Monday, 16 July 2018

ஆஸ்லேஷா பூஜை

ஆஸ்லேஷா பூஜை 
*********************

ஒரு நண்பர் 'சார், அது என்ன சர்ப்பதோஷ பூஜை?" என்று கேட்டிருந்தார்.

முன்னோரின் நல்வினை/தீவினை மூட்டைகளாக மரபணு வழியே கடத்தப்படுகிறது. காலசர்ப்ப தோஷம் என்பது ஏதோ நல்லபாம்பை கொல்வதாலோ, பாம்பு புற்றை உடைப்பதாலோ மட்டுமே வருவது என்பதில்லை. அவரவர் ஜெனனத்தில் தந்தை வழி/தாய் வழி வரும் பாவங்கள் தான் ராகு/கேது சர்ப்ப தோஷமாக மாறுகிறது. எல்லோர் ஜாதகத்திலும் வம்ச பாபங்களும் சாபங்களும் உண்டு என்றாலும், இந்த காலசர்ப்ப தோஷ ஆட்களுக்கு மட்டும் எல்லா கிரகங்களும் ராகு முதல் கேது வரை உள்ள கட்டங்களில் அடைப்பட்டு மாட்டிக்கொள்ளும். கருநாகமும் செந்நாகமும் துரத்தும் என்பது இதைத்தான் குறிக்கும்.அத்தகையவர்கள் என்னதான் தலைக்கீழாக உழைப்பு போட்டாலும் தக்க பலன் கிடைக்காது. எதிரிகள் நிழலாய் நின்று இவர்களுடைய உழைப்பை/ முன்னேற்றத்தை தடைபோடுவர். இது எப்போது நீங்கும்? ஒரு தலைமுறையை அந்த நபர் கடந்துவிட்டபின் இன்னல்கள் நீங்கும். அதாவது 33 வயதுக்குப்பின் இதன் வீரியம் குறையும். பிறகு தோஷம் யோகமாக மாற ஆரம்பிக்கும். அதுவரை பொறுமை வேண்டும்!

மூதாதையரின் வம்ச பாவங்கள் நீங்கினாலும் அந்த நபருடைய தனிப்பட்ட முற்பிறவி ஊழ்வினைகள் நீங்கி இருக்குமா என்பது தெரியாது. அதனால்தான் பாவங்கள்/புண்ணியங்கள் செய்தால் அது உங்களை மட்டுமல்ல உங்கள் சந்ததிகள் வழியே பயணிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆட்டம்போட்டுவிட்டு போய்விட்டால் பின்னால்வரும் தலைமுறைகள் அவதிப்படும். அதுதான் வாங்கிவந்த வரம்! 

இங்கே படத்தில் உள்ளபடி பல டிசைன்களில் அச்லேஷா ரங்கோலி வரைகிறார்கள். நான் சொன்ன அந்த நாகபத்ரி வரைந்த கோலம்தான் இது. சர்ப்பங்களின் வகைகள் எத்தனை உண்டோ அத்தனைக்கும் பிண்டம் வைக்கிறார்கள். இதுவும் தலைமுறைகள் கணக்குப்படிதான் என்று சொன்னார். நான் எண்ணியபடி 64 இருந்தது அதுபோக அஷ்டதிக்குகளுக்கு 4+8=12 வைத்தார்கள். அந்த சம்ஸ்காரம் ஆஸ்லேஷ பலி பூஜை நிவர்த்தி சுமார் 2 மணிநேரம் போகிறது. இதைப் பெரும்பாலும் நாக பஞ்சமி நாளிலோ ஆயில்யம் நட்சத்திரம் அன்றோ செய்கிறார்கள். அதுவே நாகமண்டலா என்பது இரவு முழுதும் நடக்கும் பூஜை.

பூஜைகள் முடிந்ததும் எல்லோர்க்கும் கழிப்பு நடக்கிறது. ரட்சை தருகிறார்கள். அதன்பின் அதில் வைத்த பிண்டம், பூ, பழம் முதலியவற்றை அப்புறப்படுத்தி அத்வான இடத்தில் போய் எரித்து விடுகிறார்கள். ரங்கோலி போட்ட இடத்தை சுத்தம் செய்கிறார்கள். நடந்த பிறகு பங்குகொண்டவர்கள் பிரசாதம் வாங்கிக்கொண்டு போகிறார்கள்.

ஆகவே, தலைமுறைகளுக்காக பொருள் சேர்க்கிறேன் என்று சொல்லி தீரா பாவத்தையும் சேர்த்துக்கொடுத்து பயனில்லை. அரூபமாக உள்ள பாட்டன் / பூட்டன் /ஒட்டனை அவர்களின் கொள்ளுப் பேரக் குழந்தைகள் நொந்துபோய் வசைகளும் சாபமும் அளித்தாலும் ஆச்சரியமில்லை.

நம்ம பாவங்களை சுமக்க அடிமை சிக்கிட்டான் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்!

-எஸ்.சந்திரசேகர்