என்ற நப்பாசை.  அகஸ்தியர் கோபம் தணிந்து ஏதாவது விட்டுக் கொடுக்க மாட்டாரா என்ற ஆசை.  பயந்து பயந்து பிரித்துப் பார்த்தேன்.

அன்றைக்கு எனக்கு நல்லகாலம் தான், சட்டென்று நாடி தெரிந்தது.

"தொடர்ந்து ஜபத்தைச் செய்க.  ஒரு முறை அறுபடை வீட்டினை ஒரே தடவையில் தரிசனம் செய்து விட்டு வா.  அதோடு இனி வருகிறவர்களுக்கு நாடியை நேரடியாகப் படிப்பதை விட பிரம்ம முகூர்த்தத்தில் பார்த்து பின்பு அவர்களுக்கு பலன் சொல்.  நம்புகிறவர்கள் நம்பட்டும்.  நம்பாதவர்கள் போகட்டும்.  நாடி படிக்க முடியாத காலத்தில் நிந்தன் வாக்கில் அகஸ்தியன் நானிருக்கிறேன்.  அவரவர் தலை விதியை சாதக் குறிப்பேடு மூலம் பலன் சொல்.  அருளாசி" என்று முடித்திருந்தார்.

"அப்பாடா" என்று எனக்கு நிம்மதி ஏற்ப்பட்டது.

 ஆனால் அன்று முதல் இன்று வரை நிறையத் தகவல்களை அகஸ்தியர் எனுக்கு அருளிய மூலமந்திரங்களை மனிதர்களது எதிர்கால முக்கிய நிகழ்வுகளைச் சொல்லக் கூடாத அல்லது அவர்களை கடந்த காலத் தவறுகளை, தவறு செய்து கொண்டு நல்லவர் போல் நடிப்பவர்களை வெளியே சொன்னதில்லை.

இந்த நிகழ்வுக்குப்பின் தான் ஓரளவு என் பேச்சை மற்றவர்கள் நம்பினார்கள்.  யாரேனும் வந்தால் ஜாதகம் பார்ப்பதோடு சரி.  வேறு எதுவும் மூச்சுக் காட்டவில்லை.  இருந்தாலும் ஒரு கோடி ஜபம் முடிக்க நான் கடுமையாகப் ப்ரயத்தனப்பட்டேன்.

"நாடி படிப்பதில்லை" என்பதால் நிறையப் பேர்கள் என்னை விட்டு விலகினார்கள்.  ஜாதகத்தை வைத்துப் பலன் சொன்னதை மட்டும் சிலர் நம்பினார்கள்.  இப்படியே சிலகாலம் ஓடியது.

இந்த நாடி அவ்வளவு உன்னதமானதா? என்று கேட்கத் தோன்றும்.  இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்.

பழம் பெரும் நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும்,  ஏழிசை பாகவதர் மன்னர் எம்.கே.தியாகராஜா பாகவதரும் இந்த நாடியை நம்பினார்கள்.  எனக்கு முன் இந்த நாடியைப் படித்தவரிடமிருந்து கிடைத்த தகவல்.

"நாடியை வைத்து ஏமாற்றுகிறார்கள்.  அப்படி ஒன்றும் இல்லவே இல்லை.  நாடி சொல்படி எதிர்காலத்தில் எதுவும் நடப்பதே இல்லை.  நடந்து முடிந்த சம்பவங்களை மாத்திரம் சரியாகச் சொல்கிறது.  இதை கோர்ட்டில் உறுதி செய்ய வேண்டும்" என்று விளையாட்டாக ஒரு வக்கீல் சொல்ல நீதிபதி இதை ஏற்றுக் கொண்டு பரிசோதிப்பதற்காக ஒரு நாள் அந்த நாடியைப் படித்துக் கொண்டிருப்பவரைக் கோர்ட்டிற்கு வரச் சொன்னார்.

"குற்றம் எதுவும் செய்யவில்லை. பின் ஏன் கோர்ட்டிற்கு வரவேண்டும்?  இரண்டாவது, நாடி படிக்க வேண்டுமென்றால், அவர் யாராக இருந்தாலும், அவர் தான் நேரடியாக வர வேண்டும்.  நான் அங்கு வர இயலாதே!" என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார், நாடி ஜோதிடர்.

"அப்படியென்றால் ஒன்று செய்வோம்.  எல்லா வக்கீல்களும் அந்த நாடி ஜோதிடர் வீட்டிற்க்குச் சென்று சோதிக்கலாம்" என்று நீதிபதி சொல்ல, பொதுநல வேட்கை காரணமாகக் கோர்ட்டில் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் ஒரு ஆர்வத்தின் காரணமாக நாடி ஜோதிடரின் வீட்டிற்க்குச் சென்றனர்.  எல்லோரும் அமர்ந்த பின்னர், "நான் அகஸ்தியரைச் சோதிக்க இங்கு வரவில்லை.  ஆனால் நாடி ஜோதிடம் உண்மையாக இருக்குமா? என்பதை அறிய வக்கீல் நண்பர்கள் சகிதம் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.  தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என்று சொன்னார் நீதிபதி.

"கேளுங்கள்.  அகஸ்தியர் என்ன சொல்கிறாரோ அப்படியே நான் சொல்கிறேன்.  இதில் கற்பனை இல்லை.  பொய் இல்லை" என்றார் நாடி ஜோதிடர்.

"இதோ இதைப் பாருங்கள்" என்று மேசையின் மீது இருக்கும் கண்ணாடி உருண்டையைக் காட்டிவிட்டு "இந்த கண்ணாடி உருண்டையை இப்பொழுது இதே இடத்தில் கீழே ஓங்கி எறியப் போகிறேன்.  அந்த கண்ணாடி எத்தனை சில்லாக, சிதறல்களாக உடையும் என்பதைச் சரியான எண்ணிக்கையில் சொல்லவேண்டும்.  அந்த சிதறல்களின் எண்ணிக்கை ஒன்று கூடினாலும் அல்லது ஒன்று குறைந்தாலும் இந்த நாடி ஜோதிடம் பொய் என்பதை அறிவிக்க வேண்டியிருக்கும்.  சரியா" என்று நிதானமாக கேட்டார்.

அகஸ்தியரின் ஜீவ நாடி படிக்கிற முருகனுக்கும் பயம்தான்.  ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று சொல்லி ஏடாகூடமாக ஆகிவிட்டால், நாடி ஜோதிடமே பொய் என்ற அபவாதத்திற்கு உள்ளாகிவிடுமே என்று பயந்து அகஸ்தியரிடம் வேண்டி

"தாங்கள் கேட்ட கேள்விக்குச் சரியாக பதில் கிடைக்கும்" என்று சொன்னார்.

"அப்படியானால் அதை முன் கூடியே எனக்கு ஒரு பேப்பரில் எழுதி தரவேண்டும், முடியுமா? என்றார் நீதிபதி.

"சரி" என்று சொன்னார், நாடியைப் புரட்டினார், படித்தார்.

தான் படித்ததை அப்படியே ஒரு பேப்பரில் எழுதி நீதிபதியிடம கொடுத்தார்.  அதை வாங்கி வைத்துக் கொண்டிருந்த நீதிபதி பிரித்துப் படிக்கவில்லை.  தன் சட்டை பைக்குள் அப்படியே சொருகிக் கொண்டார்.  சில நிமிடம் கழிந்தது.

தன் கையிலிருந்த அந்த கண்ணாடி உருண்டையை கையில் தூக்கி ஓங்கி விட்டு, அப்படியே கீழே வைத்துவிட்டார்.  கீழே எறியவே இல்லை.  பின்பு அந்த நாடி ஜோதிடர் முன்பாக எழுதிக் கொடுத்த "பலனை" பிரித்து எல்லோர் முன்னிலையில் படித்தார்.

"கன்றுக்கு நீதி வழங்கிய மன்னன் பரம்பரையைச் சேர்ந்தவன் நீ.  இந்தக் கண்ணாடி உருண்டையைக் கையில் எடுத்து உயர்த்துவாய், ஆனால் ஒரு போதும் மண்ணில் வீசி ஏறிய மாட்டாய்" என்றிருந்தது.  அப்படிப்பட்ட ஜீவ நாடிதான் எங்கள்
குருநாதர் அனுமத்தாசன்
படித்தது
அகத்தியர் ஞானம் 09894269986