Monday, 16 July 2018

கதாகாலக்ஷேபம் - ஸ்ரீ_கண்ணன்_நாமம்_சொல்லும்_கதைகள்_14 ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

#ஸ்ரீ_கண்ணன்_நாமம்_சொல்லும்_கதைகள்_14
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

'நீங்களே கதி என்று ஒருவரிடம் சொல்வதும், அவருக்கு அடியவராக இருப்பதும் தவறு. அதேபோல், 'நானே பெரியவன்’ என்று சொல்வது அகங்காரம்; ஆகவே, அதுவும் தவறு'' என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அல்லவா? ஆனால், இறைவனுக்கு இதெல்லாம் பொருந்தாது.

தன்னை 'அடியேன்’ என்று சொல்லிக்கொண்டே அனைவரிடமும் பழகி, எல்லோரையும் மதித்து வாழ்ந்தவர் யார் தெரியுமா? ஸ்ரீராமச்சந்திர பிரபுதான் அவர்.

தன்னை அவதாரமாக அவர் ஒருபோதும் காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும், எங்கும் தன்னை 'அடியேன்’ என்றுதான் சொல்லிக் கொண்டார். விஸ்வாமித்திரரிடம் 'அடியேன்’ என்றுதான் பணிந்தார். பரத்வாஜ முனிவரைப் பார்த்ததும், 'அடியேன்’ என்று சொல்லித்தான் நமஸ்கரித்தார். வசிஷ்டரைச் சந்தித்ததும், 'அடியேன்’ எனப் பரவசப்பட்டு வணங்கினார்.

அவ்வளவு ஏன்..? சமுத்திரராஜனிடம்கூட அப்படி 'அடியேன்’ என்று சொல்லித்தானே வழிவிடும்படி மூன்று நாட்கள் வேண்டினார். ஆனாலும் சமுத்திரராஜன், கடலைக் கடப்பதற்கு வழிவிடவில்லை. பிறகுதான் ஸ்ரீராமன், 'என்னுடைய வில்லையும் அம்பையும் எடுத்து வாருங்கள். இந்தக் கடலை அப்படியே வற்றச் செய்கிறேன். அப்படி வற்றினால்தான், வானரங்கள் கடலைக் கடக்க, வழி கிடைக்கும்’என்றாரே, பார்க்கலாம்!
ஆக... எவருக்கு, எப்போது, எதனால் அடிமையாக, தாசனாக, அடியவனாக இருக்கவேண்டுமோ, அப்போதெல்லாம் அப்படி இருப்பதே சிறப்பு என்பதை வாழ்ந்து காட்டிய அவதார புருஷன் ஸ்ரீராமபிரான்.

சரி... 'நானே பெரியவன்’ என்று பறைசாற்றிய பகவான் யார் தெரியுமா? அவர்... ஸ்ரீகிருஷ்ணரைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்?

கீதையில், பல இடங்களில், 'நானே பெரியவன்’ என்று அர்ஜுனனுக்கு அருளியுள்ளார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. எதற்கெடுத்தாலும், எங்கே தீங்கு நேர்ந்தாலும், 'சங்கை ஊதிவிடுவேன்; சக்கரத்தை ஏவி விடுவேன்’ என்பது போல், தயாராக, துடிப்புடனும் விழிப்புடனும் அஞ்சாநெஞ்சனாக, 'நானே பெரியவன்’ என மார்தட்டிச் சொன்னவர், ஸ்ரீகிருஷ்ணன்.

அதனால்தான் அவருக்கு 'சர்வாசு நிலையஹ’ எனும் திருநாமம் உண்டானது. 'இந்த உலக உயிர்கள் அனைத்துக்கும் இருப்பிடமாகத் திகழ்பவன்’ என்று இதற்குப் பொருள். உலகத்து மனிதர்கள் அனைவருக்கும் புகலிடமாக, அடைக்கலம் தருபவனாக இருப்பவன்தானே, மிகப் பெரியவன்! அப்படியெனில், பகவான் சொன்னதில் தவறென்ன இருக்கிறது?

இப்படித்தான்... கீதையின் 16-வது அத்தியாயத்தில், அசுரர்களையும் தேவர்களையும் பிரித்துப் பகுத்து எடுத்துரைக்கிறார் அர்ஜுனனிடம்! இதையெல்லாம் கேட்ட அர்ஜுனனுக்கு சின்னதாக ஒரு பயம், பதற்றம், குழப்பம்! 'அசுரர்களையும் தேவர்களையும் பற்றிச் சொல்கிறானே கண்ணன்... நம்மை இவன் அசுரனாக நினைக்கிறானா, அல்லது தேவர்களில் ஒருவனாக மதிக்கிறானா? என்று தவித்தான்; மருகினான்.

கண்ணனிடம் மெள்ள, 'அசுரர்கள் என்பவர் யார்? தேவர்கள் என்பவர் யார்? ஒற்றை வரியில் தெளிவாகச் சொல்லேன், கண்ணா! என்று கேட்டான்.

உடனே கண்ணபிரான், 'சாஸ்திரங்களையும் அதன் விதிமுறைகளையும் யாரெல்லாம் அத்துமீறுகிறார்களோ அவர்கள் அசுரர்கள். அந்த சாஸ்திரத்தையும் அதன் விதிமுறைகளையும் போற்றி, அதன்படி யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் தேவர்கள்! என்றார்.

உடனே அர்ஜுனன், 'சரி கண்ணா, நான் யார்? என்று கேட்டான். 'இதிலென்ன சந்தேகம்? உன்னிடம் எத்தனை முறை 'நான் பெரியவன்... நான் பெரியவன்... என்று என்னைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், என் நல்லுரைகளைக் கேட்டுக்கொண்டிருந்த நீ, தேவர்களில் ஒருவன் தான்! என்று சொல்லிப் பூரித்தார் கண்ணபிரான். இதில் வியந்தும் நெகிழ்ந்தும் போனான் அர்ஜுனன்.

ஒருநாள் மாலையில், தன் கூந்தலைத் தோகைபோல் விரித்து, நெய் தடவிக்கொண்டிருந்தாளாம் திரௌபதி. அவளின் அந்தத் தலைவிரிகோலத்தைக் காணச் சகிக்காத ஸ்ரீகிருஷ்ணன், 'ம்... சீக்கிரம், சீக்கிரம்’ என்று விரட்டி, அவளை உடனே தலைவாரிக் கொள்ளச் செய்தானாம். நல்லதொரு பொழுதில், அவள் சிறிது நேரத்துக்குத் தன் கூந்தலை முடிந்துகொள்ளாமல் இருந்ததையே காணப் பிடிக்காத கருணையாளனான கண்ணபிரான், 'துரியோதன - துச்சாதன ரத்தத்தைத் தடவிக் கொள்ளும் வரை, என் கூந்தலை முடிய மாட்டேன்’ என்று அவள் சபதமிட்டபோது, பேசாமல் இருப்பானா, என்ன? அதைத் தாங்கமுடியாதவனாக, வெகுண்டு எழுந்து அவன் நிகழ்த்தியதே மகாபாரத யுத்தம்!

'அடியேன்’ என்று ஸ்ரீராமனாகவும், 'நான் பெரியவன்’என்று ஸ்ரீகிருஷ்ணனாகவும் அவதரித்து, உலகுக்கு எப்படியெல்லாம் உணர்த்தியிருக்கிறார் பாருங்கள், பகவான்! 'அடியேன்’ எனப் பணிந்தது ஸ்ரீராமரின் காலம். 'சக்கரத்தை எடுப்பேன்’ என வியூகத்துக்குத் தயாராக இருந்தது ஸ்ரீகிருஷ்ணனின் காலம். துவாபர யுகத்தின் மாறுபாடு அது!

சரி... 'நான் பெரியவன்’ என மார்தட்டிச் சொன்னாலும், கண்ணன் அப்படியே இறுமாப்பும் கர்வமுமாகவே இருந்துவிட்டானா என்ன?

தன் அத்தனை பெருமைகளையும் தூக்கிப் போட்டுவிட்டு, தன் அத்தனை சக்திகளையும் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, அர்ஜுனனுக்கு சாரதியாக, அவனுடைய கால்கள் தன் தோளில் படும்படி தேரோட்டினானே, அவனை விடவா 'அடியேன்’ என்று சொல்வதற்கு ஒருவர் வேண்டும்?! எதற்கும் கலங்காத அந்த மாயக் கண்ணனும் ஒரே ஒரு விஷயத்துக்காகத் தவித்து மருகினானாம். எப்போது தெரியுமா?

'சபையில் மானபங்கப்படுத்திய வேளையில், திரௌபதிக்குத் துணையாக அருகில் இல்லாது போய் விட்டேனே...' என அர்ஜுனனிடம் வருந்தினானாம்.

அதனால் என்ன... திரௌபதி கண்ணீரும் கதறலுமாக 'கோவிந்தா’எனக் குரல் கொடுத்ததும், உலகின் எந்த மூலையில் இருந்தெல்லாமோ சட்டென்று சரம்சரமாக, புடவை புடவையாக அங்கே கொண்டுவந்து, அவளின் மானத்தைக் காத்தருளிவிட்டானே கண்ணன்? அப்படியிருக்க... அவன் எதற்காகக் கவலைப்படவேண்டும்? அதுதான் ஸ்ரீகிருஷ்ணனின் மகோன்னதம். அருளை அள்ளிக் கொடுப்பதில் அகமகிழ்பவன் அவன். ஒரு துளசி, ஒரு பூ, ஒரு பழம்... ஸ்ரீகண்ணனைத் திருப்திப்படுத்த, அவனது பேரருளைப் பெற, இவை மட்டுமே போதும். நமக்கு அருள்மழை பொழிந்துவிடுவான், அந்த அழகுக் கண்ணன். ஆனால், ஒரேயொரு விஷயத்தில் மட்டும் அவனுக்குத் திருப்தியே வராதாம்! அது என்ன விஷயம்?

அதாவது, நாம் என்ன கொடுத்தாலும், அதில் நிறைவு பெற்றுவிடுகிற ஸ்ரீகிருஷ்ணன், நமக்குத் தருகிறபோது மட்டும் அவ்வளவு சீக்கிரத்தில் நிறைவடையவே மாட்டான். உள்ளன்புடன் அவனைச் சரணடைந்து விட்டால், அவர்களுக்கு 'இன்னும் கொடுப்போம், இன்னும் கொடுப்போம்’என்று கொடுத்துக்கொண்டே இருக்கிற தயாளன் அவன்!

இதனால்தான், அவனை 'அனலஹா’ எனும் திருநாமத்தைச் சொல்லிப் போற்றச் சொல்கின்றனர், பெரியோர்.

அனல் என்றால் அக்னி. அக்னிக்கு நிகரானவன் ஸ்ரீகண்ண பரமாத்மா! அதாவது, எரிகின்ற நெருப்பில் எதைப் போட்டாலும், 'ஹா’ என வாய்பிளந்து, அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும்; எண்ணெய், வஸ்திரம், நெய் என எதைச் சேர்த்தாலும் இன்னும் இன்னும் கனன்று எரியும். 'பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பக்தர்களுக்கு அருள்கிற விஷயத்தில், போதும் என்கிற மனம் இல்லாத அக்னியைப் போல் இருக்கிறார்’ என்பதாலேயே இந்தத் திருநாமம்!

கண்ணனுக்கு தாசனாக இருந்தால், நமக்குத் தேவையானவற்றைத் தந்தருளி மகிழ்கிற, அந்த மகிழ்ச்சியில் திருப்திப்படுகிற மாணிக்கம் அவன்!

அவனுக்கு அடிமையாக இருங்கள்; ஆனந்தத்தில் உங்களை மூழ்கடிப்பான், அந்த மாயக்கண்ணன்!

ஸ்ரீ மதே வாசுதேவாய....

கண்ணன்  கழலினை நன்னும்
              மனமுடையீா்  எண்ணும்
திருநாமம்  திண்ணம் நாரணமே.....

                        நம்மாழ்வாா்