Wednesday, 12 September 2018

திருவிடைக்கழி

திருவிடைக்கழி
திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.
தற்போது முருகன் தலமாகப் பிரசித்தி பெற்றுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து தில்லையாடி சென்று (தில்லையாடி வள்ளியம்மை வளைவுக்குள் நுழைந்து சென்று) அங்கிருந்து 3 A.e. சென்றால் திருவிடைக்கழி தலத்தையடையலாம். கோயில் வரை பேரூந்து செல்லும், நல்ல சாலை, சுப்பிரமணியக் கடவுள் மூலத்தான மூர்த்தியாக விளங்குகிறார். இத்தலத்திற்கு மகிழவனம் என்ற பெயரண்டு.
தெய்வயானை இறைவனிடம் திருப்பரங்குன்றம் செல்ல விடைகேட்டதாலும், முருகனுக்கு இரணியாசுரனைக் கொன்ற பழிகழிந்ததாலும் இத்தலம் விடைக்கழி என்னும் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
முசுகுந்தன், வசிட்டர், சேந்தனார், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்ட பதி, சேந்தனார் முத்தி பெற்ற தலம். திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகன் தலம். சேந்தனார் பாடியுள்ள திருவிசைப்பா பதிகம் பெற்ற தலம்.

இறைவன் - காமேசுவரர்.

இறைவி - காமேசுவரி.

தலமரம் - குரா, மகிழம் (குராமரம் முருகப்பெருமானுக்கும் மகிழமரம் இறைவனுக்கும் தலமரங்களாம்)

தீர்த்தம் - சரவண தீர்த்தம், கங்கைக் கிணறு.

அம்பாள் தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை. மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூர்த்தியாக சுப்பிரமணியப் பெருமானும் பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கும் தனித்தனி விமானங்கள். முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.
தெய்வயானைக்குத் தனிச்சந்நிதி. அழகான ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் வண்ணப் பொலிவுடன் கண்ணுக்கு விருந்தாகக் காட்சி தருகிறது.
கை கூப்பித்தொழுது இடைச் சிந்தனையேதுமின்றி 'விடை'ச் சிந்தனையாக உள்ளே சென்றால் கொடிமரமும், பலிபீடமும், அடுத்து விநாயகரையும் தரிசிக்கலாம். முன்மண்டபத்தில் திருப்புகழ்ப் பாடல்கள், வேல் விருத்தம் முதலியவை கல்வெட்டுக்கள் உள்ளன. வலப்பால் தெய்வயானை சந்நிதி - தவக்கோல தரிசனம்.
பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி. தலமரம் "குராமரம்" தழைத்துக் காட்சி தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குராமரம் இத்தலத்தில் நிலத்திலும் தோன்றி வளர்த்துள்ளது. இதன் கீழமர்ந்து பலரும் தியானம் செய்கின்றனர்.
சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாதலின் இங்கமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையதாகின்றது - மனமும் ஒன்றி, சாந்தத்தையும், சத்துவகுணங்கைளையும் அருளுகின்றது.
எதிரில் தனிச்சந்நிதியாக திருக்காமேசுவரர் சிவலிங்க வடிவில் தரிசனம் தருகிறார்.
வலம் முடித்து உள்வாயிலைத் தாண்டி இடப்பால் சென்றால் சந்திரன், அருணகிரிநாதர், சேந்தனார் மூர்த்தங்கள் உள்ளன. உட்சுற்றில் நவசத்திகள் தரிசனம். விநாயகரும் சுப்பிரமணியரும் அடுத்தடுத்துக் காட்சிதர, வழிபட்டவாறே நடந்தால் நாகநாதலிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய முருகர் உற்சவமூர்த்தம் கண்டு தொழலாம்.
சண்டேசுவர மூர்த்தங்களும் இரண்டு உள்ளன. சிவச்சண்டேசுவரர், குகச்ண்டேசுவரர் என்று (இறைவனுக்கும் முருகனுக்கும் உரியவர்களாக) பெயர்கள் சொல்லப்படுகின்றன. துர்க்கை, பைரவர், சூரியன் ஆகியோரைத் தொழுதவாறே முன் மண்டபத்திற்கு வந்து இரு கணபதிகளையும் கைகூப்பி வணங்கி படியேறிச் சென்றால் நேரே மூலவர் - சுப்பிரமணியர் கடவுள் காட்சி தருகிறார்.
நின்ற திருக்கோலம் அழகான வடிவம். பின்னால் இலிங்கமூர்த்தி தரிசனம். எழில்ததும்ப மனங்கவரும் இளங்காளை - குராமரத்துக்குழகன் - விடைக்கழி வித்தகனைத் தரிசித்த பின்பு, விட்டுப் பிரியவே மனம் வரவில்லை. கம்பீரமாக நின்று காட்சிதரும் அருமையை அநுபவித்தாலன்றி அளந்தறியவொண்ணாது.
முருகனுக்கு முதன்மையருளித் தான் பின்னிருந்து காட்சி தரும் காமேசுவரரைக் 'கைகாள் கூப்பித்தொழீர்' எனக் கட்டளையிட்டு உச்சி மேற்குவித்து
உள்ளம் நிற்க, உடலாற் பிரிகிறோம். கல்வெட்டில் முருகனுடைய பெயர் "திருக்குராத்துடையார்" என்று குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுக்களிலிருந்து அங்கு பல மடங்கள் இருந்ததாகவும், வேதமோதுவார்க்கும் வழிபாட்டுக்கும் இறையிலியாக
நிலங்களையளித்ததும் ஆகிய செய்திகள் தெரியவருகின்றன.
இரண்டாம் பிராகாரத்தில் வடக்கு மதிற்சுவரில் இரு உருவங்கள் செதுக்கப்பட்டு அவைகளின் மேல் பொற்கோயில் நம்பி, தில்லை மூவாயிரநம்பி என்னும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் ஒரு மேடையில் ரிஷபம், இடையன், குடம், பாம்பு முதலிய உருவங்களும், சற்றுத் தள்ளி மன்னன் ஒருவன் உள்ளிட்ட பல உருவங்களும் உள்ளன. இவற்றின் விவரம் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை தலபுராணத்துடன் தொடர்புடையனவாக இருக்கலாம்.
சேந்தனார் பாடியுள்ள திருவிசைப்பா பதிகம் முருகனைப் பற்றியது. அந்தாதி அமைப்பில் பாடப்பட்டுள்ளது. இப்பதிகம் - தலைவனிடம் அன்பு கொண்ட தலைவியின் துன்பத்தையும் - ஆற்றாமையையும் கண்டு, நற்றாய் இரங்கிக் வறுவதாக அமைந்துள்ளது. கோயிலில் தேசாந்திரி கட்டளை உள்ளது. நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில் தூய்மையாக நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் உள்ள திருமுறைத்தலம் திருக்கடவுர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய திருமிகு. மங்கலமுடையார் அவர்கள் இம் முருகப் பெருமானால் ஈர்த்து ஆட்கொள்ளப்பட்டு இத்திருக்கோயில் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு இவருடைய பெருமுயற்சியாலேயே அழகான இராஜகோபுரம் கட்டப்பட்டு (1-9-1977ல்) குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

"மாலுலா மனம்தந்து என் கையிற் சங்கம்
வவ்வினான், மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழு தாளுக்
குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன் என் சேந்தன்
என்னும் என் மெல்லியல் இவளே".

"கொழுந்திரள் வாயார் தாய்மொழியாகச்
தூய்மொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரட்சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்த சொல் இவை சுவாமியையே
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுலா மனமே".
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
திருவிடைக்கழி - அஞ்சல் - 609 310
தரங்கம்பாடி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.