Wednesday 11 July 2018

கரந்தையர் பாளையம் சாஸ்தா ப்ரீதி வைபவம்

கரந்தையர் பாளையம் சாஸ்தா ப்ரீதி வைபவம் :

ஸ்வாமியே சரணம் அய்யப்பா

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதி புண்ணியத்தலத்தில் அமைந்துள்ள கல்லிடைக்குறிச்சிக்கு " கரந்தையர் பாளையம் " என்ற பெயரும் உண்டு.

இந்த ஊரில் வசித்து வரும் அனைத்து குடும்பங்களுக்கும் குலதெய்வமாக ஸ்ரீசாஸ்தா இருப்பார்.

இந்த ஊர் என்றில்லை மதுரையும் மதுரைக்கு தெற்கே உள்ள திருநெல்வேலி ; தூத்துக்குடி ; அம்பாசமுத்திரம் ; கல்லிடைக்குறிச்சி ; ஆம்பூர் ; ஆழ்வார்குறிச்சி ; ரெங்கசமுத்திரம் ; பிரம்மதேசம் ; அடைச்சானி ; பள்ளக்கால் ; ரவணசமுத்திரம் ; கடையம் ; தென்காசி ; செங்கோட்டை ; குற்றாலம் ; சுரண்டை ; சுந்தரபாண்டியபுரம் ; கடையநல்லூர் ; இராஜபாளையம் ; ஸ்ரீவில்லிப்புத்தூர் ; வத்திராயிருப்பு போன்ற பல ஊர்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் குலதெய்வம் ஆக ஸ்ரீசாஸ்தா இருப்பார்.

பெயர்கள் வேண்டுமானால் சாஸ்தா ; அய்யனார் ; பூதநாதர் ; கல்யாண வரதன் ;அரிகரபுத்ரன் ; முத்தைய்யன்  என்று இருக்கும் அப்படி அழைக்கின்ற அனைத்து பெயர்களும் பொன்னம்பல மேட்டில் தன் இரு தேவியரோடு அருள்பாலிக்கும்  சாட்சாத் ஆதிபூதநாதர் ஆன அந்த மஹாசாஸ்தாவையே குறிக்கும்.

சாஸ்தாவை குலதெய்வமாக கொண்டுள்ள குடும்பங்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு
ஹரிஹரன் ; பூதத்தான் ; சடையப்பன் ; கல்யாணம் ; ஆர்யா ; அய்யப்பன் ; மணிகண்டன் ; அய்யாமணி ; குளத்துமணி என்றும்
பெண் குழந்தைகளுக்கு பிரபா ; பூர்ணா ; புஷ்கலா ; பூர்ணபுஷ்கலா ; ஹரிணி ; ஹரிப்ரியா ;ராஜேஸ்வரி ; பொன்னம்மாள் ; பொன்னி என்றும்
பெயர் வைப்பார்கள்.

அதை வைத்தே அவர்கள் எந்த ஊர்க்காரர்கள் என்று எளிதாக சொல்லி விடலாம் அந்த அளவுக்கு இப்பகுதியில் சாஸ்தா வழிபாடு பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது.

மஹாமேரு ஸமூஹம் என்றழைக்கப்படும் கம்பங்குடி வம்ச வரலாறு :

முன்னொரு காலத்தில் சாஸ்தாவிடம் அளவில்லாத பக்தி கொண்ட விஜயன் என்ற பெயருள்ள அந்தணர் கரந்தையர் பாளையம் என்ற கல்லிடைக்குறிச்சியில் அவர் மனைவியோடு வாழ்ந்து வந்தார்.

அத்தம்பதியினர் இருவரும் சாஸ்தா மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தனர்
அவர்களது தன்னலம் இல்லாத பக்தியை மெச்சி அவர்களுக்கு கருணை காட்ட வேண்டும் என்று சாஸ்தா எண்ணினார்.

அதன்படி ஒருநாள் இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்த வேளையில் சாஸ்தா ஒரு பாலகன் உருவில் இவர்கள் இல்லம் தேடி வந்தார்.

வந்து நின்ற பாலகனின் பொலிவான முகத்தைப் பார்த்து அந்த தம்பதியினர் இருவரும் அவனை தங்கள் இல்லத்துள் அழைத்துச் சென்றனர்.

மழையில் நனைந்து வந்த அந்த பாலகனுக்கு உடலை துடைக்க ஒரு புது வஸ்திரம் கொடுத்தனர் பாலகனும் அதை வாங்கி தன் தலையை துவட்டிக் கொண்டே அம்மா எனக்கு மிகுந்த பசியாக இருக்கிறது இந்த கொட்டும் மழையில் நடுநிசியில் உணவுக்கு நான் எங்கு செல்வேன் தாங்கள் எனக்கு கொஞ்சம் உணவு தந்தால் என் பசியை போக்கிக் கொள்வேன் என்றான்.

அதற்கு அவர்கள் பாலகா இப்போது எங்கள் இல்லத்தில் கம்பு புல்லில் செய்த கம்பங்கூழ் தான் இருக்கிறது அதை உனக்கு தருகிறோம்
அதை அருந்தி உன் பசியாற்றிக் கொள் என்று மிகவும் கனிவோடு கூறினார்கள்.

பாலகனும் அந்த கம்பங்கூழை அருந்தி விட்டு அம்மா இன்று இரவு மட்டும் இங்கே தங்குவதற்கு சிறிது இடம் தாருங்கள் இன்றிரவு ஓய்வெடுத்துக் கொண்டு நாளை காலையில் சென்று விடுகிறேன் என்று பணிவோடு கேட்டான்.

அதற்கு அத்தம்பதியனரும் அந்த பாலகனுக்கு சமயம் அறிந்து தங்க இடம் தந்து உதவினர்.

அன்றிரவு பாலகனாய் வந்த பகவான் சாஸ்தா அத்தம்பதியினர் முன் பிரசன்னம் ஆகி அன்புடையீர் உங்கள் அன்பினால் நீங்கள் பக்தியோடு எமக்கு படைத்த கம்பங்கூழ் ஆனது எனது பசியைப் போக்கி எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியைத் தந்தது.

இன்று முதல் கம்பங்கூழ் தந்த உங்கள் குடும்பம் ஆனது " கம்பங்குடி வம்சம் " என்று தொன்று தொட்டு வழங்கப்படும்.

இந்த " கம்பங்குடி " வம்சத்திற்கு என்றென்றும் நான் உடமை என்றும்
இந்த " கம்பங்குடி " வம்சத்தினர்
என்றென்றும் எனக்கு அடிமை என்றும்
உங்கள் குடும்பத்திற்கு நானே குலதெய்வமாக இருந்து எப்போதும் காவலனாக இருப்பேன் என்று கூறி மறைந்து விட்டார்.

அப்படிப்பட்ட " கம்பங்குடி " வம்சத்தை சேர்ந்தவர்கள் தான் " கரந்தையர் பாளையத்தில் " நடைபெறும் சாஸ்தா ப்ரீதி வைபவத்தில் பூஜையில் வைக்கப்படும்
" ஸ்தானிகர் " ஆசனத்தில் ( பலகையில் ) ஸ்ரீசாஸ்தா சொரூபமாக வந்து அமர்வார்கள்.

இன்றும் வயதில் மூத்தவரான " கம்பங்குடி " வம்சத்தை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ண அய்யர் மற்றும் ஸ்ரீ வீரமணி ஐயர் ; ஸ்ரீ கணபதி ஐயர் மும்பையிலும்
ஸ்ரீ சுரேஷ் ஐயர் அவர்கள் பெங்களூரிலும்
கல்லிடைக்குறிச்சி தொந்திவிளாகம் தெருவை சேர்ந்த ஸ்ரீ அப்பாச்சி கிருஷ்ணய்யர் அவர்கள் சென்னையிலும்
வசித்து வருகின்றார்கள்.

மேலும் சாஸ்தா ப்ரீதியில் செல்லப்பிள்ளை ஸ்தானத்தில் செல்லவிலாஸ் அப்பளம் ஸ்ரீ முத்துஸ்வாமி சாஸ்திரிகளின் குடும்பத்தினரும் ஸ்ரீ செல்லமணி ஐயர் குடும்பத்தினரும் உள்ளனர்.

இப்போதும் கேரள மாநிலத்தில் கொச்சி ; எர்ணாகுளம் ; நூறணி ஆகிய இடங்களில் நடைபெறும் சாஸ்தா ப்ரீதியில் கரந்தையர்பாளைய சமூகத்தினருக்கே முதல் மரியாதை செய்வார்கள்.

மேலும் கோயம்புத்தூரில் வருடா வருடம்
" ஸ்ரீ மஹாசாஸ்த்ரு ஸேவா சங்கம் " நடத்தும் " ஸம்ப்ரதாய சாஸ்தாப்ரீதி வைபவத்தில் " கரந்தையர் பாளைய சம்ப்ரதாய முறைப்படியே நடக்கிறது.

" சாஸ்தா ப்ரீதி வைபோஹம் " :

" ப்ரீதி " என்றால் " சந்தோஷம் "

உலகத்திற்கே படியளக்கும் அன்னதான ப்ரபு ஆன அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் ஆன பகவானை
சந்தோஷப்படுத்த வருடத்தில் ஒருநாள் அவன் அடியவர்களால் அவனுக்கு செய்யப்படும் உபசாரமே " சாஸ்தா ப்ரீதி " ஆகும்.

அப்படிப்பட்ட " சாஸ்தா ப்ரீதி " இந்தியாவில் முதன் முதலாய் நடந்த இடம் தென்பொதிகை தென்றல் வீசும் தாமிரபரணி பாய்ந்தோடி வரும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  கல்லிடைக்குறிச்சி ஆகும்.

" கரந்தையர் பாளையம் " என்றழைக்கப்படும் கல்லிடைக்குறிச்சியில் மொத்தம் 18 அக்ரஹாரங்கள் உள்ளது அந்த 18 அக்ரஹாரத்தையும் மொத்தம் எட்டு கிராமங்களாக பிரித்துள்ளனர்.

அவை முறையே

1) வைத்தியப்ப புரம் கிராமம்

2) தொந்தி விளாகம் கிராமம்

3) ராமச்சந்த்ர புரம் கிராமம்

4) தென்னூர் கிராமம்

5) ஸ்ரீ வராகபுரம் கிராமம் என்ற
வீரப்ப புரம் கிராமம்

6) பாட்ட நயினார் புரம் கிராமம்

7) முதலியப்ப புரம் கிராமம்

8) ஏகாம்பர புரம் கிராமம்

என்பதாகும்.

இந்த ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்தவர்களும்
" கிழிக்காரர்கள் " என்று அழைக்கப்படுவர்
ஒவ்வொரு வருடமும் " தக்ஷிணாயன புண்ய காலம் " என்று அழைக்கப்படும் ஆடி மாதத்தில் நடைபெறும் " சாஸ்தா ப்ரீதி " வைபவத்தை பகவானுக்கு உகந்த ஸ்திரவாரமாம் சனிக்கிழமை செய்வார்கள் மறுதினம் ஆன ஞாயிற்றுக்கிழமை சூரியநாராயண பூஜை செய்து நிறைவு செய்வார்கள் இதை நாள் பார்த்து நடத்துவார்கள்.

இதை " பெரிய அடி யந்திரம் " என்றும் அழைப்பார்கள் அதற்கான கிராமக் கூட்டம் சாஸ்தாங்கோவிலில் வைத்து நடைபெறும்.

அந்த வருடம் எந்த கிராமத்தின் " கிழியோ "
அவர்கள் அந்த வருடம் முழுவதும் கிராமத்தில் நடைபெறும் கோவில் விசேஷங்களையும் " ஸ்ரீ சங்கர ஜெயந்தி " மற்றும் " சிருங்கேரி ஆச்சார்யாள் வர்த்தந்தி தினம் " போன்ற உற்சவங்களை பொறுப்பாக நடத்த வேண்டும்.

அதற்கான செலவை அறக்கட்டளை மூலம் வருகின்ற வட்டியில் இருந்து இந்த நிகழ்ச்சிகளை முக்கியமாக
" சாஸ்தா ப்ரீதி வைபவத்தை " கோலாகலமாக கொண்டாட வேண்டும் அதற்கு பக்தர்கள் தாராளமாக காணிக்கைகள் கொடுத்து வருகின்றனர்.

" சாஸ்தா ப்ரீதி " வைபவத்திற்கு முதல்நாள் அதாவது வெள்ளிக்கிழமை மாலையில் ஆறு மணிக்கு மேல் எந்த கிராமத்தின் கிழியோ அந்த கிராமத்து கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும்
" பெரிய அடி யந்திரம் "
( நிறைய ஓலைச்சுவடிகள் நிறைந்த ஒரு பெரிய கட்டு )
ஸ்ரீ சாஸ்தாவின் பிரம்பு ; யானை வாகனம் மற்றும் சாஸ்தாவின் சட்டமிடும் மந்திரி ஆன ஸ்ரீ சங்கிலி பூதத்தாரின் சரம் ( சங்கிலி )
வட்டை விளக்கு ( ஒரு வகை விளக்கு இந்த விளக்கை முக்கியமாக சாஸ்தா ப்ரீதி பூஜையில் வைத்து பூஜிப்பார்கள் ) போன்ற தெய்வீகப் பொருட்களை தனித்தனியாக அந்த கிராமத்தில் உள்ள பெரியவர்களும் கிராம கிழிக்காரர்களும் கைகளில் ஏந்தி வர அவர்களுக்கு தனித்தனியாக வண்ணக்குடைகளை பிடித்துக் கொண்டு மரியாதை செய்த படி கிராமத்து இளைஞர்கள் வருவார்கள்.

அவர்களை சகல மரியாதைகளோடும் அனைத்து கிராமங்களுக்கும் நாதஸ்வர மேள தாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்து இறுதியாக சாஸ்தாங் கோவி்ல் வந்தடைந்து பூஜைக்காக வைத்து நமஸ்கரிப்பார்கள்.

அன்று இரவு சாஸ்தாங் கோவிலில் வைத்து ஸ்ரீசாஸ்தாவாக ஆசனத்தில் அமரக் கூடியவரின் திருக்கரங்களில் ஒரு பெரிய வெள்ளைப் பூசணிக்காய் ( சாம்பக்காய் ) கொடுத்து அதை அவர் இரண்டாக வெட்டி உடைத்து அங்கிருக்கும் தலைமை சமையற்காரரிடம் " ஸ்வாமியே சரணம் அய்யப்பா " என்ற சரணகோஷத்துடன் தருவார்.

அதை பயபக்தியுடன் பெற்றுக்கொண்ட சமையற்காரர் சாஸ்தா ப்ரீதிக்கு உண்டான காய்கறிகளை நறுக்குவதற்கு தயாராகி விடுவார்.

அதன் பிறகு கோவிலில் வைத்து மறுநாள் நடைபெற இருக்கும் சாஸ்தா ப்ரீதி அன்று நடக்கும் அன்னதானத்தில் பந்தியில் என்னென்ன உணவு பதார்த்தங்களை யார் யார் பரிமாற வேண்டும் என்று ஸ்வாமியிடம் உத்தரவு கேட்டு திருவுளச்சீட்டு எழுதி குலுக்கி போடுவார்கள் அதில் யார் யார் பெயருக்கு என்னென்ன பதார்த்தம் வந்திருக்கிறதோ அதை மட்டுந்தான் அந்த கிராமத்து கிழிக்காரர்கள் பந்தியில் ( உதாரணம் : பாயசம் பரிமாறுபவர் மற்ற வகைகளை பரிமாறக் கூடாது ) பரிமாற வேண்டும் கிராமத்தின் ஒற்றுமைக்காக இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கூட நம் முன்னோர்கள் எத்தனை கவனமாக இருந்திருக்கின்றனர் என்பதற்கு கல்லிடைக்குறிச்சி கிராமம் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.

மறுநாள் சனிக்கிழமை ( சாஸ்தா ப்ரீதி ) அன்று " சாஸ்தா ப்ரீதி " ஆனது முன்பெல்லாம் சன்னதி தெருவில் உள்ள
ஸ்ரீ ஆதிவராஹ ( லக்ஷ்மீபதி ) பெருமாள் கோவிலில் வைத்து நடைபெறும் கோவிலின் தெற்கு பிரகாரத்தில் உள்ள சாஸ்தா மண்டபத்தில் தான் பூஜைகள் நடைபெறும்.

அழகாக ஸ்வாமியை அலங்காரம் செய்திருப்பார்கள் பெரிய விளக்குகளில் ஸ்வாமியை ஆவாஹனம் செய்து பூஜிப்பார்கள்.

ஒரு விளக்கில் மகாகணபதியையும்
ஒரு விளக்கில் குருவையும்
ஒரு விளக்கில் பூர்ணாம்பா புஷ்கலாம்பா ஸமேத மஹாசாஸ்தாவையும்
ஆவாஹனம் செய்து வைப்பார்கள்.

தெற்கு முகமாக உள்ள விளக்கில் ஸ்வாமியின் சட்டமிடும் மந்திரியான ஸ்ரீ பூதத்தாரை ஆவாஹனம் செய்து குண்டாந்தடி மற்றும் சரம் ( சங்கிலி ) வைத்து வடைமாலை சாற்றி இருப்பார்கள்.

பூமாலை சாற்றி புஷ்பங்கள் சமர்ப்பித்து சாஸ்தா சகஸ்ரநாம அர்ச்சனை
ஸ்ரீருத்ர பாராயணம்
ஸதுர் வேத கோஷ பாராயணம் செய்வார்கள்.

ஸ்ரீசாஸ்தாவாக அமர்பவருக்கான ஸ்தானிகர் ஆசனமும் ( பலகை )
ஸ்ரீ சாஸ்தாவின் செல்லப்பிள்ளை ஆன
ஸ்ரீ சத்யகனுக்கு ஒரு ஆசனமும் ( பலகை )
ஸ்ரீ சாஸ்தாவின் சட்டமிடும் மந்திரி
ஸ்ரீ பூதத்தாருக்கு ஒரு ஆசனமும் ( பலகை )
ஸ்ரீ சாஸ்தாவின் பரிவார தேவதா மூர்த்திகள் ஆன யக்ஷி மற்றும் கருப்பஸ்வாமிக்கு ஒரு ஆசனமும் ( பலகை ) போடுவார்கள்.

பின்னர் அந்தந்த தேவதைகளுக்குரிய பிரதிநிதிகளாய் அந்தந்த ஆசனங்களில் கம்பங்குடி வம்ச ஸ்தானிகர்கள் அமர்வார்கள்.

ஸ்ரீ மணிதாஸர் எழுதிய கீர்த்தனங்கள் ஆன மஹாமேரு ஸமூக சாஸ்தா ப்ரீதி வரவுப் பாடல்களை மனம் உருக பாடுவார்கள்.

அதன் பிறகு மங்கள ஸ்நானம் செய்ய ஸ்வாமி செல்வார் ஒரு வண்ணக் குடையின் கீழ் சாஸ்தாவாக இருப்பவரை அவரின் இரண்டு பக்கங்களிலும் இரு பக்தர்கள் அவரை கைத் தாங்கலாக பிடித்துக் கொள்ள இரட்டை வரிசையாக ஸ்வாமியின் வரவு விருத்தங்களை பாடிக் கொண்டே வருவார்கள்.

அவருக்கு முன்னால் வட்டை தீபத்தை ஒருவர் இரு கைகளிலும் தாங்கி கொண்டு வருவார்
சாஸ்தாவின் பரிவார தேவதைகள் ஆன
ஸ்ரீ சங்கிலிபூதத்தார் ; ஸ்ரீ குண்டாந்தடி பூதத்தார் ; ஸ்ரீ கருப்பஸ்வாமி ; ஸ்ரீ யக்ஷி ; செல்லப்பிள்ளை ஸ்ரீ சத்யகன் போன்றவர்கள் முன்னால் ஆடிக் கொண்டே போவார்கள் அவர்களின் தாக சாந்திக்காக பக்தர்கள் இளநீரை கொடுப்பார்கள்.

பெருமாள் கோவிலின் மேற்கு வாசல் வழியாக வந்ததும் அங்கு ஒரு வீட்டின் சுவரில் உள்ள சிறிய துவாரம் வழியாக ஸ்ரீசாஸ்தா ஆனவர் பார்ப்பார் அது பிலாவடி சாஸ்தா மற்றும் ஆரியங்காவு சாஸ்தா தரிசனம் என்று பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

பின்னர் மேலமாட வீதி வழி வந்து ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவிலின் கன்னடியன் கால்வாய் படித்துறையில் வைத்து ஸ்வாமிகள் அனைவரையும் மங்கள ஸ்நானம் செய்ய வைத்து புது வஸ்திரம் கொடுத்து அழைத்து வந்து நேராக வடக்குமாட வீதி வழியே அழைத்து வந்து பெருமாள் கோவிலுக்குள் சென்று பூஜா மண்டபத்தில் அவர்களை அமரச் செய்து சாந்தி பெற செய்வார்கள் பின்னர் ஸ்வாமிக்கு தீபாராதனை காண்பித்து அன்றைய காலை பூஜையை பூர்த்தி செய்வார்கள்.

பின்னர் மங்கள ஸ்நானம் முடித்து வந்த சாஸ்தாவின் கையில் இலைக்கட்டு தரப்பட்டு அதை அவர் அந்த கிராம கிழிகாரரிடம் கொடுத்து அன்னதானத்தை துவங்க சொல்வார் உடனே அதை அவர் பெற்றுக் கொண்டு அங்கு வந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் பரிமாற துவங்கி விடுவார்கள் கிட்டத்தட்ட சுமார் மூன்று மணி நேரம் நடக்கும் இந்த அன்னதானம் முன்பெல்லாம் பெருமாள் கோவிலில் உள்ள அனைத்து பிரகாரங்களிலும் நான்கு அல்லது ஐந்து முறை அன்னதான பந்திகள் நடைபெறும்.

" சாஸ்தா ப்ரீதி பாயசம் " :

பெரிய அடுப்புக்குழி தோண்டி அதன் மேல் பெரிய வார்ப்பு ( அந்த பெரிய வார்ப்புகளை தூக்குவதற்கே ஒரு பத்து பேர் இருப்பார்கள் )
வைத்து அதில் பாயாசம் வைப்பார்கள்
அதை இரண்டு பேர் ( இந்த பாயசம் வைப்பது ஸ்வாமியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்று ஸ்வாமியை அலங்கரித்த மண்டபத்தின் நேர் எதிரே வைத்து செய்வார்கள் ) கிண்டிக் கொண்டே இருப்பார்கள்.

அவைகள் எல்லாம் பசுமையான நினைவுகள் ஆன கண்கொள்ளா காட்சிகள் ஆகும்.

அதன் பின்னர் அன்றிரவும் பகலைப் போலவே பூஜை முடித்து ஸ்வாமிக்கு மங்கள ஸ்நானம் நடத்தி வைத்து அதன் முடிவில் நைவேத்யம் செய்து தீபாராதனை காட்டி சாஸ்தா ப்ரீதியை பூர்த்தி செய்வார்கள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சூரியநாராயண பூஜை அன்று காலை ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் சூரிய நமஸ்கார ஸ்லோகங்கள் சொல்லி நமஸ்கரிப்பார்கள்
அன்று காலை பத்து மணிக்கெல்லாம் அன்னதானம் துவங்கி விடும்.

பின்னர் அன்றிரவு கிராமக் கூட்டம் நடைபெறும் அதில் அடுத்த வருடம் எந்த கிராமத்துக்காரர்களின் கிழியோ அவர்களிடம் அதை ஒப்படைப்பார்கள்.

அதை அந்த குறிப்பிட்ட கிழிக்கார கிராம ஜனங்கள் மேள தாளத்துடனும் ஸ்வாமியின் சரணகோஷத்துடனும் பெரிய அடி யந்திரத்தையும் ; ஸ்வாமியின் பிரம்பு ; யானை வாகனம் ; சரம் ( சங்கிலி ) வட்டை தீபம் முதலியவற்றை எடுத்துச் சென்று அவர்களது கிராம கோவிலில் வைத்து விட்டு நைவேத்யம் தூப தீப ஆராதனைகள் செய்து பூர்த்தி செய்வார்கள்.

அன்று இரவு மஹாமேரு ஸமூஹத்தின் கட்டளையாக ஸ்ரீ ஆதிவராஹ பெருமாளுக்கு
" சிறப்பு கருடசேவை " நடைபெறும்.

இப்போதெல்லாம் " சாஸ்தா ப்ரீதி " ஆனது
" தென் குளத்தூரிலய்யன் " என்று அழைக்கப்படும் சாஸ்தா கோவிலில் வைத்தே மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த கோலாகலமான " சாஸ்தா ப்ரீதி " வைபவத்திற்கு அனைத்து ஊர்களில் இருந்தும் பல பக்த கோடிகள் தவறாது கலந்து கொண்டு ஸ்ரீசாஸ்தாவை அனைவருக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்கின்றனர்.

ஸ்வாமியே சரணம் அய்யப்பா

தென்கரந்தாபுரி வாசனே சரணம் அய்யப்பா

கரந்தையர் பாளையத்துறைவோனே சரணம் அய்யப்பா

கருணா சாகரக் கடலோனே சரணம் அய்யப்பா

தென் குளத்தூரிலய்யனே சரணம் அய்யப்பா

கம்பங்குடிக்கு உடமையே சரணம் அய்யப்பா

உன் பொன்னடிக்கு அடிமையே சரணம் அய்யப்பா

ஸ்வாமியே சரணம் அய்யப்பா