Monday, 14 October 2019

வள்ளுவன் பாடல் - அடியிற்கினியாளே அன்புடையாளே படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு”

🌹
🙏
பல நூறு ஆண்டுகளுக்கு முன்...ஒரு புலவரின் மனைவி... இறக்கும் தருவாயில் தன் கணவனை அருகே அழைத்தாளாம் ...

என்னவென்று கேட்டு கலங்கிய கண்களோடு கணவன் அவள் பக்கத்தில் வர...மனைவி தயக்கத்துடன் இப்படிக் கேட்டாளாம் ...

“என் உயிர் எப்போதோ என்னை விட்டுப் பிரிந்திருக்க வேண்டும்..ஆனால்..ஒரே ஒரு கேள்வி ..
என் நெஞ்சுக் குழியில் நின்று கொண்டு,என் உயிர் இந்த உடலை விட்டுப் பிரியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.. அந்தக் கேள்வியை இதுவரை உங்களிடம் நான் கேட்டதில்லை...இப்போதாவது கேட்கலாமா..?”

புலவனான அந்தக் கணவன் , புரியாமல் அந்தப் புனிதவதியைப் பார்க்க...அந்த மனைவி கேட்டாளாம் இப்படி:

“இதுவரை உங்களிடம் நான் கேட்காத அந்தக் கேள்விக்கு , இப்போதாவது பதில் எனக்குத் தெரிந்து விட்டால்...நிம்மதியாக கண்களை மூடுவேன்.. அந்த நிம்மதியான மரணத்தை எனக்குத் தருவீர்களா.?”

கணவன் மௌனமாக தலையசைத்து சம்மதம் தெரிவிக்க மனைவி தன் நெடுநாள் சந்தேகத்தை கேட்டு விட்டாளாம்..

“ஒவ்வொரு நாளும் நீங்கள் உணவு அருந்தும்போது ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் கொண்டு வரச் சொல்லி , அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவீர்கள்...அப்படித்தானே..?”
கணவன் இதற்கும் மௌனமாக தலையசைக்க , மனைவி கேட்டாளாம் ..”இதுவரை அதற்கான காரணத்தை ஒருபோதும் நான் உங்களிடம் கேட்டதில்லை... காரணம்..கணவன் சொன்னதற்கு மறுபேச்சு பேசி , நான் அறிந்ததில்லை... இப்போது என் வாழ்வின் இறுதி மூச்சில் இருக்கிறேன்...இப்போதாவது சொல்லுங்கள்.. அந்த கொட்டங்கச்சியும் , தண்ணீரும் எதற்காக..?”

இதைக் கேட்டுவிட்டு , இதற்கான பதிலை எதிர்பார்த்து அந்த மனைவி , புலவனான கணவன் முகத்தைப் புரியாமல் பார்த்திருக்க அந்தக் கணவன் சொன்னாராம்.. “ அது வேறொன்றும் இல்லை... பரிமாறும்போது தவறுதலாக சோற்றுப்பருக்கை கீழே சிந்தி விட்டால்,அதை அந்த ஊசியில் குத்தி,கொட்டாங்குச்சியில் உள்ள தண்ணீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணத்தான் அந்தக் கொட்டங்கச்சி நீரும்..ஊசியும்..”

கணவன் பதில் சொல்லியும் மனைவியின் குழப்பம் தீரவில்லை...அவள் கேட்டாள் .. “ஆனால் ஒருபோதும் நீங்கள் அந்த ஊசியையும் , கொட்டாங்கச்சியையும் பயன்படுத்தி நான் பார்த்ததே இல்லையே..?”

மனைவி இப்படிக் கேட்டதும்...குரல் உடைந்து போன கணவன்...குமுறும் அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாராம்... “ உண்மைதான்...ஒரு நாளும் நான் அதைப் பயன்படுத்தவில்லை..!

ஏனென்றால் ஒரு நாளும் நீ எனக்குப் பரிமாறும்போது , ஒரு சோற்றுப் பருக்கையைக் கூட சிந்தவே இல்லையே....!”

கணவன் பதில் அறிந்த மனைவி.. புன்னகை செய்தாளாம்.... அவ்வளவுதான்...! கண் மூடி விட்டாளாம்..!!

நெகிழ்ச்சியோடு நெடு நேரம் நின்ற கணவன் ..அந்தப் புலவன்...கண்ணீரோடு தன் அன்பு மனைவிக்காக உடனே ஒரு கவிதை எழுதினானாம் ...

இதுநாள் வரை தன் வாழ்நாளில் அவன் எழுதியதெல்லாம் ...இரண்டு வரிப் பாடல்கள்...அதில் ஏழே ஏழு வார்த்தைகள்..! அவ்வளவுதான்...அதுதான் அந்தப் புலவன் தன் பாட்டுக்கு ஏற்படுத்திக் கொண்ட பார்முலா..விதி..!

இப்போது.... தனது செய்யுள் விதியை...தானே தளர்த்திக் கொண்ட அந்தப் புலவன்... தன் வாழ்வில் முதன் முதலாக , நாலு வரிப் பாட்டு ஒன்றை எழுதினானாம்...அந்த நாலு வரிப் பாடல்:

“அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு”

*#ஆம்... இந்த நாலு வரிப் பாடலை எழுதிய அந்தப் புலவர் ..திருவள்ளுவர்....!*

கணவன் சொல் தட்டாத அந்த கள்ளமற்ற அன்பு மனைவி ..வாசுகி...!

அந்தப் பாடலின் பொருள் :

“அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!”

இன்னொரு வள்ளுவன் எதிர்காலத்தில் பிறக்கலாம்...!
ஆனால்..இன்னொரு வாசுகி எதிர்காலத்தில் பிறக்க முடியுமா
🌹🙏🌹