Friday 8 September 2017

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்:

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்:

ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் வலிமை மிக்கவர் என்பதில் போட்டி எழுந்தது. அவர்கள் மேரு மலையை நடுவில் வைத்தனர்.

ஆதிசேஷன் மேருவை கட்டி அணைத்துக்கொண்டான். வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை மேருவிலிருந்து தள்ள முயன்றார்.
காற்று படுவேகமாக வீசியபோது மேருமலை சிதறி ஏழு துண்டுகளாக விழுந்தது. ஒவ்வொன்றும் ரத்தினமாக மாறி லிங்கமாக ஆனது. கொடுமுடி தலத்தில் வைரக்கல்லால் ஆன லிங்கமாக இறைவன் குடியிருந்ததாக ஐதீகம்.

இது ஒரு நாகர் ஸ்தலம். நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.

இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் அருள்பாலிக்கிறார். வன்னிமரத்தை இன்னொரு முகமாக பாவித்துக் கொள்ள வேண்டும். அகத்தியர், பரத்வாஜர் ஆகிய முனிவர்களுக்கு இங்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சிதந்தார். ஆதிசேஷனால் உருவான கோயில் என்பதால், இங்கு நாகர்வழிபாடு விசேஷம்.

ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில்மணி கட்டப்பட்டுள்ளது.
பெருமாள் சன்னதியின் உட்புறத்தில் ஒரு தூணில் வியாக்ரபாத விநாயகரின் சிற்பம் உள்ளது. புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர்.

இங்கே மகுடேஸ்வரர் மலை கொளுந்தீஸ்வரர் என்றும், அம்பாள் சவுந்தரநாயகி, வடிவுடைய நாயகி என்றும் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றனர்.

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தேவார வைப்புத்தலம். கொங்கேழு சிவத்தலங்களில் ஒன்று.

நன்றி : தினமலர்

No comments:

Post a Comment