Monday 25 September 2017

அகத்தியர் தவம் செய்த வேல்மலை...

அகத்தியர் தவம் செய்த வேல்மலை...

அகத்தியர் அருளிய வேல்மலை பாலமுருகன் வாழ்த்து :-

உளம்நின்று உயிருறைந்து உடலம் காத்தே
உவப்பளிக்கும் பொருள்பெருக்கி உண்மை யறிவால்
தளம் சென்று தொண்டர்கள் தொழுதே வீழ
தமிழ் தந்து தளராத தவத்தால் மும்மலக்
களம்வென்ற குறுமுனிதன் கண்மலர்க் கருணை
காலமுற்றும் காத்திடவே கண்டார் கைதொழ
வளர்தென்றல் வலசைக்கண் விளங்கும் வேல்மலை
வள்ளவன் அடிகளின்றி வேரதையா !
திருநெல்வேலி மாவட்டம்,வேல்மலை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால சுப்பிரமணியர் திருக்கோவில்.வானில் இருந்து பார்த்தால் வேல் போன்று அமைப்பு இருந்ததால் வேல்மலை என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள சுனை நீர் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.இது
அகத்தியர் தவம் செய்த மலை ஆகும்.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம், கணக்கப்பிள்ளை வலசை என்ற கிராமத்தில், குத்துக்கல்வலசை-பண்பொழி-திருமலைக்கோவில் நெடுஞ்சாலையில் மேற்குதிசையில் அமைந்துள்ளது "வேல்மலை'. இங்கு முருகன், பாலமுருகன் வடிவில் அருள்கிறார். இக்கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டியதற்கு ஆதாரமாக கோயிலின் முன் மண்டபத்தில் மீன் சின்னம் உள்ளது.
இம்மலை முற்காலத்தில் ஆதிதிருமலை என்று அழைக்கப்பட்டது. இந்த மலை வேல் போன்று அமைந்துள்ளதால் "வேல்மலை' என்ற பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் ஆதிநாதர் என்ற சித்தர் முருகனை நோக்கி வேல்மலையின் உச்சியில் தவம் செய்தார். தனது தலை மீது குமரன் திருவடி தீண்டுமின்பம் கிடைக்க வேண்டுமென்பது சித்தரின் விருப்பம். அவருடைய தவத்துக்கு இரங்கிய முருகன் அவருக்கு காட்சியளித்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார். மேலும் ஆதிநாதசித்தர் தவம் செய்த இடத்திலேயே முருகன் கோயிலும் அமைந்துள்ளது. அவருடைய ஜீவசமாதி மேல்தான் பாலமுருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலின் சிறப்பம்சம் பாலமுருகன் நேர் கீழ்முகமாக காட்சியளிக்கிறார். அவருடைய இடது கை கீழ் நோக்கியும் வலது கை மேல் நோக்கியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனமாகிய மயில் தெற்கு முகமாகக் காட்சியளிக்கும் கோலமும் இத்தலத்திற்கே உரிய சிறப்பு. செவ்வாய் தோஷமுடைய பெண்கள் செவ்வாய்க்கிழமை அன்று முருகனை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
இக்கோயிலின் வலப்புறம் கன்னிவிநாயகர் கோயில் அமைந்துள்ளது. இடப்புறம் பைரவர் கோயில் உள்ளது. கோயிலின் பின்புறம் உள்ள சுனை தீர்த்தம் தீராத நோயும் தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் நடை திறந்திருக்கும் இக்கோயிலில் முருகனுக்கு உரிய அனைத்து விசேஷங்களும் நடக்கின்றன...
அகத்தியர் ஞானம்

No comments:

Post a Comment