Tuesday, 31 July 2018

ௐ முருகேசர் திருமாலை ௐ

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல
எப்பொருளுக்கும் முதன்மையாகி

அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி

அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி

அகமாகி ... யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி

அயனென வாகி ... பிரமன் என்னும் படைப்பவன் ஆகி

அரியென வாகி ... திருமால் என்னும் காப்பவன் ஆகி

அரனென வாகி ... சிவன் என்னும் அழிப்பவனாகி

அவர் மேலாய் ... அம்மூவருக்கும்மேலான பொருளாகி

இகரமும் ஆகி ... இங்குள்ள பொருட்கள் யாவுமாகி

எவைகளும்ஆகி ... எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி

இனிமையும் ஆகி ... இனிமை தரும் பொருளாகி

வருவோனே ... வருபவனே

இருனில மீதில் ... இந்த பெரிய பூமியில்

எளியனும் வாழ ... எளியவனாகிய இந்த அடியேனும் வாழ

எனதுமுன் ஓடி வரவேணும் ... எனதுமுன் ஓடி வரவேணும்

மகபதி ஆகி ... யாகங்களுக்குத் தலைவனாக

மருவும் வலாரி ... விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)

மகிழ் களி கூரும் ... மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும்

வடிவோனே ... அழகிய வடிவம் கொண்டவனே

வனமுறை வேடன் ... காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*)

அருளிய பூஜை மகிழ் ... செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற

கதிர்காமம் உடையோனே ... கதிர்காமம் (உன் பதியாக)
உடையவனே

ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி ... (அதே ஒலி)

என ஆடு மயிலோனே ... என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே

திருமலிவான ... லக்ஷ்மிகரம் நிறைந்த

பழமுதிர்ச்சோலை மலை மிசை ... பழமுதிர்ச்சோலை மலையின்மீது

மேவு பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.