Friday, 28 September 2018

முருகர் புகழ் பாடும் அவ்வை

#முருகப்பெருமான்_அவ்வையாரிடம்

 #கேட்ட_கேள்விகள்!

#உலகில்_கொடியது_எது?

வாழ விரும்புகிறவன் மனிதன். அவன் வாழ்க்கைக்குத் தேவையான வளங்கள் அவனிடத்தில் நிரம்பி இருக்க வேண்டும். அதுவன்றி, அவனிடத்தில் வறுமை, வந்துவிட்டால், அது மிகவும் கொடியது. ஆனால் உணவு அன்பிலாத மனைவி அளிக்கும் உணவு அதைவிடக் கொடியது என்றார். தமிழ் மூதாட்டி.

#உலகில்_இனியது_எது?

இன்ப.. துன்பங்கள் ஆகிய இரண்டும் கலந்து வருவதே உலக வாழ்க்கை. இவற்றைத் தருவன புலன் இச்சை. ஆனால் புலன்களை ஒடுக்கித் தனிமையாக இருந்து, மனத்தை நல்ல நெறியிலே செலுத்துவதுதான் இன்பம். ஆனால், அறிவுடையாரை கனவிலும் நனவிலும் கண்டு இன்புறுவது அதனிலும் மிகவும் இன்பம் தருவதாகும்.

#உலகில்_பெரியது_எது?

இறைவன் அடியார்கள் உள்ளத்தில் வசிக்கிறான். எனவே தொண்டர்களது பெருமைதான் உலகத்தில் மிகப் பெரியது என்றார்.

#உலகில்__அரியது_எது?

மனிதராய்ப் பிறப்பது அரிது. அப்படிப் பிறந்தாலும் ஊமை, செவிடு, குருடு போன்ற குறைகள் நீங்கிப் பிறப்பது அரிது. அப்படி நன்றாகப் பிறந்தாலும், ஞானமும் கல்வியும் நம்மை வந்தடைவது அரிதாகும். அவற்றை மேற்கொண்டால்தான் சுவர்க்கம் செல்வதற்கான வழி கிடைக்கும் என்றார் அருந்தவ மூதாட்டி. இந்த அற்புதமான உலகியல் நீதிகளை ஔவையின் வாயால் நமக்காக எடுத்துரைக்க வைத்தான் தன் தமிழின் மிகுநேயனான ஆறுமுகச் செல்வன்.

#சரணம்_அடைந்தோம்_சண்முகனே..!

ஆறுபடைவீடுகளில் அருள்புரியும் ஆறுமுகனே! அகத்திய முனிவருக்கு உபதேசித்த குருநாதனே! ஈசனின் நெற்றிக்கண்ணில் அவதரித்த சிவபாலனே! கார்த்திகைப்பெண்டிரின் அன்பில் வளர்ந்த காங்கேயனே! வள்ளிக்கு வாய்த்தவனே! தவசீலர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தவமணியே! பச்சைமயிலில் பவனி வரும் பரம்பொருளே! உன் திருவடிகளைச் சரணடைகிறோம்.

ஞானதண்டாயுதபாணியே! செந்தூரில் வாழும் வேலவனே! பழநிமலையில் வீற்றிருப்பவனே! குன்றுதோறும் குடியிருக்கும் குமரக்கடவுளே! முத்தமிழில் வைதாரையும் வாழவைக்கும் வித்தகனே! பகைவனிடம் அன்பு காட்டிய பரம்பொருளே! சேவல்கொடியோனே! சிக்கல் சிங்காரவேலனே! தாயிற்சிறந்த தயாபரனே! கருணாகரனே! உன் பாதமலர்களைத் தஞ்சம் என வந்துவிட்டோம் ஏற்றுக்கொள்வாயாக.

தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்தவனே! கார்த்திகேயனே! வெற்றி வேலாயுத மூர்த்தியே! தேவர்களுக்கு வாழ்வளித்த தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! திருமாலின்மருமகனே! அருணகிரிக்கு அருள்செய்த ஆறுமுகா! பன்னிருகரங்களால் வாரிவழங்கும் வள்ளல் பெருமானே! அழகின் வடிவமாய்த் திகழ்பவனே! உன்னருளால் என் வாழ்வு வளம் பெற வேண்டும்.

கல்லாதவர்க்கு எளியவனே! கற்றவர்க்கு கனியாக இனிப்பவனே! அன்பர் வேண்டும் வரம் தருபவனே! முத்தமிழ் நாயகனே! ஆனைமுகனின் சோதரனே! திருப்புகழ் நாயகனே! வலிமை மிக்க பன்னிருதோள்களைக் கொண்டவனே! குழந்தைக்கடவுளே! எனக்கு ஆரோக்கியத்தையும், மனதில் மகிழ்ச்சியையும் நிலைக்கச் செய்வாயாக.

சிவபார்வதியின் செல்வமகனே! தணிகாசலனே! சங்கரன் புதல்வா! கதிர்காமம் வாழும் கதிர்வேல் முருகா! கந்தா! கடம்பா! சூரபதுமனுக்கு வாழ்வளித்த வள்ளலே! வெற்றிவேல் தாங்கி வருபவனே! வள்ளிமணாளனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் போக்கி நல்வழிக் காட்டியருள வேண்டும்.

தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பெற்றவனே! வேதம் போற்றும் சிவசண்முகனே! குறிஞ்சிக்கடவுளே! ஆறுதலை அமலனே! செங்கல்வராயனே! அவ்வைக்கு நாவல்பழம் தந்தவனே! அலைகடல் ஓரத்தில் அருளாட்சி நடத்திடும் செந்திலம்பதியே! கண் கண்ட தெய்வமே! கலியுகவரதனே! முத்துக்குமாரசுவாமியே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம் அபயம் தர வேண்டுமய்யா!

சரவணப்பொய்கையில் உதித்தவனே! பிரம்மனுக்கு பாடம் புகட்டியவனே! பிள்ளைக் கடவுளே! முத்தமிழ்வித்தகனே! சுவாமிநாதனே! ஒருகை முகன் தம்பியே! அருணகிரிக்கு அருளியவனே! உன் கடைக்கண் காட்டி எங்கள் குறை தீர்த்திடப்பா,

#ஓம்_சரவணபவாய_நமஹ!!!