Monday, 10 September 2018

ஔவை வரலாறு

ஔவை

ஔவை வரலாறு.
ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை நோக்குங்கால், அவர் 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறது. இவர் தந்தையார் பகவன் எனவும் தாய் ஆதி எனவும், அவர்களுக்கு ஏழாவது குழந்தையாக ஒளவை பாணரகத்தில் அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு கானப்படுகிறது.

         ஆயினும் இவரின் படைப்புகளின் காலக்கட்டங்களை இன்ன பிற புலவர்களின் காலக்கட்டங்களோடு ஒப்பிட்டு நோக்குங்கால், ஒள‌வை பிராட்டியார் காலத்தை வென்று வாழ்ந்தவர் என்று கணிக்க முடிகிறது. இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக அரசன் அதியமான் நெடுமான் அஞ்சி ஒள‌வைக்கு ஈந்த மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத நெல்லிக்கனி கதையும் கூறப்படுகின்றது.

           இத்தமிழ் மூதாட்டியின் பெயர் சிறப்பினை நோக்குங்கால், அகர வரிசையில் பதினோராம் எழுத்தாகிய "ஔ" எனும் எழுத்தில துவங்கும் ஒளவை என்ற பெயர் அவ்வா என்ற சொல்லின் திரிபாக கருதப்படுகிறது. அதன் பொருள் மூதாட்டி அல்லது தவப்பெண் என்பதாகும் என்று பழந்தமிழ் அகராதி பகர்கிறது. அத்துடன் பிந்தையகாலத்தில் ஒளவை எனும் சொல், வயது அல்லது அறிவாற்றல் ஆகியவற்றில் முதிர்ச்சி பெற்றவர்க்கு வழங்கப்படும் குறியீடாகவும் அமைந்துள்ளது. இதிலிருந்தே பெரும் சிறப்பு வாய்ந்த தமிழ்ப்புலவி இவர் என்பது வெள்ளிடைமலை.

            சிரஞ்சீவியாக வாழ்ந்தவர் ஒளவை என்று எண்ணப்பட்டாலும், வரலாற்று ஆசிரியர்களின் கூற்றின்படி மூன்று பெண்புலவர்கள் 12ம் நூற்றாண்டுக்கு முன் ஒள‌வை எனும் பெயருடனும் ஒருமித்த குணாதிசயங்களோடும், புலமையோடும் வெவ்வேறு காலக்கட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்தனர், கவி பாடிச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.

            மேற்குறிப்பிட்ட வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி முதலாம் ஒள‌வை கடைச்சங்க காலத்தில் வள்ளுவர், நக்கீரர் போன்றோரின் காலக்கட்டத்தில் வாழந்ததாகவும், இரண்டாம் ஒள‌வை பக்தி இலக்கியப் புலவர்களாகிய சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் காலத்திலும் மூன்றாமவர் கம்பர், புகழேந்தி, செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்றோர் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்தார் என்றும் சான்று பகர்கின்றனர்.இவையன்றி 14ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டுக்கு மத்தியிலான காலக்கட்டத்தில் மேலும் இரண்டு ஔவைகள் வாழ்ந்தனர் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். ஓர் ஒளவை 14ஆம் அல்லது 15ஆம் நூற்றாண்டிலும் அடுத்தவர் 18ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த இரு ஒளவைகளின் வாழ்க்கைக் குறிப்புக்கள் முழுமையாகக் பெறப்படவில்லை.

           ஔவையின் தோற்றப்பொலிவுப் பற்றி விவரிக்கையில் அறியப்படும் தகவல்கள் யாதெனில் ஔவை என்பவர் ஒரு விறலி (அதாவது ஒரு பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக்காட்டுபவள் விறலி என்று அழைக்கப்படுபவராவார்). இவர் மடப்பத்தன்மை பொருந்திய மடவரல். இவர் மைதீட்டிய கண்களும் வாட்டமான நெற்றியும் அமைந்தவராக அறியப்படுகிறார். மேலும் எடுப்பான இலுப்பில் அழகிய அணிகலன்களையும் அணிந்திருந்தார் என அறியப்படுகிறார்.

            மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை வாரி வழங்கிய அவ்வையின் பொதுச் சிறப்பியல்புகள் என சில விசயங்கள் கூறப்படுவதுண்டு. அவையாவன ஒளவையானவர் பிறவியிலேயே தமிழறிவுடன் பிறந்தவர், பெற்றோரிடத்தில் வளராதவர், பாணரகத்தில் வளர்ந்தவர்,சிவபரத்துவம் தெளிந்தவர், வரகவித்துவம் வாய்க்கப்பெற்றவர்.இலௌகிகம்,வைதிகம் இரண்டும் தெரிந்தவர். உள்ளம்,உண்மை,மொழி ஆகியவற்றில் உயர்ந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் புரிந்தவர். தமிழ் நாடு முழுதும் திரிந்தவர்.கோவலூரிலும் புல்வேளுரிலும் வெகுநாட்கள் வாழ்ந்தவர். பலரை பற்றி கவிபாடிப் பரிசு பெற்றவர். சிறியோராயினும், வறியோராயினும் தமக்கு பரிசு ஈந்தவரை பெரியோராய் மதித்துப் பாடியவர். பரிசு கொடுத்தாலும் பாட்டுக் கேட்டலிலும் பாராமுகம் காட்டியவரையும், பாடலருமை அறியா மூடரையும் வெறுத்துப் பாடிய‌வர். மேற்கூறிய சிறப்பியல்புகள் அனைத்து ஔவைகளிலும் ஒருமித்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆற்றிய பணிகள்.
           ஒளவை பிராட்டியார் உலக மாந்தர் உய்வடைய தமது கவிப்பாக்களின் வழி நிறைய நற்பணிகளை ஆற்றிச் சென்றுள்ளார்.மிகப்பெரிய வாழ்வியல் தத்துவங்களை மிகவும் எளிய முறையில், ஒருவரிக் கவிதைகளாக புனைந்து மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் அற்புதமாகப் படைத்தளித்தவர் ஒளவை பிராட்டி என்றால் அது மிகையல்ல...! இவர் இலெளகிகம், வைதிகம் இரண்டும் ஐயம் திரிபுர புரிந்து, அவற்றை மேன்மை வாய்ந்த தனது கவிப்புலமையால் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் இனிய நடையில், எளிய முறையில் மக்களுக்கு கவிதைகளாக்கித் தந்துள்ளார்.

           சிவபரத்து வந்தெளிந்தவரான இவ்வம்மையார், பக்தி நாட்டம் கொன்டு இறை பக்தியை முன்னிறுத்தி பல தெய்வ வழிபாட்டுக் கவிதைகளையும் படைத்துள்ளார். இவரின் "விநாயகர் அகவல்" இன்றும் தியான வழிபாட்டிலும் , குரு வழிபாட்டிலும் முன்னிலையாக போற்றிப்பாடப்படுவது யாவரும் அறிந்ததே. இவரது இறைத்தொன்டு இதிலிருந்து நமக்கு புலனாகிறது.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பது பழமொழி, நல்ல மனிதர்கள் இம்மண்ணில் உருவாக்கப்படவேண்டும் என்பதே ஒளவை பிராட்டியாரின் பெரும் கனவாக இருந்திருக்கிறது, அதனாலேயே அவர் சிறுவர் சிறுமியர்க்கும் அறிவுரைகளை பாடல் வரிகளாக விட்டுச் சென்றுள்ளார். இன்றும் தமிழ் பயிலும் மாணவர்களின் அரிச்சுவடியாக விளங்குவது ஒளவை பாடிச்சென்ற பாடல்களே...! அவை "இளமையிற் கல்வி சிலை மேல் எழுத்து சிலைமேல் எழுத்து" என்பதற்கொப்ப இளம்பிராயத்திலிருந்தே சிறுபிள்ளைகள் நல்லறிவும் ஒழுக்கமும் நற்பண்புகளும் வாய்க்கப்பெற்ற மனிதராக மலர உதவி புரிகின்றது. ஒளவையின் அரும்பணிகளின் தலையாய பணியாக இதை புரிந்து கொள்ள முடிகிறது.

            உலகம் சிறக்க, நாடு செழிக்க தனி மனித முன்னேற்றம் இன்றியமையாததாகும்..! ஒரு உயர்ந்த குணம் படைத்த மனிதனால் ஒரு சிறந்த குடும்பத்தை உருவாக்க இயலும், பல சிறந்த குடும்பங்கள் ஒருங்கிணைந்தால் சிறந்த ஊர், நாடு என உலகமே சிறப்படையும், இக்கருத்தினை முன்வைத்து ஒள‌வையானவர் பல கவிதைகளை படைத்துள்ளார். அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என‌த்துவங்கி ஓரம் சொல்லேல் என முடித்த 109 ஆத்தி சூடி வரிகளாகட்டும் சரி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனத்துவங்கி முடித்த  ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் 91 வரிகள் படைத்த கொன்றை வேந்தனாகட்டும், தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, வீரம், அறிவு, திறமை ஆகியவை மாந்தரிடையே மலர உன்னதமான கவிப்பணி ஆற்றியுள்ளார் ஓளவை பிராட்டியார் என்பதற்கு அவர் பாடிச்சென்ற இக்கவிதை வரிகளே நற்சான்றாகும்.

             மக்கள் நல்ல முறையில் மகிழ்ந்து வாழ நல்ல அரசாட்சி மிக முக்கியமாகும். ஒளவை சாதாரண குடிமக்கள், குழந்தைகள் அன்றி அரசர்க்கும் சிறந்த வழிகாட்டியாகவும், அவர் புகழ் பரப்பும் கவிப்புலவியாகவும் திகழ்ந்து அரும் தொன்டாற்றியுள்ளார், பல காலங்களுக்கு முன்னர் வாழ்ந்த மன்னர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்தம் வீரம், கொடைத்தன்மை மாண்பு மரபு ஆகியவைகளை ஒளவை போன்ற அரும் புலவர்களின் கவிப்பாக்களில் இருந்தே கண்டுணர்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றார்கள் சரித்திர ஆசிரியர்கள். அவ்வகையில் காலத்தை வென்ற கல்வெட்டுக்களாய் இவர் பாடல்கள் நமது மூதாதையர்களின் அருமை பெருமைகளை நமக்கு விளக்கும் கலங்கரை விளக்கமாய் திகழ்கின்றது என்பது கண்கூடு...!  ஆக த‌னது வாழ்வில் உலக மக்கள், தமிழ்மொழி, பக்தி நெறி என வாழ்வு சார்ந்த யாவற்றுக்கும் ஈடினையற்ற அரும் பெரும் தொன்டாற்றியுள்ளார் ஒளவை.

தமிழ்த் தொண்டு.
           சங்ககாலப் புலவர்களுள் ஒருவராக போற்றப்படும் ஒளவை எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் மொத்தம் பாடல்கள் 59 இயற்றியுள்ளார். அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள். தமிழ் மொழியின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றும் விதத்தில் காலங்களை வென்று வாழும் இத்தமிழ் பொக்கிசங்களை உலகுக்கு அளித்து மாபெரும் தமிழ் தொண்டு புரிந்தவர் ஒளவை ஆவார்.

           எல்லோர்க்கும் எல்லாத் திற‌மைகளும் வாய்த்து விடுவதில்லை, அப்படியே வாய்த்திருந்தாலும் அதை வெற்றிகரமாக உபயோகித்து தானும் பிறரும் பயனடையும் வண்ணம் எல்லோரும் வாழ்ந்து விடுவதில்லை, ஆனால் பிறப்பிலேயே தமிழறிவுடன் பிறந்த ஒளவையானவர், இயல்பிலேயே வரகவித்துவம் வாய்க்கப் பெற்றவர். இவர் தமது திறமையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி அருமையான கவிப்பாக்களைப் புனைந்து, பிற‌ரை ம‌கிழ்வித்து தானும் அதன் மூலம் ப‌ரிசில் பெற்று, இன்றுவரை நிலைத்திருக்கும் வண்ணம், நாமும் ப‌டித்துண‌ர‌வும் வகையில் ப‌ல சிற‌ப்பான நூல்களையும் உருவாக்கித்தந்து அருமையான‌ த‌மிழுக்கு மேலும் அணிக‌ல‌னாய் விள‌ங்கச் செய்து தமிழ்த் தொன்டாற்றியுள்ளார் ஒள‌‌வை பிராட்டியார்.

             ஒளவையால் மொத்தம் 59 செய்யுள்கள் பாடப்பட்டுள்ளன, அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகின்றன. இதில் முதலாம் ஒள‌வை என நம்பப்படும் ஒளவையால் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது ஆகிய‌ நூல்களை சிறுவர்களுக்கு இயற்றப்பட்டுள்ளன. இள‌ம் பிராயத்திலிருந்தே சிறுவர்கள் மனதில் நற்குணங்கள் பதிவதோடு அவர்கள் தமிழறிவில் சிறந்து விள‌ங்கவும் தமது படைப்புக்களைப் பாலமாக படைத்துச் சென்றவர் ஒள‌வை என்பது உண்மை. இந்த‌ விதையிலிருந்தே தமிழை விருட்சமாக்கும் ஒளவையின் முயற்சி ஒரு மிகவும் உயர்ந்த தமிழத்தொண்டாகும்.

            இவர் தூய தமிழ் வழிபாட்டிற்கு உறுதுணையாக பக்தியையும் தமிழ்ப்படுத்தியவர் ஆவார், அதனை நாம் அசதிக்கோவை, பந்தனந்தாதி, விநாயகர் அகவல் என‌ இவ‌ர் வ‌டித்த‌ நூல்க‌ளின் வ‌ழி உண‌ர‌ முடிகிற‌து. த‌மிழை விடுத்து வேற்று மொழியில் வ‌ழிபாடுக‌ள் அமைவ‌தை ஆத‌ரிக்காது த‌மிழால் ப‌க்தி வ‌ள‌ர்த்து இறைவ‌ழிபாட்டிலும் த‌மிழ்த்தொன்டு ஆற்றியுள்ளார் ஒள‌‌வை...! அற‌ம், பொருள், இன்ப‌ம், வீடு எனும் சித்தாந்த‌ங்க‌ளை த‌ம‌து கவித்திற‌னால் எளிமைப‌டுத்தி வேதாந்த‌க் க‌ருத்துக்களை நயமான கவிகளாக்கி, பல்லோரும் படித்து பயனுறும் நூல்களா‌க்கி தாம் வாழும் கால‌க்க‌ட்ட‌த்தில் த‌மிழ் இல‌க்கிய‌த்தை உயர்ந்த இட‌த்திற்கு எட்ட‌ச்செய்து மகத்தான தமிழ்த்தொண்டு புரிந்தவர் அவ்வை பிராட்டி என்ப‌து த‌மிழ்கூறு ந‌ல்லுல‌க‌ம் க‌ண்ட‌ உண்மையாகும்.‌

             இத்தகு மேன்மையான தமிழ்த்தொன்டுகள் பல புரிந்த ஒளவைக்கு 21ம் நூற்றாண்டில் வாழும் இன்றைய தமிழர்களான நாம் என்ன செய்யப் போகிறோம் ? காலங்களை வென்று இன்றளவிலும் நிலைத்து நிற்கும் இவ‌ர் நூல்க‌ளை ப‌டிப்ப‌தும், ப‌டித்து அத‌ற்கொப்ப ஒழுக்கமும் நற்பண்புகளும் நிறந்த நல்வாழ்வு வாழ்வதும், ஒளவையின் கருத்துக்களை இனி வரும் சந்ததியற்கு எடுத்தியம்புவதுமே அவ்வைக்கும், இவ்வுலகிற்கும், செம்மொழியாம் நம் தமிழ்மொழிக்கும் நாம் புரியவேண்டிய அரும் பெரும் தொண்டாகும்.

ஔவையார் இயற்றிய நூல்கள்.
இவரால் 59 செய்யுள்கள் பாடப்பட்டுள்ளன, அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகின்றன.அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள் என பகுத்துக் கூறப்படுகின்றன‌.இவர்களில் முந்தியவர் எனக்கருதப்படுபவர் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, ஞானக்குறள் , நாலு கோடிப் பாடல்கள், நல்வழி நாற்பது போன்ற நூல்களை இயற்றியவர். இவர் மேலும் அசதிக்கோவை, பந்தனந்தாதி, விநாயகர் அகவல் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். இவற்றில் அசதிக்கோவை மற்றும் பந்தனந்தாதி காலத்தால் அழிந்து நமது கைக்கு எட்டாமல் போய்விட்டது.மேலும் இவர் காலத்தில் தமிழ் இலக்கியம் உயர் நிலையை எய்தியது என்பர்.கீழக்கண்டவாறு சரித்திர ஆசிரியர்களால் ஒளவையின் நூல்கள் பகுத்துக் கூறப்படுகின்றன, ‍சங்கப்பாடல்கள் தனிப்பாடல்கள் (12-ஆம்நூற்றாண்டு) நீதிநூல்கள் (நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன்) சமயநூல்கள் (விநாயகர்அகவல், ஔவைகுறள்) சிற்றிலக்கியம் (பந்தன்அந்தாதி) ஒளவை அபரிமிதமான‌ அறிவாற்றலும், அற்புதமான கவியாற்றலும் வாய்க்கப் பெற்றவர் என்பதை மேற்காணும் அவருடைய படைப்புக்கள் உள்ளங்கை நெல்லிக்கனியென தெளிவுற எடுத்தியம்புகின்றன‌.

ஆத்திசூடி.
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான்அமர்ந்த-விரும்பிய

தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்திதொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.

1.அறம் செய விரும்ப - நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம்  - கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல் - உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்குஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல் - ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்றுதடுக்காதே.

5.உடையது விளம்பேல்- உன்னிடத்திலுள்ள பொருளை அல்லதுஇரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்- கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல்நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சி- இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்- யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறுநடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல் -நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல் -ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13.அஃகஞ் சுருக்கேல்- அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்துவிற்காதே.

14.கண்டொன்று சொல்லேல்-. கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி)சொல்லாதே.

15.ஙப் போல் வளை -. 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாகஇருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச்சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."ங"என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வதுபோல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளையவேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16.சனி நீராடு -.சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.

17.ஞயம்பட உரை- கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.

18.இடம்பட வீடு எடேல்-உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19.இணக்கம் அறிந்து இணங்கு -ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்லகுணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன்நட்பு கொள்ளவும்.

20.தந்தை தாய்ப் பேண் -உன் தந்தையையும் தாயையும் அவர்களுடையமுதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21.நன்றி மறவேல் - ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22.பருவத்தே பயிர் செய் - எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்யவேண்டும்.

23.மண் பறித்து உண்ணேல் -பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே(அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்புவழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24.இயல்பு அலாதன செய்யேல் - நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச்செய்யாதே.

25.அரவம் ஆட்டேல். -பாம்புகளை பிடித்து விளையாடாதே.

26.இலவம் பஞ்சில் துயில்  -இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால்செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.

27.வஞ்சகம் பேசேல் -படச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களைபேசாதே.

28.அழகு அலாதன செய்யேல் -.இழிவான செயல்களை செய்யாதே

29.இளமையில் கல்- இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை(இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30.அறனை மறவேல். தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.

31.அனந்தல் ஆடேல்- மிகுதியாக துங்காதே.

32.கடிவது மற-யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33.காப்பது விரதம்- தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதேவிரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக்காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34.கிழமை பட வாழ்-உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்துவாழ.

35. கீழ்மை யகற்று-இழிவான குணஞ் செயல்களை நீக்கு.

36. குணமது கைவிடேல்- நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைபின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்- நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே.

38. கெடுப்ப தொழி -பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்-கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சிசெய்.

40. கைவினை கரவேல்-உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலைமற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்- பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.

42. கோதாட் டொழி-குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).

43.கௌவை அகற்று-வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்க.

44. சக்கர நெறி நில்- அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் =ஆள்பவர், தலைவர் ).

45.சான்றோ ரினத்திரு-அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன்சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசெல்- பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே.

47. சீர்மை மறவேல்- புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்துவிடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்-கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படிபேசாதீர்.

49. சூது விரும்பேல்- ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்- செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும்இல்லாமல் செய்யவும்.

51.சேரிடமறிந்து சேர்-நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா எனநன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சையெனத் திரியேல்-பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.

53. சொற்சோர்வு படேல்- பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப்பேசாதே.

54. சோம்பித் திரியேல்-முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

55. தக்கோ னெனத்திரி-பெரியோர்கள் உன்னைத்தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.

56. தானமது விரும்பு-யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்-நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்.

58. தீவினை யகற்று-பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59.துன்பத்திற் கிடங்கொடேல்-முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின்வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினைசெய்-ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளைநன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்.

61. தெய்வ மிகழேல்-கடவுளை பழிக்காதே.

62. தேசத்தோ டொத்துவாழ்- உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகைஇல்லாமல் வாழ்.

63. தையல்சொல் கேளேல்-மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்- பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.

65. தோற்பன தொடரேல்-ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான்முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

66. நன்மை கடைப்பிடி-நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும்உறுதியாகத் தொடரவும்.

67. நாடொப் பனசெய்- நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்லகாரியங்களை செய்.

68. நிலையிற் பிரியேல்-உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்துவிடாதே.

69. நீர்விளை யாடேல்-வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.

70. நுண்மை நுகரேல்-நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.

71. நூல்பல கல்- அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.

72.நெற்பயிர் விளை- நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கைதொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட வொழுக- ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.

74. நைவினை நணுகேல்-பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.

75. நொய்ய வுரையேல்-பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. நோய்க்கிடங் கொடேல்-மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால்நோய்க்கு வழிவகை செய்யாதே.

77. பழிப்பன பகரேல்-பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களானபொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.

78. பாம்பொடு பழகேல்-பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன்பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்-குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

80. பீடு பெறநில்-பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்-உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.

82. பூமி திருத்தியுண்-விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.

83. பெரியாரைத் துணைக்கொள்-அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத்துணையாகப் பேணிக்கொள்.

84. பேதைமை யகற்று-அறியாமையை போக்க.

85. பையலோ டிணங்கேல்-அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

86. பொருடனைப் போற்றிவாழ்-பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவுசெய்யாமற் பாதுகாத்து வாழ்.

87. போர்த்தொழில் புரியேல்-யாருடனும் தேவையில்லாமல் சண்டைபொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.

88. மனந்தடு மாறேல்-எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.

89. மாற்றானுக் கிடங்கொடேல்-பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னைவெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்- சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. மீதூண் விரும்பேல்-மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்- எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காகபோர் முனையிலே நிற்காதே.

93. மூர்க்கரோ டிணங்கேல்- மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

94. மெல்லினல்லாள் தோள்சேர்-பிற மாதரை விரும்பாமல் உன்மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன்மக்கள் சொற்கேள்-நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக்கேட்டு நட.

96. மைவிழியார் மனையகல்- விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகிநில்.

97. மொழிவ தறமொழி-சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்.

98.மோகத்தை முனி-நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையைவெறுத்திடு.

99. வல்லமை பேசேல்-உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

100. வாதுமுற் கூறேல்-பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே.

101. வித்தை விரும்பு- கல்வியாகிய நற்பொருளை விரும்பு.

102. வீடு பெறநில்-முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையைநடத்து.

103. உத்தமனாய் இரு-உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.

104. ஊருடன் கூடிவாழ்-ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.

105. வெட்டெனப் பேசேல்-யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாகபேசாதே.

106. வேண்டி வினைசெயேல்- வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.

107. வைகறை துயிலெழு- நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில்இருந்து எழுந்திரு.

108. ஒன்னாரைத் தேறேல்-பகைவர்களை நம்பாதே.

109. ஓரஞ் சொல்லேல்-எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல்நடுநிலையுடன் பேசு.