Wednesday 27 September 2017

அகத்தியர் அருளிய உருத்திர காயத்திரி யாகம்

அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து இந்த தகவல்கள் சேகரிக்கப் பட்டது.

கேளப்பா வட்டஓம குண்டஞ்செய்து
கிருபையுட னாலரசு சமித்தைவாங்கி
சூளப்பா குண்டமதில் தீவளர்த்து
சுத்தமுடன் பசுவின்நெய் வாங்கிமைந்தா
மேளப்பா குருபதத்தில் மனதைவைத்து
வேதாந்த ருத்திரகாயத்திரிசொல்லி
ஆடப்பா நூத்தெட்டு ஆகுதியேசெய்ய
ஆரியென்ற ருத்திர காயத்திரிசித்தே.                

சித்தமுடன் சித்திபெற யிதுவேமூலஞ்ச்
செகத்தோர்க்கு யிந்தமுறை செப்பாதேகேள்
பக்தியுள்ள மந்திரங்கள் பலிக்கவென்றால்
பாலகனே யிந்தமுறை ஓமம்பண்ணு
சுத்தமுடன் சதகோடி மந்திரமெல்லாஞ்
சுருக்காத் தன்வசமே சித்தியாகும்
புத்ததியுடன் சித்தமதா யிருந்துகொண்டு
பூரணமா யஷ்டாங்க யோகம்பாரே.  

இந்த ஹோமத்திற்கு வட்ட வடிவ ஹோம குண்டத்தை பயன் படுத்த வேண்டுமாம்.பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த ஹோம குண்டத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.

ஹோமத்தினை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்திட வேண்டும். ஹோம குண்டத்தில் ஆலமரம் மற்றும் அரச மரத்தின் குச்சிகளை இட்டு தீ வளர்க்க வேண்டும், அப்படி தீயை வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை கூறியவாறே தீயை வளர்க்க வேண்டும்.

தீ வளர்ந்த பின்னர் அதில் ஆலமரம் மற்றும் அரச மரத்தின் குச்சிகளை போட்டுக் கொண்டே உருத்திர காயத்திரியைச் சொல்ல வேண்டுமாம். இப்படி 108 தடவை மந்திரம் சொல்லி ஆலமரம் மற்றும் அரச மரத்தின் குச்சிகளை போட உருத்திர காயத்திரி மந்திரம் சித்தியாகும் என்கிறார் அகத்தியர்.

இந்த உருத்திர காயத்திரி சித்தியானால் உலகிலுள்ள நூறுகோடி மந்திரங்கள் எல்லாம் விரைவாக சித்தியாகும் என்றும், நாம் சொல்லும் மந்திரங்கள் யாவும் விரைவில் பலிக்குமாம். இந்த ஹோமத்தினை வீட்டில் எவரும் செய்யலாம் என்கிறார்.

எல்லாம் சரிதான், உருத்திர காயத்திரி மந்திரம் தான் என்ன?

புத்தியுடன் சொல்லுகிறேன் சுத்தமாக
போதமுடன் ருத்திர காயத்திரிகேளு
பக்தியுள்ள ரகசியமிது மவுனவித்தை
பாலகனே கெவுனாதி செபிக்குமார்க்கஞ்ச்
சுத்தமுடன் சொல்லுகிறேன் ஓம்சிறீங்றீங்மகா
மசிமசி நசிமசிருத்ராய சுவாகாயென்றோதிப்பாரே.

- அகத்தியர்.

சித்தர்களால் காலங்காலமாய் மிகவும் இரகசியமாக பாதுகக்கப்பட்ட உருத்திர காயத்திரி மந்திரம் "ஓம் சிறீங் றீங் மகா மசிமசி நசிமசி ருத்ராய சுவாகா" இதுவே என்கிறார். நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.
அகத்தியர் ஞானம்.

No comments:

Post a Comment