Friday, 6 March 2020

பத்ம புராணம், ஹிரணியகசிபு வின் முற்பிறவி

பத்ம புராணம் - பகுதி 1

சிவசர்மாவின் கதை
==================

மேற்குக் கடற்கரையில் துவாரவதி (அ) துவாரகையில் சிவசர்மா என்றொரு அந்தணர் சகல சாஸ்திரங்கள், வேதங்கள், யாகங்கள் ஆகியவற்றைக் கற்றவராக இருந்தார். அவருக்கு யஜ்ஞ சர்மா, வேத சர்மா, தர்ம சர்மா, விஷ்ணு சர்மா, சோம சர்மா என்று ஐந்து புதல்வர்கள் இருந்தனர். அவர்களும் வேத சாஸ்திர விற்பன்னர்களாய், சகல சாஸ்திரப் பண்டிதர்களாய், தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்றவாறு விளங்கினர். ஆனால், அவர்கள் எந்த அளவுக்குத் தன்னிடம் பயபக்தி உடையவர்களாய் இருக்கிறார்கள் என்று அவர்களைச் சோதித்துப் பார்க்க விரும்பினார் சிவசர்மா.

சகல வேதங்களையும் உணர்ந்த சிவசர்மாவுக்கு பலவகை மந்திர தந்திரங்களும் தெரிந்திருந்தது. அவர்தன் மனைவி இறந்து கிடப்பதாக ஒரு மாயத்தைத் தோற்றுவித்துத் தன் பெரிய மகனான யஜ்ஞ சர்மாவிடம் அந்த உடலை வாள் கொண்டு துண்டு துண்டுகளாக்கி வீசி எறியுமாறு கூற, அவனும் அவ்வாறே செய்தான். அவன் தந்தையிடம் பக்தியுள்ளவனென சிவசர்மா முடிவு செய்தார். அடுத்து ஓர் அழகிய மங்கையை உருவாக்கி, இரண்டாவது மகன் வேதசர்மாவிடம் அவளைத் தன்னை மணக்குமாறு ஏற்பாடு செய்யச் சொன்னார். முதலில் அவள் மறுத்து தந்தைக்குப் பதில் மகன் வேதசர்மாவை மணப்பதாகக் கூற, அவன் தந்தையை மட்டுமே மணக்க வேண்டும் என்றான். அப்போது அவள் வேதசர்மாவிடம், அவன் தன் தலையை வெட்டி அவளுக்கு வெகுமதியாகத் தந்தால் தந்தையை மணப்பதாகக் கூறினாள். அவனும் அவ்வாறே செய்ய அந்த மகனும் தன்னிடம் பக்தி உள்ளவனே என நிச்சயித்தான். சிவசர்மா, வேதசர்மாவின் தலையைக் கொய்து மூன்றாவது மகன் தர்மசர்மாவிடம் கொடுக்க, அவன் தர்ம தேவதையைப் பிரார்த்தித்து வேத சர்மா உயிருடன் எழுமாறு வரம் பெற்றான்.

வேதசர்மாவும், தர்மசர்மாவும் தந்தையை வணங்கினர். எனவே மூன்றாவது மகனும் தன்னிடம் பக்தி உள்ளவனே என்று சிவசர்மா எண்ணினார். பின்னர், நான்காவது மகன் விஷ்ணு சர்மாவைச் சோதிக்க, அவனிடம் தான் ஒரு அழகியை மணக்க விரும்புவதால் தேவலோகம் சென்று இந்திரனிடமிருந்து அமிர்தம் பெற்று தனக்குக் கொடுத்தால், முதுமையும் நோயும் நீங்கும் என்று கூற, அவனும் தேவலோகம் சென்றான். ஆனால், இந்திரன் மேனகை என்னும் தேவலோக மாது, மற்றும் பூதங்கள், பேய்களை அனுப்பி விஷ்ணுசர்மாவை திசைதிருப்ப முயன்றார். எதிலும் தன் உறுதி மாறாமலிருந்த அவன் நிலையை மெச்சி, அவனுக்கு அமுதம் கொடுக்க, அவனும் தந்தைக்கு அமுதம் கொண்டு வந்து கொடுத்தான். மகிழ்ச்சியுற்ற சிவசர்மா அந்த மகனும் தந்தையிடம் உண்மையான பக்தி உள்ளவனே என்று உறுதியாக நம்பினான். அதனால் சிவசர்மா மாயையால் நிகழ்த்தியவற்றை மறைத்துத் தன் மனைவியை மீண்டும் உயிருடன் பிள்ளைகளுக்கெதிரே வரவழைத்து, அவர்களிடம் அவர்களை சோதித்துப் பார்த்ததை எடுத்துக்கூறி அவர்களுடைய தந்தை பக்தியை மெச்சி தனது சக்தியினால் அந்த நால்வரையும் விஷ்ணுலோகத்துக்கு அனுப்பி வைத்தார். எனவே, கடைசி மகன் சோமசர்மா புவியிலேயே இருந்தான்.

சிவசர்மா தன் மகன் சோமசர்மாவிடம் தானும், மனைவியும் க்ஷேத்திராடனம் செல்வதாகவும் திரும்பி வரும் வரையில் அமுதத்தைப் பத்திரமாக வைத்திருந்து திரும்பி வந்தவுடன் கொடுக்குமாறும் கூறி தீர்த்தயாத்திரை சென்றான். சில நாட்கள் கழித்து சிவசர்மாவும், அவன் மனைவியும் தொழுநோயாளிகள் வடிவில் வீடு திரும்பினர். மகன் சோமசர்மா அவர்களை அன்புடன் வரவேற்று அவர்களுக்கு மனம் கோணாமல் சிகிச்சை செய்து வந்தான். சிவசர்மா அமிர்த கலசத்தில் இருந்து அமுதத்தை மாயமாகச் செய்து, தன் மகனிடம் அமுத கலசத்தைக் கொண்டு வருமாறும், அதன் மூலம் அவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற முடியும் என்று கூறினான். ஆனால் சோமசர்மா சென்று பார்த்தபோது கலசம் காலியாக இருந்தது. அவன் தந்தை மீதுள்ள பக்தியின் மகிமையால் கலசம் அமுதத்தால் நிறையும்படிச் செய்து அதைக் கொண்டு வந்த கொடுத்தான். சிவசர்மா அவன் பக்தியை மெச்சி, தானும் தன் மனைவியுடன் விஷ்ணுலோகம் அடைந்தான். பின்னர் சோமசர்மா தவம் செய்ய வனம் சென்றான். அவன் தவத்தைக் கெடுக்க அரக்கர்கள் முனைந்தனர். அவர்களைக் கண்ட அவன் அச்சத்தினால் மரணம் அடைந்தான். அரக்கர் அச்சத்தால் இறந்த அவன் மறுபிறவியில் அரக்கர் குலத்தில் பிறந்தான். ஆனால், அவன் செய்த புண்ணியத்தால் விஷ்ணு பக்தனாகத் தோன்றினான். அவனே ஹிரண்யகசிபுவின் மகனான பிரகலாதன்.

தொடரும்...
ஒவ்வொரு பிறவியிலும் நாம்
முற்பிறவிகளில் சேர்த்துக்கொண்ட
வினைகளோடு ஒவ்வொரு
பிறவிகளிலும் வினைகளை
அதிகரித்துகொண்டே போகிறோம்.

வினைகளின் சுமை கூட கூட
நாம் அஞ்ஞானத்தில் மூழ்கி போய்
நம்முடைய ஆன்ம ஸ்வரூபத்தை
அறவே மறந்து போகின்றோம்.

வினைகளை அனுபவிக்கவே
பிறவிகள் போதுவதில்லை.

நாம் செய்யும் செயல்கள்
நம்முடைய எண்ணங்களை பொறுத்து
நல்லவைகளாகவோ அல்லது
தீயவைகளாகவோ அமைகின்றன

இந்து சுழலிலிருந்து நாம்
விடுபடாவிட்டால்
நம் பிறவிகளுக்கு
முடிவே இல்லை

இறைவன் நமக்கு பல கோடி
இன்பங்களை நாம் கேளாமலே
அளித்திருக்கிறான்.

அவைகளை
அனுபவிப்பதில் தவறில்லை

ஆனால் அதற்காகத்தான் பிறவி என்று
நினைத்தோமானால் அது தவறு

அது நமக்கு எண்ணற்ற
தொல்லைகளுடன் முடிவில்லாப்
பிறவிகளைத்தான் தரும்

ஏனென்றால் இவ்வுலக
இன்பங்கள் நிலையற்றவை

ஒரு மரணம் அனைத்திற்கும்
முற்றுப்புள்ளி வைத்துவிடும்

இந்த உடல் நோயுற்றால் உடல் மூலம்
பெரும் இன்பங்கள் அனைத்தும்
நின்றுவிடும்

மனம் உடைந்தால் நாம் இதுவரை
பெற்ற இன்பங்கள் அனைத்தும்
அணை உடைந்தால் வெளியேறும் நீர் போல்
அனைத்தும் வெளியேறிவிடும்

இந்த உலகத்திற்கு நாம் வருவதன்
முக்கிய நோக்கம் நம்மை
படைத்தவனை அறிந்துகொள்வதே.

நம்மை படைத்த இறைவன்
நம் இதயத்திலே நம்மோடு
எப்போதும் இருக்கிறான்.

அவனை தேடி நாம் எங்கும்
செல்ல வேண்டியதில்லை.
ராமனின் பேரை சொல்லுவோம்
நம் மனதில் உள்ள
ஆசைகளை வெல்லுவோம்